ஊடக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், இணைய தளங்களை பதிவு செய்வது தொடர்பான சட்டத்தை மையமாகக் கொண்டு இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இணைய தளங்கள் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவேண்டும் என்பதனை கட்டாயப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படஉள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட நபர்களை இலக்கு வைத்து சில ஊடகங்கள் தாக்குதல் நடத்துவதாகவும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அர்த்தத்திலேயே இணைய தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென அரசாங்கம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மிரர் மற்றும் லங்கா எக்ஸ் நியூஸ் ஆகிய இரண்டு இணையதளங்களுக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே இணைய தளங்கள் முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடமுடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்: மீள்பார்வை

