PuttalamOnline

சோதிடம்: காலம்- 1977 முதல் 2014 வரை

| 0 comments

சோதிடமா? அய்யய்யோ இதை புத்தளம் ஓன்லைனில் எழுதலாமா? இது ஹராமான விடயமாச்சே என்று புருவத்தை உயர்த்த வேண்டாம். இது கைபார்த்து சொல்லும் சாஸ்திரமல்ல. வானைப்பார்த்து மழை, வெளில், வெப்ப அளவு சொல்வது போல் அவ்வளவுதான். இப்போது நிம்மதியா? என்ன ஒரு கிழமை விடயத்துக்குப் பதிலாக இங்கு 37 வருடங்களின் நிகழ்வுகள் சொல்லப்போகிறேன். அதாவது அரசியல் சோதிடம், ஆனால் 365×7 என்றில்லாமல் அங்கொன்று இங்கொன்றாகத்தான்.

இப்படியாக 19.05.2009 அன்று, என்ன திடீரென்று 1977ல் இருந்து மே 2009க்கு வந்துவிட்டேன் என்று குறை நினைக்க வேண்டாம். மறந்து போகாமல் ஒரு விடயத்தை சொல்லவேண்டும், அதன் பிறகு 1977ல் இருந்தே ஆரம்பிக்கின்றேன். அதுதான் புலித்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி காட்டுத்தீபோல் படர்ந்து நாட்கள் கிழமையாகி, கிழமை மாதங்களாகி, மாதங்கள் வருசமாகி தலைவரை அனேகர் மறக்க முயற்சிக்கும் வேளையில் ஜேர்மணியில் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. அங்கேலா மேர்கள்(Angela Merkel)லிடம் இருந்தல்ல, எனது நண்பர் ஒருவரிடம் இருந்துதான். அந்த நேரத்தின் “ஹொட் நியூஸ்”களில் இதுவும் ஒன்று. நண்பரும் நானுமாக நிறைய நேரம் இது பற்றி பேசும் போது அவர் சொன்னார், ” ஐசே! நிஸ்த்தார் கேட்டீரே சமாச்சாரம், பிரபாகரன் தப்பிட்டதாம். வன்னி காட்டுக்குள் ஒரு இடம் இருக்காம் அதற்குள் யார் போனாலும் திரும்பிவரமாட்டார்களாம். ஆனால் தலவருக்கு அந்த காடு அத்துபிடியாம். அவர் அதற்குள்தானாம் ஒழித்து இருக்கிறார். இந்த வருசம் ஆள் வெளியே வரமாட்டாராம். அடுத்த வருசமும் இல்லையாம். 2013ல் தானாம் ஆள் வெளியே வருமாம். இனி தெரியும்தானே உமக்கு என்ன நடக்குமென்று. அப்ப ஆள் காட்டும் தண்ட வேலையை, அப்பத்தான் உவயள் ஓடி முழிப்பினம், விழங்கிச்சிதே உமக்கு” என்றார்.

நானும் அப்படியா என்று கேட்காமல், அது சரி 2013 ன்றிலா அல்லது 2012ன்றிலா ஆள் வெளியே வரும்? என்று கேட்டேன். “இண்டக்கி சேர்ச்சிலே தமிழ் பாதர் 2013ல் தான் ஆள் வெளியே வரும் என்றவர்” என்றார். நான் சொன்னேன் பாதர் பிழை என்று. ஏன் அப்படிச் சொல்றீர்? உமக்கும் ஏதேனும் தெரியுமே? உங்க லண்டனிலே ஏதாச்சும் கதைச்சினமே? என்று கேட்டார் நண்பர். நான் சொன்னேன் அப்படி ஒன்றுமில்லை, இங்கு 2012ல் தான் கோடைக்கால ஒலிம்பிக்ஸ், அப்போது தலைவர் வெளியே வந்து, ஏஜண்ட்மாருக்கு காசு கட்டி யூ.கே வந்தால் ஒலிம்பிக்ஸையும் பார்த்துவிட்டு கையோடு அகதி அந்தஸ்தும் கோரலாம், அதைத்தான் சொன்னேன் என்றேன். நண்பருக்கு வந்ததே கோபம். சரி இதை இப்படியே விட்டுவிட்டு மீண்டும் 1977க்குப் போவோம். காரணம் மேல் சொன்ன விடயம் இந்த சோதிடத்தில் அடங்காதது, 2013ல் நடக்கவிருக்கும்(?) நிகழ்வொன்ரைத்தவிர.

1977ல் சிங்கள் அரசியலின் கவனக்குறைவால் தமிழ் அரசியலுக்கு அதிஸ்டம் அடித்தது, அதனால் முன்னை நாள் தானை தளபதி அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவரானார். மற்றும் படி அதே சூரியன் காலையில் உதிப்பதும், மாலையில் மறைவதும் பின்னர் சந்திரன் தேய்வதும், வளர்வது போல் தெரியுமாப்போல் காலம் கழிந்ததே தவிர, சூரிய பகவான் மேட்டிலும், சந்திரன் பகவான் பள்ளத்திளும் (?) என்ற விடயங்கள் எல்லாம் இதில் இல்லை. நாம் இல்லை என்று அடித்துச் சொன்னாலும் கேட்கிறார்களா என்ன. ஆளுக்காள் மாறி, மாறி கேரளா, கும்பகோணம், மைசூர் என்று அலைகிறார்கள். சரி அலையட்டும் அது அவரவர் தலை விதி. எல்லாம் இந்த சாஸ்திரத்தை நம்புவதால் ஏற்பட்ட கதி. கையின் ரேகையை நம்புகிறார்கள். கல்லின் நிறத்தை நம்புகிறார்கள். இலக்கத்தை நம்புகிறார்கள். எழுத்தை நம்புகிறார்கள். மாட்டை நம்பிகிறார்கள். மரத்தை நம்புகிறார்கள் அதிலுள்ள குரங்கையும் நம்புகிறார்கள். தங்களின் திறமையை, அறிவை அனுபவத்தை, தன்னை படைத்தவன் என்று இவைகளைத்தவிர்த்து அனைத்தையும் நம்புகிறார்கள். என்ன செய்வது? அவர்கள் பாணியிலேயே நமது இந்த சாஸ்திரம். சரி அதையாவது நம்பினார்களா? இனி நம்புவார்களா?

1978ல் நான் பல்கலைக் கழக புது மாணவன். அங்கு தமிழ் மன்றத்தினால் ஒரு எழுந்தமான பேச்சு போட்டி வைத்தார்கள். அதாவது நிகழ்ச்சி தொடங்க ஐந்து நிமிடதிற்கு முன் தலைப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து தருவார்கள். அந்த தலைப்பு பற்றி பேசவேண்டும் இதுதான் சமாச்சாரம். யார் செய்த பிழையோ எனக்கு கிடைத்த தலைப்பு “தனி நாடு கிடைத்தால்”. என்ன செய்ய பேசியேயாகவேண்டும். அப்போதைய அறிவையும், அனுபவத்தையும் அடிப்படையாகவைத்து நாலு வார்த்தை கதைத்தாகிவிட்டது. அந்நாளில் வட பிரதேசத்தின் பொருளாதாரம் முறைமைய “மனி ஓடர்” பொருளாதார முறை என்பர். அதாவது வட பகுதி படித்தவர்கள் என்று கருத்தப்பட்டவர் கொழும்பில்லும், பிற நகரங்களிலும் அரசாங்க உத்தியோகத்திற்காக இடம் பெயர்ந்து மாதாமாதம் தமது குடும்பதுக்காக மனி ஓடர் மூலம் அனுப்பும் பணத்தையும் அதை நம்பிய வாழ்க்கை முறையையும் குறிக்க இந்தப்பதம் பாவிக்கப்பட்டது. ஆக அந்த காலத்தில் ஒரு தனியான நாட்டுக்கான அடிபடை பொருளாதார கட்டுமானம் இருக்கவில்லை. ஏன் இப்போது 09.07.2011 உருவான குழந்தை நாடான் தென் சூடானில் அப்படி என்ன பொருளாதர கட்டுமானத்தை கண்டீர்? என்று குறுக்கு கேள்விகள் கேட்கக் கூடாது. கூடவே மகாவலி கங்கை திசை திருப்புதிட்டம் இடையில் கைவிடப்பட்டால் அல்லது வேறு திசை நோக்கி அதை திருப்பினால், திருக்கோணமலையும் பாதிக்கப்பட வாய்ப்பு இருந்தது. இப்படி அங்கொன்று, இங்கொன்றாக விடயங்களைப் பொருத்தி இந்த தனி நாட்டு கனவெல்லாம் சரிப்பட்டுவராது என்று ஒரு சின்ன சோதிடம் சொன்னேன். அதிகம் படித்தவர் கேட்டார்கள? ஆனால் பரிசு தந்தார்கள்.

அன்றைய எதிர்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி(TULF) ஏற்றிய விடுதலை உணர்வு வெளிச்சத்தில் வெட்டில் பூச்சிகளாய் இளைஞர்கள் விழ நிலைமைகள் மாறி 1983 தமிழருக்கெதிரான ஜே.ஆரின்(JR) (அரச) பயங்கரவாதம் தம் முழு பலத்தையும் அப்பாவித் தமிழரின் மேல் பிரயோகித்தது. சூடேற்றியவர்கள் குடும்ப சகிதமாக இந்தியாவுக்கு ஓடிவிட்டார்கள். அகப்பட்டது அப்பாவிகள். இதைத் தொடர்ந்து இளைஞர் கூட்டம் தமிழ் நாட்டிற்குள் பிரவேசித்து அவர்களிடம் பயிற்சி பெற்று பணமும் பெற்று, போதாதற்கு மக்களிடம் பணம் பறித்து ஆயுதம் வாங்கி சண்டைகளில் பல வித்தைகள் காட்டி மக்களின் சிந்திக்கும் திறனை சிதறடித்த தமிழ் ஆயுத அரசியல் மிக வேகமாக நடை போட்டது.

இப்படியே ஆண்டுகள் உருண்டோடி 1989 ஐ அடைந்தது. ஜேர்மணிய பிரமேஹாவன் (Bremehavan) நகரத்துக்கு புலிகளின் மதியுரைஞர்(?) திரு. அண்டன் பாலசிங்கம் (தான் புலியாக இருந்தாலும் தந்து பெயரை “பல புலி” என்று மாற்றாமல் கடைசிவரை அதை காத்துக்கொண்டார். சிங்கத்தில் அப்படி என்ன விருப்பமோ தெரியவில்லை, அவ்ரின் துணைவி அடேலுடன் வந்தார். ஜேர்மணிய புலி பண வசூழ் காரருக்கும், அவர்களின் அரசியல் வேலை செய்வோருக்கும் ஒரு கூட்டம். அதில் ஒரு சில பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஜேர்மணிய அரச அனுமதியின்றி நடந்தால் இப்படியான கட்டுப்பாடோ தெரியாது. எனக்கு ஒரு புலி பண வசூழ் மன்னன் கூட்டாளி தன்னுடன் என்னையும் அழைத்துச் சென்றான். என்னுடைய அரசியல் நிலைப்பாடு சரியாக தெரிந்திருந்தும் அழைத்தான் என்பதற்காகவும், ஒரு பெரிய மனிதரை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பாகவும் எண்ணி சென்றுவிட்டேன். அரசியல் விளக்கங்கள், இந்தியாவின் உதவியும், ஏமாற்றமும், சிறிமாவின் அழைப்பும், பிரமதாசாவின் சமிக்ஞையும், அப்படி இப்படி என்று பல விடயங்கள் பேசி இப்போது ” கேள்வி நேரம்” (தீபம் தொலைக் காட்சியின் நிகழ்வல்ல). ஒரு கேள்விக்கு ஒரு சிறிய விடை பொருத்தமான விடயா இல்லையா என்றெல்லாம் பார்க்க நேரம்மில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்க்கு அனுமதியில்லை. கையை உயர்த்தினேன். அனுமதித்தார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாவித்து கேள்விக்கு பதிலாக ஒரு நிமிடத்துக்குள், அதாவது இன்றைய ITV2 தொலைக்காட்சியின் 60 செகண்ட் நியுஸ் மாதிரி, கேள்வியுடன் கலந்த ஒரு சிறிய சொற்பொழிவை செய்துவிட்டேன். சமாச்சாரம் “இலங்கை முஸ்லீம்கள் தொடர்பாக புலிகளின் நிலைப்பாடு என்ன (?)” என்பதே அதற்குள் இருந்த விடயம். இதற்கு ஏன் ஒரு நிமிடம் தேவை? ஒரு செக்கனில் கேட்டிருக்கலாமே என்று யோசிப்பீர்கள். ஆனால் அதற்குள்தான் விடயமும், பிரச்சினையும். மதி உரைஞ்சருக்கோ என்மேல் தீராத ஆத்திரம். எனது குறுஞ் சொற்பொழிவில் புலிகளை “ஆயுதக் குழு” என்று சொல்லிவிட்டேனாம். புலி என்பது தேவைப்படின் உலகத்தின் 5ம் பெரிய இந்திய ராணூவத்தையும் எதிர்த்துப் போராடும் வல்லமை பெற்றவர்களாம். என்வே நான் “ஆயுதக் குழு” என்ற பதப்பிரயோகத்தை வாபஸ் பெறாவிட்டால் அவர் என் கேள்விக்கு பதில் சொல்லத் தயாரில்லை என்றார். நான் வாபஸ் வாங்கவில்லை. அவர் பதில் சொல்லவுமில்லை. அவரின் மெய்பாதுகாவலர்கள் முறைத்துப் பார்த்தனரே தவிர ஒன்றும் செய்யவில்லை. எனது நாள், நட்சத்திரம் நல்லதாக இருந்திருக்க வேண்டும், இந்த சொல்லாடல் இலங்கையில் நடந்திருக்க,…? அப்பப்பா நினைக்கவே நடுங்குகிறது.

அன்று பதியுரைஞ்சர் பதில் சொல்லாவிட்டால் என்ன? அதுதான் 1990ல் மிகத் தெளிவாக பதில் சொன்னார்களே. அதன் படி தமிழ் புலிகள் தங்கள் வியூகத்தை மாற்றியமைத்தனர். அதாவது சிங்கத்துக்கும், புலிக்குமான சண்டையில் இடையில் சிக்கிய பூணைகளை நரிகளாகக் காட்டி ( நம்ம காக்காமாரும் சும்மா இல்லை தெரியும் இடைவெளியில் சைக்கிள் ஓடியும் உள்ளார்கள்) தமது என சொந்தம் கொண்டாட உருவாக்கப்பட்ட கற்பனை பிரதேசத்தில் (தமிழ்ழீழம்) நரி வேட்ட்டைக்கு தயாரானார்கள். இது காத்தாங்குடி பள்ளிவாசல் கொலைகளாக ஓகஸ்டில் ஆரம்பித்து வட பகுதி முஸ்லிம்களின் (சோனக இனத்தாரின்) பலாத்கார வெளியேற்றமாக டிசம்பரில் முடிவடைந்தது.

ஏற்கனவே பொருளாதார அம்சம் இழந்த தனி நாட்டு திட்டத்தில் இப்போது ஒரே மொழி பேசும் இரண்டு வேறுபட்ட இனங்களுக்கு (தமிழர், சோனகர்) மத்தியில் ஏற்பட்ட பாரிய (திட்டமிடப்பட்டு அரங்கேற்றிய) விபத்தை சுட்டிக் காட்டி தனி நாட்டுக்கான அடுத்த (நிரந்தர) தடை ஏற்பட்டதை கட்டுரைகளாக எழுதினோம். யார் கணக்கெடுத்தார்கள்? தனி நாடி திடமாக உருவாவதற்குப் பதிலாக அது அப்படி உருவாக முன்னே கருச்சிதைவு ஏற்படுவதை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. என்னகென்ன? சாஸ்திரம் சொல்வது மட்டும்தான் என் வேலை.

இப்படியே கோள்களின் இடப்பெயர்வு தடையின்றி நடைபெற, புலிகளுக்கு வெற்றிக்கு மேல் வெர்றியென்று வட மேற்கே வில்பத்து (பழைய சோனக பிரதேசம்) சரணாலய பகுதி, வட மேற்கே வவுனியா, தென் கிழக்கே அம்பாறை வரை ஒரு அகண்ட நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கோள்களின் இடப் பெயர்வில் “சனி” ஆட்சி என்ர அம்சம் அன்று புலிகளுக்கு ஏன் தெரியாமல் போனது என்பதற்கு தனியான ஓர் ஆய்வு பிறகு செய்வோம்.

இப்போது தமிழரிடையே பறித்த பணத்தை,ஐரோப்பாவில், கனடாவில், அமெரிக்காவில்,அவுஸ்திரேலியாவில், நோர்வேயில் என்று உலகத்தின் நாலா மூலைகளிலும் திரட்டிய பணத்தையும், படித்த பிள்ளைகளின் மூளைப் பலத்தையும் மூலதனமாக்கி புலிகள் விமானப் படை கட்டினார்கள். “விமானக் கதை” மெது மெதுவாக வெளியே வந்ததால் தமிழ் தரப்பிடம் எதிர்பார்ப்பு தேவைக்கு அதிகமாகவே இருந்தது. தமிழரின் ராணுவ ஆய்வுகள் அனல் பறந்தன. கனடாவில் இருந்து வானொலியூடாகவும், ஜேர்மணியில் இருந்து “ஓசி” பேப்பர் மூலமும், அதைவிட யூ.கேயின் வேல்ஸ் பகுதியில் இருந்து வானொலியூடாகவும், இலங்கையில் இருந்து இக்பால் அத்தாஸ் ஆங்கில பத்திரிகை மூலமாகவும் தும்பிப் படையை ஏதோ “J-10″, “MiG-35″ அல்லது “Typone” சண்டை விமானங்கள் மாதிரியும் சித்தரித்து இலங்கை அரசாங்கத்தை பயமுறுத்தினர். போதாதற்கு கற்பனை விமானம் புதிதாக பிறந்த தும்பிபோல பறந்து வந்து அப்பாவித் தமிழரிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

வாசிப்பு பழக்கத்தை ஐரோப்பிய தமிழரிடையே ஏற்படுத்த கங்கணம் கட்டி அதை “ஓசி”யாய் ஊக்குவிக்கும் (ஒரு பேப்பர்-இது ஒரு தமிழ்-ஆங்கில இரு மொழி பேப்பர், புலிகளின் விசுவாசிகளால் லண்டனில் இருவாரங்களுக்கு ஒரு முறை வெளிவருவது, இலவசமாக வருவதால் ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர் என்ற மகுடம் தாங்கிவரும். பத்திரிகையின் பெயர் “ஒரு பேப்பர்- Oru paper”) பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர், புகழ் பெற்ற யாழ் பல்கலைக்கழக முனை நாள் (துப்பாக்கி தூக்காத) போராளியின் தட புடலான “வீராப்பு” கட்டுரையுடன் இனி என்ன காலாட் படையுண்டு, கடற் படையுண்டு, வான் படையும் வந்து விட்டது எல்லாரும் “ரெடி”யாகுங்கள் உங்கள் யாழ் நோக்கிய பயணத்துக்கு என்ற மாதிரி கதைவிட, நான் தான் சாஸ்திரக் காரனாச்சே, உடனேயே ஒரு கட்டுரை எழுதி உங்களின் இந்த தும்பி (வான்) படை இந்தியரால் அழிக்கப்படும். கடைசி கட்டத்தில் இதை நம்பி போய் நாறுபடாமல் அந்த தும்பிகளை ஒழித்து வைத்தால் நல்லதென்றும் கூறினேன். ” ஓசி” பத்திரிகையில் உடனே பிரசுரித்து விட்டார்கள். என்னடா புதினம் இது? பப்படம் பற்றி கூட மாறான கருத்தை அனுமதிக்காத இந்த “ஓசி” பத்திரிகை இதை எப்படி வெளியிட்டது என்று தலையை உடக்க, உள்வீட்டு துப்பறிவாளரின் கூற்றுப்படி இந்த வெளியீடு, தம்பியின் தும்பித்தாக்குதல் வெற்றியின் பின், இந்த சாஸ்திரக்காரனுக்கு முட்டாள் பட்டம் கட்டவாம், அவன் சார்ந்த இனத்தின் மீதான இன்னும்மொரு கறுத்த பொட்டை சேர்த்துக் கொள்ளவாம். இன்று இலங்கைத் தமிழர் ஏமாறும் இந்திய சாஸ்திரக்காரனா(லண்டன் புற நகர் பகுதிகளில் இலங்கை தமிழரிடம் சாஸ்திரம் சொல்லி சம்பாதிக்கும் தமிழ் நாட்டு சாஸ்திரக்காரர்களின் அட்டகாசம் தாங்கமுடியாது) நான்? இல்லையே. நம்ம சாஸ்திரம் கட்டாயம் பலிக்கும் ஸார் நம்புங்க. பணம் கேட்க மாட்டேன் என்றேன் இருந்தும் என்னை நம்பவில்லை “ஒரு பேப்பர்”ரின் எதிர்பார்ப்பு கட்டுநாயக்க திடலிலும், வரித் திணைக்கள கூறையிலும் முற்று பெற்றது.

இருந்தாலும் அவர்களின் பகற் கனவு தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் பார்த்து இந்த ராஜ பக்ச ஜனாதிபதி தேர்தலை அறிவித்துவிட்டார். எல்லாரும் கச்சை கட்டினார்கள். லண்டனில் இருந்து இலங்கைக்கு உறவுப்பாலம் அமைக்கும்(ஐபீசி- புலிகளின் ஆரம்பகால ஊதுகுழல்) வானொலி தன் அன்பு நேயர்களை அழைத்து கருத்து பரிமாற்றம் செய்தது. 16 மணி நேர வேலை களைப்புடன் வந்தவர்களும் கூட ” அண்ணேய்! அந்த தலைப்பை இன்னுமொருக்கா சொல்லுங்க இப்பதான் வேலையால வந்த நான்” என கேட்க வானொலி அண்ணாவும் சளைக்காமல் தலைப்பை 10 நிமிடத்துக்கொருமுறை நினைவூட்ட சுமார் இரண்டு கிழமைக்கு இந்த “கருத்து” சொல்லும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அனேகமாக எல்லாரும் “பாம்பு”, “தேள்” கதைகள் சொல்லி, தங்கள் தீராத தாகத்தை அடக்க ஏதாவது வழி கிடைத்தாலும் கிடைக்கும் என்ற மேலதிக கனவொன்றுடன் த.தே.கூ(TNA) யூடாக பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்தார்கள். பதரிப்போன நான் ஐயோ அப்படி செய்து போடாதீர்கள். தமிழருக்கு நடந்த அநீதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலை பகிஸ்கரியுங்கள். அது அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். தேர்தல் முடிவில் தமிழரின் பங்களிப்பு அவசியமா இல்லையா என்பதை கண்டு கொள்ள அவர்களுக்கு வாய்ப்பும் இருக்காது. ராஜ பக்ஷ்யின் வெற்றியை அடித்துக் கூறி அப்படி வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்தால் அது இருக்கும் ஜனாதிபதிக்காகட்டும் அதன் மூலம் தமிழரின் இணக்கப் போக்கிற்கான சமிக்ஞையாக அதை பயன் படுத்தலாம் என்று வானொலி ஊடாக சொல்ல, அடி விழவில்லையே தவிர மற்றவை எல்லாம் நடந்தது. இவன் யார்? குழப்பவாதி! இவனை வானொலியில் அனுமதிக்க வேண்டாம் என்றார்கள் அன்பு நேயர்கள். தூக்கதில் கருத்து சொல்லும் திறமைசாலிகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

இதற்கிடையில் இன்னொரு பம்மாத்தும் வெளிவந்தது. இரண்டு சிங்களவரிடையே கடும் போட்டியாம், வாக்குகள் கோடு கீறினாற் போல் 49% 49%ஆக பிரியுமாம், அதற்கிடையில் சைக்கிள் ஓடுவாராம் புலி(சிவா) ஜி. தனக்கு கிடைக்கும் பேரம் பேசும் அரிய சந்தர்பத்தில் இந்த சிங்களவர்களை ஒரு வாட்டு வாங்கப் போவதாகக் கூற சுமார் 5 லட்சம் தமிழ் வாக்குகளில் சில ஆயிரம் மட்டுமே பெற்று அவர் தம்பியின் பிறப்பிடத்துடன் ஒதுங்கிக் கொண்டார். தேர்தலும் வந்து போனது தமிழரின் ” பாம்பு”, “தேள்” போட்டியூடாக இருக்கும் ஜனாதிபதி வெற்றி பெற்றது மட்டுமல்ல இனி தமிழரின் வாக்குகள் தேவையே இல்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தும் காட்டியது. தவரவிடப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பம். சிங்களவரை முட்டாள் என்று சொலிச் சொல்லியே முட்டாள்களாகிவிட்ட தமிழ் சமூகம்.

இதற்கிடையில்தான் நோர்வேயின் சமாதான முயற்சி அது இதுவெல்லம் வருடக்கணக்காக நடந்தேறியது. அப்போது என்ன நடந்தது என்று இப்போது அறிக்கை வந்துள்ளதால். அறிக்கை சொல்லாத ஒரு விடயத்தை மாத்திரம் ஞாபக மூட்டுகிறேன். நோர்வேயிக்கு “நம்ம ஆளுங்களும் போனாங்க”. அவர்கள் வந்து சொன்ன விஷயம் புலித்தரப்பின் ராஜ தந்திர(?) திறமையை பளிச்செனக் காட்டியது. அதாவது அந்த குறிப்பிட்ட சந்திப்பின் ஒரு அம்சம் முடியுமானவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை எப்படி கட்டியெழுப்புவது என்பதே. ஆனால் புலிகள் மேசையில் போட்ட “லிஸ்ட்” எந்தெந்த மூலை முடக்கெல்லாம் இந்து கோயில்கள், படசாலை கட்டிடங்கள் (ஏதாவது வேறு காரணங்களுக்காக அழிந்திருந்தாலும்) அவைகளை திருத்தி இயங்கச்செய்வதற்கு இவ்வளவு பணம் தேவை . அதை உடணடியாக எங்களிடம் தாருங்கள் என்ற மாதிரியான கோரிக்கை.

அடப்பாவிகளா வடக்கு கிழக்கென்று சுமார் 97 பள்ளிவாசல்களை அழித்தொழித்தீர்களே. அதை கட்டவும் வெளியேற்றிய மக்களை மீள் அழைப்பதன் மூலம் இயல்பு வாழ்க்கை மீண்டும் வருவதற்கான ஒரு சாதகமான சூழ் நிலை உருவாக வாய்ப்பிருந்ததை ஏன் மறந்தீர்கள்? அதற்கிடையில் தேசத்தின் குரல்(பால சிங்கம்) ” வெளி நாடுகளின்” வற்புறுத்தலுக்காகவே (இதய சுத்தியடன்) பேச்சு வார்த்தைக்குப் போகிறோம் என்ற மாவீரர் நாள்(?)( இந்த நாள் தொடர்பாக எனக்கொரு கேள்வி எப்போதும் மனதில் ஊசலாடிக் கொண்டே இருக்கும், காத்தாங்குடியில் பள்ளிவாயிலுக்குள் நூற்றுக்கு மேலாக கொலை செய்தவர்கள், அநுராதபுரத்திலே பஸ்சுக்கு நின்ற சின்னக் குழந்தைகளையும் கொன்றழித்தவர்கள், நாட்டில் அங்கொன்று, இங்கொன்றாக தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு இனபேதமின்றி கொன்றொழித்தவர்கள், ஆரம்பக் காலங்களிலே மாற்று இயக்க உறுப்பினரையும் கொன்றொழித்தவர்கள் , கடைசியாக முஸ்லீம்களின் கொண்டாட்டம் ஒன்றிலே அகுரஸ்ஸ என்ற பிரதேசத்தில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டு அப்பாவிகளைக் கொன்றோர், மே 2009ல் ஆயிரக்கணக்காக சொந்த மக்களையே அடித்தும், வெட்டியும், சுட்டும் கொன்றவர்கள் எப்படி மாவீரர்களா இருக்க முடியும்? இவர்களுக்கும் இவர்கள் வெறுக்கும் அல்-கைடா தற்கொலை கொன்றொழிப்பு செய்கைகளுக்கும் என்ன வித்தியாசம்?) உரைகளைக் கேட்கும் போதே எல்லாரும் அறிந்திருப்பீர்கள் இவர்கள் பயணிக்கும் பாதை மீண்டும் திரும்பிவரமுடியாத ஒற்றை வழி என்பதை.

இதற்கிடையில் ஜனநாயகச் செல்வி (ஜனனி ஜனநாயகம்) ஐரோப்பா பாராளுமன்றம் சென்று தமிழீழம் பிடித்து தர 2009ல் முயன்றதும், தென் சூடானுடன் ராஜரீக உறவுகளை(?) பேணினாலும், அதன் முதல் சுதந்திர விழாவுக்கு ஓரத்தில் நின்று பார்ப்பதற்குக் கூட அழைக்கப்படாத நாடுகடந்த தமிழீழ அரசு பற்றியெல்லாம் விரிவானா கட்டுரைகளை 2010ல் தந்துவிட்டதாலும், இப்போது புதிதாக 2011ல் அமெரிக்கா சென்ற த.தே.கூ. பற்றி ஏற்கனவே கட்டுரைகள், விமர்சனங்களை நீங்கள் கண்டுவிட்டதாலும் இனி சாஸ்திரத்தின் ”கிளைமெக்ஸ்”க்கு வருவோம்.

த.தே.கூ தனி நாடு என்ற தீர்வை கைவிட்டு “வடக்கும்- கிழக்கும் இணைந்த” ஆட்சி பிரதேசத்தை “தமிழர்”களுக்கு தந்தால், அதற்குள் வரும் சோனகரின் விருப்பு வெறுப்புகளுகப்பால், தாங்கள் நன்றியுடன் அதை பெற்றுக் கொண்டு தங்களின் இதுவரை தீராமல் இருந்த “தாக” உணர்வை தீர்த்துக் கொள்வதாகச் சொல்கிறார்கள். போர்குற்றம், உரிமை மீறல் அது, இதுவென்று அரசாங்கத்துக்கு கொடுக்கும் அலுப்புகளையெல்லாம் ஒரு பக்கத்தில் தூக்கி எறிவதாகவும் சமிக்ஞை காட்டுகிறார்கள். நடக்குமா? நடக்கவே நடக்காது.

LLRC அறிக்கை வெளிவந்தவுடன் தமிழருக்கு அரசியல் ரீதியான பிரச்சினை உண்டென்பதை அந்த அறிக்கை தெளிவாக கூறுவதாகவும் எனவே இனங்களுக்கிடையே ஐக்கியமும், செளஜன்யமும் ஏற்பட LLRC யின் பரிந்துரைகள் உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என்பதை அழுத்தி கொண்டே இருப்பர் த.தே. கூ. மனித உரிமை மீறல், போர் குற்றம் போன்ற குற்றச் சாட்டுகள் தொடர்பாக சர்வதே சமூகத்தின் ஒரு பகுதியில் இருந்து ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க வழி தேடிக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு இந்த ” வடக்கு- கிழக்கு” இணைப்பென்பது எதிர்வரும் (27.02.12- 02.03.12) ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்குப் பின் பெரிய வாய்ப்பாக மாறும். எப்படி?

பொதுவாக தமிழ்ச் சமூகமும், குறிப்பாக த.தே.கூ ப்பினரும், அலைந்துலல்வு (Diaspora) சமூகமும் எந்த வித கேள்வி பார்வையும் இன்றி, நடை முறை சாத்தியங்களையும் கணக்கில் எடுக்காமல் “கிழக்கு” என்பது எப்போதும் வடக்கின் முடிவில் தங்கியிருப்பதாக நினைக்கின்றனர். கிழக்கில் சுமார் 30:33:37 என்ற விகிதாசாரத்தில் சிங்களவர், தமிழர், சோனகர் இருப்பதை கருத்தில் கொள்லாமல், வடக்குடன் இணைவதற்கு எதிரான கனிசமான அளவு தமிழரும் அப்பிரதேசத்தில் இருக்கின்றனர் என்பதையும் மறந்து, தற்போதைக்கு முரளீதரன், பிள்ளையான் போன்றோரின் தனிப்பட்ட செல்வாக்கையும் மறந்து “வடக்கு- கிழக்கு” இணைந்த தீர்வு ஒட்டு மொத்த தமிழருக்குமான(சோனகர் இதற்குள் இல்லை) நியாயமான அரசியல் தீர்வாகக் கருதுகின்றனர். எனவே இந்த இணைவுக்கு அரசாங்கத்தை சம்மதம் அளிக்கவைக்கும் முயற்சியாக அமெரிக்கா, இந்தியா இனி ஐப்ரோப்பா என்றெல்லாம் அலைந்து இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக (கற்பனை பண்ணுவார்கள்) நினைக்கின்றார்கள். இதற்கு ஜெனிவா மாநாடு ஒரு பரீட்சைக் களம்.

2014ல் அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர் நோக்கும் இலங்கை அதுவும் அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக மூன்றாம் முறையும் பதவியில் கண்வைத்துள்ள இன்றய ஜனாதிபதி 2013ல் ஒரு போடு போடுவார். அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் பறிக்கும் முயற்சி நிறைவேற அனைத்து கைங்கரியங்களையும் செய்வார். வெளிநாட்டு கோரிக்கைகளை(அழுத்தங்களை) தான் மதிப்பதாக காட்டி தமிழ் மக்களை சந்தோசப் படுத்தும் முகமாக தமிழர் தரப்பு கோரும் வடக்கு- கிழக்கு இணைப்புக்கான சர்வசன வாக்கெடுப்புக்கு உடன்படுவார். ஆனால் அதற்கான நாள் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னானதாக ஒரு திகதியாக அறிவிக்கபப்டும். உதாரணமாக 2014 ஏப்பிரலில் ஜனாதிபதி தேர்தல் என்றால் 2014 ஓகஸ்டில் சர்வசன வாக்கெடுப்பு நடைபெறும். வழமை பிரகாரம் பூரித்துப் போகும் தமிழ் சமூகம் காரசாரமான பிரசாரத்தில் இறங்கும். ஒன்றிணையப்போகும் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் பாலும், தேனும் ஒடச் செய்யப்படும் என்றும், தமிழர், சோனகர், சிங்களவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் ஜனநாயக நல்லாட்சி நடை பெறும் என்றும் அதற்கு இன, மத பேதமற்ற முறையில் “தமிழ் பேசுவோர்” இணைவுக்கு வாக்களிக்குமாறும் தேன் தடவிய மாத்திரிகைகள் வழங்கப்படும். சந்தோஷ மேலீட்டால் பாதிக்கபடவுள்ள இன்றைய த.தே. கூ ஒரு படி மேலே சென்று, தமது அதி உச்ச ராஜதந்திர நகர்வாக மகாத்மா காந்தியின் “ஸ்டைலில்” ஒன்றிணைந்த வடக்கு -கிழக்கு முதல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவி ஒரு “முஸ்லீம்” க்கு என்ற பிரச்சாரம் செய்யும். சிலிர்படையும் ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள், நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரிக்கும் கனவு நிலையில் அமெரிகாவில் இருக்கும் பேராசிரியர்(?) இம்தியாஸ் போன்ற கல்விமான்கள் ஆஹா, ஓஹோ என்று பத்திரிகைகளில் எழுதித்தள்ள சர்வசன வாக்கெடுப்பின் வெற்றியை கற்பனையில் கொண்டாட புலம் பெயர் புலித் தமிழர் வணவேடிக்கைகளுடன் தயாராக தேர்தல் முடிவும் வெளியே வரும்.

வடக்கில் இனைப்புக்கு ஆதரவாக 90-92% வாக்குகள் கிடைக்க, கிழக்கில் 25% ஐயும் தாண்டாத அளவே இணைப்புக்கான ஆதரவாக வாக்குகள் கிடைக்கும். ஆனாலும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50% மேலான வாக்குகள் இணைவுக்கு ஆதரவாக கிடைத்ததாக ஒரு கணித ரீதியான கணக்கு சொல்லி இணைப்பை அமுல் படுத்த த.தே.கூ கேட்க, சற்றுப் பொறுங்கள் இணைவு என்பது திருமணம் போன்றது, அதில் சம்பந்தப்பட்ட இரண்டு பகுதியினரும் சம்மதிக்க வேண்டும். வடக்கு இணைப்புக்கு 92% என்ன 100% சம்மதம் கொடுத்தாலும் கிழக்கில் 25% தானே. ஜனநாயக முறைமைப்படி ஆகக் குறைந்தது இங்கு 51% இணைப்புக்கான சம்மதம் தேவையே என்று அரச தரப்பால் ஒரு தத்துவ விளக்கம் கொடுக்கப்படும்.

இப்போது இந்தியா அப்பாடா இணைப்பு நிகழாது என்று சந்தோசப்படும். அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஒரு பகுதி மக்கள் விருப்பம இல்லையென்றால் அவர்களை பலாத்காரமாக இணையவைப்பது ஜனநாயகமாகாது என சொல்ல முழு உலக நாடுகளும் “ஓம்” போட சர்வதே சதி வலைக்குள் தமிழர் வீழ்த்தப்பட்டதாக தமது ஊடகங்களில் திட்டித் தீர்ப்பர் அலைந்துலல்வுத் தமிழர். புலித் தமிழரோ தங்கள் தாகம் இன்னும் தணிக்கப்படவில்லை என்ற ரீதியில் வழமையான முத்திரை அடித்தல், மாவீரர் தினக் கொண்டாட்ட பூ விற்பனை, தமிழ் நாட்டு தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றுதல் என்று தமது நாட்டுக்கான தலையாய கடமைகளை செய்து கொண்டிருப்பர்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியோடு இலங்கையின் சிறுபான்மையினர் பகுதிகளில் வாழும் மக்கள் தமது இனங்களை பிரதி நிதித்துவப் படுத்துவதாகக் கூறும் தமது (இனவாத) கட்சிகளை கலைத்துவிட்டு தேசிய அரசியல் கட்சிகளில் சேர்ந்து சம உரிமையுடன் வாழ முடியுமா என்ற வெள்ளோட்ட முயற்சிகளில் ஈடுபடுவர். இதில் த.தே.கூயும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் அடிபட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. புதிய இளந் தலைவர்கள் சிறுபான்மை இனங்களில் உதிப்பர். பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்து நாட்டின் நலனில் அக்கறை கொண்ட சிங்களவர், தமிழர், சோனகர் இன்னும் பிற இனத்தினர் எல்லாம் இலங்கையர் என்ற அடிப்படை விடயத்தை தம் கைகளில் எடுப்பர். இது பல்லின நாட்டின் அரசியலை திரப்படுத்த இடையிலே இலங்கையில் “பெற்றொல்” என்ற செய்தி நாட்டின் பொருளாதார நிலையை திரப்படுத்த வழிசமைக்கும். பெற்றோல் வளம் கொண்ட இலங்கையை ஒரு நைஜீரியாவாக மாற்றுவது அல்லது பல்லினம் வாழும் அமைதியான, விஷயம் தெரிந்த, விபரம் புரிந்த சிறிலங்காவாக மாற்றுவது மீண்டும் சிங்களவர்களின் கையில் என்பதைவிட அது சிங்களவர், தமிழர், சோனகர் கைகளில் வந்து சேரும். அதுவரை பொறுப்பீர்களா இல்லை பொங்கி எழுவீர்களா?

நன்றி.
முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)