கடந்த 20.04.2012 அன்று சில சமூக விரோத கோஷ்டிகளால்தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆ பள்ளிவாயில் முற்றுகையிடப் பட்டதையிட்டு, புத்தளத்தைச் சார்ந்த PULSED அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. ரங்கிரி தம்புளு ரஜமகா விஹாரை பீடாதிபதிகள் சிலரின் தலைமையில் நடாத்தப்பட்ட இந்த முற்றுகையானது குறித்த தினம் வெளிக்கிழமை முஸ்லிம்களின் பிரதான மார்க்க கடமையான ஜும்மா தொழுகையை நிறைவேற்ற முடியாமல் போனது கவலைக்குரிய விடயம். நல்லிணக்க பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படக்கூடிய ஒரு விடயத்தை இவ்வாறான சமூகங்களுக்கிடையேயான கலவரங்களை தூண்டக்கூடிய வகையில் பொறுப்பு வாய்ந்த மதத்தலைவர்கள் முன்னின்று இம்முற்றுகையை நடாத்தியது கண்டிக்கத்தக்கது. இம்மாதிரியான போராட்டங்களை அப்பகுதிகளில் உள்ள சிறுபான்மையின சமூகங்களோடு இணைந்து பொதுவான சமூக தீமைகளுக்கு எதிராக நடாத்தியிருந்தால் வரவேற்புக்கு மிக்கதாக இருந்திருக்கும். யுத்த சூழ்நிலைகள் முடிவுற்று சுமுகமான சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், இச்செயலானது, இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினத்தவரின் கவலைக்கும், சர்வதேச சமூகத்தின் கண்டனத்துக்கும் உள்ளாகி எமது நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு வழி சமைத்துள்ளது.
இந்நிலையில் PULSED அமைப்பினர் எமது முஸ்லிம் சகோதரர்களை பொறுமையுடனும், பிரார்த்தனைகளுடனும் இருக்குமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றது. தகவல்கள் வேகமாக பரவக்கூடிய இந்த காலகட்டத்தில், பொய்யான, உண்மைப்படுத்தாத, இன உணர்வுகளை தூண்டக்கூடிய செய்திகளையோ, காட்சிகளையோ,படங்களையோ SMS, Facebook, Twitter, மின்னஞ்சல் வழியாக பரப்புவதை விட்டு தவிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.
“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.” - அல் குர்ஆன் [அத்தியாயம் 49(அல் ஹுஜுராத்), வசனம் 6]
PULSED Media Unit


