PuttalamOnline

அஹ்லன் வஸஹ்லன் யா! ரமழான்..! – உண்மையான ரமழானியனாய் மாறுவதற்காக சில ரப்பானியத் துளிகள்..!

| 0 comments

அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம் றமழான். ஆத்மானந்தத்தை அள்ளி வழங்கி கறைபடிந்த உள்ளங்களை சுத்திகரிக்க வருகிறது. ஈகை, மனித நேயம் முதலானவை அதன் உள்ளீடு. தீமைகளைச் சுட்டெரித்து, பாவங்களை கரித்து, குற்றங்களை குறிவைத்துத் தகர்த்தழித்து பேணுதலும் பரிபக்குவமும் பயபக்தியும் விழிப்புணர்வுமிக்க மனிதர்களை உற்பத்தி செய்து தவருதற்காக வருகிறது. அஹ்லன் வஸஹ்லன் யா! ரமழான்..!

புத்தளத்துப் புதல்வர்களே! பர்ளான கடமை ஒன்றை நிறைவேற்றிட தயாராகுங்கள். நோன்பின் மாண்பை புரிந்து வைத்துள்ளீர்கள். ஆன்மீக வாசம் வீசும் அதன் சூழலையும் தெரிந்து வைத்துள்ளீர்கள். அதன் இராப் பொழுதும், பகற்பொழுதும் ரம்மியமானதுதான்! இதில் இருவேறு கருத்துக்களில்லை.

 பர்ளான நோன்பை ஷரீஆ அனுமதிக்கின்ற நியாயமான காரணமின்றி விட்டு விடாதீர்கள். நோன்பை விடுவது பாவம். நோன்புக்கு உடலும் உயிரும் உண்டு. பசித்திருப்பது, தாகித்திருப்பது அதன் உடல். உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் உயிரை மறந்துவிடாதீர்கள். அதன் உயிர்தான் “தஸ்கியதுன்னப்ஸ்” (உளப் பரிசுத்தம்). நோன்பின் இந்த அடைவுமட்டத்தை நோக்கிய நகர்வு குறித்து சிந்தியுங்கள்.

 நீங்கள் பிரபஞ்சகர்த்தாவாகிய அல்லாஹ்வுடன் பேசுங்கள்! அவன் உங்களுடன் பேச மணித்துளிகளை சேகரம் செய்யுங்கள். இராக்கால தராவீஹ், கியாமுல் லைல் மற்றும் நபிலான தொழுகைகள் மூலம் அவனுடன் பேசுங்கள். அல் குர்ஆனை  அகலத் திறந்து வைத்து ஒதுங்கள். அவன் உங்களுடன் பேசுவான். குர்ஆன் பாராயணத்தின் மூலம் நீங்கள் அந்த ரப்புல் ஆலமீனாகிய வல்ல அல்லாஹ்வுடன் ஆத்மார்த்த உறவை வலுப்படுத்திக்கொள்ள முடியும். திலாவத்தின் மூலம் சுவனத் தெருக்களில் நீங்கள் உலாவரலாம்.சுட்டெரிக்கும் நகரத்தின் அக்கினிச் சுனாமி கண்டு வெருண்டோடும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஓதுங்கள்! சிந்தனையை, எண்ணத்தை குவித்து வேதவழிகளின் கருத்தரிந்து ஒதுங்கள்! தூதர் மொழியின் உதவி கொண்டு அதன் வியாக்கியானம் படியுங்கள்..!

மாணவ சமூகமே! றமழானின் மணித்துளிகள் பெறுமானமிக்கவை! தொலைத்து விடாதீர்கள். இளவல் பட்டாளமே! உன்னைப் பட்டைத் தீட்டிக்கொள்ள அரிய சந்தர்ப்பம்! நழுவ விடாதே! உனக்காக கொஞ்சம் அதிகமாக தீட்ட விரும்புகின்றோம். ஏனெனில்! கடந்து போன றமழானை அசைப்போட்டுப் பார்க்கின்றோம்… மௌனித்து, வெட்கித் தலை குனிந்து இயலாமையை உன் முன் சமர்ப்பணம் செய்து நிற்கின்றோம். அந்த சிவப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே! என்று. இன்னும் உனது சகோதர்கள் 17 பேர்…!

 இளவல் பட்டாளமே! உணர்ச்சிகளை தேவையின்றி கொப்பளிக்காதே! உனது ஆத்திரம், அவசரம், கோபாவேசம், உணர்ச்சிகள் முதலானவற்றை சந்திக்கு இழுத்து தீனுல் இஸ்லாத்தின் மீதும், முழு முஸ்லிம் உம்மத்தின் மீதும் சேறு பூச காத்திருக்கின்றார்கள் தீய சக்திகள். இப்பொழுதெல்லாம் நம் நாட்டில் பொருத்தமில்லாத இடங்களிலெல்லாம் கடவுள்கள் அவதாரம் எடுக்கின்ற காலம்! நாங்கள் தும்மினால் கூட அவர்களுக்கு ஜலதோசம் ஏற்படுகிறது. நாங்கள் சுஜூதில் விழுந்தாலும், ஒதினாலும் தங்களுக்கு எதிராக சாபமிடல் என்று நினைக்கும் காலம்! இளவல்களே உங்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்! றமழான் பருவ காலம் பருவத்தே பயிர் செய்யுங்கள்! மீண்டும் ஒரு அனர்த்தம் றமழானின் ஆன்மீக சூழலை பால் படுத்தி விடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்! றமழானின் இராக்கால வணக்க வழிபாடுகள் நிறை வடைந்தால் பள்ளிப் படி இறங்கி வீட்டுக்குள் புகுந்து கொள்ளுங்கள்! தெருவோர விளையாட்டுக்கள்! பஸார் அரட்டை அடிப்புக்கள், நகர் வலம் முதலானவை உங்கள் நோன்பை நாசமாக்கிவிடும். முஸ்லிமல்லாத சகோதரர்களின் உள்ளங்களில் றமழான் பற்றிய நன்மதிப்பு வளர உங்கள் நற்பண்புகளால் நீரூற்றுங்கள்!

 சோபை இழந்து காணப்படும் பள்ளி வறாந்தைகளையும், மண்டபங்களையும் பசித்திருந்து தனித்திருத்து விழித்திருந்து திக்ருகளால் களைகட்டச் செய்யுங்கள். உங்கள் விழி வழியும் நீர் உங்களை அர்ஷின் நிழல் நோக்கி அள்ளிச் செல்லும் பெரும் வெள்ளம் என்பதை நினைவில் வையுங்கள்.

 மாணவர்களே! அறிவு வெறுமனே பிரவாகிப்பதில்லை தகவல்களின் ஊடாகவே கல்வியறிவு ஊற்றெடுக்கின்றது. றமழானில் தேடலில் ஈடுபடுங்கள். நூற்களில் கூடு கட்டி வாழுங்கள்! ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுங்கள். றமழானில் நல்லதொரு படைப்பாகத்தை தருவதற்கு பிரயாசை எடுங்கள்!

 றமழானின் பகற்பொழுதுகளை தூக்கத்தால் நிரப்பிகொள்ளாதீர்கள். மார்க்கத்தை நிலைநாட்டும் பணிக்காக உற்சாகமாக பாடுபடுங்கள். சமூக மேம்பாட்டு பணிக்காக உங்களை அர்ப்பணியுங்கள்! இரவில் துறவிகளாக மாறிவிடுங்கள். பகலில் குதிரை வீரர்களாக களத்தில் நில்லுங்கள்!

மாணவ மணிகளே! அந்திப் பொழுதில் சிறிது விளையாடுங்கள். ஆனால் வாழ்வு ழுழுவதும் விளையாட்டாக ஆகிவிட வேண்டாம். உங்கள் அல்லாவுக்கும் மற்றும் பெற்றோருக்கும், மரியாதைக்குரியவர்களுக்கும் நீங்கள் ஆற்றிட வேண்டிய உரிமைகளை விட்டும் கிரிகெட்டும் ஒலிம்பிக்கும் டெலிட்ராமவும் சின்மாவும் internet மற்றும் phone உங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.

 மீண்டும் வரிக்கின்றோம்! றமழானில் உங்களுக்கு சவாலாக அமைகின்ற அசாதாரண  நிகழ்வுகளை சமயோசிதமாக உலமாக்கள், மூத்தவர்கள், அனுபவசாலிகளின் வழிகாட்டலின் அடிப்படையில் எதிர் கொள்ளுங்கள். தயவு செய்து அறிவுப் பின்னணியின்றி பாய்ந்து செல்ல வேண்டாம். றமழானின் ஆன்மீக சூழலைப் பாதுகாத்து சுமுகமாக நோன்பை நிறைவு செய்திட வல்ல அல்லாஹ் துனை புரிவானக! ஆமீன்!!

அன்புடன்

புத்தளம் ஒன்லைன்  இணையக் குழு

19.07.2012

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)