Puttalam Online
star-person

சேகு மீரான் லெப்பை ஆலிம்

(S.I.M.Akram)

புத்தளத்தின் தலைசிறந்த ஆலிம்களில் ஒருவர்  சேகு மீரான் லெப்பை ஆலிம்

புத்தளம் மஜீத் மரைக்காரின் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த சேகு மீரான் லெப்பை ஆலிம் புத்தளம் நகரில் மார்க்கத்தைக் கற்று தேர்ந்த ஓரிரு  முன்னைய ஆலிம்களில் ஒருவருமாவார். சேகு மீரான் லெப்பை ஆலிம் அவர்கள்  01.08.1910 ம் ஆண்டு சேகு நெய்னா தம்பதியினருக்கு பிறந்த ஒரே பிள்ளையாவார். இவர் 7 வயதாக இருக்கும் போதே தனது தந்தையை இழந்து அநாதையானார். இளம் வயதிலேயே கணவரை இழந்த இவரின் தாய் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திருமணமும் செய்து கொண்டார்கள். இதனால் அவரது சிறிய தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்த  சேகு மீரான் லெப்பை ஆலிம் அவர்கள் முஅல்லிமாக இருந்த அவரிடமே குர்ஆன் ஓதும் முறையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தாலும் இவரது பிடிவாத குனமும் சிறிய தந்தையின் கடினபோக்கும் இருவருக்கும் இடையில் முறன்பாட்டை தோற்றுவித்தது. இதனால் தனது தாயின் மூலமே முழுக் குர்ஆனையும் கற்றுத் தேர்ந்ததோடு மார்க்கக் கல்வியின் அடிப்படைகளையும் கற்றுக் கொண்டார்கள்;.

தனது பாடசாலை கல்வியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசானிடம் சுமார் 2 மாதங்கள் கற்றுக் கொண்டதாக அடிக்கடி கூறிக்கொள்ளும் அவர்கள் மணற்தரையிலேயே எழுத கற்றுக் கொண்டதாகவும் கூறுவார்கள். இரு மாதங்கள் பாடசாலைக் கல்வியை கற்றுக் கொண்டாலும் தமிழ், சிங்களம் ,ஆங்கிலம் போன்ற மொழிகளை எழுத ,வாசிக்க ,பேச போன்ற திறன்களையும் பெற்றிருந்தார்கள். சிறு வயதிலேயே உடல், உள வலிமைகளை பெற்றிருந்த அவர் தந்தையின் வழிகாட்டல் இல்லாத காரணத்தால் முரட்டு சுபாவம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். இதனால் தாயின் சுமையை குறைப்பதற்காக வீடுகளுக்கு குடிநீர் விற்று வந்த இவர்கள், ஒரு முறை பொது கிணற்றடியில் ஒத்த வயதுடைய வேற்று மத ஒருவருக்கிடையில் ஏற்பட்ட தகராரில் இவரை தனது தந்தையின் சகோதரர் முசல்பிட்டியில் வசிப்பதால் அங்கு சில காலம் தங்கவைத்தார்கள். எனினும் அங்கும் இருக்க முடியாத அவர்கள் மீண்டும் புத்தளம் வந்து தாயிடம் வாழ்ந்து வந்தார்கள்.

1923 ஆண்டு அது ஒரு நோன்பு காலம் அப்போது  சேகு மீரான் லெப்பை ஆலிம் அவர்கள் பள்ளி வாசலுக்கு சென்றிருந்த வேளையில் காலியில் இருந்து வந்த மார்க்க பிரச்சாரக் குழு தங்களோடு சில மாணவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டது. எனினும் அப்போது சேகு மீரான் லெப்பை ஆலிம் அவர்கள் மாத்திரமே தான் வருவதாக கையை உயர்த்தி சம்மதம் தெரிவிக்கவே அக்குழுவினர் தங்களோடு தென் மாகாணத்திலுள்ள வெலிகமவிற்கு அழைத்துச் சென்றனர். வெலிகம முர்சிய்யா அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். அப்போது அக்கலாசாலையில் விடுதி வசதியின்மையால்  காலி கோட்டை பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா முன்னைய நாள் அதிபர் அஜ்வாத் ஆலிமின் தந்தையின் வீட்டிலேயே தங்கி கற்றுவந்தார்கள். முர்சிய்யா அரபுக் கல்லூரியில் 3 வருடங்கள் கற்றுத் தேர்ந்த அவர்கள் காலி பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா அரபுக் கல்லூரியில் மேலதிக கல்வியை தொடர்ந்து கற்று வந்தார்கள்.

சேகு மீரான் லெப்பை ஆலிம் அவர்கள் அஜ்வாத் ஆலிமின் தந்தையுடன் இணைந்து ஒவ்வொரு நாளும் 15 கி.மீ. தொலைவிலுள்ள காலிக்குச் சென்று காலி கோட்டையில் உள்ள மத்ரஸாவான பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா மதுரஸாவில் கற்று வந் தார்கள். அப்போது அக்கல்லூயின் அதிபராக அஜ்வாத் ஆலிமின் தந்தை சேவையாற்றிக் கொண்டிருந்தார்கள். எனினும் 1936 ம் ஆண்டு கொண்டாடப்பட்ட 45 வது வருட நிறைவு விழாவின் போதே இவர்களுக்கான பட்டச்சான்றிதழ் வழங்கப்பட்டது. 1933 ம் ஆண்டு தனது மதுரஸா கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்ட அவர்கள் தனது சொந்த ஊராகிய புத்தளத்திற்கு திரும்பினார்கள். தனது மதுரஸா கல்வியை தொடர்வதற்காக புத்தளம் ஈ.எஸ்.எம் (E.S.M ) முதலாளி அவர்கள் மாதாந்தம் 5 ரூபா அனுப்பி வைத்தாக சேகு மீரான் ஆலிம் அவர்கள் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

10 வருட காலம் தனது மதுரஸா கல்வியை முடித்துக் கொண்ட அவர்கள் ஊர் திரும்பியவுடன் அபூபக்கர் ஆலிமின் மூத்த சகோதரியை திருமணமும் செய்து
கொண்டார்கள். தனது சொந்த ஊரிளுள்ள கங்காணிக்குளம் தாருல் கரார் பள்ளியில் பேஷ் இமாமாகவும் குர்ஆனை கற்றுக் கொடுப்பவராகவும் 15 வருட காலங்கள் கடமையாற்றியுள்ளார்கள். புத்தளம் முஸ்லிம் கல்வி அபிவிருத்திச் சங்கத்திலும் இணைந்து சமூக சமய பணியாற்றியுள்ளார்கள். இவர்களிடம்
அதிகமானவர்கள் இவர்களிடம் ஓதிப் படித்துள்ளாதாக புத்தளம் வரலாறும் மரபுகளும் எனும் நூலில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்கள்.

இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் சென்று குத்பாக்கள் மார்க்க உபநியாசங்கள் நிகழ்த்தியுள்ளதோடு அப்பிரதேசங்களிலுள்ள வசதிகளற்ற மற்றும் மார்க்கக் கல்வியை கற்க விரும்பும் ஆண் பிள்ளைகள் அநாதை சிறார்கள் போன்றோரை தன்னோடு அழைத்து வந்து தான் கற்ற வெலிகம முர்சிய்யா, காலி பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா அரபுக் கலாசாலைகளுக்கு அனுப்பிவைத்ததோடு அவர்கள் ஆலிமாக வரும் வரைக்கும் ஒவ்வொருவருக்முரிய முழு செலவையும் அவர்களே ஏற்றிருந்தார்கள். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 90 பிள்ளைகளை  அழைத்து வந்து மதுரஸாக்களுக்கு அனுப்பிவைத்தாக அவரது  நாட்குறிப்பேட்டில் (Diary) குறிப்பிட்டிருந்தார்கள். இவர்களில் சிலர் மதுரஸா கல்வியை முடித்து ஆலிம்களாகியுள்ளதோடு இன்னும் சிலர் மதுரஸா  கல்வியை இடை நடுவில் விட்டு மீண்டும் இவர்களுடைய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களே தந்தை ஸ்தானத்திலிருந்து அவர்களுக்குறிய தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்துள்ளதோடு அவர்களுக்கு திருமணமும் செய்துவைத்துள்ளார்கள்.

இன்றும் நன்றி கடன் மறவாது அவர்களுடைய வீட்டிற்கு வந்து செல்பவர்களில் குருணாகல் பண்டாரகொஸ்வத்தையைச் சேர்ந்த அஹ்மத் ஆலிம், அரக்கியாலை உமர் லெப்பை ஆலிம், அரக்கியாலை செய்னுலாப்தீன் ஆலிம் ,விருதோடை ஷரீப் மௌலவி போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லாம். கனுக்கட்டியைச் சேர்ந்த ஷாஹல் ஹமீத் அவர்கள்
மதுரஸா கல்வியை இடை நடுவில் விட்டு சென்றவர்களில் ஒருவராவார். இவர் ஒரிரு வருடங்களுக்கு முன் புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் கல்விசாரா ஊழியராக பணிபுரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
புத்தளம் பெரிய பள்ளி வாசலில் ஜும்ஆவினை நடாத்துபவராகவும் கடமையாற்றியுள்ளார்கள். 1938 செப்டம்பர் 21 ம்  திகதி பெரிய பள்ளியின் புனர் நிர்மானத்தின் பின் திறப்பு விழாவின் போது முதலாவது அதான் (பாங்கு) சொன்னவரும் இவர்களேயாவார். அது மட்டுமல்ல புத்தளத்தின் ஐதுரூஸ் பள்ளியில் (புதுப் பள்ளி) முதன் முதலில் ஜும்ஆ ஆரம்பித்து வைத்ததும் இவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புத்தளத்தில் புதிதாக ஒலி பெருக்கி மூலம் மரண அறிவித்தல் அறிவிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவரும் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் மக்கள் மூலமே மரண செய்திகள் அறியப்பட்டு வந்துள்ளது. இவ்வறிவித்தலை புத்தளம் ஐதுரூஸ் பள்ளியிலேயே முதன் முதலில் சொல்லப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இவரது முதலாவது நிகாஹ் குத்பா பெரிஸ்டர் நெய்னா மரிக்காரின் திருமணத்தின் போது  செய்து வைத்துள்ளார்கள். புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலையில் 1948 ம் ஆண்டு தனது முதல் நியமனத்தை பெற்றுக் கொண்ட இவர்கள் புத்தளம் சாகிரா கல்லூரி, புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் அரசாங்க அரபு இஸ்லாம் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து 1970.01.15 ம் திகதி அரச சேவையிலிருந்தும் தனது 60 ம் வயதில் ஓய்வு பெற்றார்கள்.
தனது ஓய்வு காலத்தில் கொழும்பு சம்பாங்கோட்டை பள்ளியில் பேஷ் இமாமாக கடமையாற்றிய இவர்கள் மார்க்கக் கல்வியை போதிக்கும் விடயங்களில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளார்கள். பலர் அவரிடம் புனித அல் குர்ஆனை கற்றுத் தேர்ந்துள்ளனர். சேகு மீரான் லெப்பை ஆலிம் அவர்கள் சிறந்த பேச்சாற்றலும் குரல் வளமும் உள்ளவராக இருந்துள்ளதோடு வெள்ளிக் கிழமை குத்பாக்களில் கதீபாக நாட்டிலுள்ள பல பள்ளிவாயல்களில் குத்பாவை கிரமமாகவும் நிகழ்த்தியும் வந்துள்ளார்கள். இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் நிகழ்ச்சியில் பல நிகச்ழ்சிகளையும் நடாத்தியுள்ளார்கள். அன்னார் சிறந்த இனிமையான குரல் வளம் உள்ளவர் என்பதற்கு ஆதாரமாக அன்னாருடைய அதான் இன்றும் ரமழான் காலங்களில் 21, 27 ம் இரவுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசையில் ஒலிப்பரப்பப்படுவதை கேட்கக்கூடியதாக உள்ளது.
நாளாந்த விடயங்களை ஒரு நாளும் தவறவிடாமல் எழுதிவரும் பழக்கமுடைய சேகு மீரான் லெப்பை ஆலிம் அவர்கள் அரபு மொழியில் புலமை  பெற்றிருந்ததோடு அரபுத் தமிழிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். அன்னாரின் 300 பக்கங்களைக் கொண்ட கிதாபுத் தப்லீஃ எனும் அரபு  மொழியிலான தொகுப்பும் 918 பக்கங்களைக் கொண்ட வெள்ளிக் கிழமை குத்பாக்களின் தொகுப்பும் அவரது அரபு மற்றும் அரபுத் தமிழ் புலமைக்கு சிறந்த சான்றாகும். ஊர் சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களை அரபுத்தமிழ் கவிதைகளாக எழுதி வைத்ததோடு அதனை குடும்ப சிறார்கள் மற்றும் தன்னை சந்திக்க வருவோரிடம் அழகிய முறையில் வாசித்தும் காட்டுவார்கள். வாசிப்புப் பழக்கத்தையும் செஸ் விளையாட்டையும் தனது பொழுதுபோக்காக கொண்டிருந்த அவர்கள் தனது வீட்டிலேயே சிறிய வாசிகசாலையொன்றையும் வைத்திருந்தார்கள். தான் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின் 1970 – 1985 ம் ஆண்டு வரை நாட்டிலுள்ள பிரபல்யமான பல பள்ளிவாயல்களில் பிரதம கதீபாகவும் பேஷ் இமாமாகவும் கடமையாற்றியதன் பின் 1985 ம் ஆண்டு தொடக்கம் தனது 75 ம் வயதில் புத்தளம் புதுப்பள்ளிவாயலில் பேஷ் இமாமாகவும் கதீபாகவும் சேவையாற்றியுள்ளார்கள்.
புத்தளம் 5 ம் குறுக்குத் தெரு ஜே.பி. வீதி  17 ம் இலக்க வீட்டில் வசித்துவந்த அவர்கள் இரு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் செல்வங்களாகப் பெற்றிருந்தார்கள். எனினும் 2 ம் உலகப் போரின் போது புத்தளம் மக்கள் இடம்பெயர்ந்திருந்த சமயம் கோலரா நோயினால் பீடிக்கப்பட்ட மகன் முஹம்மது அஜ்வாத் ஒரு வயதாக இருக்கம் போது இறைவனடி சேர்ந்தார்கள். தனது இரண்டாவது மகள் மன்பூஸா உம்மா 25 ம் வயதில் அகால மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. தனது மனைவியை 1979 ம் ஆண்டு இழந்த அவர்கள் 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் திகதி தனது 80 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்கள். 1934 ம் ஆண்டு பிறந்த 78 வயதுடைய அவர்களுடைய மூத்த மகள் சித்தி இர்ரீபதுல் ஹயர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


2 thoughts on “சேகு மீரான் லெப்பை ஆலிம்

  1. Abdul Rahiman Abdul Razik says:

    The Majestic figure of our hazrath is still in eyes. His quran recital was melodious and still ringing in my ears. May All Mighty Allah light his Kabrustan. Aameen

  2. Rahman says:

    எமது ஊரில் தலை சிறந்து விளங்கிய சேகு மீரான் ஆலிமுக்கு அல்லாஹ் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All