Puttalam Online
america

பக்கம் 4.3

  • 2 January 2013
  • 7,419 views

-பிரான்சிலிருந்து ரசூல்ஷா ஷரூபி –

இந்த வாரக் கட்டுரைக்குள் சோவியத் ரஷ்யா உள்ளே வருவதால், Communism பற்றி ஒரு வேகமான பார்வை;-

19ஆம் நூற்றாண்டில் பல தேசங்களின் எழுச்சிகளுக்கும் புரட்சிகளுக்கும் வித்திட்ட இந்தக் கொள்கை 21ஆம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்பாகவே தோல்வியடைந்த கொள்கைகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததை மறந்துவிட முடியாது. இந்தக் கொள்கையின் ஆதி மூலம் Karl Marks என்ற ஜேர்மன் சிந்தனையாளர்.

 “ஒரு சமூகத்தின் உடைமைகள் மீது  அல்லது சொத்துக்கள் மீது  அந்த சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சம உரிமை உண்டு. சமூகத்தில் அனைவரும் சமமே, எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் மனிதர்கள் மத்தியில் இருக்கக் கூடாது” இதுதான்  இந்த சிக்கலான சித்தாந்தத்தின் சுருக்கம்.

19 ஆம் நூற்றாண்டில்  பல தேசங்களிலும் முடியாட்சி முறையே நடை முறையில் இருந்து வந்தது. உழைக்கும் பாட்டாளி மக்கள் கசக்கி பிழியப் பட்டார்கள் என்பது உண்மை. எந்த வித உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கவில்லை. கடைசி வரை விலங்குகளைப் போல உழைத்து உழைத்து உயிரை விட்டார்கள். இவர்கள் உழைப்பு மன்னர்களாலும், நிலப் பிரபுக்களாலும் சுரண்டப் பட்டது. இதன் காரணமாக கார்ல் மார்க்சின் எழுத்துக்கள் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்குள் வேகமாக பரவியதும் வெகுவாக அவர்களை கவர்ந்ததிலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்று மில்லை என்பது எனது கருத்து.

இதை உரக்க சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக கார்ல்  மார்க்ஸ் நாடு நாடாக துரத்தியடிக்கப் பட்டார் என்பது இந்த கொள்கையின்  பின் நிற்கும் இன்னொரு சோகம்.

ஆனால், இந்தக் கொள்கை அமெரிக்காவுக்குள் முளைத்த போதெல்லாம் ஒன்று முளையிலேயே கிள்ளி எறியப் பட்டது அல்லது  இடையிலேயே களை எடுக்கப் பட்டது. முதலாளித்துவத்துக்கு நேர் எதிரான இந்தக் கொள்கையை அமெரிக்க அதிபர்கள் கடைசி வரை அமெரிக்காவுக்குள் வரவிடவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

————————————————————————————————————————————————————–

ஹிட்லரின் எழுச்சியை கண்ட அமெரிக்கா அதன் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாக கடந்த வாரத்தில் முடித்திருந்தோம். அதற்கு அரசியல் ரீதியாக மிக முக்கிய காரணம் ஒன்றுமுண்டு Brothers. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்!

முதலாம் உலகப் போரின் முடிவு எங்கேயோ கிடந்த ஹிட்லரை எப்படி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விஸ்வரூபம் எடுக்க வைத்ததோ, அப்படியே ரஷ்யா என்ற ஒரு சாம்ராஜ்யத்தையும் புரட்டிப் போட்டது.

1917 ஆம் ஆண்டு வரைக்கும் தலைமுறை தலைமுறையாக  ரஷ்யாவை ஆட்சி செய்து வந்த Czar (மன்னர்) கள் தங்கள் உறவுகளையும், நிலப் பிரபுக்களையும் பக்கத்தில் வைத்து கவனித்துக் கொண்டார்களே தவிர, ஏழை குடிமக்களை கண்டு கொள்ளவில்லை. காலம் செல்லச் செல்ல மன்னருக்கும் மக்களுக்குமான இடைவெளி வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்டதாக விரிசல் எடுத்தது. குறிப்பாக தொழிலாளர்களும் விவசாயிகளும் கசக்கிப் பிழியப்பட்டார்கள்.

அரசன் அடிமை, முதலாளி தொழிலாளி, பணக்காரன் ஏழை, உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி போன்ற வகுப்பு வித்தியாசங்களாலும் ஏற்றத் தாழ்வுகளாலும் முழு ரஷ்யாவுமே கிழிந்த அழுக்குத் துணியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. Czarகள் தொடர்ந்தும் ஏழைகள் தலையில் குட்டிக்கொண்டே இருந்தார்கள்.

குனிந்துகொண்டேயிருந்த தொழிலாளர்களும் விவசாயிகளும் இனியும் குனியமுடியாமல் நிமிர்ந்தபோது, வெடித்தது ரஷ்யப் புரட்சி!!! வெடிக்கவைத்தவர் லெனின்.  வெடித்த வேகத்தில் சிதறிய அதன் பொறிகளில் உலகின் சந்து பொந்துகள் எல்லாம் பற்றிக்கொண்டது சோஷலிச நெருப்பு.

அதுவரையும் அழுக்குத் துணியாக காட்சியளித்துக் கொண்டிருந்த ரஷ்யா, புரட்சியின் பின் சிவப்பாடைப் போர்த்திய கவர்ச்சிக் கன்னியாக உலக அரங்கில் வலம் வரத்தொடங்கியது. அதன் கவர்ச்சியில் சீனா, வியட்நாம், கொரிய தேசங்களும் மயங்கிச் சரிந்தன. சரிந்தவர்களை தோளோடு தோள் அனைத்துக் கொண்டது ரஷ்யா.

ஐரோப்பாவில் தொடங்கி ஆசியாவின் எல்லை வரை தொடரும் அதன் அகன்ற   நிலப்பரப்பு, அதற்குள் கொட்டிக் கிடக்கும் வளங்கள், அதன் மக்கள் பலம், புதிய அரசின் மீது மக்கள் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை, மிகக் குறுகிய காலத்துக்குள் அரசியல், விஞ்ஞான, ராணுவ ரீதியிலான அதன் வளர்ச்சி, வம்பு தெம்புகளுக்குள் போய்விடாமல் கவனமாக வழி நடத்திச் செல்லும் அதன் தலைவர்கள், அதற்கும் மேலாக உள்ளே நடப்பதை நோட்டம் விட முடியாத அதன் வலுவான இரும்புக் கவசம்….. இப்படி சோவியத் ரஷ்யாவின் எழுச்சியை பார்த்து அன்றைய முதலாளித்துவத்தின் முகவரிகளான அமெரிக்கா, பிரித்தாணிய, பிரான்ஸ் போன்ற நாடுகளால் பொறாமைப் படாமல் இருக்க முடியுமா என்ன?

சரியான போட்டி ஒன்று கண்முன்னே முளைத்து, வேர்விட்டு வளர்வதை கண்டுகொண்டது அமெரிக்கா. முளையிலேயே கிள்ளி ஏறிய முடியாவிட்டாலும், இடையில் கிள்ளி ஏறிய ஏதாவது வழிகள் கிடைக்கின்றதா? என்று தேடியவர்களுக்கு முதலில் கண்ணில் பட்டது ஜப்பான்.

ஜப்பான் என்பது பல தீவுகளின் சேர்க்கை. அதில் ஒரு சில தீவுகள் எங்களுக்கும் சொந்தம் என்று ரஷ்யா ஆரம்பித்ததில், 1900 ஆம் ஆண்டுகளின் தொடக்கங்களில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் ஆரம்பித்த பகை, பல தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிருந்தது. இதன் உச்ச கட்டமாக ரஷ்யாவின் கிழக்குப் பகுதியை அடித்தாவது பறிப்பது என்று தந்திர ஆலோசனைகள் நடத்திக் கொண்டிருந்ததது ஜப்பனிய இராணுவம். எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா! ஜப்பானை நண்பனாகப் பார்த்தது அமெரிக்கா. இந்த ஒன்றுக்காகவே தேவையான அளவு பொருளாதார, இராணுவ உதவிகளை வழங்கி, ஜப்பானை ஆசியாவில் ஒரு சண்டியனாக வளர்த்து விட்டிருந்தது. இன்று மத்திய கிழக்கில் காரியம் சாதிப்பதற்காக எப்படி இஸ்ரேலை மிரட்டும் சண்டியனாக வளர்க்கின்றதோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான உறவைத்தான் 1937 வரைக்கும் ஜப்பானுடனும் கொண்டாடிக் கொண்டிருந்தது அமெரிக்கா. (-உறவு பகையான கதை பின்னால்  வரும்).

இது இப்படியிருக்க, ஐரோப்பாவில் ஹிட்லர் யூதர்களை எப்படியெல்லாம் போட்டு மிதித்தாரோ அதற்கு கொஞ்சமும் குறையாமல் கொம்யூனிசம் பேசியவர்களையும் பந்தாடினார். அதற்கு அவர் கூறும் காரணம் முதலாம் உலகப் போர் சூடாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் கொம்யூனிஸ்ட்டுக்கள் அழைப்பு விடுத்த வேலை நிறுத்த போராட்டம். (அதன் தொடர்ச்சியாக தடைப்பட்ட ஆயுத உற்பத்தி. விளைவாக ஜெர்மனிக்கான ஆயுத வழங்கல் (Supply) தடைபட, அதுவே ஜெர்மனியை தோல்வியின் பக்கம் தள்ளியதாகவும்) இது பச்சை துரோகம் என்பதும் ஹிட்லரின் வாதம்.

ஜனநாயகத்தை விட்டு வைத்தால்…..கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கொம்யூனிஸ்ட்டுக்களை விட்டுவைத்தால்…. கொடி தூக்குவார்கள். தனது ‘அகன்ற ஜெர்மனி’ என்ற கனவு கைகூட இதெல்லாம் சரிபட்டு வராது என்பது அவர் போட்டு வைத்திருந்த கணக்கு.

சர்வாதிகாரியாக அவதராம் எடுத்த கையோடு கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை, உறுப்பினர்களை, ஆதரவாளர்களை எல்லாம் உள்ளே தூக்கிப் போட்டார். எஞ்சியவர்கள் அரசியலாவது! கட்சியாவது! மூச்சுவிடுவதற்கு சுவாசப் பையாவ மிஞ்சினால் போதும் என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமெடுத்தார்கள்.

ஹிட்லரின் உயிர் மூச்சு ஒன்றே ஒன்றுதான். அது ‘ஜெர்மனி…ஜெர்மனி…ஜெர்மனி, அதுவும் அகன்ற ஜெர்மனி, கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஜேர்மனி மட்டுமே! இப்படிப் பட்ட ஒரு கொள்கை வெறியோடு இருப்பவர், அருகிலேயே கொம்யூனிஸ்ட்டுக்களின் தலைமை பீடமான சோவியத் ரஷ்யாவை வைத்து அழகு பார்ப்பாரா என்ன? நிச்சயம் காலால் எட்டி உதைப்பார்! என்பது அமெரிக்காவின் கணிப்பு. இதைத்தான் ஹிட்லரின் எழுச்சி மூலம் எதிர்பார்த்தார் ரூஸ்வெல்ட்.

(இப்போது, அமெரிக்கா காத்து வந்த மெளனத்திற்கான காரணம் முழுதாக புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்).

ஆனால், ஹிட்லர் ஒரு காட்டுக் குதிரை. எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதவர். நினைத்த இடமெல்லாம் மேய்வார். திமிராகப் பாய்வார் என்பதை அறிந்துகொள்ள அடுத்த வாரம் வரை காத்திருப்போம். (Inshaa Allah!!)

Source:-

Books:

A People’s History of the United States- Howard Zinn (2004).

Dollar Dhesam- P. Raghavan (2004 India).

Links:

http://books.google.fr/books/about/Russian_Revolution.html?id=wqJf5LXpRggC&redir_esc=y

.http://www.history.com/topics/russian-revolution

http://www.history.co.uk/explore-history/ww2/sino-japanese-war.html

http://www.hitler.org/writings/Mein_Kampf/

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All