2012.06.27ம் திகதி புதன் கிழமை; அதிகாலை வேளை; சுபஹு தொழுகை முடிவுற்று சற்று நேரத்துக்குப் பின்னர் புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பிரிவு தலை வாசல் களைகட்டுகின்றது. சனமின்றி, சப்தமின்றி, சலனமின்றி அமைதிகாத்த ஸாஹிறா வளாகம் மாணாக்கரின், அவர்களது பெற்றோர்களின் வருகையால் அமைதி களைந்து உஷாரானது.
ஆசைகளைச் சுமந்து ஆர்வம் மிகுந்து, சற்று பொறுமையும் இழந்து பயணம் எப்போது ஆரம்பமாகும் எனும் வேட்கையோடு காத்து நின்றனர் மாணாக்கர். அவர்களை வாழ்த்தி வழியனுப்பிவிட்டுச் செல்ல பொறுமையுடன் காத்திருந்தனர் பெற்றோர்கள் மாணவர்களின் வருகையை உறுதி செய்வதிலும், அவர்களை குழுக்களாக ஒழுங்கு படுத்துவதிலும் மும்முரமாக செயட்பட்டுக்கொண்டிருன்தனர் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் .
சரியாக 5 .30 மணியளவில் பாடசாலை பிரதான வாயில் அருகே மூன்று பஸ் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து நின்றன. மாணவர்கள் அணி அணியாக உற்சாகத்துடன் பஸ் வண்டிகளில் ஏறினர். பயண துஆவை ஓதிக்கொண்டனர். பெற்றோர்களிடம் கையசைத்து விடைபெற்றுக்கொண்டனர். 5 .45 மணிக்கு பயணம் ஆரம்பமாகியது.
பயணம் ஆரம்பித்து 30 நிமிடங்கள் கழிந்திருக்கும். ஒரு பெற்றோரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகின்றது. “சேர் எங்கன போய்க் கொண்டிருக்கிறீங்க? முந்தல் கழித்துவிட்டோம் ஏன்? சேர் எனது மகள் வருவதற்கு சுனங்கிவிட்டால். எப்படியாவது அவளும் சுற்றுலாவில் வரனும்; என்ன செய்யலாம் சார்? நாங்கள் காலைச் சாப்பாட்டுக்காக மாதம்பையில் அரைமணித்தியாலம் நிற்போம்; அதற்கிடையில் முடியுமாயின் கூட்டிவாருங்கள். நன்றி சேர்” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
நாங்கள் 7.15 மணியளவில் மாதம்பையை அடைந்தோம். வழமைபோன்று காலை உணவை சாப்பிடுவதற்காக ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சென்றோம். அங்கு வழமைக்கு மாறாக அவவேளையில் பெரும் இளைஞர் குழுவினர் பள்ளியை நிறைத்து நின்றனர். அக்குழுவிலிருந்து சில இளைஞர்கள் எம்மைக்கண்டு முக மலர்ச்சியோடு எம்மிடம் ஓடிவந்தனர். அவர்கள் வேறு யாரும் இல்லை. எமது ஆரம்பப்பிரிவில் கற்ற பழைய மாணவர்கள்; தற்போது மாதம்பை இஸ்லாஹிய்யா ஆண்கள் அரபுக் கல்லூரியின் ஷரீஆ துறை மாணவர்கள். ரமழான் தர்பிய்யா நிகழ்ச்சியில் பங்கேட்பதற்காக வந்துள்ளனர். எம்மை இன்முகத்துடன் வரவேற்று வேண்டிய ஒத்துழைப்பை நல்கினர். பள்ளியின் மேல் தளத்தில் கலை உணவை முடித்துக்கொண்டோம்.
இதன்போது பெற்றோர் ஒருவர் பிள்ளை ஒருவருடன் வந்துள்ளார் என்ற ஒரு செய்தி கிடைக்கப்பெற்றது. எம்முடன் தொடர்புக்கொண்டவர் இவர்தான். மோட்டார் சைக்கிளின் உதவியுடன் வேகமாய் பயணித்து பிள்ளையை அழைத்து வந்திருந்தார். ஆபத்தான, பொருத்தமற்ற துணிகர செயல் என்பதால் உள்ளுர அவரை கடிந்தாலும், பிள்ளையின் ஏமாற்றத்தை தவிர்க்க, அதன் உணர்வுக்கு மதிப்பளித்து அதிரடியாய் செயற்பட்ட அத் தந்தையை பாராட்டவே வேண்டும்.
பயணம் தொடர்ந்தது. 10.00 மணியளவில் கொழும்பு கோள் மண்டலத்தை அடைந்தோம். மாணவர் சனத்திரள் அதிகமாகவே காணப்பட்டது. மண்டபத்துக்குள் இருந்த இருக்கைகள் பெரும்பாலும் முந்தி வந்தவர்களினால் நிரப்பப்பட்டிருந்தன. அதனால் எம்மில் பலருக்கு இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை. என்ன செய்வது. நின்ற வண்ணம் காட்சியை பார்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.10 .30 மணிக்கு காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
தெளிவான அழகிய தமிழ் மொழியில் விளக்கம் தரப்பட்டது. எமது சூரியக் குடும்பம், கோள்கள், உடுக்கள், கற்பனை விண்வெளிப்பயணம், இரவு வானம். நட்சத்திரங்களை தொடர்புபடுத்தி சித்திர காட்சி (ராசி) சூரிய உதயம் போன்ற காட்சிகள் அங்கு இடம்பெற்றன. ஒவ்வொரு காட்ச்சிகளையும் மாணாக்கர் பார்வையிடும் போது வியப்பின் உந்துதலால் குறிப்பாக எம்மவர்கள் “உஷ்….. என எழுப்பிய சப்தம் அரங்கத்தை சற்று அசெளகரியத்துக்கு உள்ளாக்கியது. தரப்பட்ட ஆழமான விளக்கம் எம்மவர்களை ஈர்த்திருக்காது; மாறாக காட்சிகள் நிச்சயம் அவர்களின் மனத்திரையில் பதிவினை ஏற்படுத்தியிருக்கும். சுருங்கத்ச் சொல்வதாயின் தரம் 9 இற்கு மேல் கற்கும் மாணவர்களுக்கு வானியல் பற்றிய கற்றலுக்கான நல்லதோர் வரப்பிரசாதம் கோள் மண்டலம்.
இங்கிருந்து மாணவர்கள் நடைபவனியாய் சுதந்திர சதுக்கத்தையும் பார்வையிட்ட வண்ணம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு விஜயம் செய்தனர். அங்கு கலையகம் ஒன்றை பார்வையிட்டனர். அத்துடன் Lunch Time Request நேரடி நிகழ்ச்சியை நேரடியாய் பார்வையிடும் சந்தர்ப்பமும் எமக்கு கிட்டியது.
பின்னர் அங்கிருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு சென்றோம். அங்கும் நேரடி நிகழ்சிகள் அரங்கேற்றும் கலையகம். ஒலிபரப்பும் நுட்பம். அதன் கட்டுபாட்டறை என்பவைகளை பார்வையிட்டோம். இங்கு பணிபுரியும் சகோதரர் ரிசா என்பவர் கலையகம் ஒன்றில் மாணவர்களை அமரவைத்து புத்தளம் தொடர்பான பல வினாக்களை மாணவர்களிடம் வினவி: கலந்துரையாடி நமதூர் பற்றிய பல தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக ஆக்கியமை இப்பயணத்தின் மற்றுமோர் கல்விசார் வெளியீடாகும்.
நேரம் நண்பகலையும் தாண்டி 1.30 ஆகிவிட்டது. எல்லோரினதும் முகத்திலும் ஒருவகை சோர்வு. வேறு ஒன்றும் இல்லை. பசியின் தாக்கம். போதாக்குறைக்கு பகல் உணவுக்காய் சமைத்து கொண்டுவந்த உணவு பழுதடைந்துவிடக்கூடாது என்கின்ற பரிதவிப்பு. உரிய இடத்தை தேடி பஸ் வண்டி வாகன நெரிசலுக்கு மத்தியில் ஊர்ந்து சென்று விகாரமகா தேவி பூங்காவை அடைந்துவிடுகிறது.
அவசர அவசரமாய் மாணாக்கர், ஆசிரியர்கள் பகலுணவு பொட்டலங்களை சுமந்துக் கொண்டு. பூங்காவினுள் சென்று முதலில் மாணவர்களுக்கு பங்கிடும் பணி மும்முரமாகியது. பசியுடன் இருந்தவர்கள் ருசியுடன் இருந்த உணவை விரும்பி உண்டனர். சீக்கிரத்தில் இருந்த உணவும் காலியாகியது. பங்கிட்ட ஆசிரியர்களுக்கு உண்பதற்கு சோறு இல்லை. கறிகள்தான் இருந்தன. என்ன செய்ய? பொறுமைகாக்கத்தான் வேண்டும். ஆசிரியர்களில் இருவர் சோறு வாங்குவதற்காக கடைகளைத் தேடி விரைந்தனர். இதற்கிடையில் சென்ற ஒருவரின் கையடக்கத் தொலைபேசியும் எங்கோ விழுந்துவிட்டது. அங்கிருந்து பூங்காவிற்கு தகவல் பறந்தது. நல்ல வேளை உணவு பங்கிட்ட இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டு உடன் தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட தூரம் நடந்து கடைகளைத் தேடி சோறு பொட்டலங்களை வாங்கி ஆட்டோ மூலம் மீண்டும் பூங்கா வந்துசேர்ந்தனர். இதன் பின்னர் தான் ஆசிரியர்களுக்கான பகல் உணவு.
இவ் இடைவெளியைப் பயன்படுத்தி தொழுகின்றவர்கள் மைதானத்தில் தொழுதுகொண்டனர். மாணவர்களும் பூங்காவில் விளையாட சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. நேரம் 3.00 மணியை தாண்டிவிட்டது. தாமரைத் தடாகத்தை பார்வையிட சென்றால் இரத்மலானை விமான நிலையம். அருங்காட்சியகம் பார்வையிட முடியாதிருக்கும். எனவே இதனை தவிர்த்து இரத்மலானை செல்வோம் என ஏகோபிததனர் ஆசிரியர்கள். காலம் தாமதிக்காது பயணம் தொடர்ந்தது. வாகன நெரிசலை சமாளித்து அங்கு செல்லும் போது 4.15 மணியாகிவிட்டது. துரிதமாய் செயல்பட்டு நுழைவுச் சீட்டுக்களைப் பெற்று அருங்காட்சியகத்துள் பிரவேசித்தோம்.
கனிவான வரவேற்புடன் இவ் அருங்காட்சியகத்துள் எவற்றை பார்வையிடலாம் என்பது பற்றி விமானப் படை அதிகாரி ஒருவர் அருங்காட்சியக பூகோள வரைபடம் துணைக்கொண்டு விளக்கப்படுத்தினார். இவ் விளக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கு முறைப்படி ஒவ்வொன்றாய் பார்வையிட்டுவந்தோம். பயிற்சி விமானங்கள், போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், பயண விமானங்கள். பல்ரக ஆயுதங்கள். அதற்கான ரவைகள், குண்டுகள், போர்க் கருவிகள், சாதாரண, கனரக வாகனங்கள், போர் வீரர்களின் மாதிரிகள் என பல காட்சிக் கூடங்கள். நீண்டுக்கொண்டே செல்கின்றன. எங்கு பார்த்தாலும் இது விமானப் படைக்குச் சொந்தமான காட்சியகம் என்பதை பறைசாற்றும் விதத்தில் பல ரகங்களில் விமானங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
இக் காட்சியகத்தின் விஷேட சிறப்பம்சத்தை கூறியாக வேண்டும். தூய்மை, நேர்த்தி, ஒழுங்கமைப்பு, கலை அம்சம் கொண்டதாகவே அனைத்து பொருட்களும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. பச்சை பசேலென்ற புல் வெளிகள், மரஞ் செடிகள், கொடிகள், பல வண்ண பூக்கள் சுத்தமான சுகந்தமான அமைதியான சுற்றாடல் மனதுக்கு சந்தோசத்தை, நிறைவை, உற்சாகத்தை தரவல்ல இடமாக அமைக்கப்பட்டிருந்தமை இதன் சிறப்பம்சமாகும். களைப்பாற, பசியாற, சிறார்கள் குதூகலத்துடன் விளையாட என்பவற்றுக்கெல்லாம் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சுருங்கக் கூறின் சிரார்களாகட்டும். வளந்தவர்களாகட்டும், எத் தரங்களையும் சேர்ந்த மாணவர்களாகட்டும், பொறியியல் துறைமாணவர்களாகட்டும், குடும்ப சகிதமாகட்டும்; சகல தரப்பினரும் அறிவை பெறும், ஓய்வை தரும் , பயனுள்ளமுறையில் பொழுதை கழிக்கும் இடமாக இது திகழ்கின்றது என துணிந்து கூறலாம்.
அங்கிருந்து வெளிச்செல்லும் வேளையில் சகல் மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் தம் நினைவாக விமானங்கள் காட்சிபடுத்தப்பட்ட அழகிய வர்ண கலண்டர்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை மறக்க முடியா நிகழ்வாகும்.
இப் போது நேரம் 5.45 மணி. காலி முகத்திடலை நோக்கி எமது பயணம் தொடர்கின்றது. 6.15 கெல்லாம் சேர்ந்துவிட்டோம். சூரியன் அடிவானில் மறையும் நேரம். மெல்ல மெல்ல இருள் கவ்விக் கொண்டு வரும் நேரம். சனத்திரளும் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டு வரும் நேரம். நாங்களும் சனத்திரளுடன் சனத்திரளாய் சங்கமிக்கின்றோம். சுத்தமான காற்றை சுவாசித்தும், ஆர்ப்பரித்து எழும் கடலலைகளை இரசித்தும், கூவியழைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளின் விற்பனை திறன்களை கண்டு களித்தும்,, களைப்புத் தீர ஒதுக்குப்புறமாய் உட்கார்ந்தும் அந்த ரம்மியமான பொழுதை காலி முகத்திடலில் களித்துக்கொண்டிருந்தோம்.
மாணவர்கள் தவறி விடக்கூடாது என்பதில் ஆசிரியர்கள் மிகவும் கண்ணும்கருத்துமாய் இருந்தனர். திடீரென ஒரு செய்தி. இரு மாணவர்களை காணவில்லையாம். எங்கு போயிருப்பார்கள். இங்கு தான் நிற்பார்கள் என ஆறுதல் அடைந்தாலும் அவர்களை காணும்வரை நிம்மதி ஏது.
அதிரடியாய் தேடும் படலம். சற்று நேரத்தில் அகப்பட்டனர். குறித்த இடத்தை விட்டு அகன்று சற்று தூரம் சென்றதன் விளைவு. அவர்களை இலகுவில் அடையாளம் கண்டுக் கொள்ள பாடசாலை சீருடையே துணை செய்தது. பாடசாலை சீருடையின் மகத்துவம் அத்தருணத்தில் நன்கே புரிந்தது.
இது இவ்வாறிருக்க மூத்த ஆசிரியர் ஒருவர் தாகம் தணிக்க குளிர்பானம் தயாரிக்கும் பணியில் ஈடுபடலானார். கேக் துண்டுடன் குளிர்பானம் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. எட்டு மணியை எட்டியிருப்போம். இனியும் தாமதிக்க முடியாது. வீடு நோக்கி புறப்பட்டுவிட்டோம். வரும் வழியில் கொச்சிக்கடை என்னும் இடத்தில் இலகுவான இரா உணவை உண்பதற்காகவும், உறவுகளுக்கு அன்பளிப்பாய் வழங்க பொருட்கள் வாங்குவதற்காகவும் சுமார் அரை மணித்தியாலம் செலவிட்டுக்கொண்டோம். பின்னர் பயணத்தை தொடர்ந்து இரவு 12.10 மணிக்கு பாடசாலை சென்றடைந்தோம். அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்: அல்ஹம்து லில்லாஹ்!
எம்மை வரவேற்க பெற்றோர் பெரும் கூட்டமாய் காத்துநின்றனர். பஸ் வண்டிகளை கண்டதும் அவர்களின் வதனங்களில் பூத்த புன்முறுவல்கள் . அப்பப்பா எத்தனை! எத்தனை!! அல்லாஹுவின் அருளால் நல்லபடியாய் எம் சுற்றுலா நிறைவுபெற்ற மன நிறைவுடன் பிள்ளைகளிடம் கதைகள் கேட்டுக்கொண்டே வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .
ஆசிரியர்களைப் பொறுத்தவரை கல்விச் சுற்றுலா என்பது சுகப் பயணமல்ல பொறுப்புக்களைச் சுமந்த பயணம். பொழுதை போக்கிடும் பயணமல்ல; பொறுப்பையே பொழுதாக்கிடும் பயணம்.!




July 7, 2012 at 10:44 pm
கல்வி சுற்றுலாவில் ஆசிரியஹல் கவனமைருக்கணும்