மஸ்ஜிதுகள் சமூக பங்களிப்பை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதற்கு மஸ்ஜிதுந் நபவியை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.
ரஸூல் (ஸல்) அவர்களுக்கு ஹிஜ்ரத்தின் பின்னர்தான் மஸ்ஜித் அமைக்கும் வாய்ப்பு கிட்டியது. நபிகளார் (ஸல்) ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு செல்லும் நிகழ்வின் போது முதன் முதலில் ‘குபா” மஸ்ஜிதைக் கட்டினார்கள். அங்கு முதல் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றினார்கள். பள்ளிவாசல் முஸ்லிம்களின் வாழ்வின் இதயம் போன்றதாகும், நபிகளார் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் இதனை மிகத்துல்லியமாக நமக்கு உணர்த்துகின்றன.
மதீனாவை ரஸூல் (ஸல்) அவர்கள் அடைந்தபின் ரஸூல் (ஸல்) அவர்களும் அவர்களோடு ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களும், மதீனா வாழ் அன்சாரிகளும் இணைந்து சொந்த இருப்பிடத்தை அமைக்கு முன் மஸ்ஜிதுந் நபவியைக் கட்ட அடித்தளமிட்டார்கள். அந்த மஸ்ஜித்தை தனிமனித வாழ்விலும் கூட்டமைப்பிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மத்திய நிலையமாகவும் ஆக்கினார்கள். அன்று ஸஹாபா பெருமக்களின் உள்ளங்கள் வணக்கவழிபாடுகளுக்கு மட்டுமன்றி தங்களின் வாழ்வியல் தேவைகளுக்காகவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் மஸ்ஜிதோடு பிண்ணி பிணைக்கப்பட்டிருந்தன. ரஸூல் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதை ஒரு புரச்சிகரமான சமூக நிறுவனமாக மாற்றி இருந்தார்கள் மஸ்ஜித்துந் நபவியின் செயற்பாடுகள் இதயத்துடிப்பு போன்று இயங்கிக்கொண்டிருந்தன.
மஸ்ஜித்துந் நபவி முஸ்லிம் சமூதாயத்தினருக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும் ரஸூல் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிக்கான செயல்வடிவமாகவும் காட்சி தருகின்றது. இதை அளவு கோளாகக் கொண்டு நாம் மஸ்ஜித்களை அமைத்துக் கொள்வதற்கு பதிலாக சில போது அவற்றிற்கு செயற்கையான புனிதத்துவம் கொடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல்; முழு மனித சமூதாயத்திற்கும் அதன் உண்மையான பயன்கள் கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதன் சுத்தம், அதன் வெளிப்புறத் தோற்றம், அழகிய வடிவமைப்பு போன்றவற்றுக்கு அதிக கவனம் கொடுத்து சிரத்தை எடுத்துக் கொள்கின்றோம். தேவைதான். ஆனால் ரஸூல் (ஸல்) அவர்களின் மதீனத்து மஸ்ஜிதைப் போல செயல்பட வைப்பதற்கும், மக்கள் சேவைக்கான பயனுள்ள அமைப்புக்களை ஆக்குவதற்கும் மிகக் குறைந்த அளவு கவனமே செலுத்தப்படுகின்றது.
மஸ்ஜித்துந் நபவியில் இடம் பெற்ற செயல்பாடுகளை பின்வருமாறு பட்டியலிட்டு நோக்கும் அதேவேளை மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றியும் அமைதியாக ஆராய வேண்டும்.
கல்விப் பணி:- மஸ்ஜித்துந் நபவியில் ஸூஃப்பா எனும் பெயரில் ஒரு பகுதி இருந்தது. அங்கு கல்வி கற்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. ஸூஃப்பா என்பதற்கு “திண்ணை” என்று பொருள் அங்கு பகலில் கற்பிக்கும் பணி நடைபெற்றது. இரவில் வீடில்லாத ஏழை சகாபாக்கள் தூங்கும் இடமாகவும் அமைந்தது. ரஸூல் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வஹியை கற்றுக் கொள்வதும், விளங்கிக் கொள்வதுடன், அதனை மனனமிடும் பயற்சிகளும் அங்கு இடம்பெற்றது. பலதரப்பட்ட மக்களுக்குத் தேவைக்கேற்ப பல்வேறு கல்வி பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தன. அறவே எழுத வாசிக்கத் தெரியாத மக்களுக்கு அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே மதீனா நகர மக்கள் அங்கு வரத் தொடங்கினார்கள். ரஸூல் (ஸல்) அவர்களின் போதனைகளை உள்வாங்கிக் கொள்வதில் அபரிமித ஆர்வம் காட்டினார்கள். மதினா வாசிகளிடத்தில் இயல்பாகவே காணப்படும் வாரிவழங்கும் வள்ளல் தன்மைக் கேற்ப பேரீத்தம் பழங்களையும் ஏனைய உணவுகளையும் திண்ணைத் தோழர்களுக்கு அன்பளிப்பாக அளித்து வந்தனர். திண்ணைத் தோழர்களுக்கு சில நேரங்களில் ரஸூல் (ஸல்) அவர்களின் இல்லத்திலிருந்தும் உணவு ஏற்பாடு செய்து தரப்பட்டது சுருக்கமாகச் சொல்வதானல் அந்த ஸூஃப்பா மஜ்ஜித்துந் நபவியின் திண்ணை ரஸூல் (ஸல்) அமைத்த விடுதியுடன் கூடிய முதல் பல்கலைகழகம் என்று சொல்வதே சாலப் பொருந்தும்.
அங்கிருந்துதான் அல்லாஹ்வின் தீனை கற்றுத்தேர்ந்த ரஸூல் (ஸல்) அவர்களின் பண்புப் பயிற்சிகளில் ஊறித்திளைத்த, உறுதியும் உத்வேகமும் கொண்ட மாபெரும் ஸஹாபா அணியினர் தீனை தோளில் சுமந்த மாமனிதர்களாக உருவானார்கள் என்பது வரலாறு சமர்ப்பிக்கும் மறுக்கவொண்ணா செய்தியாகும்.
இன்று, எமது மஜ்ஜிதுகளில் ஆங்காங்கே இடம் பெறும் கல்விப் பயிற்சிதான் என்ன? தஃலீம் என்ற அமைப்பில் ஸஹாபாக்கள் வரலாறு அல்லது ஹதீஸ் படிக்கப்பட்டுகிறது. குர்ஆனை விளக்கிவைக்கும் மஜ்லிஸ்கள் இடம் பெறுகின்றன. ஹதீஸ் விளக்க மஜ்லிஸ்கள் இடம் பெறுகின்றன. பிக்ஹு வகுப்புகள், தஜ்வீத் வகுப்புகள், பயான்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் கலந்து கொள்வோர் வெகு சொற்பமாகவே உள்ளனர். சில வேளைகளில் அறிவு, ஆன்மீகப்பயிற்சி சார் முகாம்கள் நடாத்தப்படுகின்றன. எமது பெரிய பள்ளிவாசலில் அமுலில் இருக்கும் கல்விச் சகாய நிதி மூலம் பலரும் ஓரளவு பயனடைகின்றனர். இந் நிதியம் மேலும் வளப்படுத்தப்பட வேண்டும். இவைகள் மட்டும் மஸ்ஜித் வழங்கக்கூடிய சமூகப் பணிகளுக்கு போதுமானவைகள் தானா? என்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
இன்று கல்வி பெறுவதற்கு அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே சமூகத்தில் பல வறிய மாணவர்களுக்கு வீட்டில் இருந்து கற்றக் கூடிய வசதிகள் மிகக் குறைவு. பள்ளிவாசல்களில் மண்டபங்களை அல்லது அறைகளை மாணவர்கள் நின்று கற்பதற்காக அமைத்துக் கொடுக்கலாம். பள்ளிவாசலுக்கு வருமானம் கிடைப்பதற்காக கடைகளை, பொதியறைகளை அமைத்துக் கொடுக்கிறோம். மேற்குறிப்பிட்டது போன்ற சமூக சேவைப் பணிகளை நினைத்தும் பார்ப்பதில்லை. அத்ததைய ஏற்பாடுகள் மாணவர்கள் ஒர் அமைதியான இடத்தில் அமர்ந்து கற்பதற்கும் பள்ளிவாசல் சூழலில் ஒழுக்கப்பண்பாடுள்ளவர்களாக வளர்வதற்கும் வழிவகுக்கும். மஸ்ஜிதைச் சுற்றி தூய்மையான சூழல் உருவாகும். கல்வியைத் தவிர பண்புப்பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புக்களும் பிரகாசமாகும். பள்ளிவாசல் நிருவாகத்தால் அவ்வாறு கற்க வரும் மாணவர்களை கண்காணிக்கவும், வழிகாட்டல் வழங்குவதற்கும் பொருத்தமான ஒய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம். இது மஸ்ஜித் வழங்கும் பயனுள்ள ஒரு கல்விப்பணியாகவும், சமூகப்பணியாகவும், சமூகப் பெறுமானம் பெறும் நிகழ்வாக அமையும். அதனைச் செய்வதற்கு எந்த எந்த மஸ்ஜிதுகளில் இடவசதிகள் உள்ளனவோ அல்லது அவ்வாறன ஒரு இடத்தை அமைக்கும் வாய்புள்ளதோ அங்கெல்லாம் கல்வியை பெறுவதற்கான ஒரு சாலையை அமைப்பது பல்வேறு மஹல்லாக்களில் வாழும் ஏழைமாணவர்கள் இடவசதியற்றவர்கள் தங்கி கற்பதற்கு வாய்ப்பாகவும் வசதியாகவும் அமையும். கல்விக்கான ஏற்பாட்டை செய்வதற்கு மஸ்ஜித் நிருவாகங்கள் பெரிய சிரமம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஊரிலுள்ள கல்வி அமைப்புகள் கல்வி நிறுவனங்களிடம் அதற்கான ஏற்பாட்டை செய்யும் பொறுப்பை சமர்ப்பிக்கலாம். இதனால் மாணவர்கள் பள்ளிவாசல் சூழலில் குறிப்பாக இரவில் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம் இது பள்ளிவாசலோடு சமூகத்தை நன்கு தொடர்புபடுத்தக்கூடிய நடவடிக்கையும் கூட. யாரும் பணம் உழைக்கும் நடவடிக்கையாக இது அமையக் கூடாது சமூக நலன் நோக்கி செய்யப்படும் ஒரு சேவையாக இது அமைதல் சாலப் பொருந்தும்.
“பைத்துஸ் ஸகாத்தும் பைத்துல் மாலும்” வறுமையின் கொடுமைக்கு தீர்வாவது எப்படி? என்பதை இனி வரும் பக்கங்களில் பார்ப்போம் – இன்ஷா அல்லாஹ்!


August 30, 2012 at 6:56 pm
மாஷா அல்லா, நல்ல ஓர் திட்டம்.
இதற்கு ஒரு குழுவை அமைத்து ஆரம்பிக்கலாம்.