(எம்.எச்.எம்.நதீர்)
புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் வழிகாட்டலில் புத்தளம் வடக்கு கோட்டம், தமக்கு உரித்தான பன்னிரண்டு பாடசாலைகளின் ஆரம்பக் கல்வி தர மேம்பாடு கருதி: மாணாக்கருக்கு செயன்முறை மூலம் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கும் விதத்தில் சுற்றாடல் பாசறை 2012 செயற்றிட்டத்தை புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில் இன்று (2012 .06 .18 ) நடாத்தியது
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாய் புத்தளம் நகர சபைத் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புத்தளம் தொகுதி அமைப்பாளருமான அல்ஹாஜ் கெளரவ கே. ஏ பாயிஸ் அவர்களும், கெளரவ அதிதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தா மங்கள சுபசிங்கஹ , கோட்ட கல்விப் பணிப்பாளர் எம். மகரூப் , ஆரம்பக் கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி கொஸ்தா ஆகியோரும், பாட இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலதரப்பினரும் பங்கேற்று இந் நிகழ்வை சிறப்பித்தனர்.
தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் “நீர்” எனும் தலைப்பிலும், மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலயம் ” நாம் இலங்கையர் ” எனும் தலைப்பிலும், வேப்பமடு முஸ்லிம் வித்தியாலயம் – “எமது உணவு”, இந்து தமிழ் மகா வித்தியாலயம் – “நிலமும் வானும்”, மணல்தீவு தமிழ் கத்தோலிக்க வித்தியாலயம் – மரம், செடி, கொடிகள், ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை” போக்குவரத்து”, செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்பப் பாடசாலை – “வேலைகளை இலகு படுத்தல்” , எழுவன்குளம் முஸ்லிம் வித்தியாலயம் -” மனிதர்களும் தவல்களும்” , கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் -” எமது பண்டைய தகவல்கள்”, வெட்டாலை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம் “எம்மைச் சூழவுள்ள பிராணிகள்” சென்மேரிஸ் தமிழ் வித்தியாலயம் – “பாதுகாப்பும் கரிசனையும்” வட்டக்கண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயம் – “நாமும் சந்தையும் ” எனும் தலைப்புகளில் தமது காட்சிக் கூடங்களை அமைத்திருந்தனர்.
சுற்றாடல் பாசறை கண்காட்சியை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் 6 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 4,5 இல் கல்விபயிலும் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நாளை மேலும் 6 பாடசாலைகள் இதனை பார்வையிடவுள்ளனர். மாணாக்கருக்கு ஏற்கனவே குறித்த பாடபரப்பில் தயாரிக்கப்பட்ட வினா கொத்துகள் அடங்கிய கையேடுகளும் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும். மாணாக்கர் காட்சிக் கூடங்களில் குறித்த வினாக்களுக்கான விடைகளை தேடி; விடையளிக்க வழிப்படுத்தப்பட்டமை இதன் மற்றுமோர் சிறப்பம்சமாகும்.
சுருங்கக் கூறின் மாணாக்கருக்கு மிகுந்த பயனுள்ள பாசறையாக இது திகழ்கிறது என துணிந்து கூறலாம்.



















June 20, 2012 at 11:49 am
சிறந்ததொரு முன்மாதிரி. ஒரு சந்தர்ப்பத்தை தவறவிட்ட வலி. இவை வார இறுதியில் இடம் பெற்றால் மற்ற பாடசாலைகளிலும் படிக்கும் மாணவர்கள் பயன் பெறலாமே என்ற நப்பாசை.