4. 45 இற்கு செல் போனில் வைத்த அலாரம் விடாப்பிடியாக அழுதது. இரவு வேலைகளை முடித்து தூங்க நேரமாகி விட்டதால் கண்கள் மலர மறுத்தன. கை, துலாவி போனை தேடிப்பிடித்தது. கண்களை அரைவாசிக்கு திறந்து snooze ஐ அழுத்தினேன். ம்ஹும் இது சரிவராது எழும்பணும் கட்டளையிட்ட மனதை அலுப்பு அரவணைத்தது. 5 நிமிடம் இவ்வளவு விரைவாக ஓட முடியுமா? ஓடியிருந்தது. மீண்டும் snooze. என்ன இன்னும் அலறலைக்காணோம் என போனை பார்த்தால் 5. 54 அல்லாஹ்வே பதறியடித்துக்கொண்டு எழுந்தேன். பக்கத்தில் பார்த்தேன். அவரைக் காணோம். பள்ளிக்கு போய்விட்டார் போல.
பக்கத்து ரூமில் தூங்கிய மகனை, மகன் சொறிடா லேட்டாகிவிட்டது. பட்டென எழுந்து தொழுதிட்டு ரெடியாகுங்க என எழுப்பிவிட்டு சமையலறைக்குள் ஓடினேன். ஞாயிற்று கிழமையன்றே முழு கிழமைக்கும் தேவையான சீருடைகளை அயன் பண்ணி வைத்துவிடுவது இன்று கை கொடுத்தது. கேத்தலில் தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தேன். தொழுததும் மறுபடி சமையலறையில் புகுந்தேன். தேநீரை ஊற்றும் போது போத்தலில் அடியிலிருந்த சீனி பல்லைக்காட்டி பயமுறுத்தியது!
இது காணாது…
நேற்று சீனி வாங்க மறந்தது மனதை அழுத்தியது.
நேற்று இரவு ஊறவைத்த கடலையை பிரஷர் குக்கரில் போட்டு அடுப்பில் வைத்துவிட்டு மகனுக்கு மட்டும் இருந்த சீனியில் டீயை ஊற்றினேன். கடலை அவியும் முன்னே சட்டென இன்னொரு சட்டியில் தாளித்து வைத்தேன். மகன்,டீ எடுக்க வாரீங்களா என குரல் கொடுக்க மகன் அமைதியாய் வந்து டீயை எடுத்துக்கொண்டு அங்கிருந்த மேசையில் உட்கார்ந்து டீயை குடிக்க தொடங்கினான் உம்மா, தாளிக்க தேவையில்ல, லேட்டானா சும்மா தாங்க; எப்போதும் அனுசரித்து போகும் மகனின் குரல் மனதை வருடிவிட்டது. இல்லப்பா இன்னும் 2 நிமிடத்தில் ரெடியாகிடும். நான் ஏதும் செய்யனுமாம்மா மீண்டும் மகனின் குரல் நீ தனியே இல்லை என சொல்லாமல் சொன்னது. நீங்க ரெடியாகிட்டீங்களா? என கடலையை வடித்தவாறு விசாரித்தேன். ம்ம் என தலையசைக்க மகன் எனக்கு சீனி அரைக்கிலோ முன் கடையில் வாங்கிவாறீங்களா நான் உங்கள் சாப்பாட்டை எடுத்து வைக்கின்றேன்.
சரிம்மா, இன்னும் டைமிருக்கு. என்றவாறு காசியை வாங்கிச்சென்றான்.
அவனது சாப்பாட்டை அவனது லஞ்ச் பெட்டியில் வைத்து அவனது பேக்கில் வைத்து மூடும் போது மகன் சீனியோடு வந்திருந்தான். சரிம்மா நான் போயிட்டு வாறன். அஸ்ஸலாமு அலைக்கும். நான் பதிலைக்கூறி அவனை வழியனுப்பி வைத்தேன்.
அடுத்த சுற்று ஆரம்பமானது. கையில் பேப்பருடன் வந்தவர் முன்னால் கதிரையில் அமர்ந்து வாசிக்க தொடங்கியிருந்தார். என்னப்பா விசேடம் என்றதோடு சமயலறைக்கு சென்று டீயுடன் வந்தேன். அதே அரசியல் என்றவர் டீயை பருகத்தொடங்கினார். கப்பை வாங்கி மேசையில் வைக்கும் போதுதான் அந்த நீல பைல் கண்ணில் பட்டது. அல்லாஹ், இரவு முழுதுமிருந்து மகன் செய்த ஒப்படையல்லவா இது. மறந்து வைத்துவிட்டு போயிட்டான் போல. கணவனை பார்த்தேன், மீண்டும் பேப்பரில் ஆழ்ந்திருந்தார். இங்கப்பா, செகியுரிட்டிடம் இதனைக் கொடுத்தால் பிள்ளை இண்டர்வல் டைம் வாங்கிக்கொள்ளுமல்லவா? நிதானமாக கேட்டேன்.
சும்மா விடுங்கள் நாலு தடவை அடிவாங்கினால் தான் எல்லாம் ஞாபகம் வரும். வழமையான பல்லவியில் கூறிவிட்டு அவரது வாசிப்பைத் தொடர்ந்தார்.
மனம் கேட்கவில்லை. அல்லாடியது. பாவமே, தடுமாறிவிடுவானே, மனம் பதைப்பதைத்தது. நேரம் எதனையும் பற்றி கவலைப்படாது ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் இது பற்றி கதைக்க மனம் இடம் கொடுக்கவில்லை. ஒரு இனிய காலைப்பொழுதை வீணாக்க பயமாக இருந்தது. ஆனாலும் அவருடன் கோபமாக இருந்தது. ஒன்றையும் காட்டாது எனது வேலையை தொடர்ந்தேன். என் மனநிலை அறிந்த பாத்திரங்கள் எல்லாம் எனக்காக குரல் கொடுத்தன. பாத்திரங்களை இங்கும் அங்கும் நகர்த்தும் போது டங் என ஒலி எழுப்பின.
அவருக்கு சாப்பாட்டை மேசையில் வைத்துவிட்டு சாப்பிடுங்க, நான் குளித்துவிட்டு புறப்படணும் என்றவாறு உடுப்பை கையில் எடுக்க போன் சிணுங்கியது. மகனாகத்தான் இருக்குமென்ற எண்ணத்துடன் பட்டென தூக்கினேன். அவன்தான். ஸலாமுடன் தொடங்கினான். பதிலை உரைத்துவிட்டு, என்ன மறந்தீங்கள்? என்றேன். கோபம் வரவில்லை. ஆபீஸ் போகும்போது அதனை செக்யூரிட்டி இடம் கொடுக்க முடியுமாம்மா நான் வாங்கிகொள்கிறேன் என்றான் . சரிப்பா என்றுவிட்டு வைத்தேன். அவரைப் பார்க்கவில்லை. மனம் குறுகுறுத்தது. கணவர் சொல்கேட்டு நடக்க வேண்டிய கட்டாயத்தை தெரிந்திருந்து மீறுவது கஷ்டமாக இருந்தது. அவர் எதவுமே நடவாதது போல நிதானமாக சாப்பிடுவதைக்காண இன்னும் ஆத்திரம் வந்தது. ஒரு 10 நிமிடம். ஏன் முடியாது போகுது? நானும்தானே ஒரு நிமிடம் ஓய்வில்லாமல் ஓடுகிறேன். பச்சாதாபம் கண்ணை ஆட்சிசெய்ய முயற்சிக்க, தலையை உலுக்கிக்கொண்டு குளியலறையில் புகுந்தேன்.
குளித்துவிட்டு வர கொஞ்சம் தெம்பு வந்திருந்தது. வேண்டாமென சொல்லமாட்டார் என்பது உறுதிப்பட்டது போல இருந்தது.
உடுத்தி முடிந்து, எனது சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு அவரைத் தேடினேன். காணோம். நீல பைல் மேசையில் இல்லை. வெளியே வந்தேன், அவர் மோட்டார் பைக்கில் தயாராக இருந்தார். முன் பக்கமாக நீல பைல் ஷாப்பிங் பேக்கில் தொங்கிக்கொண்டு என்னைப்பார்த்து சிரித்தது. அவரைப் பார்த்தேன். வாங்க, நானும் போகணும் முறைத்தார். கேட்டை மூடிவிட்டு அவரின் பின்னால் ஓடிச்சென்று அமர்ந்தேன். அவரின் முதுகில் சாய்ந்து உங்களுக்கு லேட் ஆகாதாப்பா மெல்ல முணுமுணுத்தேன்.
அதே தொனியில் ஐ கேன் மனேஜ் என உறுமினார் என் அன்புக் கணவர்.

