Puttalam Online
puttalam-news

இனி நாங்க புத்தளத்தான் தான்

SRF Swiss Radio and Television சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஆசிய பிராந்திய செய்தியாளிணி  கரின் வாக்னர் (Karin Wagner) புத்தளம் விஜயம்

SRF Swiss Radio and Television சுவிஸ் ரேடியோ அன் டெலிவிசன் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய செய்தியாளிணி கரின் வாக்னர் (Karin Wagner) செய்தி விவரணமொன்று தயாரிப்பதற்காக புத்தளம் நகருக்கு விஜயம் செய்தார்.

புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களையும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களையும் சந்தித்து, தனது விவரணத்திற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டார். இச் சந்திப்புகளுக்கான ஏற்பாட்டினை புத்தியாகம சந்திர ரத்ண தேரர் அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களிடம் வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்து தொடர்ந்தும் புத்தளத்தில் வாழுவோரின் எதிர்காலம் குறித்தும், கடந்த மாதங்களில் பரபரப்பை ஏற்படுத்திய கிறீஸ் மனிதன் விவகாரம், அதனடியாக நடந்த பொலிஸ் அதிகாரியின் படுகொலை ஆகியன தொடர்பாகவும் விரிவான செவ்வியல் மேற்கொண்டார்.

“தற்போது இலங்கையில் இடம்பெயர்ந்தோர் என்ற ஒரு பிரிவினர் இல்லை, அவர்கள் மீள் குடியேறுவதற்கான வசதிகளை அரசு வழங்குகிறது என்று அரசாங்கம் அறிவித்து விட்டது. எனினும் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையினர் மீள் குடியேறாமல் தொடர்ந்தும் புத்தளம் பிரதேசத்தில் வசிப்பதால், புத்தளம் மாவட்டத்துக்கு என அரசாங்கம் ஒதுக்கும் வளப் பங்கீட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை மென்மேலும் கூர்மை நிலை அடையும் எதிர்கால ஆபத்தினை விளக்கினார். இடம்பெயர்ந்து புத்தளத்திலேயே நிரந்தரமாக விசப்பவர்கள், தம்மை புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்துகொண்டால், தற்போது மேற்கொள்ளப்படும் 2011 குடி சன புள்ளி விவரக் கணிப்பில் புத்தளம் மாவட்டத்தில் வதியும் உண்மையான சனத்தொகை காட்டப்படும். அப்போது, அரசாங்கமும் அச் சனத்தொகைக்கு ஏற்ப வள ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும். இவ்வாறு புத்தளத்தில் பதிவுசெய்யாமலும் அதே நேரம் புத்தளத்தின் வள ஒதுக்கீட்டுகளை தொடந்து அனுபவிப்பதும் எதிர்கால நலனில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்றும் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் சுவிஸ் ரேடியோ அன் டெலிவிசன் சேவைக்குக் கூறினார்.

கிறீஸ் மனிதன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த போது: “இந்த விவகாரம் தோன்றியவுடனேயே அரசாங்கமும் பொலிசாரும் துரிதமாக செயல்பட்டிருந்தால், ஆரம்ப கட்டத்திலேயே இப்பிரச்சினையை இலகுவாகத் தீர்த்திருக்கலாம். எனினும், பொது மக்களில் சிலரோ அல்லது ஒரு குழுவோ சட்டத்தை கையில் எடுப்பதையும் அனுமதிக்க முடியாது. இந்த இரண்டு பக்க பலவீனங்களினால் ஒரு மனிதனின் உயிர் அநியாயமாக துறக்கப்பட்டது” என்றும் கூறினார்.

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது சோல்டர்ன் 01 குடியிருப்பில் வதியும் 132 குடும்பங்ளைச் சேர்ந்த முஸ்லிம்களை சந்தித்த செய்தியாளிணி கரின் வாக்னர், இடம்பெயர்வுக்கு முன் வடக்கின் வாழ்க்கைகும், தற்போது புத்தளத்தில் கிடைக்கின்ற வாழ்க்கைகும் இடையிலான வித்தியாசங்களைப் பற்றி விணவிய போது, “பெரிய வித்தியாசமில்ல. அங்க இருந்த மாதிரிதான் இருக்கிறோம்” என அவருடன் உரையாடிய பெண்கள் கூறினர்.

மீள் குடியேற்றம் குறித்து விணவிய போது: “மீண்டும் வட மாகாணம் செல்வதில் தமக்கு நாட்டமோ ஆர்வமோ இல்லை என்றும், மேற்படி சோல்டர்ன் 01 குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் வாக்காளர் பட்டியலை புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.

தனது பேரக் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருந்த ஆணொருவர் : “ இனி பெரியபள்ளி என்னா முடிவெடுக்குதோ அதுக்கு நாங்க ஒத்துப்போவோம்” எனக் கூறியபோது, இவர்கள் எழுத்தினால் மட்டுமல்ல உள்ளத்தினாலும் ‘இனி நாங்க புத்தளத்தான் தான்’ என உறுதி கூறுவது உறுதியானது.


2 thoughts on “இனி நாங்க புத்தளத்தான் தான்

  1. fasmafaz says:

    புத்தம் புதிய புத்தளத்தில் புது யுகம் காண வந்த செய்தியாளினி அவர்களுக்கு புது தளத்தின் மண் வாடையை பேனா மைகளால் வடித்து புத்தளத்திலே பூர்வீகம் காண பொன் கரங்களை வார்த்திட வந்தாரோ ?…..

  2. Mohamed SR Nisthar says:

    Dear Abdullah Hazrath,

    // இந்த விவகாரம் தோன்றியவுடனேயே அரசாங்கமும் பொலிசாரும் துரிதமாக செயல்பட்டிருந்தால், ஆரம்ப கட்டத்திலேயே இப்பிரச்சினையை இலகுவாகத் தீர்த்திருக்கலாம். எனினும், பொது மக்களில் சிலரோ அல்லது ஒரு குழுவோ சட்டத்தை கையில் எடுப்பதையும் அனுமதிக்க முடியாது. இந்த இரண்டு பக்க பலவீனங்களினால் ஒரு மனிதனின் உயிர் அநியாயமாக துறக்கப்பட்டது//.

    well said.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All