மூலக்கட்டுரை: Kourosh Ziabari / தமிழாக்கம்: காத்தான்குடி இன்போ -
உலகளாவிய முஸ்லிம் சமுதாயம் மிகவும் மகிழ்வுடன் புனித ரமழான் மாத நோன்பு நோற்று நல்லமல்களில் ஈடுபடும் வேளை மியான்மாரின் ரோஹிங்கயா முஸ்லிம்கள் பௌத்த அடிப்படைவாதத்தின் பிடியில் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளுக்கு உட்பட்டு சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாகி உயிரை கையில் பிடித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையினால் மிகவும் அடக்குமுறைக்கு உட்பட்ட சிறுபான்மை இனங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மாரின் ரக்ஹின் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர், மேற்கு மியான்மாரில் அமைந்துள்ள இம்மாநிலம் ஏறத்தாள 3 மில்லியன் சனத்தொகையை கொண்டது. வங்காள விரிகுடாவை மேற்கு எல்லையாக கொண்ட இம்மாநிலத்தில் பௌத்தர்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
ரோஹிங்கயா முஸ்லிம்களின் அடக்குமறை வரலாறு இரண்டாம் உலகப்போருடன் ஆரம்பமானது. மார்ச் 28, 1942 ல் ஏறத்தாள 5,ooo முஸ்லிம்கள் மின்பயா மற்றும் ரோஹாங் நகர்களில் ராக்ஹின் தேசியவாத தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதுடன் இந்த சோக வரலாறு ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக இன்று வரை இந்த மக்கள் மியான்மார் அரசினால் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இன்று வரை இம்மக்களுக்கு குடியுரிமை வழங்க மியான்மார் அரசு மறுத்து வருகின்றது. UNHCR அமைப்பின் தகவல்களின் பிரகாகரம் இக்குடியுரிமை மறுப்பு காரணமாக இம்முஸ்லிம்கள் அடக்கு முறைக்கு முகம் கொடுப்பதோடு சுதந்திர நடமாட்டத்துக்கான உரிமை, பாரபட்சமான கல்வி, மற்றும் மறுக்கப்பட்ட நில உரிமை என்பவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இம்மக்களை மாற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மியான்மார் அரசின் பாரபட்ச நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லா நிலைகளின் காரணமாக அதிகமான மக்கள் அயல் நாடுகளுக்கு தப்பியோடுகின்றனர். ஏறக்குறைய 3 இலட்சம் மக்கள் பங்களாதேதிற்க்கு இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 24,000 பேர் மலேசியாவுக்கும் இன்னும் அதிகமானோர் தாய்லாந்துக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். துரதிஷ்டவசமாக இவர்களை வரவேற்கும் மன நிலையில் பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து அரசுகள் காணப்படவில்லை. இந்த அகதிகளை திருப்பி அனுப்ப பங்களாதேஷ் மியான்மார் அரசுடன் பேச்சுக்களை நடத்தும் அதேவேளை தாய்லாந்து அரசு கடல்வழியாக வரும் அகதிகளின் படகுகளை விரட்டி அடித்து அவற்றை கடலில் மூழ்கடிக்க செய்கின்றது. தாய்லாந்து அரசின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பக தகவல்களின் படி ரோஹிங்கயா முஸ்லிம்கள் அரச அமைப்புகளினால் கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். இக்கட்டாய ஊழியத்தை புரிய மறுக்கும் அல்லது முறையிடும் நபர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். சில சமயங்களில் இச்சித்திரவதைகள் மரணத்தில் முடிவுறுகின்றன. கட்டாய வேலை குழுக்களில் 7 வயதே நிரம்பிய சிறுவர்களும் அவதானிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல எகிப்திய நாளிதழ் ஒன்றுக்கு ஆக்கங்கள் எழுதும் வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் முஹம்மது எல்மஸ்ரி ரோஹிங்கயா முஸ்லிம்கள் உள்ளாகும் அடக்குமுறைகளை பட்டியல் படுத்துகையில் பலவகையான சுரண்டல்களுடன் நியாயமற்ற வரி விதிப்பு, அரச மயமாக்கப்படும் நிலங்கள், கட்டாய வெளியேற்றம், வீடுகள் அழிப்பு மற்றும் திருமணங்கள் மீதான தடைகள் என்பவற்றை குறிப்பிட்டுள்ளார். இந்த முஸ்லிம்கள் தொடர்ச்சியாக கட்டாய வேலையாட்களாக வீதிகளிலும் இராணுவ முகாம்களிலும் பணியாற்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மார் அரசின் ரோஹிங்கயா முஸ்லிம்களின் மீதான பாரபட்சம் மற்றும் அடக்குமுறை என்பன நீண்டகாலமாக சர்வதேச அமைப்புகளால் கண்டிக்கப்பட்டே வந்துள்ளன. பல வருடங்களாக மனித உரிமை ஆர்வலர்கள் இந்த கொடுமைக்கு எதிராக குரலெழுப்பியுள்ளனர். மே 2009 இல் மனித உரிமை கண்காணிப்பக பிரதி தலைமை அதிகாரி எலைனே பியர்சன் மோசமடையும் ரோஹிங்கயா முஸ்லிம்களின் மனித உரிமை நிலை தொடர்பாக ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ஆசியான் அமைப்பு மியான்மார் அரசுக்கு இந்த கொடுமைகளை நிறுத்த அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர் மியான்மார் அரசு இம்மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதோடு மட்டுமல்லாது அவர்கள் மியான்மார் குடிமக்கள் என்பதனையும் ஏற்க மறுக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.
தற்போது மீண்டும் ஒருதடவை தலைதூக்கியுள்ள வன்முறைகளின் காரணமாக ஏற்கனவே சிரமங்களை அனுபவித்து வரும் ரோஹிங்கயா முஸ்லிம்கள் மிகவும் பீதியுடன் வாழ்ந்துவருகின்றனர். 10 முஸ்லிம்கள் ரங்கூன் நகரில் இருந்து திரும்பி வரும் வேளை சுமார் 300 பேர் கொண்ட தீவிரவாத கும்பலால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கி வரும் ஒரு சர்வதேச தொண்டு நிறுவன தகவல்களின் படி ஜூன் 10 முதல் 28 வரை 650 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின் பிரகாரம் 50,000 தொடக்கம் 90,000 வரையான மக்கள் கலவரங்கள் தலை தூக்கியதை தொடர்ந்து இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் நடு நிலை ஊடகங்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் அற்ற நிலையில் இடம்பெயர்ந்தவர்களின் சரியான எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் முஸ்லிம்களின் 9,000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. ஜூலை 20 ஆம் திகதி சர்வதேச மன்னிப்பு சபை ரோஹிங்கயா முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் மியான்மாரின் மனித உரிமை முன்னேற்றத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வன்முறைகள், சட்ட ரீதியற்ற கைதுகள் மற்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலை மூலம் இது புலனாகுவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய கூட்டுறவு நிறுவனம் (Organization for Islamic Cooperation) இந்த படுகொலைகள் தொடர்பாக தனது கண்டனத்தை வெளியட்டுள்ளது. கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் டைம் துர்க் செய்தி நிறுவன தகவல்கள் படி 1000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
பிரபல மேற்குலக ஊடகங்கள் வழமை போல் இந்த முஸ்லிம் அவலத்தை பற்றி கண்டுகொள்ளவில்லை. அவற்றுக்கு இதை விட சுவாரசியமான விடயங்கள் வெளியிட வேண்டிய தேவை உள்ளது. வழமை போல் இந்த ஊடகங்களுக்கு முஸ்லிம்களின் மீதான இந்த அடக்குமுறை ஒரு முக்கிய விடயமாக தெரியவில்லை.
மேற்கத்தைய ஊடகங்களுடன் மேற்குலக அரசுகளுக்கும் இந்த அவல நிலை ஒரு பொருட்டாக தெரியவில்லை. 21 வருடங்கள் வீட்டுக்காவலில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கி கூட இந்த பிரச்சினை பற்றி வாய் திறக்கவில்லை
மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் அடக்குமுறைக்கு உள்ளாகும் இந்த அப்பாவி பொது மக்களின் துயர் கண்டு இதற்கு எதிராக தம்மாலான முறையில் குரல் கொடுப்பது மனிதன் என்ற வகையில் எமது தார்மீக கடமையாகும்.


