புத்தளத்துக்கான புதிய முகவரி…
புத்தளம் பிரதேசம், புதியதொரு ஒழுங்கில் தன்னை மாற்றிக் கொள்வதற்கு தயாராகி விட்டதற்கான அறிகுறிகளை இன்று நிறையவே அவதானிக்க முடிகின்றது – அல்ஹம்துலில்லாஹ்!
இந்த மாற்றத்தை திட்டமிடுவதற்கும் அதனை ஒழுங்கு படுத்தி ஒரு இலக்கினை நோக்கி நகர்த்து வதற்குமான வழிகாட்டல்கள் காலத்தின் தேவையாக உள்ளன. இதனை வகுப்பதற்கான சமூக விஞ்சானிகள் எம்மிடம் இல்லாத போதும், சமூக புனரமைப்பு சிந்தனை பற்றிய புரிதலுடைய அனுபவமிக்க பலர் எம்மில் உள்ளனர்.
இந்த வகையில் சமூக மாற்றம் பற்றிய சிந்தனைக் கிளர்ச்சியினை (Brain Stroming), சகோதரர் இப்னு கரீம் புத்தளம் ஒன்லைன் வாசகர்களுடன் தொடராக பகிர்ந்துகொள்ள உள்ளார். இத்தொடர் எமது சமய, சமூகத் தலைமையான புத்தளம் பெரிய பள்ளிவாசல் பற்றிய புரிதல்களுடன் ஆரம்பமாகின்றதுடன் சமூக மாற்றத்தை நோக்கிய நீண்ட நெடு பயணமாகத் தொடரவிருக்கின்றது – இன்ஷா அல்லாஹ்!
உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களையும் காய்தல் உவத்தலின்றிய விமர்சனங்களையும் நாம் பெரிதும் எதிர் பார்க்கின்றோம்.
பயணிப்போம் நாளைய விடியலுக்காய்!
-புத்தளம் ஒன்லைன் இணையக் குழு-
————————————————————————————————————————————————————————-
புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஊரை நெறிப்படுத்தும் பாதையில் பயணிக்கட்டும்
- இப்னு கரீம் -
மஸ்ஜிதுகள் சமூகப் புனரமைப்புப் பணியின் மத்திய நிலையங்களாக செயற்படும் தகைமை பெற்றவைகளாகும். மஸ்ஜிதுகளால் வழங்கப்படக்கூடிய அத்தகைய பயனுள்ள சேவைகளை சமுதாயத்திற்கு கிடைக்கச் செய்வது முஸ்லிம்களின் பொறுப்பும்‚ கடமையுமாகும். இக்கண்ணோட்டத்தில் எமது பெரிய பள்ளிவாசலை (முஹியித்தீன் ஜும்ஆமஸ்ஜித்) எங்களின் கவனத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
புத்தளம் பெரிய பள்ளிவாசல் கடந்த ஏழு தசாப்த காலங்களுக்கு மேலாக நகர் நடுவண் கம்பீரமாக அமைந்து கவர்ச்சியாகவும், சன்மார்க்க எழுச்சிக்கு கட்டியம் கூறும் சின்னமாகவும், ஆன்மீக ஆத்ம திருப்திக்காக பலரும் நாடும் சாந்தி இல்லமாகவும் திகழ்ந்து வருகின்றது. அன்று முதல் இன்று வரை புத்தளம் வாழ் முஸ்லிம்களாலும் சூழ அமைந்துள்ள கிராமங்களில் வாழும் முஸ்லிம்களாலும் பிரதான பள்ளிவாசலாக‚ தலைமை இடம்கொடுத்து கண்ணியமாக மதிக்கப்பட்டும் வருகின்றது. பள்ளிவாசல் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை நம்பிக்கை பொறுப்பாளர்களாக கடமை புரிந்த தனி நபர்களும் நிருவாகக் குழுக்களும் பள்ளிவாசலின் கண்ணியம் காத்து வந்துள்ளனர்; வருகின்றனர் என்பதும் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.
மஸ்ஜித்‚ மஸ்ஜித் நிருவாகம் பற்றிய எமது சமுக கண்ணோட்டம் விரிவடைய வேண்டும். இன்று மஸ்ஜிதுகள் அல்லாஹ்வை வணங்கும் தலமாக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. அதிகபட்சமாக அவை சிறார்களுக்கு குர்ஆன் ஓதக் கற்பிக்கும் மத்ரஸாக்களாகவும் மக்தப்களாகவுமே செயல்படுகின்றன.
மஸ்ஜிதை சூழவுள்ள மக்கள் நலனில் கரிசனை காட்டப்படுவதில்லை. மக்கள் சேவைக்கு அதில் எவ்விதப் பங்கும் இல்லை. மஸ்ஜித் நிருவாகம் பற்றிய நிருவாகிகளின் சிந்தனையும் செயற்பாடும் மிகக் குறுகிய வட்டத்துக்குள் – அதாவது ஐங்கால தொழுகைக்கான ஏற்பாடுகள்‚ ரமழான் கால ஒழுங்குகள் என்பவற்றோடு சுருக்கப்பட்டுள்ளன. தொழுகை நேரம் போக மற்ற வேளைகளில் பள்ளிவாசல்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. அல்லது பூட்டப்படுகின்றன. ரஸூல் (ஸல்) அவர்கள் அமைத்த ‘மஸ்ஜிதுன் நபவி’யின் செயல்பாடுகளை முன்மாதிரியாகவும் முன்னுதாரணமாகவும் கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் மஸ்ஜிதுன் நபவியின் செயல்பாடுகளை பின்னர் விரிவாக நோக்குவோம்.
ஒவ்வொரு மஸ்ஜிதும் அதனைச் சூழ ஒரு மஹல்லாவை கொண்டுள்ளது. எனவே மஸ்ஜித் நிருவாகம் தமது மஹல்லாவில் வாழும் மக்களைப் பற்றிய தகவல்களை கொண்டிருப்பது வேண்டற் பாலதாகும். மஹல்லா வாழ் மக்களின் கல்வி‚ சுகாதாரம்‚ பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன தேவைகளில் அவ்வப்போது கவனம் செலுத்தி மஹல்லாவாழ் மக்களின் ஒத்துழைப்புடனும் ஏனைய வழிகளிலும் அவர்களின் நலன் ஓம்புவது இஸ்லாத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.
முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்கும் மத்திய நிலையமாக பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இறை இல்லங்களான மஸ்ஜிதுகளின் நிருவாகிகளின் பொறுப்பு மகத்தானதாகும். எனவேதான் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான தகைமைகளை மட்டும் அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறியுள்ளான். வேறு எந்த நிருவாகம் பற்றியும் அல்குர்ஆனில அவ்வாறு கூறப்படவில்லை. பள்ளிவாசல் நிருவாகிகள் பற்றி அல்குர்ஆன்:
“எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து‚ தொழுகையையும் கடைப்பிடித்து‚ ஸகாத்தும் கொடுத்து வருவதுடன்‚ அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ அவர்கள் தாம் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களைப் பரிபாலனஞ் செய்யக் கூடியவர்கள். இத்தகையோர்தான்‚ நேரான வழியில் இருப்பதாக நம்பத்தக்கவர்கள்” (ஸூறா தெளபா– 18 ம் வசனம்)
கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக புத்தளம் பெரிய பள்ளிவாசல் பாரிய சமூக பணிகளை நிறைவேற்றிவந்துள்ளது. சுனாமியின் போதும்‚வெள்ள அனர்த்தங்களின் போதும்‚இன மோதலால் ஏற்பட்ட மக்கள் இடம்பெயர்வின் போதும்‚ ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் காத்திரமான பணிகளை ஆற்றியுள்ளது. புத்தளம் பெரிய பள்ளிவாசல் மீது திணிக்கப்பட்ட பிரதேச அரசியல் மோதலையும் துணிவுடன் எதிர்கொண்டு காத்திரமான தீர்வைக் காணவும்‚ சமாதான சக வாழ்வை உறுதிப்படுத்தவும் நியாயமாகப் போராடி வந்துள்ளதை யாராலும் மறைக்கவோ‚ மறுக்கவேர முடியாது. புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட‚ஏற்கெனவே பொலிஸாரின் புலன் விசாரணை முடிவுற்று மேற்கொண்டு நகர்த்தப்படாமல் தடுக்கப்பட்டிருந்த ஆட்கடத்தல்‚ மனித உரிமை விவகாரத்தை பலரின் உதவியுடன் முன்னெடுத்து குறிப்பிடத்தக்க அடைவை வெளிக்கொணர்ந்துள்ளமை நாடறிந்த செய்தியாகும். அதே போன்று ஊரில் சுழல் காற்று வீசி சேதம் ஏற்பட்ட போதும்‚ வெள்ளம் வந்த போதும் நிவாரணப் பணிகளில் முன்னின்று பணியாற்றியதும் பெரிய பள்ளிவாசலின் மக்கள் சேவைக்கு எடுத்துக் காட்டாகும்.
ஊரில் ஏற்பட்ட கலவர சூழ்நிலையில்‚ பெரிய பள்ளிவாசலின் ஆலோசனையை புறந்தள்ளி களத்தில் இறங்கிய நோக்குப் போக்கற்ற கும்பலினால் நகர் பாதுகாவலர் ஒருவரின் உயிர் காவு கொள்ளப்பட்டது. இதன் விளைவு இதில் சம்மந்தமில்லாத அப்பாவி பொதுமக்களில் பலரும் பாதிக்கப்பட்டனர். புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிருவாக சபைக்கு ஏற்கெனவே நகர் பாதுகாப்பு மேலதிகாரிகளுடன் இருந்த நல்லுறவு‚ நல்லெண்ணம்‚ புரிந்துணர்வின் காரணமாக இக்கட்டான அச்சூழலையும் எதிர்கொண்டு மக்களுக்கும், நகரின் சொத்துக்களுக்கும் ஏற்பட வாய்ப்பிருந்த அனர்த்தம் அல்லாஹ்வின் உதவியால் தவிர்க்கப்பட்டது‚ ‘அல்ஹம்துலில்லாஹ்’. நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அற்ற நிலையிலும் மேற்படி காரியங்களில் பெரிய பள்ளிவாசல் மிகச் சரியான தலைமை வழங்கியமை‚ மிக முன்மாதிரியானதும் வேண்டப்படும் ஒரு பாரிய சேவையாகவும் பார்க்கப்பட வேண்டும். பெரிய பள்ளிவாசலின் மேற்குறித்த தலைமைத்துவ நகர்வை நாம் அனைவரும் மனங்கொள்ளவும் வேண்டும். மேற்படி நிகழ்வுகளும் இன்ன பிறவும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் பயப்படாமல் நியாயமாகவும் நீதியாகவும் நிருவாகம் செய்யும் தகைமையைப் பெற்று வருகின்றது என்பதற்கான சான்றாதாரங்களாகும். அல்லாஹ் துணை நிற்பானாக.
புத்தளம் பெரிய பள்ளிவாசல் இந்த ஊரை இஸ்லாத்தின் பாதையில் வழி நடாத்தக் கூடிய நிருவாகத் தெரிவுக்கான ‘யாப்பை’யும், மக்களின் பிரச்சினைகளோடு இரண்டரக் கலந்து தீர்வுகளை வழங்கக் கூடிய ‘மஜ்லிசே சூறா’ அமைப்பையும், பொருளாதார கஷ்டங்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கக் கூடிய ‘பைத்துஸ் ஸகாத்’ நிறுவனத்தையும் கொண்டு ஒரு சீரான அமைப்பில் செயல்பட்டு வருகின்றது.
புத்தளம் பெரிய பள்ளிவாசலின்‚ இஸ்லாமிய சமூக அமைப்பை நோக்கி ஊரை நகர்த்துவதற்கு உதவும் மேற்படி பணிகள் மேலும் திட்டமிடப்பட்டு மெருகூட்டப்பட்டு சிறந்த பயனை சமூகம் பெற தற்போதுள்ள அதன் நிருவாகத் தெரிவு முறை உறுதிப்படுத்தப்பட்டு கட்டிக் காக்கப்பட வேண்டும். தற்போது ஊர் மக்களால் பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை‚ நகரிலுள்ள சகல பள்ளிவாசல்களின் நிருவாகப் ‘பிரதிநிதி’களின் கூட்டத்தில் இருந்து ஜனநாயக ரீதியில் யாப்பின்படி தெரிவு செய்யப்படுகின்றது. இதனால் ஊர் தழுவிய ஒரு தலைமைத்துவக் குழுவாக நிருவாக சபை அமையப் பெறுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான நிலைமையாகும். இம்முறை மேலும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் தங்கள் தங்கள் மஹல்லாவிலுள்ள சமூக ஆர்வலர்களை இனங்கண்டு அத்தகையவர்களை தங்கள் நிருவாக சபை மூலம் பெரிய பள்ளி நிருவாக சபையில் இடம் பெற வழிசெய்ய வேண்டும். இதன் மூலம் வலுவுள்ள‚ செயற்றிறனுள்ள ஒரு நிருவாக சபையாக மேற்படி சபையை மாற்ற முடியும். பைத்துஸ் ஸகாத்‚மஜ்லிசே ஸூரா போன்றவையும் இன்னும் பிறவும் எவ்வாறு ஒரு விரிவான வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் இனி வரும் பக்கங்களில் காண்போம்.
(தொடரும்)



May 3, 2012 at 5:05 pm
அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு நெஞ்சங்களே.
புத்தளம் பெரிய பள்ளிவாயல் என்று குறிப்பிடுகின்ற போது நான் என்றும் எண்ணுவது புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அடங்கலாக இருக்கும் என்றுதான் அப்படியே இருக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன். அல்லாஹ் எமக்கு நல்லருள் பாலிப்பானாக. புத்தளம் பெரிய பள்ளியின் கடமை பங்கு என்ன? என்பதை சிந்தித்தால் மேலே குறிப்பிட்ட விடயங்கள் மட்டும் அல்ல அத்தோடு நாம் வாழும் இருப்பிடத்தின் இருப்பை எப்படி நாம் உறுதி செய்வது என்பது பெரும் கடமையாகும். இன்று தம்புள்ள பிரதேசத்தில் நடந்தவை நாளை புத்தளத்தில் நடக்காது என்பதற்கு என்ன உறுதி. சனத்தொகை மாற்றம் சூழல் மாற்றம் என்பன எமது இருப்பை கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து பார்க்க ஆரம்பித்துள்ளது இப்பொழுதே நாம் முன்னின்று இருப்பை உறுதிப்படுத்தா விட்டால் மிக கெதியில் நாம் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கவேண்டிவரும். நாம் அதிகமாக இஸ்லாம் பற்றி பேசுகிறோம் நல்லது ஆனால் இஸ்லாம் நமது இருப்பை உறுதி செய்வது சம்பந்தமாக சொன்ன விடயங்களை பேனுகின்றோமா என்பதை சிந்திக்க வேண்டும். புத்தளம் நகரம் போன்று புத்தள பிரதேசத்திலுள்ள எல்லா இடங்களிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கிறார்கள் ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இல்லை பள்ளி நிர்வாகங்கள் இஸ்லாமிய அடிப்படையில் இல்லை இவற்றை யார் மாற்றுவது. புத்தளம் பெரிய பள்ளி புத்தளம் மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனம் அமைத்து அதன் மூலம் இயங்க வேண்டும். நாம் எமது அணைத்து விடயங்களையும் அவ்வமைப்பின் மூலம் செயற்படுத்த வேண்டும். இது வெறும் கனவு அல்ல காலத்தின் தேவை.
பெரிய பள்ளி ஜனநாயக ரீதியாக அல்ல இஸ்லாமிய அடிப்படையில் தெரிவுகள் தீர்மானங்களை எடுத்தல் வேண்டும். எமது புத்தளம் வேறு முஸ்லிம் பிரதேசங்கள் போன்று வளர்ச்சி அடைந்த ஒரு மாவட்டம் அல்ல விசேடமாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் மிகவும் பின்தங்கி உள்ளன. புத்தளம் நகரில் வியாபாரம் உள்ளது அதனை விட உட்கட்டமைப்பு அபிவிருத்தி இல்லவே இல்லை. கல்வியில் வீழ்ச்சி தொடர்கிறது.
இவற்றுக்கு அரசியலை மட்டும் குறை கூறுவது பொருத்தமல்ல நாமும்தான் காரணம் எனவே மக்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறந்த இடம் பள்ளிவாயல் தான். முஸ்லிம்களின் சமூக பொருளாதார மேம்பாட்டினை உறுதிப்படுத்துவது உடனடி தேவை.2030 புத்தளம் தொலை நோக்கிற்கு அத்திவாரம் இடுதல் வேண்டும். கனவுகள் நிஜமாக நாம் உரிய காலத்தில் விழித்துக்கொள்ள வேண்டும் எனவே புத்தளம் பெரிய பள்ளி தனது நிர்வாக செயற்பாட்டு கட்டமைப்பை விசாலப்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப உப குழுக்கள் உருவாக்கப்படல் வேண்டும் தொடர் கருத்தாடல்கள் வாரம்தோறும் பெரிய பள்ளியில் நடாத்தபடல் வேணடும். இவற்றினை நடைமுறைப்படுத்தல் என்பது பெரிய பள்ளியின் கடமை மட்டுமன்று நம் அனைவரது கடமையும் கூட. எனவே புத்தளம் பிரதேச வாழ் முஸ்லிம் சமூகமே ஒன்றினைவோம் புத்தளம் செழித்து உயர பாடுபடுவோம். நன்றி வஸ்ஸலாம்
April 2, 2012 at 3:12 am
நல்ல ஒரு ஆரம்ப தொடர், நிச்சயம் உங்கள் எங்கள் கனவு வெற்றி பெரும், நல்லவற்றை தேடி நாடி செல்வோருக்கு அல்லாஹ் அள்ளி அள்ளி கொடுக்ககூடியவனாக இருக்கிறான். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்