PuttalamOnline

ஆசிரியர் M. A. M. M. பஸீலின் ஆய்வுக் கட்டுரை

| 1 Comment

இவ்வாக்கமானது ஆசிரியர் M. A. M. M. பஸீல் அவர்களினால் வடமேல் மாகாண சாகித்திய விழாவுக்காக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையென்பது குறிப்பிட்த்தக்கது.

பாங்கான இலக்கியங்கள் பல ஈன்ற பாவலர் பஸீல் காரியப்பர்.

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறுகளில் 20 ம் நூற்றாண்டுகளில் கண்டுகொள்ளப்பட வேண்டிய அற்புதக் கவி வரிகள் அவை. கவிச்சுவையினை எனக்குள் பருக்கிய பாவலர் பஸீல் காரியப்பர் முக்கியமானவர். கிழக்கு மண்ணின் மண்வாசனை மாற கவிச் செம்மல் எம்மண்ணிலமும் போற்றும் உயர் சம்மாந்துரை ஊரைப்பிறப்பிடமாக் கொண்ட கவிஞர் பாவலர் பஸீல்.இத்தகைய பெரியவரின் கவிதை நயத்தையும் அவர் வாழ்வியில் அழகையும் ஒருங்குற உரைப்பதே இவ்விலக்கிய விவரணக் கட்டுரையின் நோக்கமாகும்.

சம்மாந்துறையில் 09.05.1940ல் முகம்மது சுபைர் காரியப்பர் – பாத்திமாதம்பதியின் மகனாகப் பிறந்தவர் பாவலர் பஸீல் காரியப்பர். பதுளை கார்மல்கொன்வன்ட்டில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின் சம்மாந்-துறையிலும் கல்முனையிலும் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1958ல் தொட்டவத்தை, பாணந்துறையில் ஆசிரியர் நியமனம் பெற்றுச் சேவையாற்றினார். ஆசிரிய சேவையில்மன்னார், பேருவளை, சம்மாந்துறை,கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களில்சேவையாற்றி ஓய்வு பெற்றார். இவரைப் பற்றி இன்னமும் சொல்லலாம். ஆனாலும் அறிமுகத்திற்கு போதுமென்று எண்ணுகிறேன்.

‘அழகான ஒரு சோடிக் கண்கள்’ என்ற அற்புதமான மெல்லிசைப் பாடல் அல்லது ஈழத்துப் பாடல் பாவலர் மீது எனது கவனத்தை ஈர்த்த முக்கியமான முதல் அம்சம்.

எழுபதுகளின் பிற்பகுதியும் எண்பதுகளின் முற்பகுதியும் செழுமை மிக்கதும்அறிவு பூர்வமானதும் இலக்கிய நயம் கொண்டதுமான நிகழ்ச்சிகளை இலங்கைஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை வாரி வழங்கி வந்தது.முத்தமிழும் பொங்க வானலையில் முழுச் சுவையையும் அள்ளி அள்ளி வழங்கியது.

அறிவுக்கும் சிந்தைக்கும் இனிய மெல்லிசைப் பாடல்களை நமது கவிஞர்கள் எழுதினார்கள். இன்றும் நினைத்து ஏங்க வைக்கும் அந்தப் பாடல்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையும் வர்த்தக சேவையும் தனித்தனியே நிகழ்ச்சிகளாக ஒலி பரப்பி வந்தது. சினிமாப் பாடல்களையும் மீறி அந்தப் பாடல்கள் என்னைப் போன்ற பல இளைஞர்களது மனங்களில் இடம் பிடித்தன. நீலாவணனின் ‘ஓ… வண்டிக்காரா…. ஓட்டு வண்டியை ஓட்டு’, மகாகவியின் ‘சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் – சில வேளை அதை வந்து கடல் கொண்டுபோகும்’, உலகப் புகழ் பெற்ற பாகிஸ்தானின் இசை மேதை சொகைல் ராணாவின்இசையைச் சுழல விட்டு ஸ்ருதி பிசகாமல் எஸ்.கே. பரராஜ சிங்கம் பாடிய ‘மணிக்குரல் ஒலித்தது‘ ஆகிய பாடல்கள் நினைவுகளாக எனது நெஞ்சில் இன்னும்இனித்துக் கொண்டேயிருக்கின்றன.

ஒரு நல்ல இசையறிவாளரும் பாடகரும்; சிறந்த அறிவிப்பாளருமாக விளங்கிய எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள்தான் ‘அழகான ஒரு சோடிக் கண்கள்’ என்ற பாடலைப்பாடியவர். எழுதியவரின் பெயரற்ற ஒரு பத்திரிகைத் துண்டாக இந்தப் பாடல் கிடைத்ததாகவும் பாடலின் சிறப்புக் கண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப் பட்டதாகவும் பின்னர்தான் பாவலர் பஸீல் காரியப்பரின் பாடல்என்பது தெரிய வந்ததாகவும் ஒரு கதை நிலவி வந்தது. எவ்வாறாயினும் இது ஒரு அதிசிறந்த பாடல்.

இது தவிர, சுஜாதா அத்தநாயக்க பாடிய ‘கயிற்றோசை கேள் மகளே… தொட்டில்கயிற்றோசை கேள் மகளே… என்ற பாடலும் ‘பொன்னரிவாள் என்றே கவிஞர் புரட்சிக்கமால் சொன்னார் என்ற பாடலும் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வரும் பாவலர்எழுதிய பாடல்களாகும்.

அழகான ஒரு சோடிக் கண்கள் – அவை
அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம் புண்கள்!

புவியியல் கற்றிடும் வேளை – அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங்காலை
தவித்துத் துடிப்பதென் வேலை – கல்வி
தங்குவதெங்கே மனமொரு பாலை

ஆட்சியியல் மறு பாடம் – நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்
ஆட்சி செய்யுமுனைச் சாடும் – நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்!

தாய்மொழிப் பாடம் நடக்கும் – நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்
‘ஏய்’ என்று என்னைப் பிடிக்கும் – மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்…?

தத்துவப் பாடம் நடக்கும் – அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்
வித்தையில் பித்து பிடிக்கும் – நம்
வீட்டாரறிந்தால் கன்னந் தடிக்கும்!

இந்த கவிதையை வாசிக்கும் போதெல்லாம் முழுக்க பர்தா கொண்டு உடல் மறைத்து கண்கள் மட்டும் தெரியும் அறேபியப் பெண்களின் உருவம் என் மனதிலே வந்து போவதுண்டு. முதல் காதலரும்பை தந்ததுவோ தெரியவில்லை. இக்கவி வரிகளில் மட்டும் என்னால் ஆழப் புதைய முடிகிறது.

பாவலர் பஸீல் காரியப்பரின் ‘தங்கம்மா’ என்ற கவிதை, அவர் மீது பேரபிமானம் கொள்ள வைக்கிற மற்றுமொரு கவிஎனலாம். அந்தக் கவிதை வெளியான போது நான் புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரியில் மாணவனாக இருந்தேன். கொழும்புப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம்1978ல் நடத்திய அகில இலங்கை ரீதியிலான கவிதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றது இந்த நெடுங்கவிதை அது. என அப்போதைய தமிழ் வாத்தியார் என்க்கு சொல்லிக் கொடுத்திருந்தார். அப்போதெல்லாம் அவர் என்னையும் பார்த்து பாவலர் பஸீல் என விளித்ததன் அர்த்தம் இப்போது எனக்கு புரிகிறது. தற்போது கலாசார அலுவல்கள் அமைச்சில் பணிப்பாளராகஇருக்கும் எனது கல்லூரி தோழரான சம்மாந்துறையைச் சேர்ந்த ,விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பியதும் ‘தங்கம்மா’ கவிதை கொண்ட சிறுபிரசுரங்கள் இரண்டைக் கொண்டு வந்தார். அகில இலங்கை ரீதியில் பாவலர் பெற்றபரிசுக்காகவும் இவ்வாறான ஓர் சிறந்த கவிஞன் தங்களுடன் வாழ்வதையும்கௌரவித்தும் ஊரே திரண்டு பாவலரை வாழ்த்திப் பெருவிழா வொன்றை நடத்தியது.அங்கு விநியோகிக்கப்பட்ட கவிதைப் பிரசுரமே இது என்று சொன்ன நண்பர் கவிதையோடு எனக்கிருக்கும் உறவுக்காக ஒரு பிரதியை எனக்குத் தந்தார்.

தங்கம்மா 2001 ஆண்டுகளில் க.பொ தராதர சாதாரண தர மாணவர்களின் தமிழ்ப் பாட புத்தகத்தின் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டிருந்தது.

பொங்கும் துயரங்கள்

பொசுங்கும் முகத்துடனே

தங்கம்ம்ம இந்தத்

தனி மரத்தின் கீழ் அமர்ந்தார்….?

ஆஸ்பத்திரி வாகை

அடி நிழலில் நீ இருந்து

காச நோய் வாட்டைக்

கவனமொடு பார்த்திருந்தாய் !

பன்னிரண்டு மணி இன்னும்

ஆகவில்லைப் போலும்

உன்னை விடமாட்டார் !

மணியோசை கார்த்திருந்தாய் !

என்று ஆரம்பமாகும் அடிகள் அவை. பாவலரின் தங்கம்மா கவிதை வாயிலாக ஏழைக் குடும்பம் ஒன்றின் அவல நிலையை பாவலர் படம் பிடித்துக் காட்டுகிறார். எளிய சொற்களோடு நிகழ்வுகளுக்கான பின்னணியை விபரிக்க முனைகிற பாவலரின் கவிப் பாங்கு சிறப்பிடம் பெருகின்றன எனலாம்.

குடும்ப பாரம், பொருளாதார சுவை இவற்றுக்கும் மேலால் பிணியின் வாட்டம் இக்கவிதையில் இழையோடுகிறதை காணமுடிகிறது. நோயின் தாக்கமும், கணவனின் நிலைமையும், பிள்ளைகளின் போஷாகின்மையும் மேலோங்கும் வண்ணம் கவியில் காட்டப்படுகிறது. கறையான் அரித்த சிதைவடைந்த வாழ்க்கையை உவமிக்கப்பட்டுள்ளது,

நல்ல வயிற்றிலிந்த

நரம்பு பிறந்திருந்தால்

இல்லாமல் நோயிவளே

எழுந்திருப்பால் ! நான் மற்றப்

பிள்ளைகளைப் பார்ப்பதுவா ? – இவள்

பிணி தன்னைப் பார்ப்பதுவா ?

நெல்லும்பாய் உழைப்பாலும்

நீங்காதப் பட்டினியே

குச்சுகளால் செய்த

இரு கைகளும் சூம்பற் கால்களும்

பச்சையமே இல்லாமல்

பழுப் பேறிப் போன இலை மேனியும்

என்கிற அடிகள் குடும்ப பொருளாதார நிலைமையையும் அச்சுமாவின் அவல நிலை போதிக்கப்படுகிறது.

நல்ல வயிறும் இந்த நாட்டில் சிலபேருக்க என்று கூறுவதன் மூலம் நன்குண்டு சிறப்புற்று வாழும் குடி மக்கள் எமது நாட்டில் ஒரு சிலரே என அறிய முடிகிறது. தங்கம்மாவின் குடும்ப வாழ்க்கையை அப்பட்டமாக உணர்வு தழுவ காட்டியிருக்கிறார். பாவலர்.

தங்கம்மா ஒரு நெடுங் கவிதை மாத்திரமல்ல, அது ஒரு காவியம். காவியத்துக்குரிய இயல்புகள் தேவைகளை அது நிறைவேற்றவில்லை என்கிற போதும் என்னளவில் அது ஒரு காவியம்தான். அது அவ்வாறுதான் பேசுகிறது. ஓர் ஏழைப் பெண்ணின் வாழ்வை அதி உச்சத்துயருடன் அது பேசுகிறது. அவளது வாழ்வை அவள் எப்படி இழந்தாள் என்பதையும் சமூகம் எப்படி அவளைக் கைவிட்டது என்பதையும் அதனால் அவள் பிழைக்கத் தேர்ந்த வழியைக் கொண்டு அவளைத் தூற்றித் தெருவில் விட்டது என்பதையும் மனதைப் பிழியுமாறு எடுத்துச் சொல்கிறது. ஒரு ஏழைப் பெண்ணின் துயர வரலாற்றை எடுத்தோதும் இந்நெடுங்கவிதை மூலம் தனது சீற்றம் கொண்டமறைமுகக் கரங்களால் வெட்கம் கெட்ட சமூகத்தை நோக்கிக் கற்களை வீசும்பாவலரையும் நான் காண்கிறேன்.

பாவலர் பஸீல் காரியப்பரைச் சந்திக்காமலேயே அவரது விசிறியாக என்னை மாற்றியவை அவரது கவிதைகள்தாம். நான் ஏற்கனவே குறிப்பிட்ட பாடலும் கவிதைக்கும்அப்பால் மற்றொரு கவிதையை அகஸ்மாத்தாக எங்கோ படிக்கக் கிடைத்தது. அந்தக் கவிதையின் பெயர் ‘வருத்துவது’. மிக மிக எளிமையான சொற்களைக் கொண்டு அந்தக்கவிதை பேசுகிறது. வெறும் இருபது வரிகளில் முதல் வாசிப்பில் என்னில் ஒட்டிக்கொண்டது அந்தக் கவிதை. எதுகைக்கும் மோனைக்கும் சொற்கள் தேடித் தேடித்தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த வயது அது. வயதும் அனுபவமும் இல்லாத காரணத்தாலும் வாசிப்பின் போதாமையாலும் எதுகையும் மோனையும் எங்கே அழைத்துச் செல்கிறதோ அந்த இடத்துக்குக் கவிதையை முடித்து நிறுத்திக் கொள்கின்ற நிலையிலிருந்த எனக்கு இந்தக் கவிதை ஒரு புதுமையாகக் கூடத் தெரிந்தது. வெறும் சாதாரணச் சொற்களாலும் அற்புதமான விடயங்களைத் தாக்கமுடன் பேசமுடியும் என்ற பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது இந்தக் கவிதைதான். இந்தக் கவிதையின் பின்னணி வயற் பிரதேசம். கதாநாயகி புல்லுப் பிடுங்குபவள். அவளதுவாழ்வின் வலியை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்.அற்புதக் கவி வரிகள் இவை;

நெல் வயலுக்குள்ளே
நெருங்கி வளர்ந்திருந்த
புல் பிடுங்கி விட்டுப்
போகின்ற பெண்ணாளின்
கன்னத்தில் வெள்ளிக்
காசுகள் போல் தேமல்
என்னுள் ஒரு வேதனையை
ஏன் எழுக என்றதுவோ

மருந்தொன்று அறிவேன் அம்
மறு நீங்கச் செய்திடலாம்
அறிந்ததனைச் சொல்லிவிட
ஆவல் மிகக் கொள்ளுகிறேன்

மெல்ல வழியில் இறங்கி
மெதுவாகச் சொல்லுகையில்
கொல்லென்று சிரித்தாள் பின்
குளுமையுடன் தலை நிமிர்ந்து
‘வருத்துவது எங்கள்
வயிறே முகத்தேமல்
உறுத்தவில்லை காக்கா’ என
ஒரு பதிலைச் சொல்லி விட்டாள்.

பாவலர் பஸீல் காரியப்பர் எப்படியிருப்பார் என்று பல முறை நான் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அவருடைய முகவரியைத் தேடிப் பலரைத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரை அறிந்தவர்களிடம் அவரது கவிதைகளைச் சொல்லிச் சொல்லிமாய்ந்திருக்கிறேன். ஆனால் பாவலர் மட்டும் எனக்கு எந்த விதத்திலும்அகப்படாமல் இருந்து வந்தார்.

வானொலி அறிவிப்பாளரொருவர் தனது வாழ்வியிலனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது இவ்வாறு கூறுகிறார்.

விவசாயிகள் கதிரடிக்கும் ‘இரணக் கோல்’ பற்றிய கவிதை.

காக்கா! அக்கம்புதன்னைக்
காலால் மிதிக்காதே
ஏக்கம் மிகுந்த எங்கள்
இரணக் கோல்! கதிரடிக்கும்
கம்புதான் எங்களினைக்
காக்கும் படை: அதுவே
நம்பிக்கை தரும் ஒரு கோல்
நாளை சில பேர்க்குச்
சூட்டுக் கோல் ஆகிடலாம்
சுரணை வருமட்டும் எங்கள்
பாட்டைச் சுரண்டுபவர்
பழிவாங்கப் படுவர் இந்
நீட்டுக் கோல் அவர்களது
நெஞ்சைத் திருத்திடலாம்
காட்டாதே பல்லைச் சே…
காக்கா உன் காலை எடு!

கடைசி இரண்டு வரியையும் அவர் ஒரு நடிப்புடனும் ஆவேசத்துடனும் உச்சரித்ததைப்பார்த்து நான் திகைத்துப் போனேன். “காட்டாதே பல்லைச் சே…” என்றவசனத்தின் போது விருட்டெனத் திரும்பி ஒரு கோபப் பார்வை பார்த்தார். பஸ்நகரத் தொடங்கியது. என்று ஒரு ஒலிபரப்பாளர் தனது அனுபவங்களைக் கூறுகிறார்.

உங்களது முதல் கவிதை எது என்ற கேட்ட போது, அவர் சொன்ன பதில் சற்று வித்தியாசமானது. ‘சிறு வயதில் ஒரு முறை நான் கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தேன். இரண்டு தினங்கள் உணர்வில்லாமல் கூட இருந்தேன்.இரவில் திடீரெனக் கண் விழித்த நான் சுவரில் எறும்புகள் செல்லும் நிரையொன்றைப் பார்த்தேன். அவை எதிரும் புதிருமாக ஒன்றையொன்று சந்தித்துச்சொல்வதை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். இதனைக் கண்ட எனது தாயார்அதிர்ச்சியடைந்து “மகனே உனக்கு என்ன நடந்தது?” என்று பதறிப் கேட்டார். “உம்மா நான் எறும்புகளைப் பார்க்கிறேன். அவை ஒவ்வொன்றும்சந்தித்து ஸலாம் சொல்லிப் போகின்றன” என்று சொன்னேன். தாயாருக்கு மகிழ்ச்சி.

அதுதான், அந்தச் சிந்தனைதான் எனது முதலாவது கவிதை என்று எண்ணுகிறேன்’ என்று சொன்னார் பாவலர்.

ஆனால் தனது முதல் ஆக்க இலக்கியம் ‘உயிர்’ என்கிற கவிதை என்று சொன்ன பாவலர்அதை மன்னார் பெரியமடு என்ற இடத்தில் வைத்து எழுதினேன் என்கிறார். தனக்குமுழு மன நிறைவைத் தந்த கவிதை இது என்று சொன்ன பாவலர் இக்கவிதையை எழுதிக்கூடவே ஒரு கடிதமும் எழுதி முத்திரையும் வைத்து தினகரன் பத்திரிகைக்குஅனுப்பினாராம். ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை. இந்த விடயம் தனக்குமிகவும் மனச் சங்கடத்தைத் தந்தது என்றார்.

எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ?

குச்சி, அதன் பெட்டியுடன் கூடி உரசியதால்
விச்செனவே சுடரொன்று வீறிட்டெழுந்து
இங்கு நின்று
சுழன்று
சில நொடியில் மறைந்தது காண்

எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ

வீணை நரம்புகளில் விரல்கள் விளையாட
தேனாம் இசையுண்டோம் சேர்ந்ததுவும் எங்கேயோ

எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ

சுழன்ற சுடராமோ சுவைத்த இசையாமோ
தளர்ந்த உயிர் உடலைத் தவிர்த்த நிலை எதுவோ

எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ

இதுதான் அந்தக் கவிதை. பின்னாளில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் இக்கவிதை பரிசு பெற்றதாகஅறிய முடிகிறது.

பாவலர் அவர்களின் கவிதைகள் சாதாரண ஒரு விவசாயக் கிராமத்தின் வாசனை கொண்டவை.அந்தக் கிராமத்து எளிய சனங்களின், தன்னோடு உலவும் மாந்தரின் வியர்வையையும்வறுமையையும் வலிகளையும் படம் பிடித்துக் காட்டுபவையாக இருக்கின்றன. தான்வாழும் பூமியின் ஸ்பரிசங்களின் உணர்வுகளால் ஆனவை. பகட்டு வசனங்களும்பாசாங்குத் தனமும் இல்லாதவை. அமைதியாக வழிந்தோடும் நீரூற்றைப் போல இதமாகஅவை வழிந்து செல்கின்றன. எனவே அதற்கேற்றவாறு சாதாரண எளிமையான மொழிச்சட்டையைஅவரது கவிதைகள் அணிந்திருக்கின்றன. அவரது பார்வை எப்போதும் உழைக்கும்வர்க்கம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. அந்த உழைக்கும் வர்க்கமும் பூமியைநம்பி வாழும் விவசாயப் படையாக இருப்பது மிகத் தெளிவானது.

‘சட்டை’ என்று ஒரு கவிதை. தமிழ் கொஞ்சி விளையாடுகிறது இந்தக் கவிதையில்.அப்போதும் கூட அந்தக் கவிதை சொல்லும் உரத்த செய்தி என்ன என்பதைஅவதானியுங்கள்.

பட்டுத் துணி எடுத்துப் பல
வெட்டுக் கிறுக்குகளால் துளை
இட்டுத் தளிர் மேனி வெளிக்
கிட்டுத் தெரியவரும் சிறு
சட்டை அணிந்த பெண்கள்
சஞ்சரிக்கும் பூமியிலே

அட்டைக் கடி அழுத்தப் பன்
கட்டைத் தலை சுமக்கக் கை
எட்டி அதைப் பிடிக்க ஓ!
எரி வெயிலிற் செல்லுமிவள்
சட்டை இடுவலிடை அந்த
மொட்டுத் தெரிந்து விழி
பட்டுத் தெறித்ததனால் என்ன
பெட்டை இவள் என்றே
பிழையாக நினைக்காதீர்

உண்மையிலே இவளிடத்தில்
ஒழுங்கான சட்டை இல்லை
பன்பிடுங்கும் தொழிலால் இப்
பாவைபெறும் ஊதியத்தால்
இன்னும் ஒரு சட்டை தைக்க
இயலவில்லை

‘பாவலர்’ பட்டம் பஸீல் காரியப்பருக்கு புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளைஅவர்களால் வழங்கப்பட்டது. ‘தங்கம்மா’ கவிதைக்குப் பரிசு கிடைத்ததைத்தொடர்ந்து ஊர் திரண்டு நடத்திய விழாவில் புலவர்மணி அவர்கள்,

“நமது செல்வமம்மா
நாட்டின் செல்வமம்மா
நமது பஸீல் காரியப்பர் என்றும்
“பாவலன் தோன்றி விட்டான்
பஸீல் காரியப்பர் கண்டீர்” என்றும் வாழ்த்தி ‘பாவலர் பட்டத்தை வழங்கியிருந்தார்.

ஒரு சமயம் பேட்டி ஒன்றிற்காக புகைப்படம் எடுப்பதற்காக கதிரையில் அமரச் சொன்ன போது ஒரு காரியம் செய்தார்பாவலர். “நான் மேசையில எழுதுறமாதிரி எடுறா கிளி” என்று விட்டு முகத்தைமறைத்துக் கொண்டு அமர்ந்தார். சுருக்கமாகச் சொன்னால்புகைப்படத்தில் முகத்தைக் காட்டாமல் ஒரு புறக் கன்னம் மட்டும் தெரியஅமர்ந்திருந்தார். எவ்வளவோ கெஞ்சியும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.‘இதுதான்டா கிளி நல்லாயிருக்கும்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருந்தார். எனக்கும் வேறு வழி எதுவும் இருக்கவில்லை.

பேட்டியின் போது தனது மரியாதைக்குரிய நபர்களாக புலவர்மணி அல்ஹாஜ்ஆமு.ஷரிபுத்தீன், ஈழமேகம் பக்கீர் தம்பி, ஏயாரெம் சலீம் (இவரை சலீம் காக்காஎன்று சொன்னார்) ஜே.எம். அப்துல் காதர் ஆகியோரைக் குறிப்பிட்டார். ஆசிரியகலாசாலையில் தன்னுடன் இருந்த ஏ. இக்பாலை அவர் குறிப்பிடத் தவறவில்லை. அவர்முக்கியமான நபர்களாகக் குறிப்பிட்ட இருவர் சில்லையூர் செல்வராசனும் தினகரன்ஆசிரியராகவிருந்த எஸ்.சிவகுருநாதனுமாவர். சில்லையூராருக்கும்தனக்குமிடையில் மிகுந்த அன்பும் பிணைப்பும் இருந்ததை என்னிடம் பலமுறைகுறிப்பிட்டுள்ளார். சிவகுருநாதன் தன்னை எந்த இடத்தில் சந்தித்தாலும் ஒருதாளை நீட்டிக் கவிதை எழுதச் சொல்லுவார் என்றும் கூறியிருந்தார்.

உலகம் சுருங்கி விட்டது. எல்லாமே நவீனமாகி வருகின்றன. எதிர்கால இலக்கியம் எப்படியிருக்கும்? என்று ஒரு கேள்வியைக் கேட்கப்பட்டன.

“இலக்கியம் இருக்கும். சுருக்கமாக வீரியமாக இருக்கும். வடிவங்கள்வேறுபட்டாலும் கூட” என்று சொன்ன பாவலர் அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார்.“உலகம் முழுவதும் எத்தனையோ அற்புதமான வடிவங்களில் வானளாவக் கட்டிடங்கள்எழுந்து நிற்கின்றன. இன்னுமின்னும் எழுப்பப்பட்டும் வருகின்றன. இவைகளால் பலஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, மிகப் பழைய கட்டடமான தாஜ்மஹாலை எதுவுஞ்செய்ய முடியவில்லையே. அப்படித்தான் இலக்கியமும்” என்று கூறினார்.

2001 ம் ஆண்டின் முற்பகுதியில் பாவலரின் கவிதை நூல் தொகுப்பு தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்கத்தினால் வெளிடப்படுவதற்கானஏற்பாடுகள் நடைபெற்றதாகதாக வேறொரு புறத் தகவல் எனக்குக் கிடைத்தது. தனதுஅபிமானியாக இருந்த போதும் ஒரு தனிமனிதனான அவரது ரசிகர்களால் அது வெளியிடப்படுவதைவிடப் பல்கலைக் கழக சமூகத்தால் வெளியிடப்படுவதை பாவலர் விரும்பியிருக்கக்கூடும் என்று எண்ணினுகிறேன். அது வரவேற்கத் தக்கது என்பதும் எனது எண்ணமாகஇருந்தது. எவ்வாறாக இருப்பினும் அவரது கவிதைத் தொகுதி வெளிவருவதன் மூலம்அவரது கவிதைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்ற அடிப்படையில் நான்மிகவும் திருப்தியடைந்தேன்.

பாவலரின் கவிதைகள் அவரைப் போன்றே எளிமையானவை. பல கவிதைகள் தொடை, தளை, சீர்களுக்கு அப்பால் நிற்பவை. புதுக் கவிதையின் போக்குகளுக்குள் அடைபடாதவை.ஆக கவிதை என்கிற வரை முறைகளுக்குள் நெருக்கடிப் படாத ஆனால் கவிதையாகமேலோங்கி நிற்கும் பண்புகள் உடையவை. அதற்காக முழுக்கவும் அவற்றை விட்டும்நீங்கியிருக்கிறார் என்றும் சொல்ல முடியவில்லை.
இந்தப் பண்பை இலங்கையில் பாவலரிடம் மட்டுமே என்னால் காண முடிந்திருக்கிறது.

“இவரது செய்யுள் கட்டிறுக்கமான மரபுவழிச் செய்யுள் அல்ல. தமிழின் யாப்புவடிவங்களில் பஸீலுக்கு நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு என்று சொல்லமுடியவில்லை. இவரது செய்யுள் ஓரளவு நொய்மையானது. இசைப் பாடல்களில் அவர் ஒருதொடர்ச்சியான சந்த லயத்தைப் பேண முயன்றிருக்கிறார். ஏனைய செய்யுள்களில்அத்தகைய முயற்சி காணப்படவில்லை. சந்த முறிவுகளை ஆங்காங்கே காண முடிகிறது” என்று கலாநிதி நுஃமான் நூலுக்கு வழங்கிய மதிப்புரையில் தெரிவித்துள்ளார்.

இதைப் பாவலரே ஆமோதிக்கிறார். “இலக்கண அறிவோ தகவல் அறிவோ நிறைந்த மனிதனாகநான் இல்லை. எனது மனதில் அந்தந்த வேளையில் எழுந்த சிந்தனைகளை எனக்குச்சுயமாக ஏற்பட்ட சொல்லொழுக்கில் நான் எழுத்தில் வடிக்கிறேன். கவிதை என்பதுபெருகிய உணர்வின் இறுகிய இசையோட்டமான சிந்தனையின் சிறைப் பிடிப்பு” என்றுஅவர் சொல்கிறார்.

ஆனாலும் என்ன? இவற்றையெல்லாம் தாண்டி அவரது கவிதைகள் கவிதைகளாக நின்றுநிலைக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன என்பதைப் பல்கலைக் கழக சமூகம் அவரதுநூலை வெளிக் கொணர்ந்ததன் மூலம் நாம் உணர்ந்து கொள்கிறோம். இன்றும் அவரைநினைத்து உரை நிகழ்த்துவதன் மூலம் தெரிந்து கொள்கிறோம். இன்றும் இன்னும்அவர் தனது கவிதைகளுக்காகவே நினைத்துக் கதைக்கப்படுகிறார் என்பதன் மூலம்புரிந்து கொள்கிறோம்.

கலாநிதி நுஃமான் தொடர்கிறார்…”பஸீல் காரியப்பர் தனது கவிதைகளை நினைவில்இருத்தி, அவற்றை இயல்பாகப் பேச்சோசையுடன் சொல்லிக் காட்டும் திறன்மிக்கவர். அவர் தன் கவிதைகளைச் சொல்லும் போது அவரது செய்யுளின் சந்தமுறிவுகளை நாம் உணர முடியாது. கவிதை சீரான சந்தத்துக்குள் மட்டும் இல்லை.அது எழுப்பும் உணர்வு, சிந்தனை வீச்சு, செறிவான படிமங்களின் ஒழுங்கமைப்புஆகியவற்றுக்குள் இருக்கிறது. இவ்வகையில் பஸீலின் பெரும்பாலான எழுத்துக்கள்கவிதையாகி இருக்கின்றன.”

உங்களது கவிதைகள் இலக்கண விதிகளை மீறியல்லவா நிற்கின்றன என்று நீங்கள்என்றாவது அவரைக் கேட்டிருந்தால் அவர் என்ன பதில் சொல்லுவார் என்றுநினைக்கிறீர்கள். “அப்படியான கவிதைகளைத்தான் நீங்கள் ரசிப்பீர்களானால்என்னுடைய கவிதைகளை விட்டு விடுங்கள்”என்றே பதில் சொல்லியிருப்பார்.‘இப்போது நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் என்றெல்லாம் பேசப்படுகிறதே?’ என்று ஒரு கேள்வி.அதற்கு அவர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில், “இது பற்றி எனக்கு ஒன்றுமேதெரியாது!”

இந்தப் பதிலைப் பார்த்து விட்டு மற்றொரு கவிஞரும் சிறந்த படைப்பாளியுமானஎன்.ஏ.தீரன் என்கிற நௌஷாத் காரியப்பர், ‘பெண்ணியம், தலித்தியம் போன்றவைபற்றித் தனக்குத் தெரியாது என்று பாவலர் சிரிப்பது பாவலரின் சிந்தனைவரட்சியைக் காட்டுகிறது என்பதை விட அவர் அவை பற்றிக் கூற விரும்பவில்லைஎன்று என்னை நான் ஏமாற்றிக் கொண்டேன்’ என்று குறிப்பிட்டார். இதே நௌஷாத்பாவலரின் மரணத்துக்குப் பிறகு ஏறக்குறைய 25 அந்தியாயங்களில் பாவலரின்கவிதைகளையும் அவரது வாழ்க்கை பற்றியும் எழுதியவர். அந்தத் தொடரின் ஆறுஅத்தியாயங்கள் வரை ‘விடிவெள்ளி’ பத்திரிகையில் வெளிவந்தன. பத்திரிகையில்இலக்கியம் இடம் பெற்றுவந்த அந்தப் பக்கம் சிறுவர் பக்கமாக மாறியதால்அத்தொடரைப் பிரசுரிக்க முடியாத நிலையில் இருப்பதை விடிவெள்ளியினர்தெரிவித்தனர்.

பாவலரின் கவிதை நூலில் உள்ள கவிதைகள் யாவுமே வாசித்து ரசிக்கத் தக்கவைதான்.குறிப்பாக இரண்டு கவிதைகளை இங்கு சுட்டிக் காட்டுவது காலத்தின் கட்டாயம்என்று கருதுகிறேன். 1983க்கு முன்னர் தமிழர் விடுதலைப் போராட்டம்ஆயுதங்களின் மூலம் பேசப்படுவதற்கு முன்னர் தமிழ் முஸ்லிம் உறவு எப்படியிருந்தது என்பதை 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும் அறிவோம்.இனிய கனவாக, நினைந்தழும் நினைவாக, கவலையுடனும் மகிழ்வுடனும் அசை போடும் நாட்களாக இன்னும் நமது மனங்களில் அவை இருக்கின்றன. மீண்டும் அக்காலத்தைஎட்டிப் பிடிப்பதற்காக நாம் ஆசைப்படுகிறோம். அது எதிர்காலப் பரம்பரைக்குநாம் செய்யும் கைம்மாறு மட்டுமல்ல நமது கடமையும் கூட. இதில் கருத்துவேறுபாடுகள் யாருக்கும் இருக்க முடியாது.

‘ஓ.. ஒரு பெண்ணாள்’ என்ற தலைப்பில் பாவலர் எழுதிய கவிதையை நாம் முதலில் பார்க்கலாம். இன ரீதியான பார்வையை அவர் என்ன வார்த்தைகள் கொண்டு எதிர்கொள்கிறார் என்பது அவதானிக்கப்பட வேண்டியது.

ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே
ஓ.. ஒரு பெண்ணாள் நின்றாள்
வாடிய முகமும் தோளில்
வளர்த்திய சேயுமாய்ச் சற்று
ஆடிய போதிலெல்லாம்
அடுத்தவர்க்கு அணைப்பேயாகி
ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே
ஓ… ஒரு பெண்ணாள் நின்றாள்

ஆசனத்தில் இருந்த அன்பர்
அடுத்திருந் தவரைப் பார்த்துப்
பேசினார் ‘உங்கள் இனப்
பெண்தானே எழுந்து சற்று
இடம்தனைக் கொடுங்கள்’ என்றே
இரங்கினார் பஸ்ஸ_க்குள்ளே
அடைபட்ட பெண்ணில் அவர்
அனுதாபம் பெருகி நின்றார்

தாய்! ஒரு சேயினோடு
தவிப்பதில் பேதம் காணும்
நாயுனை என்ன என்பேன்
நாமெல்லாம் மனிதரல்லோ!

மனித மகத்துவம் பேசும் இந்தக் கவிதையில் எந்த இனத்தைச் சார்ந்தவன் அவ்வாறுசொன்னான், எந்த இனப் பெண்ணாள் சேயொடு நின்றாள் என்பதற்கான எந்தக்குறியீடும் கிடையாது என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

காடையனும் கடப்புளியும் எல்லா இனத்திலுமிருக்கிறான். பொது நிறுவனங்களில் வயிறு வளர்ப்பவன் எல்லா இனங்களிலுமிருக்கிறான். கடன் வாங்கிவிட்டுக் கம்பி நீட்டுபவன் எல்லா இனங்களிலுமி-ருக்கிறான். தானே காசைக் கொடுத்துப் போட்டி நடாத்தச் சொல்லித் தானே முதல் பரிசை வாங்கிப் பத்திரிகையில் படமும், பெயரும் போடுபவன் எல்லா இனத்திலுமிருக்கிறான். இனம், மதம் என்று எடுத்ததற்கெல்லாம்பிரிவினை பார்ப்பவன் எல்லா இடத்திலுமிருக்கிறான். தப்புச் செய்பவன் யாராக இருந்தாலும் மனித நேயத்தைப் பாதிக்கச் செய்பவன் எவனாக இருந்தாலும் அவன் தண்டிக்கவும் கண்டிக்கவும் படவேண்டியவன். இதை அழகாகத் தன் கவிதையில் பாவலர் பொறித்திருப்பதைக் காண்கிறோம்.

சரி இவ்வாறான மனப்பாங்கற்றுப் போக என்ன செய்ய வேண்டும் என்பது இன்னொரு கவிதையில் பாவலரால் சொல்லப்படுகிறது. அந்தக் கவிதைக்குப் பெயர் ‘துளசி’

துறை நீலாவணையிலிருந்து
ஒரு துளசிச் செடி கொண்டு வந்தேன்
வேர் நொந்து போகாமல் நீர் வார்த்து
ஓரமாய்க் கெல்லி ஈரமண்ணோடு
உசுப்பாமல் கொண்டு வந்து
எங்கள் இல்லம் இருக்கும்
கல்முனைக்குடி மண்ணைக் கெல்லி
அதனுள் வைத்தேன்
அம்மண்கள் கலந்தன
மனிதரைப் பழித்தன
துளசியின் இலைகள் என்னைப் பார்த்து
மெல்லச் சிரிக்கின்றன.

இந்தக் கவிதை என்ன சொல்கிறது. தமிழர்கள் வாழும் பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்படும் துளசிச் செடி முஸ்லிம்கள் வாழும் மண்ணில் செழித்து வளர்கிறது.ஒரு மண் இன்னொரு மண்ணை ஏற்றுக் கொள்கிறது. ஒரு மண்ணின் பயிர் இன்னொரு மண்ணைஏற்றுக் கொள்கிறது. கேடுகெட்ட மனிதர்களாகிய நாம்தான் ஒற்றுமைப்படாமல் பிரிந்து கிடக்கிறோம்.மதங்களும் இனங்களும் மோதிக் கொள்வதில்லை மனிதர்கள் தாம் மோதிக் கொள்கின்றனர் என்பதைத்தான் அழகுற எடுத்துச் சொல்கிறது.

அமரர் நீலாவணனின் ‘நீலாவணன் இலக்கியப் பேரவை’ நடத்திய கவிதைப் போட்டியில் ‘பாதுகை’ என்ற தனது கவிதை பரிசு பெற்றதாகச் சொல்கிறார் பாவலர். ஆனால் அவரதுகவிதைத் தொகுதியில் அக்கவிதையைக் காணவில்லை. ‘கிழக்கிலங்கைக் கவிதைப்பாரம்பரியத்தில் நீலாவணனுக்கு அடுத்த கால கட்டத்தில் கணிப்பிடத்தக்க ஒருகவிஞராகப் பாவலரைக் காணும் தென் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ், ‘பொதுசனத் தொடர்பு சாதனங்கள் இவரை மிகவும் பயன்படுத்த விரும்பின. ஆனால் இவர் தானாகவே ஒதுங்கிக் கொள்வார்’ என்கிறார்.

“நறுக்குத் தெறித்தது போன்ற சிக்கனமான சொற்சேர்க்கைகளுக்குள் அழகையும்இனிமையையும் உயிர்ப்பையும் சிறைப்பிடிப்பது இவரது தனித்துவம்’ என்கிறார்மறைந்த சிறுகதை மன்னர் மருதூர்க் கொத்தன்.

நாற்பத்தைந்து அல்லது ஐம்பதைத் தாண்டி ஒரு மனிதன் காதல் வசப்படுவது செய்தியாகிவிடுகிறது. ஊர் ஓய்வில்லாமல் பேசும் விஷயமாகிவிடுகிறது. இந்தப் பிரச்சினை கவிஞனுக்குக் கிடையாது. அறுபத்தைந்து வயதிலும் காதலைப் பாடுவான். பேரன் கல்யாணவயதிலிருக்கும் போதும் பெண்ணைப் பாடுவான். பெண்ணை அங்கம் அங்கமாகவர்ணிப்பான். அது ஒரு சமூகக் குற்றமாக ஒரு போதும் பார்க்கப்பட்டதில்லை. அதுமொழிக்கும் இலக்கியத்துக்குமான வரப்பிரசாதமாகவே லரவேற்கப்பட்டது, வரவேற்கப்படுகிறது. பாவலர் ஒரு சின்னப் பெண்ணைப் பார்க்கிறார். ‘குறுக்குச்சிறுத்தவளே’ என்றோ ‘முத்தமிட்டு நெத்தியல மார்புக்கு மத்தியில செத்துவிடத்தோணுதடி எனக்கு’என்றோ அவர் வைரமுத்துவைப் போல பாடவில்லை. அவளைச் செல்லமாகச் ‘சிறுக்கி’ என்று அழைக்கிறார்.

முக்காட்டுத் தொங்கலோடு
முன் உசப்பில் கை இருத்தி
சொக்குகளில் மேயும்
சுடர்விழியைப் பாதி செய்து
வக்கா வரம்பில்
வடிவெடுத்து நடப்பது போல்
சேலை சிக்கி நடைபயிலும் சிறுக்கி
என் மூத்த மகன்
உன்னை விரும்புவதாய்
ஒரு வார்த்தை சொன்னால் நான்
இன்றே உன் வீடு வந்து
இணக்கத்தைக் கேட்டிடுவேன்.

சிறுக்கியைக் கண்டு அவரது காமமோ காதலோ விழித்துக் கொள்ளவில்லை. வயது போகப்போகச் சில கழங்களுக்கு ஏக்கமாய் வடிவெடுக்கும் ஆசை துளிர்க்கவில்லை. கள்ளக்கண்ணால் பார்த்துக் ‘கணக்குப் பண்ண’வில்லை. உன்னை அணைக்க ஆசையாயிருக்கிறதுஎன்று பாடவில்லை. நான் இருபது வருடம் பிந்திப் பிறந்திருக்க வேண்டுமேஎன்று பிதற்றவில்லை.

அவரது சிந்தனை மகனுடன் அவளைச் சேர்த்துப் பார்க்கிறது. எத்தனை அழகிய மனம்இது. எத்தனை அழகிய பண்பு இது. பாவலரை அணைத்துக் கொஞ்ச வேண்டும் போல்இருக்கிறது எனக்கு. இந்தக் கவிதையில் ஒரு நாட்டுப் பாடலின் தூய்மையைப்பார்க்கிறேன். அதன் வாசனையைப் பார்க்கிறேன். எல்லோரும் மகனுக்கு நல்ல வசதிவாய்ப்புள்ள மனைவியைத்தான் எதிர்பார்ப்பார்கள். வயலில் நடக்கும் உழைக்கும்வர்க்கச் சிறுக்கியையே மருமகளாக்க விரும்பும் பாவலரின் உயர்ந்த மனப்பாங்கைஎன்னவென்று சொல்வது.

வெளிவந்த ‘ஆத்மாவின் அலைகள்’ என்ற அவரது நூலில் உள்ள எல்லாக் கவிதைகளுமேஎடுத்துக் காட்டுக்குரியவை. ஒரு உரையில் அத்தனையையும் கையாள்வதுசாத்தியப்படுவதில்லை. குறிப்பாக ஒரு பயிற்சிக் கொப்பி கொண்டு வராத மாணவனைஅடித்து விட்டுப் பின்னர் அவனது வறுமை தெரிய வரும்போது தனக்குள் அழுதுஅவனிடம் மன்னிப்புக் கோரும் கவிதையையும் ஒரு சின்னப் பெண்ணின் காதை அழகானதுஎன வர்ணித்து அதில் நகை இல்லாமல் வேப்பங் குச்சி செருகப்பட்டிருப்பதைவிசாரித்து ‘விரைவில் நகை வரும் அதற்குப் பிறகும் கூட உனது காதைப் பார்க்கவிரும்புகிறேன்’ என்ற பச்சாதாபமும் தந்தைப் பாசமும் பீறிட்டு வழியும்கவிதையும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.

முதற் காதல் பற்றி இங்கு நான் யாருக்கும் சொல்லித் தரத் தேவையில்லை. அநேகஆண்களினதும் அநேக பெண்களினதும் நெஞ்சாங் குழிக்குள் இன்னொரு பெண் – இன்னொருஆண் இருக்கிறாள் – இருக்கிறான். இதை நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதுசிலருக்கு யார்யாரோ ஞாபகத்துக்கு வந்து ஊசியால் குத்தி விட்டது போல ஒரு வலிஎடுத்திருக்கும். நெஞ்சுக்குள் இறப்பு வரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும்அந்த ரகசியம் கடலின் அலைகளைப் போல ஓயாமல் சிந்தனைக் கரையைத் தழுவிக்கொண்டேயிருக்கும். கவிஞர்கள் சிலர் இதை வெளியே சொல்லி விடுவார்கள். சிலர்ஒளித்து வைத்துக் கொண்டு தனிமையில் ஏக்கமுற்று இன்பம் காணுவார்கள்.

பாவலரும் தாஹிறாவைப் பற்றிப் பேசுவார் அந்தத் தாஹிறா பற்றி அவரது நூலில் கவிதையொன்று உள்ளது.

மாங்கொட்டை விளையாடும் காலம் என்று ஆரம்பிக்கிறது கவிதை.
“……………
மழைக் கூதல் எனக்கு
மகிழ்ச்சியாய் இருந்தது
அரைக்கால் சட்டைக்குள்
ஓர் ஆணியும் இருந்தது
நான் சாய்ந்து கொண்டிருந்த
எங்கள் வீட்டுச் சுவரில்
ஒரு காவியம் வரைந்தேன்
‘தாஹிறா’ என்று

பலகாலம்
அப்பதிவு சுவரில் நிலைத்தது
அதைப் பார்க்கும் போதெல்லாம்
ஒரு சிரிப்பும் தழைத்தது
சுவரை இடித்தனர் – புதுமனை கட்டினர்
வரைந்த ஓவியம் அழிந்தே போனது
ஆயினும் என்ன
ஆண்டுகள் பலப்பல மாண்டு போனாலும்
அந்த எழுத்துக்கள்
அரூபமாய்
என் நெஞ்சில் நிலைத்த நிழல்

அவர் தனது தாஹிறாவைப் பற்றிச் சொல்லி முடித்திருந்தார்.இக்கவிதையை நயந்த போதுதான் “எல்லா ஆண்களின்நெஞ்சுக்குள்ளும் ஒரு தாஹிறா இருக்கிறாள்” என்று நான் புரிந்து கொண்டேன்.

மாணவப் பருவத்திலேயே ‘கவிஞன்’ என்று அடையாளம் பெற்றவர் பாவலர். ஆசிரியரானபிறகு நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூடக் கவிதையிலேயே கடிதம் எழுதும்கவிதைப் பித்துப் பிடித்த மனிதர். இவரது ஆசிரியர் திரு.அருளையா அவர்கள்பாவலரை ‘உமர் கையாம்’ என்று அழைத்தார்.

‘நற்பண்புகளை உள்ளடக்கிய அழகிய ஓர் ஆத்மாதான் என் வாழ்வின் தேடல்’ என்றுசொல்லும் பாவலர், ‘ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருப்பது போல எனதுவாழ்க்கைக்குப் பதிவு எனது கவிதைகள்’ என்று சொல்லியிருக்கிறார்.

2002ம் ஆண்டு அரச விழாவாக உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது.. இம்மாநாட்டை முன்னெடுத்து நடத்தியது எமது இஸ்லாமிய இலக்கியஆய்வகம். மாநாட்டுக்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதற்குள்ளிருந்துஎந்நேரமும் செயல்படத் தயாரான அமைப்புக்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.இந்தக் குழுவில் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கவிஞர் தாஸிம் அகமது, கவிஞர் கலைவாதி கலீல், அல்ஹாஜ் என்.எம்.நூர்தீன், கவிஞர் ஏ.ஆர்.ஏ.ஹஸீர்ஆகியோர் அங்கத்துவம் வகித்தனர்.. இந்தக் குழுவிடம் ஒருகோரிக்கையை முன் வைக்கப்பட்டிருந்தது.அந்தக் கோரிக்கை என்னவென்றால் மாநாட்டின்கவியரங்குக்கு இலங்கைக் கவிஞனே தலைமை வகிக்க வேண்டும் என்பதுதான்.

நமது நாட்டில் நடந்தால் நமது கவிஞனே தலைமை வகிக்க வேண்டும்என்பதே எனது கருத்தாக இருந்தது. இந்தியாவிலிருந்து எந்தக் கொம்பன்வந்தாலும் விரும்பினால் நமது கவிஞன் தலைமையில் பாடட்டும். இல்லையேல்போகட்டும் என்ற உறுதியான மனோ நிலையில் நான் இருந்தேன். எனது கோரிக்கையைகுழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

பிறகு ஏற்பாட்டுக் குழுவின் கலந்துரையாடலின் பின்னர் பாவலர் பஸீல்காரியப்பரைத் தலைமை வகிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அவரது இலக்கியக் கருவில் உரு சமைத்த மற்றுமொரு பொக்கிஷம் அதில் காட்டுங்கள் என் சிரிப்பை என்று ஒரு கவிதை.

பறந்து விட எந்தன் உயிர்
பழுதான யந்திரத்தை
கழுவுங்கள் கபனிடுங்கள்
காடடுங்கள் என் சிரிப்பை

தொட்டிலிடை வைத்திடுங்கள்
தோழமையாய் ஆட்டிடுங்கள்
வெட்டி வைத்த மணவறையுள்
வைத்திடுங்கள்
மீசான் கட்டைகளை நாட்டுங்கள்
கபுர் மண்ணைக் கூட்டிடுங்கள்
மண்மகளைக் கட்டிக் கலந்து
கனிந்து அயர்ந்து உறங்குகையில்
விட்டு விலகாத விதி பெறுவோம்
வியர்த்தும் போவோம்: காதல்
ஒட்டுறவால் சங்கமித்து நான்
அவளாகிப் போவேன்
பட்டந்தருவார்கள் எனக்கு
மண் என்று
ஒரு கட்டாந்தரையைக் காட்டி

அப்பொழுது அம்மண்ணை
வெட்டி எடுத்து விருந்திடுங்கள்
பயிர்களுக்கு

கண்ணடி மண் நெற்தாயின்
காலடியைச் சேர்ந்திடுமா
சின்னி விரல் மண்ணினை ஓர்
சிறு குரக்கன் ஏற்றிடுமா
என் உடம்பின் எல்லா
இழையங்களும் மனிதர்
உண்ணும் பயிர் செழிக்க
உதவிடுங்கள்: நன்றி சொல்வேன்

எந்த மனிதனுக்கு அந்த
உணவு என்று எனைக் கேட்டால்
நொந்து நலிவோரின்
நோவினைகள் மாய்க்க எழும்
அந்த மனிதனுக்கே
அணுவேனும் உதவி செய்ய
எந்தன் உடல் மண்ணை
எருவாக ஆக்கிடுங்கள்

மனிதன் முற்றுப்புள்ளி மரணமென்று இவ் வரிகள் சொல்லி நின்கிறது. பாவலரின் பாக்களிலே இவ்வரிகள் என்னை மெய் சிலிர்க்க வைத்தது , இது உத்தமமான ஆசை. உன்னதமான ஆசை. இறந்த பிறகு உடலைப்பயிர்களுக்குப் பசியாறக் கொடுக்கும் படி உயில் எழுதிய உலகின் முதலாவதுமனிதர் நீங்கள்தான்!

நம்பிக்கை அது ஒன்றே பாவலரிடம் அவரின் கவிதையிடமம் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆத்ம திருப்தியாகும். என் வாழ்வின் நல்ல பக்கங்களுக்குக்காக எனக்குக் கிடைத்தஉயர்ந்த பரிசுமாகும்.என் மன வானின் கவியுலகின் கவிச்சக்கரவர்த்தி பாவலனாகவே இருக்க முடியுமென என் மனம் சொல்கிறது.

 M.A.M.M Fazeel.

Teacher

Zahira College Puttalam.

One Comment

  1. அன்புள்ள பஸில்,

    கண் அம்பு பட்டு உள புண் வலியில் பிறந்த பஸிலின் கவியில் ஆழமாய்
    புதைந்தது குரு பஸில் மட்டுமல்ல
    கூடவே ஆயிரம்மாயிரம் மாணவரில் நானும் ஒருவனாய்.

    கவிதனை குரு மீட்டும்போது முதல் காதல் நினைவில் இல்லை. புழுதி பறக்கும் வீதிகளும், கூடி கதையளந்த பள்ளி சந்தியும், உண்டு உறங்கிய நண்பர், நண்பியர் வீடுகளுமாய் முழு சம்பாந்துறையும் நிழலாடியது.

    அதை அப்படியே விட்டுவிட்டு குரு பஸீலின் ஆய்வை ரசிக்கையிலே அவர் கவியாய் மிளிர, கூடவே சட்டம் மாத்திரமா படிப்பேன் கவியும் கூட படைப்பேன் என வங்கத்திலிரு ந்து முஹம்மது கூற, உடலால் மலேசியாவில் அடைபட்டு, மனத்தால் புத்தளத்தில் சிறைபட்ட இப்லால் கவலையிலும் கவி பாட, நான் என்ன செல்லா காசா இதோ பார் என் கவி என்று பாத்திமா ஷானாஸ் பாட இத்தனை கவிஞ்சர் நம்மூரில் என புருவம் மேல் எழ,…நிச்சயம் ஒரு நாள் இவர்களை பார் போற்ற என் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)