Puttalam Online
sports

பேசப்படுவதற்காக அல்ல பிரதிபலிப்பதற்காக..!

  • 17 July 2012
  • 762 views

(ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்.)

‘எங்கள் தேசம்’ (ஜூன் 1 – 14, 2012) பத்திரகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

ஆடும் பந்து அறிந்திடுமோ ஆட்டத்தின் வெற்றி தோல்வினை
சாடும் வீரன் கால்பட்டு சாருவதல்லால் வலம் இடமாய்

பாரசீகக் கவிஞர் உமர் கையாம் தனது ரூபையாத் காப்பியத்தில் விதியை (இறைவன்) ஆட்டக்காரனாகவும், ஆன்மாவை (மனிதன்) பந்தாகவும் உவமைப்படுத்திப் பாடிய கவிதை, ‘பந்தாட்டம்’ எந்தளவு மனிதனை ஆட்டுவிக்கிறது என்பதை உணர்த்துகின்றது. ரூபைய்யாத் எழுதப்பட்டு பல நூறாண்டுகள் கடந்த பின்னரும் கூட, ‘விளையாட்டு’ மனிதனை ஆட்டிப் படைக்கின்றது என்பது மட்டும் தெளிவு.

கடந்த நாட்களில் விளையாட்டுடன் தொடர்பான எதிரும் புதிருமான இரண்டு வகை செய்திகளைப் படித்தேன். முதலாவது முதலாவது இலங்கையில் நடைபெறவுள்ள கிரிக்கட் போட்டி தொடர் (SLPL), மற்றையது தாய்லாந்தில் நடைபெற்று முடிந்த கால்பந்தாட்டப் போட்டி.

முதலில் கிரிக்கெட் ஆட்டத்தை நோக்குவோம். மேற்படி கிரிக்கட் சுற்றுப் போட்டி  (SLPL) தொடர்பான செய்தி ஓர் எச்சரிக்கையாகவே அமைந்திருந்தது. அதை சுருக்கமாகக் கூறுவதாயின், நடைபெறவுள்ள கிரிக்கட் சுற்றுப்போட்டிகளின் போது இலங்கை முஸ்லிம்கள் எவரும் இலங்கை அணிக்கு எதிராகவோ அதிலும் விசேடமாக பாகிஸ்தான் அணிக்கு சார்பாகவோ எந்தவொரு செயலையும் மேற்கொள்ள வேண்டாம் என்பதுவே அது. அவை வெளிப்படையான செயலாக மட்டுமன்றி Facebook, Google+ போன்ற சமூக வலைத் தளங்களில் வழங்கும் Like, Comment போன்றவை ஊடாகக் கூட இதனை வெளிக்காட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை வேண்டுகோளாக அமைந்திருந்தது.

இந்த முன்னெச்சரிக்கை மணி வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்த அறிவுரையும் இதுவாகத்தான் அமைந்தது. அந்த வகையில், தற்போது இலங்கையில் இனவாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள கசப்புணர்வுகளுக்கும் சந்தேகங்களுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரை ‘பேசினால் நல்லதைப் பேசட்டும், இல்லையேல் மௌனமாக இருக்கட்டும்’ என்ற நபிமொழிக்கேற்ப ‘கூவினால் இலங்கைக்கு சார்பாக கூவுவோம், இல்லையேல் ஊமையாக இருப்போம்’ என்ற நிலைப்பாடு சிறந்தது என்றே கூறத் தோன்றுகின்றது.

குறித்த கிரிக்கட் போட்டித்தொடர்கள் நடைபெறும் காலப் பகுதி ஜூன் 01 முதல் ஆக்டோபர் மாதம் வரையிலான சுமார் நான்கு மாதங்களாகும். இக் காலப்பகுதியில் ஜூலை நான்காம் வாரம் முதல் ஆகஸ்டு இறுதி வாரம் வரை புனித ரமழான் மாதமும் வருகிறது. கடந்த வருட ரமழான் ‘கிறீஸ் மனிதன்’ அச்சத்தில் சிக்கி உயிரோட்டமிழந்த இருண்ட மாதமாகவே கழிந்துவிட்டது. இந்த வருடத்தின் ரமழான் மாதம் கிரிக்கட் மட்டையுடன் வந்துள்ளது. இப்போது நமது நோன்புக்கு புதுவித சவால் விடப்பட்டுள்ளது,

கிரிக்கட்டின் கிளர்ச்சியில் தொலைக்காட்சியின் முன் அமருவதா, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதா? அதிக ஓட்டங்களைக் குவித்தவனா, அதிகம் நன்மைகளைக் குவித்தவனா? இலங்கை முஸ்லிம்களின் மனவுறுதியை சோதிக்கும் கடுமையான போட்டி நிறைந்த மாதமாகவே இந்த வருட ரமழான் வரப்போகின்றது.

இச்சுற்றுப் போட்டியில் முஸ்லிம் ஆட்டக்காரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். பகல் நேர ஆட்டத்தின் மென்பான ஓய்வின் போது இவர்களில் ஒரு சிலர் நடந்துகொண்ட விதத்தை (முன்னைய அனுபவங்களுடன்) நினைத்தால் தலை சுற்றுகிறது. போட்டியில் வெற்றி பெற்றவுடன் கையேந்தி துஆவும் செய்வார்கள், மென்பான போத்தலைக் கையிலேந்தி தாகமும் தீர்ப்பார்கள்.

முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத ஏனைய அரச கரும மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பொதுவாக நோன்பு காலங்களில் இயல்பாக ஏற்படும் களைப்பின் காரணமாக சற்று சோர்வுற்ற நிலையில் காணப்படுவதும் இவர்களின் சோர்வு நிலைக்கான காரணத்தை முஸ்லிமல்லாத உயரதிகாரிகள் அறிந்து வைத்திருக்கின்றனர் என்பதும் புதிய விடயமல்ல.

எனினும், இந்த வருட நோன்பின் போது, இயல்பான களைப்பைக் கூட கிரிக்கட்டுடன் இணைத்து பிரிதொரு விளக்கம் கூறப்படலாம். இரவு நேர தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகளுக்காக கண் விழித்த களைப்பைக் கூட ‘நைட் மெட்ச்’ பார்த்து விட்டு நோன்பை காரணங் கூறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும் வியப்பேதுமில்லை.

எனவே மேற்குறித்த துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் இந்த விடயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் மொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பொதுத் தன்மையாக பார்க்கப்படலாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தாய் நாட்டுக்குப் பொருத்தமான தாய்லாந்து முன்மாதிரி

கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம்கொண்ட நாட்டவரான தாய்லாந்துவாசிகள் மத்தியில் பல தசாப்தங்களாக நிலவும் பௌத்த – முஸ்லிம் இன முறுகலைத் தணித்து நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் தாய்லாந்தின் தெற்கில் அமைந்துள்ள பட்டானி மாகாணத்தில் இக் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இரண்டு இனங்களையும் சேர்ந்த கால்பந்தாட்ட குழுக்களுக்கு மத்தியிலேயே இப் போட்டி நடைபெற்றது.

பட்டானி மாகாணத்தின் இயல்பு வாழ்க்கை குறித்து ஸாமி ஸமக் எனும் வாலிபன் கூறும் போது, “கிரிஸ்தவர், பௌத்தர், முஸ்லிம் என்று எங்களுக்கு மத்தியில் பிரிவினைகள் இல்லை. நாங்கள் எல்லோரும் நண்பர்கள்” என்கின்றார்.

மேலும் தாய்லாந்துவாசிகளின் கால்பந்தாட்ட தாகத்தைப் பற்றி பௌத்த சமயத்தவரான கால்பந்தாட்ட வீரர் பிதாசரொக் ருஜாகாத், “பட்டானி மாகாணத்தைப் பொறுத்தவரை, எவ்வளவு தொலைவில் வசிப்பவர்களானாலும் என்ன சம்பவங்கள் நடைபெற்றாலும் கால்பந்தாட்டப் போட்டி என்றால் வந்து விடுவார்கள்” என்கின்றார்.

பட்டானி மாகாணத்தின் நிலை குறித்து கவலை தெரிவிக்கும் Southern Association of Women for Peace இன் தலைவி ஹுதா லொங்க்தெவா, “யுத்த சட்டமும் குவிக்கப்பட்ட ஆயுதப் படையினரும் தான் இங்குள்ள மிகப் பெரிய பிரச்சினை” எனக் கூறுகின்றார்,

தாய்லாந்தின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 5% வீதமாகும். பட்டானி, யாலா, நாராதிவாத் ஆகியன முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்கள். இன முறுகலுக்கு திருப்திகரமான தீர்வினை அரசு முன்மொழியாத காரணத்தினால் உருவானது, இந்தக் கால்பந்தாட்ட சிந்தனை!

இத் தாய்லாந்து மக்களிடத்தில் நமது தாய் நாட்டுக்குப் பொருத்தமான முன்மாதிரியைக் காணலாம். இன நல்லுறவை வலியுறுத்தும் நோக்கில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வது தற்காலத்தில் நிலவும் சந்தேக சலசலப்புக்கு தக்க பரிகாரமாகலாம். எனினும் இதிலும் கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் உண்டு.

சில மாதங்களுக்கு முன் கிரிக்கட்ட விளையாட்டு போட்டியொன்றின் பின்னர் ஒன்றாகக் கூடி மதுபானம் அருந்திய ஓரிரு முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் மத்தியில் ஏற்பட்ட கைகலப்பு வெலிகமயில் இடம்பெற்ற இன வன்முறைக்கு காரணமாக அமைந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம்.

எனவே எதிர்வரும் காலங்களில் இன நல்லுறவை எற்படுத்தும் நோக்கில் போட்டிகளை ஏற்பாடு செய்யும்போது பல்வேறு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கால்பந்தாட்டத்தைப் பொறுத்தவரை அஸர் தொழுகைக்குப் பின் ஆரம்பித்து மஃரிபுக்கு முன் முடிந்துவிடும். கிரிக்கட் ஆட்டம் நாள் முழுக்க ஆடப்படும். எனவே இன நல்லுறவுக்கான கிரிக்கட் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது பின் வரும் விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

அழகாக அதான் சொல்லக் கூடிய ஒருவரை ஏற்பாடு செய்து, தொழுகைக்காக என்று திடலில் ஒரு பகுதியை சுத்தம் செய்து அமைத்துவிட்டு, பகலுணவு நேரத்தில் ழுஹர் தொழுகையை கூட்டாக நடத்தலாம். மாலை மென்பான ஓய்வின்போது, அல்லது அதற்கென விசேடமாக ஆட்டத்தை நிறுத்திவிட்டு, ‘அஸர்’ தொழுகையை நடத்தலாம். ஆடுகள வீரர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் அதானொலியைக் கேட்பார்கள், வுழு செய்வதையும் தொழுவதையும் காண்பார்கள்.

அடுத்த விடயம், ஆட்டக்காரர்களின் நடத்தை சார்ந்தது. ஒவ்வொரு ஆட்டக்காரரின் நடத்தையும் கூடியிருக்கும் எல்லோராலும் அவதானிக்கப்படும். எனவே, இவ்வாறான போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆடுகள வீரர்களுக்கு விளையாட்டு தொடர்பான இஸ்லாத்தின் விதிமுறைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். அப்போது அங்கே சிறப்பான ஆட்டப் பண்பு கொண்ட முஸ்லிம்களை ஏனையோர் காண்பார்கள்.

இவை விளையாட்டு என்ற அம்சத்துடன் மட்டுப்படுத்தப்பட்டவை. எனினும், இஸ்லாத்தைக் பிரதிபலிப்பதற்கான சந்தர்ப்பம் விளையாட்டுத் திடல் மட்டுமல்ல. நாம் தொழில்புரியும் அலுவலகம், கற்கும் பாடசாலை, பயணிக்கும் பஸ், பொருள் வாங்கும் சந்தை என இஸ்லாத்தின் காட்சியகம் விசாலித்து விரிந்து கிடக்கின்றது. ‘எனக்கு முழு உலகும் தொழுகைக்குரிய இடமாக்கப்பட்டுள்ளது’ என முஹம்மத் நபியவர்கள் கூறிய ஹதீஸ் இத் தலைப்பில் முக்கிய கவனித்திற்குரியது.

ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த இடத்திற்கும், அங்கு கூடும் மக்களுக்கும் ஏற்ப பிரதிபலித்தல் வித்தியாசப்படும். அதனை எல்லோராலும் வினை திறன்மிக்க முறையில் காட்ட முடியும் என்பதும் யதார்த்தமில்லை. எனினும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சாத்தியமாகும் என்பதே இஸ்லாம் வளர்த்த நாகரிகங்கள் காட்டி நிற்கும் நிதர்சன உண்மையாகும்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே அனைத்தையும் அறிந்தவன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All