வெள்ளிக்கிழமை ஜும்மாவின் பின்னர் குடும்பத்தோடு இருந்து பகலுணவை அருந்துவதே இன்பம். அதை விடவும் குடும்பமாக இருந்து அளவளாவுதல் பேரின்பம். மனைவி, மக்கள் மற்றும் உம்மா என்னைச்சுற்றி அமர்திருந்தனர். சின்னவனது குறும்புகளை மூத்தவள் பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள். நேற்று வாப்பா, பெரிய தம்பிட்ட அவ்வன்னாவுக்கு விசிறி போட்டால் என்ன எழுத்துன்னு சின்ன தம்பி கேட்டான். பெரிய தம்பி, ஆனாவிற்கு விசிறி வருமா, ஆவன்னாவிற்கு விசிறி வருமா என விசாரித்துக் கொண்டிருந்தான். சின்னவன் அதற்கெல்லாம் வராது ஆனா அவ்வன்னாவிற்கு விசிறி இருந்ததை நான் கண்டேனே என்றான், பெரியவர் கேட்கவில்லை. சின்னவனுக்கு கோபமும் வந்திடுச்சு. பிறகு நான்தான் சின்ன தம்பிட்ட நீங்க கண்டத பெரியவருக்கு எழுதிக்காட்டுங்க அப்பத்தான் அவருக்கு விளங்கும் என சொன்னேன். சின்னவன் எழுதிக்காட்டவும் தான் பெரியவர் இது “ஒளி” இல்லையா என கத்தினான். ஒரு மாதிரி இந்த மர மண்டைக்கு விளங்கிடுச்சு என்று சிரித்தாள். வீடு சிரிப்பலையால் நிறைந்தது. சின்னவன் முகம் நிறைய புன்னகை பூககளுடன் பெருமையாக பார்த்தான். நான் பெருமையாக எனது மூத்தவளை நோக்கினேன். அவளது அறிவு ஒரு விசேடம். பலமுறை என்னை திக்குமுக்காட வைத்துள்ளாள்.
சின்னவன் என்னைப்போல நல்ல கருப்பு. மற்ற இருவரும் தாயின் வெளுப்புடன் இருந்தனர். சின்னவனுக்கு தான் கருப்பென சரியான கவலை. சில வாரங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது, வெளியே முன் வீட்டு சிறுவனுடன் விளையாடப்போன சின்னவன் போன வேகத்தில் திரும்பி வந்தான். நான் முன்னாலிருந்த ஆபீஸ் ரூமிலிருந்து அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முன்னால் பூ மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த மகள் என்ன தம்பி அதற்கிடையில் விளையாடி முடிந்ததா என நான் அவர்களை அவதானித்துக்கொண்டு இருந்தது அவர்களுக்கு தெரியாது. சின்னவன் அந்த கேள்விக்கு பதில் கூறாது, ராத்தா நான் என்ன கலர்? என அழும் குரலில் கேட்டான். அவளுக்கு விளங்கியிருக்கணும். வாளியை கீழே வைத்துவிட்டு சின்னவன் கிட்டே வந்தாள். சின்னவனை கிட்டே இழுத்தவள் பக்கத்திலிருந்த கட்டையில் அமர்த்தி நீங்க வடிவான கலர் என்றாள். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. என்னைக் கூட யாரும் அப்படி தேற்றியது இல்லை. நான் கூர்ந்து கவனித்தேன். வடிவான கலரா நம்ப முடியாது சின்னவன் கேட்டான். ஓம். வடிவான கலர் உறுதியான குரலில் கூறினாள். சின்னவன் சந்தேகத்தோடு உங்கட கலர் என்ன என கேட்க, ம் எனக்கு கலரில்லை. அல்லாஹ் எல்லா கலரையும் உங்களுக்கு தந்திட்டான் என சிரித்தாள். சின்னவன் முகத்தில் புன்னகை கீறிட்டது. ராத்தா அலி சொன்னார் நான் கருப்பு என. சின்னவன் போன வேகத்தில் திரும்பி வந்த காரணம் எனக்கு புரிந்தது. என்னையறியாது பெரு மூச்சொன்று விடைப்பெற்றது. மகள் சடைக்கவில்லை, தம்பி அவரும் சின்னவர் தானே. இன்னும் கொஞ்சம் பெரிசா வந்தால் தான் அவருக்கு விளங்கும். நீங்க இதுக்கெல்லாம் அப்செட் ஆனா பெரியாளா வர ஏலாது. எல்லாத்துக்கும் சிரித்துக்கொள்ள வேண்டும். அந்த நேசரி பையன் ஏதோ விளங்கியதாக தலையை ஆட்டினான். பின் மறுபடி விளையாட ஓடிவிட்டான். என் மனம் பூரித்திருந்தது. மகள் தனது வேலையை தொடர்ந்திருந்தாள்.
மனைவியின் குரல் என் சிந்தனைக்கு பிரேக் போட்டது. Monday ஒரு ஹொலிடே வருதுப்பா. ஒரு சேஞ்சுக்கு எங்காவது போய்வருவோமா என ஆரம்பித்தாள். மகள் அமைதியாக எனது பதிலுக்காக காத்திருப்பது தெரிந்தது. இது அவளது பிரேரணையாக இருக்க வேண்டும். அதனால் கொஞ்சம் நிதானித்தேன். போன முறை நுவரெலியா போய் தானே வந்தோம் என்றேன்… பிள்ளைகள் ஆசைப்படுது உம்மா குட்டை பட்டென உடைத்தாங்க. மனைவி புன்னகைத்துக்கொண்டாள். இம்முறை ஒரு லோ பட்ஜெட்டில் சின்னதா ஒரு பயணம் போலாமே மனைவி இழுத்தாள். லோ பட்ஜெட் என்றால் என்ன சின்னவன் விசாரிக்க, பெரியவன் குறைந்த வரவு செலவு திட்டம் என அவனது புலைமையை காட்டினான். புன்னகைத்துக்கொண்டோம். என்ன பிளான் என சொல்லலாமே. நானும் கடையை திறக்கிறதா இல்லையா என யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றேன். கொத்தாந்தீவு போலாமாப்பா என மனைவி என் முகம் நோக்கினாள். அந்த பார்வை ப்ளீஸ்ப்பா என்றது. அது என் சின்னம்மா வாழுமிடம். நான் கடைசியாய் போய் வந்து ஒரு வருடமிருக்கும். செல்லாப்பாட மையத்துக்கு போய் வந்தது. போன முறை சின்னம்மா என் பெரியம்மாவின் மகனின் கல்யாணத்துக்கு வந்தபோதும் குறைப்பட்டாங்க, உனக்கு என் ஞாபகமாவது இல்லையென.
நான் யோசித்துக்கொண்டிருக்கையிலேயே என் மனைவி தொடர்ந்தாள். எங்கட ஓட்டத்துக்கும் ஒரு சின்ன பிரேக் நல்லம் தானேப்பா? நான் சிரித்துக்கொண்டே அது சரி உம்மா, உங்கட காலத்திலெல்லாம் இந்த பிரேக் தேவைப்பட்டதா? என்றேன். வழமை போல உம்மா ஒரு சிரிப்பை பதிலாக தர, என் மனைவி ஆரம்பித்தாள். அந்த காலத்திலே எத்தனை விசேஷங்கள்? கல்யாணம் என்றால், முழு குடும்பமும் நின்று செய்யும். தலையணைக்கு பஞ்சு அடைவதிலிருந்து அரிசியில் கல் பொறுக்குவது, பலகாரம் செய்வது, கல்யாணம் சொல்லிப்போவது, மருதோன்றி, கல்யாணம், மாப்பிள்ளை அழைப்பு, மாப்பிள்ளையின் உம்மாவிற்கு சாப்பாடு, பொண்ணின் உம்மாவிற்கு சாப்பாடு, மாப்பிளை, பொண்ணுக்கு சாப்பாடு, விராத்து ரொட்டி சுடுவது, பாத்திஹா ஓதுவது என பட்டியல் நீளும். பிள்ளை பிறந்தால் அதற்கென சில சடங்குகள், மையத்து வீடென்றால் மூன்றாம் கத்தத்தில் இருந்து ஏழாம் பதினைந்தாம், முப்பதாம், நாற்பதாம், வருச கத்தம் என் பலமுறை குடும்பங்கள் ஒன்று சேரும். பெருநாள் என்றால் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் எனவும், ஹம்சு, ரேஸ் பந்தயங்கள் எனவும் பல. எந்த பிரேக்கும் தேவைப்படல.இப்ப நிறைய விடயங்களை அனாச்சாரம், மார்க்கத்துக்கு முரணானது என ஒதுக்கியாச்சு. விலைவாசி மிச்சம் மீதியை முழுங்கிடுச்சு. ஒருவருக்கு சாப்பாடு போட வேண்டுமென்றா பத்து முறை யோசிக்கணும். எல்லாரும் பிஸி. சொந்தபந்தங்களை காண கிடைப்பதில்லை. பெண்களெல்லாம் வீட்டு வேலைகளை மட்டும் பார்த்தாங்க. இப்ப வேலைக்கும் போக வேண்டியிருக்கு தவிர, போன் தூர இருந்தவங்களை எல்லாம் கிட்டவும். கிட்ட இருந்தவங்களை எல்லாம் தூரவும் கொண்டு போய் விட்டுடுச்சு. காணுமா விளக்கம்? ஒரு சின்ன பிரேக் விட்டாள் மனைவி.
உம்மாவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியானது. அதுவும் வாஸ்தவம் தான். முன் வீட்டு பலீலா ராத்தாவைக் கண்டு ஒரு கிழமை. ரசீதா வீட்டுக்கு பயானுக்கு வந்தப்ப தான் சொன்னாங்க காய்ச்சலாம். அவங்க வீட்டு போன் வேலை செய்யாதாலே எனக்கு சொல்ல கிடைக்கலையாம். யாரையும் குறை சொல்ல ஏலாது. தங்கட வாழ்க்கையை தாங்க தான் தாங்க வேண்டும் என்ற நியதி என்ன செய்ய? உம்மா எல்லாரையும் எல்லாவற்றையும் நியாயப்படுத்தினாங்க.
சரி வாப்பா நாம போறதா இல்லையா? எனக்கென்றால் டியூசன் எதுவுமில்லை. ரொம்ப முன் எச்சரிக்கைக்காரன். மகள் சின்ன கன்னாவிற்கு கோல் பண்ணி கேளுங்க அவங்கட பிளான் என்னன்னு. நான் மகளை பணித்தேன். மகள் புன்சிரிப்புடன் சொன்னாள் சின்ன கன்னாதான் எல்லாரையும் வர சொன்னாங்க. இரவு வாப்பம்மாவைக் கனவு கண்டாங்களாம். ஒரே எங்கட ஞாபகமாதான் இருக்காம். மகள் காரணத்தை விளக்கினாள்.
நான் சிரித்துக்கொண்டேன். சின்னவன் என் மடியில் அமர்ந்து வாப்பா நாம போறமா என கேட்க, எனக்கு ஏதாவது சொய்ஸ் இருக்கா மகன்? இன்ஷா அல்லாஹ் போய் வருவோம் என அவன் தலையை வருடிவிட்டேன். வாப்பா, நானா சொன்னாங்க சின்னபாடு பெரியபாடுன்னு கடலெல்லாம் இருக்காம். எங்களை அங்கெல்லாம் கூட்டி போவீங்களா? சின்னவன் கேட்கும் போதே பெரியவன் தலையைக் குனிந்து கொண்டான். ஓஹ், நானாவும் வருவாங்கள் என்றால் போய் வரலாம் நான் புன்னகைக்க பெரியவன் என்னைக் கட்டிக்கொண்டான். மகன், இன்ஷா அல்லாஹ் கொலர்ஷிப்பில் நல்ல மார்க்ஸ் எடுப்பீங்கள் தானே? மென்மையாக வினவினேன். இன்ஷா அல்லாஹ் வாப்பா, நான் படிக்கிறேன் தான். ரத்தாட்ட கேட்டு பாருங்க என சாட்சியுடன் எனக்கு பதிலளித்தான். நான் மகளை பார்த்தேன். அவள் புன்னகைத்துக் கொண்டாள்.
நீங்க சொன்னா காணும் மகன். உங்களை பார்த்து தான் தம்பியும் படிக்கப்போறார் நான் முடிக்கும் முன்னே அல்லாஹ், இவங்களை சாலிஹான பிள்ளைகளாக வளர உதவி செய்யணும் மகன். நீதான் தனி ஆளா வளர்ந்தாய். சின்ன வயதிலேயே வாப்பாவை இழந்து பட்ட கஷ்டம் ஒன்னா இரண்டா; இவங்களுக்கு ஒருத்தடர்ர துணை ஒருத்தருக்கு இருக்க அவன்தான் துணை செய்யணும், உம்மா முடிக்கும் முன்பே அசருக்கான அதானின் ஒலி வீட்டை நிறைத்தது. மகன் என் மடியில் இருந்து எழுந்தான். மகள் எனது சேட்டுடன் முன்னால் அமைதியாக நின்றாள். உம்மாவின் துஆ வை ஏற்றுக்கொள் நாயனே மனது உருகி, நெகிழ்ந்தது. பள்ளிக்கு போய் வரேன்பா, ஸலாத்துடன் விடைப்பெற்றேன் என் வாழ்வை வளப்படுத்தியவனுக்கு நன்றி கூற.


March 19, 2013 at 8:41 am
கறுப்பு நிறமே தனிப்பட்ட அழகுடா .