Puttalam Online
politics

பதவி ஓர் அமானிதம் – 3

  • 5 May 2012
  • 1,209 views

பதவி என்பது பொறுப்பு

பதவியினால் ஏற்படும் விளைவுகளை ஒரு மனிதன் நன்கு அறிந்தால் அதை அவன் விரும்பவே மாட்டான்.ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு அளிக்கக் கூடிய அநீதியை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.அநீதி இழைக்கப்பட்ட மனிதன் அந்த தவறை மன்னிக்காத வரை அந்த தவறை அல்லாஹ் மன்னிப்பதில்லை.நாம் வகிக்கும் பதவியால் நம்மை சார்ந்தவர்களும் பாதிப்படைவதால் நாம் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.நம்மால் நம்மை சார்ந்தவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மன்னிக்காதவரை நாம் அந்த தவறிலிருந்து மீள முடியாது என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.நாம் செய்தவற்றுக்காக மறுமை நாளில் நாம் விசாரிக்கப் படுவோம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

”செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை.” (அல்குர்ஆன் 17:36)

பதவி என்றால் ஆட்சியாளர் என்பது கிடையாது. நமக்கு ஒரு பொறுப்பு வழங்கப் பட்டு நம்மை நம்பி மக்கள் இருந்தாலே நாமும் பதவி வகிப்பவர்கள் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்கள் முதல் வீட்டில் உள்ள குடும்பத் தலைவர் வரை அனைவரும் பதவி வகிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிர்வாகத்தில் உள்ள அனைத்தையும் பற்றி கேள்வி கேட்கப் படுவார்கள் என்பதையும் இஸ்லாம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (நூல்: புகாரி 7138)

நம்பிக்கை

பதவி வகிக்கக் கூடியவர் நம்பகத் தன்மையுடயவராக இருப்பது மிக முக்கியம்.தம்மை நம்பி இருப்பவர்களிடம் பொய் உரைக்காமலும் பணம் விஷயத்தில் நேர்மையாளராக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)

தம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர். நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக் குரானில் கூறப்பட்டுள்ள இந்த சம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.

‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!” என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!” என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2272)

வழிகாட்டி

பதவி வகிப்பவர்கள் தம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக செயல்பட வேண்டும்.நம்முடைய தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்கள்.உலக விஷயத்திலும் முக்கியமாக மார்க்க விஷயத்தில் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தால் நம்மால் பாதிக்கப் பட்டவர்களின் பாவத்தையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.எனவே நமக்கு கிடைக்கும் பதவியில் மிகவும் எச்சரிக்கையாகவும் நாம் ஒரு நல்ல முன் உதாரணமாகவும் விளங்கினால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம்.

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)

ஆட்சிக்கு ஆசைப் படுவது

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)

அபூ மூஸா (ரலி) அறிவித்தார்கள்: “நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), ‘இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்!)” என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!” என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 2261)

‘இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:55)

இவ்வசனத்தில் என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரி யாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்’ என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)

மேற்கண்ட வசனத்திற்கு முரண்படும் வகையில் இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ளக் கூடாது.

யூசுஃப் நபியின் வரலாற்றைப் பற்றிக் கூறும் போது, அதில் கேள்வி கேட் போருக்குத் தக்க சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(விளக்கம்) கேட்போருக்கு யூஸுஃபிடமும் அவரது சகோதரர் களிடமும் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 12:7)

கருவூல அதிகாரியாக நியமியுங்கள் என்று யூசுஃப் நபி கேட்ட இந்தச் சம்பவத்திலும் நமக்கு முன்மாதிரி இருக்கின்றது.பதவி ஆசைக்காகவோ, தகுதியற்ற நிலையிலோ பதவியைக் கேட்கக் கூடாது என்பது தான் மேலே நாம் காட்டியுள்ள நபிமொழியின் கருத்தாக இருக்க முடியும்.

ஒரு பணியை மற்றவர்களை விட நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும்;அதற்கான தகுதி நமக்கு உள்ளது என்று ஒருவர் கருதினாலோ, அல்லது தகுதி யற்றவர்களிடம் ஒரு பணி ஒப்படைக்கப் பட்டு அது பாழ்படுத்தப்படுவதைக் கண்டாலோ அப்பதவியை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை என்பதற்கு இவ்வசனம் சான்றாகும்.மேலும் அந்த ஆட்சி, யூஸுஃப் நபியின் மீது பழி சுமத்திச் சிறையில் தள்ளிய ஆட்சியாக இருந்தும், அத்தகைய ஆட்சியில் தமது உரிமையை யூஸுஃப் நபி கேட்டிருக்கிறார்கள்; பதவியும் கேட்டிருக்கிறார்கள்.இஸ்லாமிய ஆட்சி நடக்காத பகுதிகளில் இது போன்றபதவிகளையும்,உரிமைகளையும் முஸ்லிமல்லாத ஆட்சி யாளர்களிடம் கேட்டுப் பெறலாம் என்ப தற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

பதவியில் இருப்பவர்களே ! உங்களுக்குப் பின் மக்கள் கூட்டம் கூட்டமாக உங்களிடம் வந்தால் தற்பெருமை கொள்ளாதீர்கள் இறைவனை அதிகதிகம் புகழுங்கள்.

”அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்”. (அல்குர்ஆன் 110:1-3)

முற்றும்.

நன்றி: Mohamed Insaaf (FRANCE), Mohamed Mafaz

மூலம்: http://www.nidur.info


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All