- மாணவர்கள் விசனம் தெரிவிப்பு -
தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கான இரசாயனவியல் பாடத்தின் முதலாம் பகுதி வினாப் பத்திரத்துடன் ஆவர்த்தன அட்டவணை வழங்கப்படவில்லை என மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
க.பொ.த. உயர் தரப் பரீட்சையில்இரசாயனவியல் பாட வினாப் பத்திரத்துடன் ஆவர்த்தன அட்டவணை வழங்கப்படுவது வழமையாகும். ஆனால் இம்முறை குறித்த பாட வினாப் பத்திரத்துடன் ஆவர்த்தன அட்டவணை வழங்கப்படாத நிலையில் ஆவர்த்தன அட்டவணை அடிப்படையில் மூன்று வினாக்கள் குறித்த பாடத்தில் இடம்பெற்றமையினால் பரீட்சார்த்திகள் பெரும் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு. எம். ஜே. புஷ்பகுமார‚ ஆவர்த்தன அட்டவணை வழங்கத் தேவையில்லை என இவ்வினாப் பத்திரத்தை தயாரித்த பேராசிரியர் கூறியதால் அது வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
வழமைக்கு மாறாக இம்முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் வினாப் பத்திரங்களில் சடுதியான மாற்றங்களும் இடம்பெற்றுள்ளன. இம்மாற்றங்கள் குறித்து எவ்வித முன்னறிவித்தல்களும் அறிவிக்கப்படாமை பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதேநேரம் இவ்வருட க.பொ.த. உயர் தரப் பரீட்சை வினாப் பத்திரங்களில் பல்வேறு பிழைகளும் இடம்பெற்றுள்ளன. இணைந்த கணிதம் பகுதி (i) இல் 15 (A) வினாவும் பகுதி (ii) இல் 12 ஆம் வினாவும் பிழையாக அமைந்திருந்தது.
இவ்வாறே உயிரியல் விஞ்ஞான பாட வினாப் பத்திரங்களில் சில வினாக்கள் உயிரியல் விஞ்ஞான ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் இல்லாத விடயங்களை உள்ளடக்கியிருந்தன.
சென்ற முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுவேறுகளில் இடம்பெற்ற குழறுபடிகளாலும் இவை குறித்து கல்வி அமைச்சரும் பரீட்சைக்குப் பொறுப்பான அதிகாரிகளும் அலட்சியமான பதில்களாலும் மாணவர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் கல்வித் துறை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டமை இங்கு நோக்கத்தக்கது.
இவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய கல்வித் துறையில் தவறுகளும் குழறுபடிகளும் அடிக்கடி இடம்பெற்று வருவது நாட்டின் கல்வித் துறையின் ஆரோக்கியத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகவே பலரும் கருதுகின்றனர்.

