(அபூ முஸ்னா)
புத்தளம் காசிமிய்யா அரபிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவமும் பெற்றோர் ஒன்றுகூடலும் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. காசிமிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் அஷஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலாளர் எம். ஆர். எம். மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் நிதி அமைச்சர் மர்ஹூம் எம். எச். எம். நெய்னா மரிக்காரின் பேத்தியும் காசிமிய்யா அரபிக் கல்லூரியின் முன்னாள் நம்பிக்கையாளர் சபை தலைவரான மர்ஹூம் கலாநிதி காமில் ஆசாத்தின் மகளும், அவுஸ்திரேலிய பல்கலைக்கழக முகாமைத்துவ பட்டதாரியுமான செல்வி ஆயிஷா காமில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார்.
கல்லூரியில் கற்கும் மாணவர்களில் கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக்கழம் செல்லும் வாய்ப்பை பெற்றவர்கள், மேலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றவர்கள், கல்லூரி கல்வி நடவடிக்கைகள் மற்றும் கலை கலாசார நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியோர், பல்வேறு துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியோர், கல்லூரியின் பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்றோர் என பல மாணவர்கள் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.
இன்றைய நிகழ்வில் புத்தளம் பெரிய பள்ளி நம்பிக்கையாளர் சபைத தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் ஹனஸ் மொஹிதீன், ஜமாத்தே இஸ்லாமியின் புத்தளம் கிளைத் தலைவர் எம். எச். எம். நதீர் உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








