புத்தளம் முஜாஹிதீன் பள்ளிவாசலில் நடைபெறும் தாருல் அர்கம் அல்குர்ஆன் மத்ரஸா மாணவ‚ மாணவிகளுக்கான ரமழான் விஷேட இஸ்லாமிய நிகழ்ச்சியொன்று 09.08.2012 ஆம் திகதி பள்ளிவாசலின் மேல்மாடியில் சிறப்பாக நடைபெற்றது. முஜாஹிதீன் பள்ளிவாசலின் பேஷ் இமாமும் குர்ஆன் மத்ரஸா நடத்துனருமான எம்.எச்.எம். மீரான் மொஹிடீன் தலைமையில் நடைபெற்ற இப் போட்டி நிகழ்ச்சியில் 34 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அத்தோடு பெற்றோர்களும் அங்கு சமுகமளித்திருந்தனர்.
காலை 9.00 முதல் 11.00 வரை நடைபெற்ற இப்போட்டி நிகழ்ச்சியில் தமிழ்-ஆங்கில-சிங்கள மொழிகளில் பேச்சு‚ கிராஅத்‚ ஹதீஸ்‚ தர்ஜுமா‚ கஸீதா‚ வரலாற்று நிகழ்வுகளை ரசனையுடன் கூறல் போன்ற இன்னோரன்ன போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேற்படி குர்ஆன் மத்ரஸாவிலுள்ள அனைத்து மாணவ-மாணவிகளும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலாவது கலந்து கொள்ளும்வண்ணம் மாணவரின் திறமைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் தயார்படுத்தப்பட்டிருந்தன.
அல்குர்ஆன் கூறும் உயிரினங்களான ஒட்டகம்‚ மீன்‚ காகம்‚ தேனீ போன்றவற்றை சிறார்களுக்கு மத்தியில் அல்குர்ஆனுடன் தொடர்புபடுத்தி அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
நோன்பு காலங்களில் சிறார்களின் நேரங்களை பிரயோசனமான வழியில் பயன்படுத்தவும் அல்குர்ஆனை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை சிறார்கள் மத்தியில் அதிகரிக்கவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகவும் வரவேற்கத்தக்கது.


