இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை ஹிஜ்ரி 1433 ஆம் வருடத்திற்கான மூன்று இஜ்திமா தொடர்களை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மன்றங்கள் தழுவியதாக நடாத்தியது, அல்ஹம்துலில்லாஹ்.
இத் தொடரின் இறுதி இஜ்திமா புத்தளம் நகர் முழுவதையும் தழுவியதாக “நாடும் நாமும் நலம் பெற” எனும் கருப்பொருளில் ஆண்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 15.06.2012 அன்று மக்ரிப் தொழுகை முதல் இரவு 9.30 மணி வரை முகியதீன் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.
இவ் இஜ்திமாவில், “அடிமைத் தளைகளிலிருந்து விடுதலைப் பெற…” என்ற தலைப்பில் விஷேட உரையை, மாவனல்லை ஆயிஷா சித்தீகா கல்வி நிலையத்தின் விரிவுரையாளர் F.M.ஹுசைன் (நளீமி) அவர்கள் நிகழ்த்தினார்கள். இன்று மனிதன் அடிமைப்பட்டிருக்கும் சித்தாந்தங்கள், கொள்கைகள், பழக்கவழக்கங்கள், போன்ற அத்தனை விடயங்களும் மனிதனை அல்லாஹ்விடம் நெருங்குவதிளிருந்து அவனைத் தூரமாக்கும் வழிகள் என்றும், அவருக்காக, மற்றவர்களும் செய்கிறார்கள் தானே, உலக நடைமுறைக்கு தேவையாகி விட்டதே என்று மனிதன் தன்னை சரி கண்டு கொள்கின்ற விடயங்கள் எல்லாம் இன்று மனிதன் சிக்கிக் கொண்டு இருக்கின்ற அடிமைத்தளைகள் என்பதை சஹாபாக்களின் வாழ்வியல் உதாரணங்கள் மூலமாக தெளிவு படுத்தினார்கள். மேலும் இன்றைய முஸ்லிம்கள் தன் நலத்திற்கு ஏற்றவாறு இஸ்லாத்தை மாற்றுவதற்காக உலமாக்களிடம் பத்வா கேட்க போடுகின்ற குத்துக்கரணங்களையும், அன்றைய சஹாபாக்கள், இஸ்லாம் சொல்லி இருக்கிறது என்றால் எப்படி தன் நலத்தையும் துச்சமாக மதித்தார்கள் என்பதையும் தன் உரையில் சிறப்பாக ஒழுங்கு படுத்தி உரை நிகழ்த்தினார்.
இவ் இஜ்திமாவின் கருப்பொருள் உரை “நாடும் நாமும் நலம் பெற” எனும் தலைப்பில் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கலாசாலையின் விரிவுரையாளர் அஷ்ஷேய்க் M.H.H.M. உஸைர் (இஸ்லாஹி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அவர் தன்னுடைய உரையில், இலங்கையில் எமது முன்னோர்கள் போட்ட அடித்தளம்தான் இன்று முஸ்லிம் கிராமங்கள், முஸ்லிம் பாடசாலைகள், நாலாயிரத்திட்கும் அதிகமான பள்ளிவாசல்கள் என்று முஸ்லிம்களின் தனித்துவம் பேணப்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள். இதற்காக எமது முன்னோர்களுக்காக நாங்கள் பிரார்த்திக்க வேண்டும் என்று வேண்டி தனது உரையை ஆரம்பித்தார். இலங்கையின் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி, இறைமை என்பவற்றிற்கு முஸ்லிம்கள் எந்த அளவுக்கு பங்காற்றி இருக்கிறார்கள் என்பதை அரசியல் தலைவர்களினதும், மன்னர்களினதும் கூற்றுக்களை மேற்கோள் காட்டி தெளிவுபடுத்தினார்.
இன்றைய முஸ்லிம்கள் எமது முன்னோர்கள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதையும், பண்பாடு தேசப்பற்று, ஒழுங்கு என்பவை அவற்றை வெளிப்படுத்தும் ஊடகங்களாகவும் அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இவ் இஜ்திமா இரவு 9.30 மணிக்கு நிறைவு பெற்றது. இதனை அல்லாஹ் பொருந்திக்கொண்டு இஜ்திமாவின் நோக்கம் சமூகத்தில் பிரதிபலிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக..!





