Puttalam Online
technology

அனர்த்தங்கள் தரும் படிப்பினை என்ன?

  • 24 March 2011
  • 1,012 views

அனர்த்தங்கள் தரும் படிப்பினை என்ன?

http://www.sheikhagar.org
Disaster 2

பாரிய வெள்ள அனர்த்தத்தினால் நாட்டின் பல பாகங்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாம் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய சில முக்கியமான  விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கிறேன்.

அண்மைக் காலமாக இயற்கை அனர்த்தங்கள் பரவலாக அதிகரித்து வருகின்ற ஒரு நிலையை நாம் காண்கிறோம். வெள்ளம், மண்சரிவு, சூறாவளி என்று பல்வேறு அனர்த்தங்கள் உலகளாவிய ரீதியாக அதிகரித்து வருகின்றன.

அவுஸ்திரேலியாவிலே பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாடு வெள்ளப் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய பல ஆண்டுகளுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதேபோல பிரேஸில், மொஸாம்பிக், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற காலப்பகுதி இது. சில மாதங்களுக்கு முன்னால் பாகிஸ்தானில் மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதை நாம் அறிவோம்.

இவ்வகையான அனர்த்தங்களின்போது எமது பார்வை எப்படி அமைய வேண்டும் என்பது மிக முக்கியமானது. வெறுமனே நிகழ்வுகளுக்குப் பின்னால் செல்கின்றவர்களாக அல்லாமல், அவ்வப்போதைய பிரச்சினைகளில் அவ்வப்போதைய தீர்வுகளைப் பற்றி சிந்திப்பவர்களாக அல்லாமல் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கின்ற தத்துவங்களை, தாத்பரியங்களை நாம் மிகச் சரியாக புரிந்து கொள்வது இன்றியமையாதது.

இத்தகைய அனர்த்தங்கள் தண்டனையா, சோதனையா என்ற வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதை விட, இத்தகைய அனர்த்தங்களின்போது நாம் எத்தகைய படிப்பினை பெற வேண்டும் என்பதை சிந்திப்பது மிக முக்கியமானது. இந்த விடயத்தை இஸ்லாமிய நோக்கில் நாம் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மனித வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது உலக வாழ்வு ஒரு சோதனைக் களம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் இதனை பல இடங்களில் வலியுறுத்திச் சொல்வதை நாம் பார்க்கிறோம்.

“விசுவாசிகளே! பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும் செல்வங்கள், உயிர்கள், கனிகளின் விளைச்சல்கள் ஆகியவற்றின் குறைவைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம்.” (அல்பகரா: 155)

மேலும்,

‘மனிதனை நாம் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம்.’

‘நாம் வாழ்வையும் மரணத்தையும் படைத்திருப்பது உங்களில் யார் மிகச் சிறந்த செயல் செய்கிறார் என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே.’
என்றும் அல்லாஹுத் தஆலா குர்ஆனிலே கூறுகிறான்.

சோதனைகள் என்று சொல்கின்றபோது அது தீயதாக மாத்திரம்தான் அமையும் என்பதற்கில்லை. சிலபோது சோதனைகள் நன்மையான வடிவத்தில் அமைந்து விடவும் கூடும். அல்லாஹ் தீமையைக் கொண்டு எம்மை சோதிப்பதைப் போல நன்மையைக் கொண்டும் சோதிக்கலாம்.

‘…தீமையை (துன்பங்களை)க் கொண்டும் நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக  உங்களை நாம் சோதிக்கிறNhம்…’ (அன்பியா: 35)

அதாவது, அல்லாஹ் தந்தும் சோதிப்பான் எடுத்தும் சோதிப்பான்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம்தான் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படியல்ல, பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, பாதிக்கப்படாதவர்களும் சோதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு பாதிக்கப்படாதவர்கள் இந்த அனர்த்தத்தின்போது எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை அல்லாஹ் பார்க்கிறான்.

உண்மையில் முழு வாழ்க்கையும் சோதனைமயமானது என்ற இந்தத் தெளிவான உண்மையை நாம் புரிந்து கொள்வது இன்றியமையாதது.

இஸ்லாமிய நோக்கிலே இந்தப் பிரச்சினைகளுக்கு பல தீர்வுகள் கூறப்பட்டிருக்கின்றன.  அவை நிலையான தீர்வுகள். அனர்த்தங்கள் வருகின்றபோது நாம் உடனுக்குடன் வழங்குகின்ற தீர்வுகள் (Immediate Solution) இன்றியமையாதவையே. ஆனால், அதனைத் தொடர்ந்து நிலையான தீர்வுகளை (Ultimate Solution) நோக்கி நாம் நகர வேண்டும்.

உண்மையில் பாவங்கள் மனித சமூகத்தில் பரவுகின்றபோது அல்லாஹ் இத்தகைய அனர்த்தங்கள் ஊடாக எம்மைத் தண்டிப்பான், சோதிப்பான். ஏனென்றால் பாவங்கள் அனைத்தும் சாபங்கள் நன்மைகள் அனைத்தும் அருள்கள்.

ஓர் அனர்த்தம் ஏற்படுகிறதாயின் அதற்குக் காரணம் பாவமாக இருக்கும்” என அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே, பாவங்களிலிருந்து விடுபடுவது, நன்மைகளை அதிகமாகச் செய்வது, துஆ, இஸ்திபார்களில் ஈடுபடுவது, தனிப்பட்ட வாழ்க்கைகுடும்ப வாழ்க்கை சமூக விவகாரங்களை சீர்செய்து கொள்வது முதலானவை இத்தகைய சோதனைகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நன்மையான அம்சங்களைக் கொண்டும் தீய அம்சங்களைக் கொண்டும் சோதிக்கிறான். பாதிக்கப்பட்ட மக்களை ஒருவகையிலும் பாதிக்கப்படாதோரை இன்னொரு வகையிலும்அவர்கள் இத்தகைய அனர்த்தங்களின்போது எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதனைப் பார்ப்பதற்காகஅல்லாஹ் சோதிக்கிறான் என்பதையும் கவனத்திற் கொண்டு அதற்கமைவாக நாம் செயற்பட வேண்டும்.

எனவே, இந்தச் சூழ்நிலையில் நாம் ஒருவருக்கொருவர் பெருமளவில் உதவி செய்ய வேண்டும்.  இது சமூக சேவை அல்ல சமய சேவை, சன்மார்க்க சேவை. நமக்கு முன்னாலுள்ள மிகப் பெரிய ஆன்மிக, தார்மிக கடப்பாடு உடனடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“யார் தன்னுடைய சகோதரனுடைய கஷ்டத்தை நீக்கி வைக்கிறாரோ அல்லாஹ் மறுமை நாளில் அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கஷ்டத்தை நீக்கி வைக்கிறான்.” (அல்புகாரி, முஸ்லிம்)

“ஒரு சகோதரன் தனது அடுத்த சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்கிறான்.” (அல்புகாரி, முஸ்லிம்)

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பிறருக்கு செய்கின்ற ஒவ்வோர் உதவியும் எமக்கு நாமே செய்து கொள்கின்ற உதவி. அது எமது மறுமை வாழ்க்கைக்கு நாம் சேமித்து வைக்கின்ற மிகப் பெரிய உபகாரமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றுவோமாக!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All