(அபூ முஸ்னா)
நேற்று பகல் இரண்டு மணியளவில் சிலாபம் கொழும்பு பிரதான வீதியின் மைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜெஹான் முபாரக் சிலாபம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு பிரஜைகள் சிலருடன் இவர் டிபண்டர் ரக வாகனம் ஒன்றில் வில்பத்து சரணாலயத்திற்குச் சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.
தும்மலசூரிய வத்துவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் குமார என்பவரே இவ்விபத்தில் மாரணமடைந்ததுடன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த மார்க் உதயகுமார என்பவர் படுகாயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் இருவரும் சிலாபம் நகரில் இடம்பெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக சிலாபம் வந்து கொண்டிருந்தவர்கள் என தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



