PuttalamOnline

புத்தளம் நிவ் ஸ்டார்ஸ் கால்பந்தாட்டக் கழகம்: முன்மாதிரிகளை விதைக்கிறது

| 0 comments

‘எங்கள் தேசம்’ – மலர்:11 இதழ்:14 (ஜுலை 15-30, 2012) வெளியான கட்டுரை

புத்தளம் நிவ் ஸ்டார்ச் கால்பந்தாட்டக் கழகம்: முன்மாதிரிகளை விதைக்கிறது

(Hisham Hussain)


1976 ஆம் ஆண்டு, புத்தளத்தின் தலைமை சிங்கள மொழி பாடசாலை சென். அன்றூச் (St. Andrew’s) கல்லூரியின் க.பொ.த. சா/த (தரம் 11) மாணவர்களான எம்.ஐ.எம். பாஸித், எஸ்.ஏ.எம். ஸப்ரி, எஸ்.ஏ.எம். சதுர்தீன், எம்.ஐ.எம். நஸீம், ஏ.ஜி.எம். பிக்ரி ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட கால்பந்தாட்ட அணி New Stars. இன்று புத்தளத்தின் கால்பந்தட்ட வரலாற்றில் புதிய திசையறிவிக்கும் நட்சத்திரமாக மின்னுகின்றது.

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அறையிறுதிப் போட்டி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்தது இறுதிப் போட்டி. தம் அணியின் மொத்த திறமையையும் ஊரறியச் செய்யும் அரிய சந்தர்ப்பம். போட்டி நடைபெறும் நாள். போட்டி ஆரம்பிக்கும் நேரம் நெருங்குகின்றது. அஸர் தொழுகைக்கான நேரமாகிவிட்டது. அணியினர் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் அஸர் தொழுகையை நிறைவுசெய்து விட்டு புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்திற்கு செல்கின்றனர்.

உரிய நேரத்தில் வருகை தருவதற்கு தவறிய காரணத்தினால் எதிர் அணிக்கு வெற்றியை அறிவித்து விட்டார் நடுவர் என்ற செய்தி கிடைக்கின்றது. தமது அணியில் விளையாடும் சிங்கள, தமிழ் ஆட்டக்காரர்கள் ஏன்? எதற்காக? என புரியாமல் விழி பிதுங்க, எதிர்பார்ப்புகள் களைய கண்கள் நனைய தோல்வியை மனதில் சுமந்து வீடு திரும்பிய அந்த இளஞர்களின் மனதில் எழுந்த பிரார்த்தனை இன்று புதிய வரலாற்றை எழுதும் அடுத்த தலைமுறையினை உருவாக்கியிருக்கின்றது.

தற்போதைய புத்தளம் நிவ் ஸ்டார்ஸ் அணியினர்

2012.06.02 ஆம் திகதி – மனதை சுமையாக்கிய நிகழ்வின் கால் நூற்றாண்டுக்குப் பின். அன்றைய வாலிபர்களின் அடுத்த தலைமுறையினர் Sri Lanka Football Association (F.A.) Cup Soccer Tournament சுற்றுப் போட்டியின் 3 ஆம் சுற்று தெரிவுப்போட்டியில் மொரகஸ்முல்ல கால்பந்தாட்ட கழகத்துடன் மோதுவதற்காக தயாராகி நிற்கின்றனர். இலங்கை முழுவதும் F.A. Cup Soccer Tournament போட்டிகளின் ஆரம்பம் (kick off) சரியாக 3:30 நடைபெறுவது நியதி. எனினும் அன்று 3:50 வரை போட்டி ஆரம்பம் தாமதப்படுத்தப்படுகின்றது. அதற்கான காரணத்தை நிவ் ஸ்டார்ச் அணித் தலைவர் எம்.எம். முஷ்தக் அஹமத் (பேராதனை பல்கலைக் கழகம் – பொறியியல் விஞ்ஞான பீடம் – விடுகை வருடம்) பின் வருமாறு விவரித்தார்:

“நாங்கள் பிரதம நடுவர் (referee) ஆகக் கடமையாற்றிய திரு டப்ளிவ். ஏ. சிந்தக விஜேசேகர அவர்களிடம் வினயமான வேண்டுகோளொன்றை முன்வைத்தோம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். எதிரணியான மொரகஸ்முல்ல கால்பந்தாட்ட கழகத்தின் அனைவரும் சிங்கள சகோதரர்தகள். அவர்களும் எங்கள் வேண்டுகோளுக்கு மரியாதை செய்து ஏற்றுக்கொண்டார்கள். புத்தளம் நகர சபை மைதானத்தில் அஸர் தொழுகையை கூட்டாக நிறைவேற்றினோம். பிரதம நடுவர், துணை நடுவர்கள், எதிரணியினர் எல்லோரும் நாங்கள் தொழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். F.A. Cup Soccer Tournament போட்டிகள் ஆரம்பிக்க வேண்டிய உத்தியோகபூர்வ நேரம் தாமதிக்கப்பட்டு சரியாக 3:50 க்கு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. மொரகஸ்முல்ல அணி வெற்றியைத் தழுவியது.”

அணியின் முகாமையாளர் துவான் சலே

2012 ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் தினசரி பயிற்சிகளின் போது மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலித்தவுடன் பயிற்சி நிறுத்துவதும் நிவ் ஸ்டார்ச் அணியின் மற்றுமொரு முன்மாதிரியாகும். நிவ் ஸ்டார்ச் அணியின் நிருவாகி எஸ்.எச்.எம். ஹாபி அவர்களினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை அங்கத்தவர்களினால் வரவேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் மஃரிப் அதான் ஒலித்தவுடன் பயிற்சி நிறுத்தப்படுகின்றது. மேலும், 20 வயதின் கீழ் பிரிவின் முன்னிளமைப் பருவத்தினர் மஃரிபுடைய நேரத்திற்கு முன்னரே வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பை நிவ் ஸ்டார்ச் அணியின் 30 வருட கால முகாமையாளர் துவான் சலே அவர்களும் ஏனைய மூத்த உறுப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஏற்பாடுகள் ஏனைய கழகங்களின் தனி மனிதர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த அணியாக இல்லாவிட்டாலும் அவரவர் சுய விருப்பில் மஃரிப் அதான் ஒலித்தவுடன் பயிற்சித் திடலை விட்டும் வெளியேறி விடுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

புத்தளத்தின் கால்பந்தாட்ட வரலாற்றில் புதிய திசையறிவிக்கும் நிவ் ஸ்டார்ச் அணியினர் பல்வேறுபட்ட சமூகப் பணிகளிலும் தமது கவனத்தைச் செலுத்தியுள்ளமை அவதானிப்புக்குரியது. “புத்தளம் முஸ்லிம் மையவாடி (மஸ்ஜிதுல் பகாஹ்) காணியை சுத்தம் செய்ய திட்டமிட்டோம், இந்த சிரமதான பணியில் ஏனைய கால்பந்தாட்ட குழுக்களும் பங்கேற்க விரும்புவதாக அறிவித்துள்ளனர். பள்ளிவாசல்களின் ஹவுல்களை சுத்தம் செய்தல், இஃப்தார் ஒன்றை முன்னின்று நடத்துதல், தெரிவுசெய்த வறிய குடும்பங்களுக்கு ஃபித்ரா வழங்குதல் மற்றும் வறிய மாணவர்களுக்கு புலமை நிதியமொன்றை வழங்குவது மற்றும் மைதான பெருநாள் தொழுகையில் கலந்துகொள்வோருக்கு இனிப்புப் பண்டம் வழங்குவது என திட்டமிருக்கின்றோம்” என கூறினார் எம்.எம். முஸ்தாக். தமது அணியின் பல்கலைக் கழக மற்றும் நிபுணத்துவ தொழில், கல்வி பெறும் சிலரைத் தவிர ஏனைய அங்கத்தவர்கள் அனைவரும் தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளதால், இச் செயற்றிட்டங்களுக்கான மூல நிதியை தங்கள் கைகளினால் செலவிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

புறகிருத்தி பணிகளுடன் உளவிருத்தியை மறவாத நிவ் ஸ்டார்ச் அணியினர், மௌலவி எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்களினால் நடத்தப்படவுள்ள விளையாட்டின் இஸ்லாமிய வரையறைகள், வாலிபத்தை சிறந்த முறையில் செலவிடுவது மற்றும் வாலிபத்தின் சமூகக் கடமை போன்ற தலைப்புக்களில் ஆன்மிகப் பாசறைத் தொடர் பற்றி குறிப்பிட்ட போது, இன்றைய வாலிபம் நகரும் புதிய திசையினை அறிவிக்கும் இளைய நட்சத்திரம் மீண்டுமொரு முறை நம்பிக்கையுடன் மின்னிச் சிரித்தது.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)