Puttalam Online
art-culture

அயோத்தி ராமன் அழுகிறான் – கவிப் பேரரசு வைரமுத்து

1992.jpg

பாபர் மசூதி இன வெறியர்களால் இடிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 6 ஆம் திகதியுடன் 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்பட்ட, முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட , கடந்த ஆண்டின் “அயோத்தி தீர்ப்பு” (Ayodhi Verdict) கூட மனச்சாட்சி உள்ளவர்களையும் ஏமாற்றம் அடையச்செய்தது. முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த  இடம் மூன்று கூறுகளாக பிரித்து தீர்ப்பு அளிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டது. இது இந்திய முஸ்லிம்கள் மட்டும் அல்ல, முழு முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஏற்பட்ட இழுக்காகும்.

இந்த மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளிலே பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களால் இடிந்து போய் எழுதியது” என்று எழுதிய இந்த பின்வரும் கவிதை, தமிழுக்கு நிறமுண்டு” என்ற நூலில் வெளிவந்துள்ளது.எமது ஊர், எமது பிரதேசம், எமது நாடு என்கிற வரையறைகளுக்கு அப்பால், முழு முஸ்லிம் உலகினதும் பிரச்சினைகள் எமது சொந்த பிரச்சினைகளாக கருதப்படாத வகையில், உலக முஸ்லிம் குடும்பம் என்கிற பொதுவான இலக்கு வெறும் பேசு பொருளாகவே இருக்கும்.

எமது உலக சொந்தங்களின் பிரச்சினைகளில் ஒன்றை PuttalamOnline வாசர்களுக்காக பகிர்வதன் மூலம் எமது  சிந்தனைகளும் ஏக்கங்களும் பரந்த நோக்கில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அயோத்தி ராமன் அழுகிறான்

-கவிப் பேரரசு வைரமுத்து

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்….

(நன்றி – முஹம்மது மபாஸ்)

 


4 thoughts on “அயோத்தி ராமன் அழுகிறான் – கவிப் பேரரசு வைரமுத்து

 1. Mohamed SR Nisthar says:

  அன்புள்ள செளமீ!

  பதிலிட்டமைக்கு நன்றி. ஆரோக்கியமான கருத்தாடலுக்கு முன்வந்தமைக்கு பாராட்டுக்கள். உங்களைப் போன்றே என்னளவில் நானும் ஒரு “மதவாதி”.

  நமக்குள்ளே எத்தனை வெட்டுக்கள், கொத்துக்கள், இடிப்புகள், அழிப்புகள் இவை ஏன்? அதை சுட்டி யார் கவிதை சமைப்பார்?

  “அஜமிகள், அறபிகள் என்று பிரிந்து விடாதிர்” என்றது சுன்னிகளுக்கும், சியாக்களுக்கும் கூட பொருந்த வேண்டுமே? நாமெல்லாம் “ஜாஹிலியா” காலத்தவரா?

  புமியான் புத்தர் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட போது, அதன் சரி, பிழை களுக்கப்பால், எத்தனை பௌத்தர்கள் கவலை பட்டிருப்பர்? இது பற்றி (என்னையும் சேர்த்து) யாராவது வெளிப்படையாக கவலைப்பட்டோமா? அனேகமா அது இன்னாருக்கும்- இன்னாருக்கும் உள்ள பிரச்சினை என்றிருந்திருப்போம். நமக்கு ஒரு பிரச்சினை என்றால் எல்லாரும் சேர்ந்து கூக்குரல் செய்ய எதிர்ப்பார்ப்போம். அத்தகைய ஒரு எதிர்பார்ப்பின் அல்லது எதிர்பாராமல் கிடைத்த சாதகமான எதிர்ப்பைக் கூட எவ்வாறு ஏற்றுக் கொள்கிறோம்? “ஜாஹிலியா கவிஜன்” என்ற அடைமொழியுடன். இதுதான் எனக்கு கவலை தந்த விடயம்.

  ஒரு வேளை அது உண்மையில் ராமர் கோயிலாய் இருந்து “முஸ்லிம்” கள் அதை இடித்து அது எங்களது என்றிரு ந்திருந்தால், அந்த “முஸ்லீம்” களில் ஒருவன் இப்படி கவிதையோ, கண்டன கட்டுரையோ எழுதியிருப்பானா? அல்லது ஒரு “ஜாஹிலியா கவிஜன்” எழுதியிருந்தால் பொறுத்திருப்பார்களா? இதுதான் என் கேள்வி.

  உங்களை இந்த கருத்தாடலுக்கு இழுப்பதற்காக உங்களை விழித்தேனே தவிர, அதன் நோக்கம் “நம்” சிந்தனைப் போக்கின் விகாரத்தை காட்டவே. இதற்காகத்தான் “பலவீன பக்தர்” என்றும் சொல்லிருந்தேன்.

  நிற்க, லண்டனில் உள்ள ஒரு இணையத்தளம் என்னை மதவாதி என்று மட்டுமல்ல அடிப்படைவாதி என்றே முத்திரை குத்திவிட்டனர். அந்தளவுக்கு எம் சமயத்தில் எனக்கு உறுதியுண்டு. ஆனால் நம் சமயம் அநீதிக்கு துணைபோகும் சமயமாக இந்த “பலவீன பக்தர்” அதை கடத்தி செல்வதை நிறுத்த நாம் முன்வரவேண்டும். அதற்கான அழைப்புத்தான் என் பின்னூட்டம். கிடைத்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்பட்டது. நன்றி.

 2. Zawmy Shifran says:

  //அயோத்தி ராமன்
  அவதாரமா மனிதனா
  அயோத்தி ராமன்
  அவதாரமெனில்
  அவன்
  பிறப்புமற்றவன்
  இறப்புமற்றவன்
  பிறவாதவனுக்கா
  பிறப்பிடம் தேடுவீர்

  அயோத்தி ராமன்
  மனிதனெனில்
  கற்பத்தில் வந்தவன்
  கடவுளாகான்
  மனித கோவிலுக்கா
  மசூதி இடித்தீர்//

  நெஞ்சை தொட்ட வரிகள். ஒரு ஜாஹிலியா கவிஜன் இவ்வாறு உருகி எழுதும் போது, நாம் இறைவனிடம் கையேந்தி ஒரு சொட்டு கண்ணீர் விட்டோமா என்றால் கேள்வி குறிதான்.

  • Mohamed SR Nisthar says:

   அன்புள்ள சொவ்மி,

   “மாண்பு மிகு மத வாதிகளே
   சில கேள்விகள் கேட்பேன்
   செவி தருவீரா”

   என்று நீங்கள் சொல்லும் அந்த “ஜாஹிலியா கவிஜன்” உங்களைப் பார்த்தும் அழைகின்றான்.

   அவன் அழைப்பது ஈரான் நோக்கியும், பாகிஸ்தான் நோக்கியும், ஆப்கானித்தான் நோக்கியும் தான் என்பது எனது புரிதல்.

   சியாக்களின் மஸ்ஜிதுகள், சுன்னிகளின் மஸ்ஜிதுகள், கராச்சி தேவாலய எரிப்பு, புமியான் பிரதேச பாரிய புத்தர் சிலை எல்லாம் இந்த “பலவீன பக்தர்” களான மதவாதிகளால் அழிக்கப் பட்டது ஏன் உங்களுக்கு கவிதையாய் வரவில்லை அல்லது அது பற்றிய கவிதைகள் உங்கள் “நெஞ்சை தொட்ட வரிகள்” ஆக அமையவில்லை?

   கவிதையை “அழித்தவர்” பக்கம் இரு ந்தும் பார்கலாம் “அழிக்கப்பட்டவர்” பக்கம் இருந்தும் பார்க்கலாம். இது “அழித்தலுக்கு” எதிரான கவிதையே தவிர ” மசூதி அழிப்பு” க்கு மாத்திரம் எதிரான கவிதையாக பார்த்தால் நம்மில் ஏதோ பிழை இருக்கவேண்டும்.

   நாமும் வாழும் உலகமாகவே இந்த பூமியை இஸ்லாம் பார்க்கிறது, தவிர நாம் மாத்திரம் வாழும் இடமாகவல்ல.

   • Zawmy Shifran says:

    அன்பின் நிஸ்தார் காக்காவுக்கு,

    நீங்கள் மேலே என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிவதற்கு என் அறிவு போதவில்லை. இருந்தாலும் ஆப்கானிஸ்தான் புத்தர் சிலை உடைப்பும், கராச்சி தேவாலய எரிப்பும் ஏன் இலங்கை அனுராதபுர தர்கா உடைப்பும் கூட நீங்கள் கூறும் மத வாதியாக இருந்து கொண்டு கூட என்னால் ஏற்க முடியாதுள்ளது.

    “மாண்பு மிகு மத வாதிகளே
    சில கேள்விகள் கேட்பேன்
    செவி தருவீரா”

    இவ்வரிகளுக்கான பதில் இதோ, ஜெருசலம் வெற்றி கொல்லப்பட்ட போது அங்கு சென்ற உமர் (ரலி) அவர்கள் ஒரு தேவாலயத்தில் தொழ நேரிட்டது, தொழுது முடிந்த பின் அத்தேவலயதிலோ அதன் முன்றலிலோ தொழுகை நடத்துவதை தடை செய்த மார்க்கத்தை பின்பற்றும் மத வாதியாக இருப்பதில் எனக்கு பெருமையே! ஒரு சில அரை குறையினர் செய்யும் விடயங்களுக்காக மதத்தை வீதிக்கு இழுப்பது தகுமோ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All