Puttalam Online
editorial

எங்கள் இதயங்களால் பெரிய பள்ளிவாயலுடன் இணைவோம்!

  • 11 January 2013
  • 2,829 views

இறை இல்லங்களான மஸ்ஜிதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூக நிறுவனங்களாகும். முஸ்லிம் உம்மத்தின் இருதயமே மஸ்ஜித். இந்த உம்மத்திற்கு நாளாந்தம் உற்சாக ரத்தம் பாய்ச்சுகின்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையமே மஸ்ஜித். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய தளமே மஸ்ஜித். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும், எங்கு குடியேறினாலும் ‘மஸ்ஜித்’ என்ற அச்சை நோக்கியதாகவே அவர்களது வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டும். மஸ்ஜிதை அடியொட்டி எழுகின்ற சமூக அமைப்புச் சிந்தனை எமது புதிய கண்டுபிடிப்பல்ல. ஸீரா என்னும்  றஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் தஃவா வரலாற்றில் நாம் காண்கின்ற பேருண்மையாகும். இது நபித்துவ சிந்தனையாகும். நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் முழுமை பெறுவதற்கு ஒரு சில மைல் தூரம் இருக்கும் போது ‘குபா’ என்ற இடத்தில் ஒரு மஸ்ஜிதை அவர்கள் நிர்மாணித்தார்கள். ஒரு வாரம் மட்டுமே அங்கு தங்கியிருந்தார்கள். பின்னர் இடம்பெயர்ந்து மதீனத்து மண்ணில் கால் பதித்து மஸ்ஜிதுந் நபவியை நிறுவினார்கள். முஸ்லிம் உம்மத் மஸ்ஜித் என்னும் இருதயம் இன்றி வாழ்வது சாத்தியமில்லை என்பதை இது தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

மேலே நாம் விளக்கியுள்ள சிந்தனைப் பின்புலத்தில் நின்று கொண்டு எமது புத்தளம் நகரத்தின் தாய் பள்ளியாகிய முஹிய்யுத்தீன் ஜும்ஆ மஸ்ஜிதை (பெரிய பள்ளிவாயல்) நோக்குவோம். இன்று புத்தளம் நகர மக்களுக்கு ஒரு பொதுத் தலைமையை வழங்கவல்ல நிலையை அது எட்டிப் பிடித்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

பள்ளிவாயலின் நிர்வாகக் கட்டமைப்பு பள்ளிவாயல் யாப்புக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய பள்ளிவாயல் நிர்வாக சபைக்கு பெரிய பள்ளி மஹல்லா உள்ளிட்ட கடைத்தெரு பஸார் சார்பாகவும், மேலும் புத்தளம் நகரப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையிலும் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறே முப்பெரும் தஃவா அமைப்புக்களையும் (தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தௌஹீத் அமைப்பு), ஷரீஆ கௌன்ஸிலையும், புத்தளம் ஜம்இய்யதுல் உலமாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களும் இந்த நிர்வாக சபைக்கு உள்ளீர்க்கப்படுகின்றனர். இத்தகைய பன்மைத்துவ நிர்வாகக் கட்டமைப்பு நீதமானதும், கூட்டுப் பொறுப்புத் தன்மை மிக்கதுமாகும். அது மட்டுமல்ல நம்மை நாமே நிர்வகித்த கட்டுப்படுத்துகின்ற அன்பு, அரவணைப்பு, ஒத்துழைப்பு முதலான பண்பாட்டுப் பெறுமானங்களின் மீது எழுந்துள்ள இஸ்லாமிய பொதுத் தலைமைத்துவமாகும். இது குறித்ததொரு சமூகத் தரப்பின் ஆளுகைக்குட்பட்ட அதிகாரபீடமல்ல.

புத்தளம் முஹிய்யுத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் கட்டமைப்பின் பிரதான அலகுகளாக மஜ்லிஸுஷ் ஷூரா, பைதுஸ் ஸகாத், வைத்திய சகாய நிதி, புலமைப் பரிசில் திட்டம் முதலானவை அமைந்து காணப்படுகின்றன. இவை புத்தளம் பெரிய பள்ளிவாயலின் இயங்குதளத்தை மிகவும் தெளிவாக சுட்டுகின்ற குறிக்காட்டிகளாகும்.

மஜ்லிஸுஷ் ஷூரா புத்தளம் முஸ்லிம் மக்களின் சமூகப் பொருளாதார கல்வி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பரிகாரத்தையும் வழங்கி காத்திரமான மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் வெற்றி இலக்காகக் கொண்டு இயங்குகின்ற மன்றமாகும். இம்மன்றத்தின் முக்கிய கூறாகிய இணக்க சபையானது காணிப் பிரச்சினை, குடும்பத் தகராறு உள்ளிட்ட சுமார் 2000 பிரச்சினைகளை உள்வாங்கி அநேகமான பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்த்து வைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

மஜ்லிஸுஷ்ஷூரா சமூகத் தீமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து அவற்றை ஒழிப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. இத்தகைய சமூகம்சார் நடவடிக்கைகளினால் புத்தளம் பெரிய பள்ளிக்கும் சிவில் சமூகத்திற்கும் இடையிலான நல்லுறவு அதிகரித்து வலுப்பெற்று வருகின்றது.

இவ்வகையில் புத்தளத்தில் சமீபத்திய காலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் சமூக நலன் கருதி தோற்றம் பெற்றுள்ள அமைப்புக்களையும், நிறுவனங்களையும் நெறிப்படுத்தி ஒரே குடையின் கீழ் இயங்க வைப்பதற்கான முயற்சியில் புத்தளம் பெரிய பள்ளிவாயல் வெற்றி கண்டுள்ளது. இவ்வமைப்புக்கள் புத்தளம் பெரிய பள்ளிவாயலின் வழிப்படுத்தலில் தொண்டர் அணியினராக செயற்பட இணக்கம் தெரிவித்தமையானது புத்தளம் பெரிய பள்ளிவாயல் பொதுத் தலைமையின் மீது புத்தளம் மக்களுக்குள்ள அதீத நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகின்றது. இத்தகைய இளைஞர் அமைப்புக்கள் அண்மையில்  பெரிய பள்ளிவாயலின் தலைமையின் கீழ் வெள்ள நிவாரண சேகரிப்பு பணியில் ஈடுபட்டமை இதற்கு நல்லதொரு சான்றாகும்.

இவ்வாறே பைதுஸ் ஸகாத்தின் பணியினால் நூற்றுக்கணக்கான பயனாளிகளை புத்தளம் பெரிய பள்ளிவாயல் சம்பாதித்துள்ளது. நீண்ட கியூ வரிசையில் நின்று ஏழைகள் ஸகாத் என்ற பெயரில் சில்லறைகளின் சங்கீதத்தை செவிமடுத்த காலத்துடன் இன்றைய நிலையை ஒப்பிடும் போது பைதுஸ் ஸகாத்” ஒரு பேரருள் என்பதை நடுநிலைமையாக சிந்திக்கின்ற அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

சோபை இழந்து காணப்பட்ட பள்ளிவாயல் மண்டபங்களும், வறாந்தாக்களும் மார்க்க மற்றும் சமூக விவகாரங்களுக்காக உலமாக்களாலும், பொது மக்களாலும், துறைசார் அறிஞர்களாலும் துடிப்புமிக்க  எமது  இளைஞர்களாலும் களைகட்டுவது புத்தளம் பெரிய பள்ளிவாயல் தலைமையின் மீதுள்ள அவர்களின்  விசுவாசத்தை பறைசாட்டவில்லையா?

அல்லாஹ்வின் அருளினால் புத்தளம் நகர மக்களுக்கு நல்லதொரு தலைமை அமைந்துள்ளது. தலைமையில் உள்ளவர்கள் மனிதர்கள். அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்று நாம் கூறவரவில்லை. முகங்கள் மாறலாம். ஷரீஆவின் நிலைக்களனில் நின்றுகொண்டு முகங்களை மாற்றும் உரிமையையும் நாம் பெற்றுள்ளோம். ஆனால், பலரது சிந்தனைகளும், வியர்வைத் துளிகளும், பல மணித்துளிகளும், சில்லறைகளும், துஆப் பிரார்த்தனைகளும், அயராத உழைப்புக்களும் இந்தப் பொதுத் தலைமையின் அத்திவாரத்துள் புதைந்து கிடக்கின்றன. எனவே, தலைமையை அசைத்துப் பார்க்கும் முயற்சியும், பொழுதுபோக்குத்தனமும் பெரும்பாவமாகும். புத்தளம் பெரிய பள்ளிவாயல் அல்லாஹ்வின் இல்லம். இதற்கு ஹரம்ஷரீப், மஸ்ஜிதுந் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா என்ற புனிதத்தளங்களின் தரத்திற்கு நிகர்த்த புனிதத்துவம் இல்லை என்பது உண்மையாயினும் அறவே புனிதம் இல்லாத வெறும் மஸ்ஜிதல்ல முஹிய்யுத்தீன் ஜும்ஆ மஸ்ஜித்.

புத்தளம் பெரிய பள்ளிவாயலுக்கு அகவை அறுபத்தாறு. பழம்பெரும் பள்ளிவாயல். புத்தளம் முஸ்லிம் மக்களின் ஆழ் மனதில் இடம்பிடித்த பள்ளிவாயல். இன்றும்கூட தூர இடங்களில் இருந்து இந்தப் பள்ளிவாயலுக்கு ஜும்ஆத் தினத்து கடமைகளை நிறைவேற்ற வருகின்ற மூத்தவர்களை, முதியவர்களை காண முடியும். இந்தப் பள்ளிவாயல் முஸ்லிமல்லாத மக்களின் உள்ளங்களிலும் இடம்பிடித்துள்ளது.

புத்தளம் பெரிய பள்ளிவாயலை இறையச்சமும், பயபக்தியும், பேணுதலும் உள்ள இந்த ஊரின் முன்னோர்கள் நிர்வகித்தனர். குறிப்பாக முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் அல்ஹாஜ் H.S இஸ்மாயில் அவர்களை சிறப்பாகக் குறிப்பிட முடியும். அவர்கள் இந்த ஊரின் அரசியல் தலைமைக்கும், சமய தலைமைக்கும் ஒரு Model  ஐ வழங்கினார். இந்த ஊரில் புதிதுபுதிதாக குத்பாப் பிரசங்கங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த ஒரே ஜும்ஆப் பள்ளிவாயல் முஹிய்யுத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் மட்டுமே!

1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனமுறுகல் இனக்கலவரமாக மாறியபோது அக்கால புத்தளம் முஸ்லிம் மக்கள் அசாதாரண சூழலிலிருந்து தம்மை விடுவித்துப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், சுமூகமான தீர்வு ஒன்றை பெறுவதற்காகவும் ஒன்றுகூடியது இந்தப் பள்ளிவாயலில்தான்! அப்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 7 பேர் பலியானதும் இந்தப் பள்ளிவாயலில்தான்! முதன் முதலில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஷுஹதாக்களைக் கண்ட ஒரு பள்ளிவாயல் முஹிய்யுத்தீன் ஜும்ஆ மஸ்ஜிதுதான்.

“இந்தப் பள்ளிவாயலுக்கு பிரதான வாயில் மட்டும் போதுமானது. குத்பாப் பிரசங்கம் முடிந்து அவ்வாயிலினூடாக எல்லோரும் திரளாக வெளியேறும்போது அது இந்நகர முஸ்லிம்களின் ஐக்கியத்தையும் பலத்தையும் பறைசாற்றுகின்ற கண்கொள்ளாக் காட்சியாக அமையும்” என்று அக்கால எமது முன்னோர்கள் பேசிக் கொண்டார்களாம்! இது ஒரு வெற்றுச் சிந்தனையல்ல! மௌட்டீகமும் அல்ல.

எனவே, புத்தளம் பெரிய பள்ளிவாயல் அன்றும், இன்றும், இனி என்றும் எமது உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துள்ள இறைவனின் புனித இல்லம்! எல்லாப் பிரச்சினைக்கும் ஏன் பெரிய பள்ளியை நோக்கிச் செல்ல வேண்டும்? அங்கு என்னதான் இருக்கின்றது? என்று எழுப்பப்படும் வினாவுக்கு ஓரளவு விளக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சிலரின் முகங்கள் சிலருக்கு பிடிப்பதில்லை என்பது உண்மையான யதார்த்தமே! அதற்காக பெருத்த சவால்களையெல்லாம் முறியடித்து மிகவும் சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள புத்தளம் பெரிய பள்ளி பொதுத் தலைமைத்துவத்திற்கு சேறுபூச முயற்சிப்பதும், அதை அசைத்துப் பார்ப்பதை பொழுதுபோக்குத் தனமாகக் கொள்வதும் பெரும் பாவமே!

 எங்கள் இதயங்களால் பெரிய பள்ளிவாயலுடன் இணைவோம்!

எங்கள் இதயங்களை விசாலப்படுத்து ரப்பே!!

அன்புடன்

புத்தளம் ஒன்லைன்  இணையக் குழு

11.01.2013

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All