நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெற்றோர், பாதுகாவலரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும்.
அவர்களின் பங்களிப்பின்றி சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரங்களை கட்டுப்படுத்துவது பொலிஸாரால் கூட சிரமசாத்தியமாகும். இது குறித்து பெற்றோர், பாதுகாவலருக்கு அறிவூட்டுவது ஊடகங்களின் பாரிய பொறுப்பாகும் என பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் அகுரஸ்ஸ பிரதேச சபைத் தலைவரினனால் நிகழ்த்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தையடுத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பொலிஸ் புலன்விசாரணைகள் மூலமாகவோ அல்லது குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மூலமாகவோ சாத்தியமில்லை. மாறாக பெற்றோர் பாதுகாவலரின் தம் பிள்ளைகள் தொடர்பான நேரடி கண்காணிப்பின் மூலமாகவே சாத்தியமாகும்.
அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பில் ஊடகங்கள் அதிகமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால் குறித்த ஊடகங்கள் சம்பவங்களையும் குற்றவாளிகளையும் மட்டும் அடையாளப்படுத்தியதே தவிர பெற்றோர் பாதுகாலவர்களின் பங்களிப்பு குறித்த அறிவூட்டல்களை வெளியிடத் தவறிவிட்டன.
அண்மையில் நடைபெற்ற பல்வேறு சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு பெற்றோர் பாதுகாவலரின் சரியான கண்காணிப்பு இன்மையே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக கள ஆய்வகளும் பொலிஸ் பதிவுகளும் தெரிவிக்கின்றன.
தற்போது பாலியல் துஷ்பிரயோகங்கள் நாடளாவிய ரீதியில் அதிகளவில் நடைபெறுவதற்கு தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சியே காரணமாகும். தற்போதைய சூழலில் பாலியல் உணர்ச்சியை தூண்டும் வகையில் இணைய தளங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என பல்வேறு சாதனங்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் பாலியல் தூண்டல்களுக்கு இலக்காகியே பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

