Puttalam Online
social

உலக ஆசிரியர் தினம் – இரு பக்க பார்வைகள்

(ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்.)

எத் தேசமாயினும், எக் காலப் பிரிவாயினும், எம் மனித சமூகமாயினும் ‘ஆசிரியர்’ என்ற பிரிவினர் இரண்டு கருத்துக்கு இடமில்லாமல் மரியாதைக்குரியவர்களே. ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான முதலாவது தொடர்பு ‘கற்றல் கற்பித்தல்’ நடவடிக்கையில் ஆரம்பிக்கின்றது. புனித அல்-குர்ஆனில் இந் நிகழ்வை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

நாம் ஆதம் (முதல் மனிதனு)க்கு எல்லா பெயர்களையும் கற்றுக்கொடுத்தோம்
(அத்தியாயம் பகரா : வசனம் 30)

மனித இன வரலாற்றின் உருவாக்கமும் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையின் ஆரம்பமும் ஒன்றாகத் தோற்றம் பெறுகின்றது. இறைவனினால் தெரிவுசெய்யப்பட்ட எல்லா தூதர்களும் அவர்களுக்கு அருளப்பட்ட வேத வழிகாட்டலை கட்டளைகளை அவரவர் சமூகங்களுக்குக் கற்பித்தனர்.

இறை தூதர் வரிசையின் இறுதியானவரான முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதலாவது வேத வசனப் பகுதி, இக் கருத்தினை மீண்டும் வலியுறுத்துகின்றது.

வாசிப்பீராக! உம்மைப் படைத்த உமது இரட்சகனின் பெயரால்
(அத்தியாயம் அலக் : வசனம் 01)

இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தூதுத்துவ பணி குறித்து  பின்வருமாறு கூறினார்கள்:

நான் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்

இறை வழிகாட்டலின் முதல் தன்மைஆசிரியர் என தன்னைப் பிரகடணப்படுத்தும் போது, இந்திய உப கண்டத்தின் சங்க இலக்கியங்களும் இக்கருத்தைக்கொண்டிருப்பது அருமையானது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்பதனை திருக்குறளின் முதல் கவிதையாக அமைத்துள்ளார் வள்ளுவர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என ஆத்திசூடியில் பாடுகின்றாள் ஔவை.

இவ்வாறாக மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.

ஒக்டோபர் 05 உலக ஆசிரியர் தினம் World Teacher’s Day உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல் என்ற கூற்றுடன், பொதுக் கல்விக்காக அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இவ் உலக ஆசிரியர் தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும் வருகின்றது.

இத் தினம் கொண்டாப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது. சில நாடுகளில், கற்றல் கற்பித்தல் உள்ளிட்ட ஆசிரியரின் முக்கியத்துவத்தை மையப்படுத்திய வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இன்னும் சில நாடுகளில் ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிப் பாசறைகள், ஆசிரியர் தொழில் வழங்கும் ஏற்பாடுகள் (பல்கலைக் கழக மாணவர்களுக்கு அல்லது தகைமையுள்ளவர்களுக்கு) மற்றும் ஊடகங்களில் ஆசிரியரின் வகிபாகத்தை தரமுயர்த்துவதற்கான நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன. ஆசிரியர் தினத்தையொட்டி சில நாடுகளில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்படுவதுடன், வாழ்த்து மடல்கள், மின் வாழ்த்தட்டை (e-card) போன்றவை அன்பளித்தல் பரவலாக நடைபெறுகின்றது. சில பாடசாலைகள் ஆசிரியர்களுக்கு உணவு விருந்தளிப்பதும் காணப்படுகின்றது.

பொதுவாக ஆசிரியரை தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள் கொண்டுள்ளன. அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உள்ளன.

இலங்கை சிங்களவர் மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக் கொடுத்து காலில் விழுந்து வணக்கம் செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும் ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று கூறல் – கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின் மாணவர்கள் தாம் அமர்ந்த இடத்தில் இருந்து கூறல் – கேட்டல் செய்வதை எவரும் குறையாகக் கருதுவதும் இல்லை.

இலங்கை உட்பட இன்னும் சில நாடுகள் ஒக்டோபர் 6 ஆம் திகதி உலக ஆசிரியர் தினத்தைகொண்டாடுகின்றன. வெவ்வேறு தினங்களில் இத் தினத்தை கொண்டாடும் சில நாடுகளை நோக்குவோம்:

தாய்லாந்து – ஜனவரி 16 : 1956 ஆம் வருடம் முதல் கொண்டாடப்படும் இத்தினம் பாடசாலை விடுமுறை தினமாகும்.

ஈரான்  – மே 02 : 1980 மே மாதம் 02 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட பன்னூல் ஆசிரியரும், ஓய்வில்லா ஆசானுமாகிய பேராசிரியர் ஆயதொல்லா மொர்தாஸா மொதாஹ்ஹரி அவர்களை நினைவு கூறும் முகமாகவே இத் தினத்தை ஈரானியர்கள் தமது ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றனர். இத் தினத்தில் மாணவர்கள் தமது ஆசிரியர்களுக்கு மலர்ச் சென்டுகளை வழங்குவர்.

ஐக்கிய அமெரிக்கா : மே மாதத்தின் முதலாவது வாரத்தின் செவ்வாய்கிழமை இத் தினம் கொண்டாடப்படும். அன்றைய தினம் உத்தியோகபற்றற்ற விடுமுறை நாளாகக் கருதப்படும். வாரம் முழுவதும் கலகலப்பான விழாக்கோல பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மலேசியா – மே 16 : ஆசிரியர் தினத்தை ‘ஹரி குரு’ என்ற பெயரிலும் அழைப்பர். நாடு முழுவதும் மிக உற்சாகத்துடன் விமரிசையாகக் கொண்டாடுவர். எனினும் அன்றைய தினம் விடுமுறை நாள் அல்ல.

சீனா : 1931 இல் தேசிய மத்திய பல்கலைக் கழகம் ஆசிரியர் தினத்தை ஸ்தாபித்தது. பிறகு சீனாவின் தத்துவஞாணி கொன்பியூசின் பிறந்த தினமான ஓகஸ்டு 27 க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் பிறழ்வுகளினால் மீண்டும் அது செப்டம்பர் 10 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. எனினும் இன்றைய சீனர்களில் பெரும்பான்மையினர் மீளவும் கொன்புயூசியசின் பிறந்த தினத்திற்கு (ஒகஸ்டு 27) கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர்.

இந்தியா – செப்டெம்பர் 5 : இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான கலாநிதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவிக்கும் முகமாக அன்னாரது பிறந்த நாளில் ஆசிரியர் தினமும் கொண்டாடப்படுகின்றது.

இந்தோனீசியா : 2012 ஆம் ஆண்டுக்குரிய உலக ஆசிரியர் தின கூற்றாக எனது ஆசான் – எனது வீரன்’ (My Teacher, My Hero) எனப் பிரகடணப்படுத்தி, செப்டெம்பர் 05 – ஒக்டோபர் 05 வரை உலக ஆசிரியர் மாதம் என்றும் பிரகடணப்படுத்தியுள்ளமை கவனிப்புக்குரியது.

ரஷ்யா : 1965 முதல் 1994 வரை ஓக்டோபர் மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தினத்தைக் கொண்டாடினர். 1994 இன் பின் உலக ஆசிரியர் தினத்துடன் இணைந்து ஓக்டோபர் 05 ஆம் திகதி கொண்டாடுகின்றனர்.

துருக்கி – நவம்பர் 24 : எனினும் இதுவொரு விடுமுறை தினம் அல்ல.

பல்வேறு கண்டங்களில் ஆசிரியர் தினம் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் நிவ்சீலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆசிரியர் தினம் கொண்டாடுவதில்லை என்ற தகவல் சற்று அசாதாரணமாகவே இருக்கின்றது.

இத் தலைப்பின் போக்கினை சற்று வித்தியாசப்படுத்தி, சில ஆசிரியர்களும் சில பெற்றோர்களும் இந்த ஆசிரியர் தினத்தை உபயோகிக்கும் விதம் குறித்து ஆக்கபூர்வ விமர்சனப் பார்வையுடன் நோக்க வேண்டிய தேவையும் உள்ளது.

  • சில பெற்றோர்கள் தமது பிள்ளையின் வகுப்பாசிரியருக்குஅளவில் பெரிய – அதிக விலை பொருட்களை தனது பிள்ளையின் கைகளினால் வழங்கிவைக்க ஆசைப்படுவதில் தவறில்லை. அவரவர் சமய கலாசாரம் அநுமதிக்கும் விதத்தில் வணக்கம் செலுத்துவதிலும் தவறில்லை. எனினும் வறிய ஏழை மாணவர்கள் ஏக்கத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகும் விதமாக இவ்வாறான அன்பளிப்புக்களை வகுப்பறையில் வழங்குவதை விட பாடசாலை அலுவலகத்திலோ அல்லது உரிய ஆசிரியரின் இல்லத்திலோ வழங்கிவைப்பது முன்னரை விட சிறப்பானதாக இருக்கலாம்.
  • சில ஆசிரியர்களின் நடவடிக்கைகள் சிரிப்பிக்கும் விசனத்திற்கும் உரியது. வகுப்பு மாணவர்களிடம் பணம் சேகரித்து குறிப்பிட்ட பொருட்களை வாங்கி தனக்கு அன்பளிப்பு செய்யுமாறு கூறிய கோமாலிகளும் உண்டு. இன்னும் சிலர் தமக்குக் கிடைத்த அன்பளிப்புக்களை ஆசிரியர் மேசையின் மேல் ‘காட்சி’க்கு வைத்து ஏனைய ஆசிரியர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு. அவர்களில் சிலர்  தனக்குள் எரியும் நெருப்பை தமது வகுப்பு மாணவர்களின் மேல் கொட்டிய கொடூரமும் நடந்துள்ளது.

ஒரு சில பெற்றோரும் சில ஆசிரியர்களும் நடந்துகொள்ளும் பொருத்தமற்ற இச் செயற்பாடுகளினால் மாணவர்களின் உளநிலை பாதிக்கப்படுகின்றமை இவ்விடம் கவலையுடனும் கண்டிப்புடனும் நோக்கப்பட வேண்டிய விடயங்களாகும். மேற்சொன்ன பிழையான முன்னுதாரணங்களை பெற்றோர் – ஆசிரியர் சமூகங்கள் எதிர்வரும் ஆசிரியர் தினத்திலிருந்து தவிர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

இருபக்க விடயங்கள் இவ்வாறிருக்க தந்தையர் தினம், தாய்மார் தினம் போன்ற தினங்களுக்குக் கிடைத்துள்ள (இலங்கையில் குறைவானாலும்) விளம்பரமும் பிரபல்யமும் ஆசிரியர் தினத்திற்குக் கிடைக்கவில்லை என்பது கவனிப்புக்குரியது. அன்பளிப்பு செய்வதற்கென தயாரிக்கப்பட்ட விற்பனைப் பொருட்களும் காண்பதற்கு அரிது. ஒரு வகையில் காதல் எனும் மனித உணர்வை சந்தைப் பொருளாகி (Valentine’s Day) கேவலப்பட்டது போன்று ‘கல்வி வியாபாரி’ அல்லாத உத்தம ஆசான்களின் மரியாதை சந்தையில் விற்கப்படாமை நன்மையாகவே தோன்றுகின்றது.

எத் தேசமாயினும், எக் காலப் பிரிவாயினும், எம் மனித சமூகமாயினும் ஆசிரியர் என்ற பிரிவினர் இரண்டு கருத்துக்கு இடமில்லாமல் மரியாதைக்குரியவர்களே. ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.

அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு ‘ஆசிரியர் தினம்’, அவசியம் தான் !!


One thought on “உலக ஆசிரியர் தினம் – இரு பக்க பார்வைகள்

  1. Nadeer says:

    ஆக்கப்பூர்வமான பல தகவல்களைத் தந்ததுடன் ஆரோக்கியமான விமர்சனத்தையும் தந்த உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All