Puttalam Online
star-person

முஹம்மத் (W.F.X.DE.சில்வா) : வட்டக்கண்டல் வித்தியாலய ஆசிரியர்!

நம்மவர்களில்… இன்றியமையாதவர்கள்…! இப்பகுதி எமது பிரதேசத்தில் வாழும் விஷேட ஆற்றல்மிக்கவர்கள், எமது சமூகத்திற்கு பிரத்தியேகமான சேவைகளை வழங்கிவரும் தனித்துவமானவர்கள் எனக்குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். இம்முயற்சி, பிறர் புகழ்பாடும் நோக்கமல்லாது அல்லாஹ் வழங்கிய ஆற்றல்களையும் அருட்கொடைகளையும் பயன்படுத்தி சமூகப்பணி புரிபவர்களை முன்னுதரணமாக காட்டி, எம்மில் பலரையும் இச்சமூகப் பணிக்காகத் தூண்டுவதாகும். இந்த வகையில் மண்ணின் மைந்தர்கள் பகுதியில் இம்முறை கல்வியியலாளர் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றோம்.

வட்டக்கண்டல் வித்தியாலயத்தில் சில்வாவாக முதல் நியமனத்தைப் பெற்று 29 வருடத்தின் பின் முஹம்மதாக இன்று ஓய்வு பெறுகிறார்!

S.I.M.Akram

———————————————————————————————————————–

புத்தளம் சேனைக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் தற்போது இஸ்மாயில் புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. W.F.X.DE.சில்வா ஆசிரியர் அவர்கள் 1984 ம் ஆண்டு ஆசிரிய சேவைக்குள் இணைந்து கொண்டார்கள். இதற்கு முன் கொழும்பு யுனைட்டட் மோட்டர்ஸ், புத்தளம் நகரசபை போன்ற இடங்கலிலும் பணியாற்றியுள்ளார்கள்.

1984 ம் ஆண்டு ஆங்கில ஆசிரியர் நியமனத்தை மணற்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கு  பெற்றுக் கொண்டாலும் அங்கு செல்லாது தனது சொந்த விருப்பத்தை சிலாபத்தில் உள்ள கல்வி அதிகாரிக்கு தெரிவித்து இப்பாடசாலைக்கு இடமாற்றத்தை பெற்றுக்கொண்டார்கள்.

1984 தொடக்கம் 1986 ம் ஆண்டு வரை புத்தளத்திலிருந்து மிதி வண்டியிலேயே சுமார் இரண்டு (2) வருடங்கள் பாடசாலைக்கு தினமும் வந்து சென்றார்கள். தொடர்ந்தும்  மிதிவண்டியிலே 10 KM வந்து செல்வது மிகவும் கஷ்டமாக இருந்ததனால் 1986  ம் ஆண்டு வட்டக்கண்டலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாடசாலைக்கு அண்மையிலேயே தங்கினார்கள். பின்னர் இப்பாடசாலையின் அப்போதைய அதிபர் மர்ஹும் A.A.கபூர் அவர்கள் அரசுக்கு சொந்தமான காணித்துண்டொன்றை பெற்றுக் கொடுத்தார்கள்.

றோமன் கத்தோலிக்க சமயத்தை சேர்ந்த இவர்கள் இதே பாடசாலையில் 25 வருட காலம் சேவையாற்றிய பின் தனது சுய விருப்பின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவி தனது பெயரையும் “முஹம்மது” என தானே சூட்டிக் கொண்டார்கள்.

இப்பாடசாலையில் 29 வருட காலமாக கடமையாற்றிய இவர்கள், ஆசிரியராக, அதிபராக 1996 ல் கடமையாற்றி 2005 ம் ஆண்டு தொடக்கம் இப்பாடசாலையின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபராக கடமையாற்றினார்கள். இதற்கு முன்னும் பல அதிபர்களின் நிருவாகத்திலும் பிரதி அதிபராக இவரே இருந்துள்ளார்கள். காலத்துக்கு காலம் அதிபராக வந்தவர்கள் இவர்களின் ஆலோசனையின் பிறகே எவ்விடயத்தையும் செய்வார்கள். இப்பாடசாலைப் பற்றியும் இவ்வூர் பற்றியும் இவர்களுக்கு இருந்த ஆழ்ந்த அனுபவமே இதற்கு காரணமாகும்.

பாடசாலையின் மூத்த ஆசிரியராக இருந்த இவர்கள் 1986 தொடக்கம் பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். அதிபர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் பிரச்சினைகள் எத்தரப்புகளிலிருந்து வந்தாலும் தனது அனுபவத்தின் ஊடாக பல சந்தர்ப்பங்களில் தீர்த்தும் வைத்துள்ளார்கள்.

இப்பாடசாலையின் வயதில் 1/3 பகுதிக்கும் கூடுதலாக கடமையாற்றியுள்ள இவர்கள் பல அதிபர்களோடும் பல ஆசிரியர்களோடும் ஒன்றாகவே பணிபுரிந்த அனுபவமுடையவராகக் காணப்படுகின்றார்கள். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற இவர்கள் தனது 60 ம் வயதில் 29 வருட சேவையின் பின் 2013 ம் வருடம் ஜனவரி 28 ம் திகதி ஓய்வு பெற்றார்கள். இவ்விடைவெளி பாடசாலைக்கு பெறும் இழப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆரம்பத்தில் வேற்று சமயத்தை உடையவராக இருந்தாலும் பாடசாலையின்  வளர்ச்சியில் ஒரு நாளும் துளியளவும் பின் நின்றதுமில்லை. யாருடனும் வேற்றுமை காட்டியதுமில்லை. காலத்திற்கு காலம் அதிபர்களாக இருந்தவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும் அதிபர்கள் இல்லாத போது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றியவராகவும் கருதப்படுகின்றார்கள். பாடசாலையே அவர்களது முழு மூச்சாக இருந்துள்ளதை நாம் சந்தித்த முன்னாள் அதிபர்களின் வார்த்தைகளிலிருந்து அறிய முடிகின்றது.

குக் கிராமத்தில் உள்ள இப்பாடசாலையின் வளர்ச்சியைக் கண்டு பலரும் வியந்து பேசுகின்றனர் என்றால் அதில் பெரும் பங்கு இவர்களையும் சாரும். கல்வியில், பண்பாட்டில், ஒழுக்கத்தில் அடிமட்டத்தில் இருந்த மக்களை இப்பாடசாலையே உன்னத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதில் பெரும் பங்கு இவர்களையும் சாரும்.

இவ்வூருக்கும் இப்பாடசாலைக்கும் இம்மக்களுக்கும் இவர்கள் ஆற்றிய சேவை எண்ணிலடங்காதவையாகவும். பட்டியலிட முடியாதவையாகவும் உள்ளது.


2 thoughts on “முஹம்மத் (W.F.X.DE.சில்வா) : வட்டக்கண்டல் வித்தியாலய ஆசிரியர்!

  1. ummu nidhaa says:

    மாஷா அல்லாஹ்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All