டெங்கு ஆட்கொல்லி நுளம்புகள் பரவுவவதை தடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திய கழிவுப் பொருட்களான ஐஸ்கிறீம்‚ யோகட்‚ மாஜரீன்‚ குளிர்பானம் போன்றவை அடைக்கப்பட்டு விற்பனையாகும் பிளாஸ்திக் கொள்கலன்கள் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றிலும் கைவிடப்பட்ட வீட்டு கிணறுகள்‚ இறப்பர் டயர்கள்‚ தேங்காய்ச் சிரட்டை‚ ரம்புட்டான் தோல்‚ இளநீர் குறும்பை போன்றவற்றிலும் டெங்கு நுளம்புகள் அதிகளவில் முட்டையிட்டு பல்கிப் பெருகுவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நுளம்பு பரவுதல் குறித்த ஆய்வொன்றிலேயே மேற்படி விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாய்வின்படி வட மேல் மாகாணத்தில் 67 வீதமான டெங்கு நுளம்பு பல்கிப் பெருகும் இடங்கள் காணப்படுகின்றன. அதேநேரம் வட மத்திய மாகாணத்தில் 56 வீதம்‚ மத்திய மற்றும் சப்ரகமுவர மாகாணத்தில் 50 வீதம்‚ மேல் மாகாணத்தில் 49 வீதம்‚ கிழக்கு மாகாணத்தில் 43 வீதம்‚ உவர மாகாணத்தில் 29 வீதம்‚ வடமாகாணத்தில் 29 வீதமான நுளம்பு பெருகும் இடங்கள் காணப்படுகின்றன.
உணவு தயாரிப்பாளர்கள் பிளாஸ்திக் உணவுப் பொதிகளை தயாரிப்பதை நிறுத்தி விட்டு எளிதில் அழிந்து போகக்கூடிய காட்போர்ட் பொதிகளை மாற்றீடாக தயாரிக்கும்படி சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. அத்தோடு் சூழலுக்கு உகந்த உணவுப் பொதிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும்படி உணவு தயாரிப்பாளர்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களும்கூட உணவுப் பொதிகளைப் பயன்படுத்திய பின்னர் அவற்றை முற்றாக அழித்தொழிக்கும்வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.
உலகில் 2500 க்கும் அதிகமான நுளம்பு வகைகள் காணப்படுகின்ற அதேவேளை இலங்கையில் மட்டும் 250 வகையான நுளம்புகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

