
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து
பதவியெனும் வரம்பெறவே தவத்தினிலும்
கசிந்துருகி நடுநிசியில் எழுந்துநின்று
கண்ணியமாய்த் தொழுகின்ற வேளையிலும்
சோதனைகள் துயரங்கள் துன்பங்கள்
சோதிக்க வரிசையாய் வந்துநின்று
போதனைகள் கூறிநிற்கும் வேளையிலும்
புகலிடமாய்த் தெரிகின்றத் தனிமையினை
இனிமையென ஏற்றுவிடும் உள்ளந்தான்
இவ்வுலகின் ஏற்றமிகு ஞானிகளின்
தனிமையாம் தவமெனும் பாடமாகும்
தவறுகளைத் தடுக்கின்ற கேடயமாம்
குழந்தையும் கருவாக உயிரணுவும்
கர்ப்பத்தைத் தனிமையில் சந்திக்கும்
அழகுதமிழ்க் கவிதைகள் உருவாக
அறிவுணர்வும் தனிமையில் சிந்திக்கும்
பேறுபெற்ற புலவர்கள் கூட்டத்தில்
பெருந்திரளாம் வினாக்கணைகள் வீசுமவர்
நூறுவினா ஒன்றாகச் சந்தித்து
நோகாமல் விடைதருவர் தனித்துநின்று!
தனிமையென்றால் ஊக்கத்தை வழங்குகின்றத்
தன்னம்பிக் கையென்றே பொருளாக்கு;
துணிவைத்தான் தருகின்ற சூட்சமும்
தனிமையில் மட்டும்தான் உண்டாகும்!


August 24, 2012 at 5:00 pm
தனிமையின் பொழுதுகள்; படைத்தவனுக்கே சமர்ப்பணம்!!!