Puttalam Online
editorial

ஈத் முபாரக் ! ரமழானிய பொழுதுகளை சற்று வித்தியாசமாக ஞாபகிக்கின்றோம்.

ஈத் முபாரக் ! ஈதுல் ஃபித்ர் – ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை முதலில் சம்ர்ப்பணம் செய்து ரமழானிய பொழுதுகளை சற்று வித்தியாசமாக ஞாபகிக்கின்றோம்.

ரமழானின் முதல் பத்து நாட்கள் அருளுக்குரியவை என்று அண்ணலார் நவின்றதற்கு ஏற்ப எம்மை பொருத்தமட்டில் மா பெரிய அருளை சந்தித்தோம். அதாவது நீதிக்கும் அமைதிக்குமான சாத்வீகப் போராட்டத் தொடரில் நல்லதொரு பெறுபேற்றை அல்லாஹ் தந்தருள் புரிந்தான். கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மர்ஹூம் ராசிக் G.S. அவர்களின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டு ஆயிரக் கணக்கான நோண்பாளிகளின் துஆப் பிரார்த்தனையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!

இந் நிகழ்வு ரமழானின் முதல் பத்தில் நிறைவுக்கு வந்தமை அல்லாஹ்வின் பேரருளாகும். இச் சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அதிகாரப் பலம் அற்ற நிலையில் முக்கியமான சில மைற்கற்களை இப் போராட்டத்தில் தாண்டி வந்துள்ளமை பதுருக் கள நிலவரத்தை ஞாபகப்படுத்துகின்றது.

“நீங்கள் சிறுபான்மையினராக பலம் குன்றி இருந்த நிலையில் அல்லாஹ் நிச்சயமாக பத்ரில் உங்களுக்கு உதவி செய்தான்” (சூரா ஆல இம்றான் : வசனம் 123)

இறையச்சமும் நிதானமான கச்சிதமான வேலைத் திட்டங்களோடு கூடிய நகர்வுகள் சூழ்ச்சிகளையும் தந்திரோபாயங்களையும் தகர்த்தெறிந்து நல்விளைவுகளை தோற்றுவிக்குமென்பது இறை நியதியாகும். இந்த ஆழமான நம்பிக்கையோடு தொடர்ந்து இன்ஷாஅல்லாஹ் நகருவோம்.

ரமழானிய பொழுதுகள் அருள்மிகு சந்தோஷ நிகழ்வுகளை கொண்டுவந்தாலும் கசப்பான அசாதாரண நிகழ்வுளையும் அதில் நாம் சந்தித்தோம்.

அமைதியான புத்தளம் மண்ணில் ஒரு அப்பாவி மனிதனின் உயிர் எம் சமூகத்தைச் சேர்ந்த மார்க்க அறிவுப் பின்னணி அற்ற சமூக விரோத கும்பல் ஒன்றினால் காவுகொள்ளப்பட்டது. புத்தளம் வாழ் பொது மக்களின் உள்ளத்தை உருகச் செய்த இந்த அநியாயத்தை மனித நேயத்தின் நீள, ஆழ, அகலத்தை மிகவும் சரியாக மதிப்பீடு செய்கின்ற யாருமே வன்மையாக கண்டிக்காமல் இருக்க முடியாது. குறிப்பாக நோன்பு நோற்ற முஸ்லிம்கள் அனைவரும் இந்த அநியாயத்தை தாங்கள் செய்ததாக இறைவனிடம் ஒப்புக்கொண்டு பச்சாதாபப்பட்டு தவ்பா செய்து மீண்ட நிலையில் ஈதுல் ஃபித்ரை சந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

சகோதர இனத்தின் உணர்வலைகளில் காயத்தை ஏற்படுத்திய இக்கோர சம்பவம் ஒன்று இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு புத்தளம் வாழ் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களது வகிபாகத்தை செலுத்துவதோடு இனங்களுக்கிடையிலான நல்லுறவும் சக வாழ்வும் சாந்தியும் சமாதானமும் தொடர்ந்தும் நிலைப் பெறுவதற்கு புத்தளம் முஹைதீன் ஜும்மா (பெரியபள்ளி) மஸ்ஜித் முன்னெடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் காய்தல் உவர்தல் இன்றி பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிவாக வேண்டிக்கொள்கின்றோம்.

இவ்வகையில் எமது ஈத்ல் ஃபித்ர் நோன்புப் பொருநாளை இறை சட்ட வரம்புகளைப் பேணி மிகவும் எளிமையாகவும் பணிவாகவும் கொண்டாடுவோம்!

அழகிய நற்பண்பாடுகளை சாதனமாகக் கொண்டு இஸ்லாத்திற்கான வாயில்களை பிற மத சகோதரர்களுக்கு மத்தியில் அகலத் திறப்பதற்கு முயற்சிப்போம் !

வல்ல அல்லாஹ் நாம் ரமழானில் செய்த நற்கருமங்களை ஏற்று அங்கீகரிப்பானாக! எமது பாவங்களையும் மன்னித்தருள்வானாக !!


One thought on “ஈத் முபாரக் ! ரமழானிய பொழுதுகளை சற்று வித்தியாசமாக ஞாபகிக்கின்றோம்.

  1. Mohamed Razmi says:

    பட்டாணி ராசிக் கடத்தல் – கொலையின் சந்தேக நபர் நாகவில்லு எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த சஹாப்தீன் நௌஷாத் இன்று பொலன்னறுவ நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப் பட்டார் ! இதனை இங்கு பதிசெய்வது ஏன் என்றால் raasik கொலை விவகாரம் என்ற ஒரு folder ராசிக்கைப் போலவே காணமல் போய் விட்டது தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All