இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை இம்முறை ஹிஜ்ரி 1433 ம் வருடத்தின் புத்தளம் நகருக்கான மூன்று இஜ்திமா தொடர்களை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக நடாத்தியது. இத் தொடரில் புத்தளம் நகர் முழுவதையும் தழுவியதாக பொது இறுதி இஜ்திமாவை “நாடும் நாமும் நலம் பெற” எனும் கருப்பொருளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே நடாத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆண்களுக்கான இஜ்திமா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15 .06 .2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகை முதல் இரவு 9 .30 மணி வரை முகியதீன் ஜும்ஆ மஸ்ஜிதிலும், பெண்களுக்கான இஜ்திமா 16.06 .2012 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை புத்தளம் பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் இஜ்திமா தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்தி வருமாறு.:
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமதுல்லஹி வபரகாதுஹு,இது எமது நாடு. நாம் பிறந்த மண். நமது உயிரின் வேர்கள் பதிந்த மண். நமது சுவனப் பாதையின் பயிர் நிலமும் இந்த மண்ணே தான்.
நாமும் சகோதர சமூகங்களும் வாழவும், வசிக்கவும் வல்லவன் ஏற்படுத்தித் தந்த பூமி இது. நமது எதிர்காலம் இந்த தேசமும் அதன் மக்களும் தான்.
இந்த மண்ணில் இனம், மதம், மொழி, நிற வேறுபாடுகள் களைந்த ஒரே தேசத்தின் மக்கள் நாம். ஒரே சுதந்திரத்துக்காக கருத்தொருமிக்கவர்கள் நாம்.
நம்மையும் அவர்களையும் பரஸ்பரம் புன்னகைக்கச் செய்த வல்லவனின் பாதையில் நாமும் அவர்களும் பயணிக்க வேண்டாமா? மூன்று தசாப்த கால கண்ணீர் அவலத்தை இந்த தேசம் சுமந்து நின்றது… இப்போது இழந்தவை, இடிந்தவை போக தெளிந்த நீரோடையை எதிபார்க்கும் தருணம் இது.
இடிந்து விழுந்தவை தூக்கி நிறுத்தப்பட வேண்டும். அவை கட்டடங்களும் பெரு மரங்களும் மட்டுமல்ல: கல்வி, பொருளாதாரம் மட்டுமல்ல: மனிதரும் மனிதருள் புதைந்திருக்கும் மனிதமும் தான். இந்த தேசமும் அதன் மக்களும் சுபீட்சத்துடன், செழிப்புடன் சிறந்து வாழ கலிமா சமுதாயமான நம்மீது விதித்துள்ள கடைமைகளை அறிய வேண்டாமா?
ருபை இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் வார்த்தையில் சொல்வதாயின்… மனிதர்கள் மனிதர்களை இபாதத் செய்வதிலிருந்து, அவர்களை ஒரே இறைவனின் பக்கம் அழைத்துச் செல்லும் பணி. மனிதனது சிந்தனை, வாழ்க்கை, கல்வி, பொருளாதாரம் என அனைத்தையும் சுரண்டும் கோட்பாடுகள், கொள்கைகளை விட்டு அவர்களை விடுவிக்கும் பணி நெருக்கடியான இவ்வுலக வாழ்க்கையை விட்டுசுவனத்து இன்பங்கள் நிறைந்த மறுமையின் பக்கம் இந்த மக்களை அழைத்துச் செல்லும் பணி ..
இதற்கான தயார்படுத்தளுக்காக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உங்களை அன்புடன் அழைக்கின்றது.

