(ஹிஷாம் ஹுசைன்)
புத்தளம் வடக்கு கல்வி கோட்ட அலுவலகத்தினால் நடத்தப்பட்ட ‘சுற்றாடல் பாசறை’ கண்காட்சி மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அது போல பெற்றோர்களும் அவசியம் பார்வையிட வேண்டிய ஒன்றாகவே காணப்பட்டது. பொதுவாக ஒரு கண்காட்சியின் ‘பார்ப்பதற்கு’ பலவும் இருக்கும். எனினும் இந்த கண்காட்சியில் ‘படிப்பதற்கு’ நிறையவே இருந்தது.
புத்தளம் வடக்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு பாடசாலையும் காட்சிப்படுத்தி கற்பித்த விடயங்களை தனித்தனியாகக் கூறவேண்டிய அளவிற்கு இக் கண்காட்சி சிறப்பாக அமைந்திருந்தது.
வேப்பமடு அர்-ரஹ்மா மு.ம.வி.: உணவும் போஷாக்கும் பற்றியதாக அமைந்திருந்தது. குறிப்பாக சமையலுக்கு உணவுகளை தயார்படுத்தும் முறையினை பகுதி பகுதியாக விளக்கிய விதம், மனைவியர் – தாய்மார்கள் மட்டுமல்ல தந்தையரும் அவசியம் அறிய வேண்டிய விடயங்கள். பாரிய செலவுகளின்றி எளிமையான முறையில் நிறைவான போஷாக்கு உணவை பெற முடியுமென்பதை அருமையாக முன்வைத்திருந்தனர்.
தில்லையடி மு.ம.வி.: புத்தளத்தில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் காணப்படும் சிரமங்களுக்கு சிறந்த பதில் இவர்களிடமிருந்தது. பணத்தை செலவிட்டு ‘வாட்டர் பில்டர்’ கொள்வனவு செய்யும் வசதி வாய்ப்பற்றவர்களுக்கு தண்ணீரை வடிகட்டும் புதிய உத்திகளை அறிமுகம் செய்திருந்தனர்.
மணல்குன்று மு.ம.வி.: இலங்கை நமது தாயகம். நாம் அதன் பிரஜைகள். இந் நாட்டில் வாழும் நான்கு சமயத்தைச் சேர்ந்த மக்களின் வணக்கத்தளங்கள், சமய நூல்கள் மற்றும் மத குருமார்களாக வேடம் தரித்த மாணவர்கள். எமது நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த சமய, அரசியல், சமூக தலைவர்கள் பற்றிய விவரங்கள். ‘நானும் இந்த மண்ணின் மைந்தன்’ என்ற பெருமிதத்தை காண்பவர் உள்ளங்களில் பதித்தனர்.
இந்து த.ம.வி.: கோல் மண்டபத்துக்குள் நுழைந்து விட்டோமோ என்ற பிரம்மை. நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பால் வீதியை, உடுத் தொகுதிகளை, வின் கோல்களை மின் விளக்கு உதவியுடன் பார்ப்பவரை வியப்பிலாழ்த்தும் விதத்தில் அமைத்திருந்தனர். வின்னைப் போல வலி மண்டலம், வித்தியாசமான புவி அமைப்புக்கள் என பிரபஞ்சத்தை வெவ்வேறு இரண்டு அறைக்குள் அடக்கியிருந்தனர். நில நடுக்கம் ஏற்படும் விதத்தை சிறிய அளவிலாயினும் செயல்முறையில் காட்டிய போது, ஒரு முறை நடுங்கிப்போனேன்.
மணல்தீவு ரோ.க.வி.: நாம் மனிதர்களுடன் உறவாடுவதை விட மரங்களுடன் உறவாடுவது அதிகம். ஆனால் எத்தனை மரச் செடிகளின் பெயர்கள், பரம்பல் முறை, இலை வடிவங்களை அறிந்து வைத்துள்ளோம்? நமது உறவினர் ஒருவரின் பெயர் தெரியாது என்றால் எவரும் நம்புவார்களா? மரங்கள் விடயத்தில் நம்மில் அநேகர் அவ்வாறு தான் இருக்கின்றோமோ என்ற வினாவை எமக்குள்ளேயே எழுப்பும் விதமாக மரஞ் செடிகளை மனங்களில் பயிரிட்டனர்.
இலவங்குளம் மு.அ.வி.: இன்றை உலகத்தின் அடிப்படை தேவையாக மாறிவிட்டதொன்று ‘தகவல் பரிவர்த்தணை’. தகவல்களை பெறவும் வழங்கவும் வரலாறு நெடுகிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை காட்சிப்படுத்தியிருந்தனர். அதில் வீதி சமிஞ்சை மற்றும் குறியீடுகளையும் இணைத்திருந்தனர். இன்றைய நவீன தகவல் பரிமாற்றத்தின் விரைவும் இலகுவும் கால வரலாற்றுடன் நோக்கும் போது தெளிவாகியது.
செய்னப் மு.பெ.ஆ.பா.: அன்றாடம் உபயோகிக்கும் உபகரணங்கள், கையியந்திரங்கள், வேலைகளை இலகுபடுத்தும் கருவிகளை அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு பொருளுக்கும் பேச்சு வழக்கில் ஒரு சொல் பயன்படுத்தப்படும். எனினும் அதன் சரியான தமிழ் சொல் வேறொண்றாக இருக்கும். இக் கருவிகளில் பலவற்றுக்கான சரியான தமிழ் பெயரை இங்கு தான் கற்றுக்கொண்டேன்.
சாஹிறா ஆ.பா.: பெற்றோர்களுக்கான வீதி ஒழுங்கு வகுப்புக்கள் ஏற்பாடு செய்தால் இந்த ஆரம்பப் பிரிவு மாணவர்களை ஆசிரியராக நியமிக்கலாம். வீதி சமிஞ்சைகள், பாதசாரி கடவை, வீதிப் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி என வீதியுடன் தொடர்புபடுபவற்றை விடயங்களை தத்ரூபமாக செயல்முறையில் காட்சிபடுத்தியதை பார்வையிட்ட எவரும், முதலில் சொன்ன முடிவை ஏற்றுக்கொள்வர்.
வட்டக்கண்டல் மு.ம.வி.: இலாபகரமான பாடசாலை இதுதான். அவர்கள் நடத்தியது சந்தை. சராசரி சந்தையில் காணப்படும் அனைத்து விதமான பொருட்களும் குவிந்திருந்தன. மக்களை கவரும் விதமாக அந்த சின்ன சிறிய வியாபாரிகள் கூவிய ஓசை இன்னும் காதுகளில் இனிமையாக ஒலிக்கின்றது.
புனித மரியாள் த.ம.வி.: பாதுகாப்பு எந்தளவு முக்கியமோ அதனை விட கரிசனை 1000 மடங்கு முக்கியமானது என்பதை உறுதிபடுத்தினர். டெங்கு ஒழிப்பு கால முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. சாதாரண எளிய வழிமுறைகளைக் கையாள்வதின் மூலம் டெங்கு அபாயத்தை வெற்றிகொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஊட்டினர்.
அஸன்குத்தூஸ் மு.வி.: தவறுதலாக மிருகக் காட்சிசாலைக்குள் வந்து விட்டோமோ? என்ற சந்தேகம் எழுந்தது. நம்மோடு இரண்டறக் கலந்து வாழும் பிராணிகளை உயிருடன் காட்சிப்படுத்தியிருந்தனர். மிருகங்களின் இயல்பான செயற்பாடுகள், அவற்றின் பயன்பாடுகள், உற்பத்திப் பொருட்கள் என விரிந்து சென்றது விளக்கவுரை. காட்சியறையை விட்டு வெளியேறும் போது உயிரிணங்கள் மீதிருந்த அன்பு அதிகரித்திருப்பதாக உணர்ந்தேன்.
கரைத்தீவு மு.ம.வி.: வரகவி சேகு அலாவுதீன் அவர்களின் புகைப்படம். 2 ஆம் உலகப் போரின் போது சாரதியாக கடமையாற்றிய ஒருவரின் புகைப்படம். இலங்கையின் அரசர்களாக வேடம் தரித்த மாணவர்கள். இவர்களுடன் பண்டைய உபயோக பொருட்கள். அதில் இருந்த ‘ஓதுற பலகை’ நிச்சயம் மூத்த தலைமுறையினரை தமது பால்ய பராயத்திற்கு அழைத்து செல்லும். புத்தளத்தின் வரலாறு தோன்றிய நிலமல்லவா… அதன் சிறப்பினை கண்முன் கொண்டு வந்திருந்தனர்.
கற்றலறைகளில் மாணவர்களின் திறன்களைக் கண்டு பயன்பெறுவோரின் காதுகளுக்கு விருந்தாக சாஹிறா வரவேற்பு மாடத்தின் கீழ் ஒலிவாங்கியில் மாணவர்களின் கலைசார் திறன்கள். எத்துனை ஆற்றல்கள் ! எவ்வளவு திறன்கள் ! புலகாங்கிதமும் பெருமிதமும் மனதின் ஒவ்வொரு அறையையும் நிறைத்து விடுகின்றது.
இக் கண்காட்சியை வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் புத்தளம் வடக்கு கல்வி கோட்ட பணிமனைக்கு இரண்டு விடயங்களை இச் சந்தர்ப்பத்தில் வினயமாக முன்மொழிகின்றேன்.
1. பெற்றோருக்கும் இக் கண்காட்சி காட்டப்பட வேண்டும்.
2. அடுத்தடுத்த வருடங்களில் புத்தளம் நகருக்கு வெளியே அமைந்துள்ள பாடசாலைகளிலும் இக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.
மேலும், இக் கண்காட்சியின் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு பொருளிலும் காணப்பட்ட மிக முக்கியமாக விடயம் ஒன்றிருந்தது. ஒரு பாடசாலையின் அபிவிருத்தியும் கல்வி வெற்றியும் அதன் ஆசிரியர் + பெற்றார் + மாணவர் என்று முக்கூட்டின் அர்ப்பணத்தின் மீது தங்கியுள்ளது என்ற சர்வ உண்மையாகும்.













June 22, 2012 at 11:47 am
நல்லதொரு விளக்கம். பகிர்தலுக்கு நன்றி. காண கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தைக் குறைத்துள்ளது. அவசரம், எழுத்துக்களில் உங்களுக்குள்ள வழமையான கவனத்தை சிதறடித்துள்ளது. நேரமின்மை, உங்கள் திறமையை சூறையாட இடம் கொடுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். (விண், கோள், வளி..)