(கரைத்தீவிலிருந்து அபூ முஸ்னா)
புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் கடந்த 60 வருடகாலமாக இயங்கி வந்த வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் பிரதான காரியாலயத்தை அப்பிரதேச சபையின் தலைவர் வண்ணாத்திவில்லு பிரதேசத்திற்கு இடமாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கரைத்தீவு பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் நகரில் ஒன்று கூடிய பெருமளவிலான பொது மக்கள் பல்வேறு சுலோகங்களைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பைத் தெரிவித்தவாறு அங்கிருந்து கரைத்தீவு பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அங்கு அவர்கள் அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலை உடைத்துக் கொண்டு அலுவலகத்தினுள் உட்பிரவேசிக்க முற்பட்டதுடன் அவர்கள் அங்கிருந்தவர்களினால் உள்நுழையாதவாறு தடுக்கப்பட்டனர்.
இங்கு பொது மக்களின் சார்பாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ், முன்னாள் பிரதேச சபைத்தலைவரும் தற்போதைய உறுப்பினருமான ஆர். என். அசனா மரைக்கார், பிரதேச சபையின் இரண்டு ஆளுங்கட்சி உறுப்பினருடன் முன்னாள் ஐ.தே.கட்சி உறுப்பினரும் கருத்துத் தெரிவித்தார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக பிரதேச சபையின் தலைவர் எஸ். எஸ். டக்ளஸ். இந்திக சேனாதீரவும் கருத்து தெரிவித்தார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தலைவர் இந்திக, தான் பிரதான அலுவலகத்தை ஒருபோதும் மாற்றவில்லை எனவும், மக்களின் வசதி கருதி சபையின் அபிவிருத்தி பிரிவினை மாத்திரம் வண்ணாத்திவில்லு உப அலுவலகத்திற்கு மாற்றியதாகவும், கரைத்தீவிலிருந்து தளபாடங்களையோ, கோவைகளையோ மாற்றவில்லை எனவும், சபை அமர்வு உட்பட சபையின் ஏனைய சகல நடவடிக்கைகளும் கரைத்தீவிலேயே இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
எனினும் இதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுப்புத் தெரிவித்து சபையின் சகல நடவடிக்கைகளும் முன்னரைப் போல கரைத்தீவிலேயே இடம்பெற வேண்டும் என கோசமிட்டு அங்கிருந்து வெளியேற மறுத்தனர். இதனையடுத்து தலைவர் இவர்களின் கோரிக்கையினை ஏற்று அவ்வாறே செய்வதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு சந்தோஷத்துடன் வெளியேறினர்.







May 5, 2012 at 4:11 pm
கரை தீவு மக்களே அமைதியாஹா இருங்கள். யாருக்காவது அருவக்கலு வில் வேலை செய்த சாகுல் ஹமீது உடைய மொபைல் நம்பர் தெரிந்தால் தயவு செய்து 0097477932529 என்ற இலக்கத்துக்கு sms பண்ணவும்.
மிக்க நன்றி
Dr Mohamed Thahir Asmil (பழைய அருவகலு சிவில் போர்மன்)