Puttalam Online
politics

பதவி ஓர் அமானிதம் – 2

  • 24 April 2012
  • 802 views

பதவியில் உள்ளவர்களின் பண்புகள்

திருக்குர்ஆனில் பல நபிமார்கள் செய்த ஆட்சி முறையையும் அவர்களுடைய பண்புகளையும் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுவதில் நமக்கு படிப்பினை இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஜனாதிபதியாக இருந்ததால்பதவி வகிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது. ஒருவர் ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சிதலைவராகவும் மிளிர முடியும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மிகப் பெரிய முன்மாதிரியும் எடுத்துக்காட்டும் ஆவார்கள். ஏனெனில் (ஆட்சியிலோ பதவியிலோ) அரசியலில் இருப்பவர்கள் மார்க்கத்தை எள்ளளவும் பேணுவதில்லை, மார்க்கத்தை உயிராக கொண்டவர்களோ அரசியலில் பங்களிப்பு செய்வதில்லை. அரசியலில் மார்க்கத்தை திணிக்கக் கூடாது

என்ற தவறான வாதத்தினால் எதையும் சாதிக்காமல் நமது சமுதாயம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, கண்டிப்பாக அல்லது தயவு செய்து மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் மார்க்கத் தலைவர்கள் அரசியலில் தங்களது பங்களிப்பை ஒவ்வொரு நாட்டிலும் செய்யவேண்டும். மார்க்கத்தில் கொள்கை உறுதி கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள்.

பதவிக்கு வரும் முன் பணிவாகவும் இனிமையானவராகவும் இருப்பவர்கள் பதவி கிடைத்தவுடன் நேரெதிர் குணம் கொண்டவராக அதாவது புகழ் தரும் போதை அவரை ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது அவர் தன்நிலை மறந்தவராக ஆகி விடுகிறார். ஒருவனுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட இயலுமா? இவர்களுக்கு நிலையான மறுமையில் எந்த பதவியும் கிடைக்காது.

மேலும்பதவியில் உள்ளவர்கள் அதிகாரத்திற்கும் புகழுக்கும் செல்வத்திற்கும் அடிமையாகி விட்டதால் நிரந்தர தலைவர் என்று அறிவித்து கொள்கிறார்கள், அப்படியென்றால் இவர்களுக்குப் பின் இருக்கும் லட்சக் கணக்கான மக்களில் ஒருத்தருக்கும் தகுதியோ திறமையோ இல்லை என்றாகிறது இவ்வாறு நினைக்கும் தலைவர்களின் பின் அணிவகுக்க வேண்டிய அவசியம் ஏன்?

இறையச்சம்

‘நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறை வனை நோக்கி வழி காட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்!’ எனக் கூறுவீராக” (என்று இறைவன் கூறினான்.) (அல் குர்ஆன் 79:18,19).

ஒருவன் பதவி வகிப்பதற்கான முதல் தகுதி இறையச்சமாகும். ஒருவனிடம் எவ்வளவுதான் திறமை ,வீரம் இருந்தும் இறையச்சம் இல்லையென்றால் அவன் நஷ்டவாளியாவதோடு அவனை சார்ந்தோரையும் அது பாதிக்கும்.இறையச்சம் இல்லாத காரணத்தினாலே திருட்டு, லஞ்சம், பொய் வாக்குறுதி, அடக்குமுறை போன்ற செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான். மேலும் அவர்களை சார்ந்திருக்கும் மக்களையும் தவறு செய்ய தூண்டும். ஆகவே இஸ்லாம் இறையச்சத்தை முதன்மையான தகுதியாக முன்வைக்கிறது. ஆனால் இன்றைய நம்முடைய நிலையோ தலைகீழாக மாறி இருக்கிறது. தமக்கு மாற்று மதத்தினர் ஒட்டு போட வேண்டும் என்பதற்காக வணக்கம் சொல்வதும், அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று அவர்களுடைய தெய்வங்களை வழிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஃபிர்அவ்னுக்கு அனைத்து ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தான், ஆனால் அவனோ இறையச்சம் இல்லாமல் தன்னையே கடவுள் என்று அகந்தை கொண்டிருந்தான்.அவனை நோக்கி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

”அவனை(ஃபிர்அவ்னை) இம்மையிலும் மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.” (அல்குர்ஆன் 79:25)

கலந்து ஆலோசித்து முடிவெடுத்தல்

ஆட்சியில் இருப்பவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்த தலைவருக்கு எடுத்துக் காட்டாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்களுடன் ஆலோசித்து முடிவெடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையே பிறப்பிக்கிறான்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159).

தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 42:37:38).

அதே போல் ஒரு முடிவு எடுக்கும்போது தொலைநோக்கு பார்வையுடனும் அதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டும் விபரமாக செயல்பட வேண்டும்.

திடவுறுதி, பொறுமை, வீரம்

பதவி வகிப்பவர்கள் தாம் எடுத்த முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல் நாம் பொறுமையையும் மேற்கொள்ள வேண்டும். நபிகள் நாயகத்தை அல்லாஹ் பாராட்டி கூறும்போது “நீங்கள் மக்களிடம் நளினமாக நடந்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களை விட்டு அவர்கள் ஓட்டம பிடித்திருப்பார்கள்” என்பதாக குறிப்பிடுகிறான்.

”(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.” .(அல்குர்ஆன் 3:159)

மன உறுதியும் வீரமும் உள்ளவர்களாக இருப்பதும் பதவி வகிப்பதற்க்குள்ள முக்கிய பண்புகளாகும்.எடுத்த முடிவில் பின்வாங்காமலும் வளைந்து கொடுக்காமலும் இருப்பது மிக முக்கியம்.நேர்மையாக பதவி வகித்தால் எதிர்ப்பு வருவது இயற்கைதான் அதை எதிர்கொள்ள மனவலிமையும் வீரமும் அவசியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுடன் போர்க்களங்களில் பங்கெடுத்தும் மக்களுக்கு பாதுகாவலராக இருந்து தமது வீரத்தை நிறுபித்திருக்கிறார்கள். பதவி வகிப்பவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே மிகப் பெரிய முன் உதாரணமாக இருக்கிறார்கள்.

தகுதியும் திறமையும்

ஒரு பதவியை வகிப்பதாக இருந்தால் அவருக்கு நிச்சயம் தகுதியும் திறமையும் இருக்க வேண்டும்.தகுதியற்ற ஆட்சியாளர்களிலாலேயே கிலாபத் எனக் கூறப்படுகிற இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அழிந்த வரலாற்றை பார்க்கிறோம். தகுதி என்பது இறையச்சம், திறமை, வீரம் மற்றும் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் குறிக்கும்.

அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் – அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்;இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்”என்று கூறினார். (அல்குர்ஆன் 2:247)

‘ஓர் அவையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். ‘மறுமை நாள் எப்போது எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை’ என்றனர். வேறு சிலர், ‘அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை’ என்றனர்.

முடிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, ‘மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?’ என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)’ இறைத்தூதர் அவர்களே! இதோ நானே’ என்றார். அப்போது கூறினார்கள்.’அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.” அதற்கவர், ‘அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?’ எனக் கேட்டதற்கு, ‘எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 59)

பாரபட்சம் இருக்கக் கூடாது

பதவியில் இருப்பவர்கள் அதிகமாக தவறு செய்வது பாராட்சம் காட்டுவதில் தான்.தன்னுடைய சொந்ததுக்கும் நண்பர்களுக்கும் ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு நியாயமும் நீடிப்பதால்தான் மக்களுக்கு பதவியில் உள்ளவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது. தன் சமூகத்தாருக்காகவும் தன் சொந்த பந்தங்களுக்காகவும், தன்னுடய நண்பர்களுக்காகவும் வளைந்து கொடுக்கக் கூடாது என்பதை திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.இதை படிக்கவும் சிந்திக்கவும் இனிதாக இருந்தாலும் இதை நடைமுறை படுத்த நமக்கு கடினமாக இருக்கிறது.என் சொந்தக்காரன் பதவியில் இருந்தும் எனக்கு உதவாமல் போய்விட்டான் என்று கோபம் வருகிறதே தவிர அதில் உள்ள பாரபட்சத்தையும் அதனால் மற்ற மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை சிந்திக்க மனம் மறுக்கிறது.

“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் 5:8)

மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6787)

“உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.”(5:45)

தொடரும்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All