Puttalam Online
interviews

புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் மீலாதுஸ் ஸாஹிறா 2013

  • 28 February 2013
  • 1,428 views

[box type=”info”]புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை தன் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மீலாதுஸ் ஸாஹிறா 2013 எனும் பெயரில் போட்டி நிகழ்ச்சியை பெப்ருவரி 26 மற்றும் 27 ம் திகதிகளில் நடாத்துகின்றது.

இப்போட்டி நிகழ்ச்சி தொடர்பான விபரங்களை Puttalam online நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இதன் போட்டிக்குழுச் செயலாளர் ஆசிரியர் எம்.எச்.எம்.நதீர் அவர்களை Puttalam online நேர்காண்கின்றது.

நேர்காணல்: எம்.எச்.எம்.பசுலுர் ரஹ்மான். [/box]


Copy of Zahira Pre Logo High GIF

 

P1130924

Puttalam online : 

தாங்கள் சேவையாற்றும் பாடசாலையில் மீலாதுஸ் ஸாஹிறா 2013 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளதை நாம் அறியவந்தோம். முதலில் இப் போட்டி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தேற அல்லாஹ்வை பிரார்த்திப்பதுடன், எமது வாழ்த்துக்களையும் சமர்பித்துக்கொள்கின்றோம்.

ஆசிரியர் நதீர்: 

Puttalam online தன் பணிகளை சிறப்புடன் முன்னெடுத்து மென்மேலும் வளர்ச்சி பெற எமது பிரார்தனைகளையும், வாழ்த்துக்களையும் சமர்பிப்பதோடு, எமது போட்டி நிகழ்ச்சி தொடர்பாக உலகறியச் செய்வதற்கான நல்லதோர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக் காகவும் எமது மனப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Puttalam online :

இவ்வாறான போட்டி நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்ற சிந்தனை தோன்றுவதற்கு உந்துதலாய் இருந்த பின்னணிகள் என்ன?

ஆசிரியர் நதீர்:

எமது பாடசாலை புதிய மாகாண பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்டபோது இதற்கான தூர நோக்கு (Vision), பணிக்கூற்று (Mission) என்பன வஹியின் நிழலில் வரையப்பட்டன. ஒழுக்கமுள்ள தரமான சமூகத்திற்கு பயனுள்ள அறிவும், தரமான கல்வியும்” எனபது எமது தூர நோக்காகும். அது போன்றே ரலுல்லாஹ்வின் “இறைவா எனக்கு பயனுள்ள அறிவையும், ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகளையும், சிறந்த வாழ்வாதாரங்களையும் தந்தருள்வாயாக” என்ற அமுத வாக்கே எமது பணிக்கூற்றின் சாரம். இவ்விரண்டு இலக்கையும் எட்டிட எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு வழிமுறையே இப் போட்டி நிகழ்ச்சியாகும்.

அடுத்து அறிவு, திறன், மனப்பாங்கு” என்ற மூன்று அம்சங்களும் கல்வியினால் எதிர்பார்கப்படும் அடைவுகளாகும். கல்வி புலத்தில் பாடச் செயற்பாடுகளுடன் பாட இணைச் செயற்பாடுகளும் இணைந்தே கல்வி சார் செயற்பாடுகள்  நோக்கப்படுகின்றன. அதனால்தான் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலா, திறன் விருத்திக்கான ஏற்பாடுகள், போட்டிகள் என வருடாந்தம் நடாத்தப்படுகின்றன. எனவே அறிவு,  திறன், மனப்பாங்கு” என்ற அம்சங்களை அடைவதற்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்றாக இதனை கொள்ள முடியும். இந்த பின்னணிகளே இதற்கான காரணமாக அமைந்தன எனலாம்.P1130936

 Puttalam online :

குறிப்பாக இப் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கான நோக்கங்கள் ஏதும் உண்டா?

 ஆசிரியர் நதீர்:

ஆம். நோக்கங்களை வகைப்படுத்தி நோக்கலாம். ஓன்று பிரதான நோக்கம். மாணவர் மத்தியில் பல்தரப்பட்ட ஆளுமை பண்புகளைக் கொண்டவர்களை இணங்காணல், அப் பண்புகளை மேலும் வளர்ச்சிகாணச் செய்தல், இப் பண்புகள் ஒவ்வொருவரிடத்திலும் துளிர்விடச் செய்வதற்கான உந்துதலை, அதற்கான களத்தினை ஏற்படுத்தல். இதன் மூலம் இன்ஷா அல்லாஹ் எதிர்காலங்களில் சிறந்த ஹாபிழ், காரி, பேச்சாளர், பாடகர், சித்திர கலைஞர் போன்ற திறனாளிகள் உருவாகுவதற்கான பிரவேசமாக இது அமையும்.

அடுத்து சிறப்பு நோக்கம். இப் போட்டி நிகழ்ச்சிகளினூடாக தனக்கும், தன் சார்ந்தவர்கள், தன் சூழல் சார்ந்தவர்களுக்கும் நல் வாழ்வுக்கான நேர் சிந்தனைகளை, வழிகாட்டல்களை, பயிற்சிகளை, அடையச் செய்தல். இற்கான தேடலில் ஆர்வம் கொள்ளச் செய்தல்.

zahira primary  (3)

Puttalam online :

சிறப்பு நோக்கம் பற்றி சற்று விளக்கமாக கூறுங்களேன்.

 ஆசிரியர் நதீர்:

எமது போட்டிகள் 10 வேறுபட்ட நிகழ்ச்சி தலைப்புகளில் நடைபெறவுள்ளன. குர்ஆன் மனனம், கிராஅத், ஹதீஸ் மனனம், சந்தர்ப்ப துஆக்கள் மனனம், வரவாற்று சம்பவம் அல்லது பேச்சு, நன்னெறி கதை கூறல் அல்லது ஆக்கம், சிறுவர் பாடல், பழமொழிகள் மனனம், முஸ்லிமல்லாதோர் அமுதவாக்குகள், சித்திரம் அல்லது அறபு எழுத்தணியாக்கம் என்பனவே அவை.

இங்கு உதாரணத்திற்கு ஹதீஸ் மனனம் எனும் நிகழ்ச்சியை எடுத்தக் கொள்வோம். இந் நிகழ்ச்சிக்கு ஹதீஸ்கள் அனைத்தும் ரியாளுஸ் ஸாலிஹீன்” எனும் தொகுப்பிலிருந்தே பெறப்படல் வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை நாம் வழங்கியுள்ளோம். எனவே முதலில் குறித்த ஹதீஸ் தொகுப்பு அறிமுகமாகின்றது. தமக்கான ஹதீஸ்களை தெரிவு செய்து கொள்வதற்காக பல ஹதீஸ்களை வாசிக்க வேண்டிய தேவை, நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. தமக்கான ஹதீஸ்களை எழுது, மனனமிடும் போது அவை உள்ளத்தில் ஆழப்பதிந்து விடுகின்றது.

zahira primary  (8)போட்டிக்காக தன்னை பயிற்விக்கும் போது பலர் முன்னிலையில் அறிமுகமாகின்றது. குறிப்பாக ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பல முறைகள் மீள ஒப்புவிக்கப்படுகின்றன. இது தனக்கும், தன் சார்ந்தவர்களுக்கும் வாழ்வை சீர்படுத்தலுக்கான அறப்போதனையாக அமைந்துவிடும்.

இது போல குர்ஆனை மனனமிட, தர்தீலாக ஓத, சந்தர்ப்ப துஆக்களை அறிய பயன்பாட்டுக்கு கொண்டுவர, ரஸூலுல்லாஹ், ஸஹாபாக்கள், இமாம்கள் போன்றோரின் வரலாற்றை, முன்மாதிரகளை அறிய, மாணவர், ஆசிரியர்கள், குறிப்பாக பிள்ளையின் உறவுகள், நண்பர்கள் என இதனுடன் தொடர்புபடும் அத்தனை பேருக்கும் ஏதோ ஒருவிதத்தில் மேற்சொன்ன பயன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

சுருங்கச் சொன்னால் பாடசாலை, வீடு, சமூகம் என முத்தரப்புக்கும் தம் வாழ்வை சீர்படுத்தலுக்கான வழிமுறைகளை தாங்கியதாக மீலாதுஸ் ஸாஹிறா உணர்த்தி நிற்கின்றது.

 zahira primary  (15) zahira primary  (6)

Puttalam online :

இப்போட்டிகள் மூலம் மாணவர்களிடத்தில் எத்தகைய தேர்ச்சிகள், அடைவுகள் ஏற்படவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

 ஆசிரியர் நதீர்:

எமது வரலாற்றை முன்னோக்கி பார்த்தால் அறிவுத் துறை வளர்ச்சிக்கான அத்திவாரமாக, அடிப்படை மூலமாக மனனமே திகழ்ந்திருக்கின்றது. ஸஹாபாக்கள் முதல் நவீன கால அறிஞர்கள் வரை அவர்களது அறிவுப் பங்களிப்புகளுக்கு மனனம் அலாதியான அதி கூடிய செல்வாக்கை செலுத்தியுள்ளது. சமகாலத்தில் ஹாபிழ்கள், இலட்சகணக்கில் ஹதீஸ்களை மனனமிட்டவர்கள் பெரும் வைத்திய, கணித, புவியியல் மேதைகளாக திகழ்ந்தனர். இதற்கான அடிப்படை மனன திறன் தேர்ச்சியே.

 எனவே தான் நாமும் ஆரம்பத்திலேயே மாணவர்கள் மத்தியில் இந்த மனன திறன் வளர்ச்சிகாணப்படல் வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஆதனால் தான் போட்டிகள் அனைத்தையும் மனனத்தை அடிப்படையாகக் கொண்டு நடாத்துகின்றோம்.

அடுத்து சபை அச்சம், தாழ்வு மனப்பான்மை, முன் வராமை போன்ற எதிர்பாங்கான நிலைமைகள் களையப்பட்டு, முயன்றால் எம்மாலும் முடியும் எனும் தன்னம்பிக்கையுடன், வெற்றி தோல்விகளை சம நிலையுடன் ஏற்கும் மனப்பாங்கினைக் கொண்ட போட்டிகளில் பங்கேற்பதற்கு வேண்டிய அடிப்படை திறன் சார் விருத்திகள் மூலம் பல் தரப்பட்ட ஆளுமைகள் உருவாக்கத்திற்கான பிரவேசத்தினை அடைவாக எதிர்பார்க்கின்றோம்.

 zahira primary  (11)

Puttalam online :

போட்டிகளின் நடைமுறை அமுலாக்கம்,  மணவர்களின் பங்கேற்பு, அவர்களை உற்சாகப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி கூறுங்கள்.

ஆசிரியர் நதீர்:

எமது பாடசாலையில் சுமார் 1600 மாணவரகள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் கூடுதலானோர் போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான செயன்முறையை வகுத்தோம். ஒருவருக்கு ஒரு நிகழ்ச்சி, ஒரு நிகழ்ச்சிக்கு மூவர் என தரம் 1 முதல் 5 வரையில் தனித்தனியாக 5 பிரிவுகளுக்கும் 10 தலைப்புகளில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கிடையில், வகுப்புகளுக்கிடையில், ஆசிரியர்களுக்கிடையில் போட்டி என்ற போட்டிச் சூழலும் உருவாக்கப்பட்டது.

அத்துடன் போட்டியில் பங்கேற்கும் சகலருக்கம் சான்றிதழ், வெற்றிபெறும் போட்டியாளர், வகுப்பு அதன் வகுப்பாசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கவும் உள்ளோம்.

 இதனால் சுமார் 1120 போட்டியாளர்கள் அதாவது 75% மானோர் போட்டியில் குதித்துள்ளனர்.

 Puttalam online :

உங்கள் பாடசாலையில் மாற்றுத் திறனாளிகள் கல்வி பயில்கின்றனரே. அவர்களுக்கு இதில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையா?

 ஆசிரியர் நதீர்:

எமது பாடசாலையில் விஷேட கல்வி அலகில் 21 மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்கின்றனர். இது தவிர்த்து 4ம் 5ம் பிரிவுகளில் கற்றல் இடர்பாடுகள் குறைபாடுடைய இனங்காணப்பட்ட சுமார் 80 மாணவர்கள் உள்ளனர். இவர்களிலும் முன்பு சொன்ன தேர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இவர்களது தரத்திற்கேற்ப போட்டிகளை நடாத்த உத்தேசித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் பிரிதொரு தினத்தில் இவர்களுக்கான போட்டிகள் நடைபெறும்.

Puttalam online :

இப் போட்டி தொடர்பில் வரவேற்பு எவ்வாறுள்ளது? விமர்சனங்கள் ஏதும் உண்டா?

 ஆசிரியர் நதீர்:

வரவேற்பை பொறுத்தவரை மிக உயர் நிலையில் உள்ளது. மாணவர்களிலும் பார்க்க ஆசிரியர்கள் குறிப்பாக பெற்றோர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியாளர்களை பங்கேற்கச் செய்வதில் மும்முரமாக உள்ளனர். தவறான புரிதலினால் ஒரிரு விமர்சனம் கிடைக்கப்பெற்றது. அதாவது மீலாதுஸ் ஸாஹிறா எனும் தலைப்பில் மீலாத் என்ற சொல்லை வைத்து மீலாதுன் நபி எனக் கொண்டு இது இஸ்லாத்தில் கூறப்படாத வழிமுறையே என்றும், மீலாதுன் நபி நிகழ்ச்சியில் ஏன் பழமொழிகள், முஸ்லிமல்லாதோர் வாக்கு என்ற கேள்வியும் வினவப்பட்டது. இவைகள் தவிர்த்து நல்ல உற்சாகமும் வரவேற்புமே கிடைக்கப்பெற்றன.

 Puttalam online :

இப் போட்டி தொடர்பாக பாடசாலை தவிர்த்து வெளிச் சமுகத்திடமிருந்து எதனை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் ?

ஆசிரியர் நதீர்:

முதலில் அவர்களது நல்லெண்ணத்துடனான ஆதரவும் அவர்களது பிரார்த்தனைகளை. அடுத்து சொல்வதாயின் உண்மையில் எமது பாடசாலையின் பல்தரப்பட்ட அபிவிருத்தியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், குழுக்கள், குறிப்பாக பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பல் தரப்பினரும் பல வகையில் பணமாக, பொருளாக பங்களிப்பச் செய்துள்ளனர், செய்தும் வருகின்றனர். அதனால் இப் போட்டி நிகழ்ச்சியை திறன்பட நடாத்தி முடிப்பதற்கான உத்தேச செலவினமான சுமார் 125,000.00 ருபாவிற்கான அனுசரணையை முதலிலும், பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு தொடர்பான ஏனைய நிகழ்ச்சிகளுக்கான அனுசரணையை வெளிச் சமூகத்திடமிருந்து குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரியம், வசியும் அன்பர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

Puttalam online :

ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் ஐந்தாவது ஆண்டு நிறைவு தொடர்பாக இது தவிர்த்து வேறு நிகழ்ச்சிகளையும் முன்னெடுக்க உள்ளீர்களா?

 ஆசிரியர் நதீர்:

ஆம், இதற்கான திட்டமிடல் கொள்கையளவில் வகுக்கப்பட்டுள்ளது. ஆன்மீகச் சூழலில் எம் நினைவு தினத்தை அனுஷடிக்க ஆலோசிக்கப்படுகின்றது. அத்துடன் பாடசாலை வெளிச் சமூகத்தையும் இதனுடன் தொடர்படுத்தும் விதத்திலான செயற்பாடுகளும் ஆலோசிக்கப்படுகின்றன.எனினும், இதற்கான செயன்முறை இன்னும் நிறைவடையவில்லை. இன்ஷா அல்லாஹ் பின்னர் இது பற்றி அறியத்தருகின்றோம்.

 Puttalam online :

இதுவரை தங்களது நேரத்தை ஒதுக்கி நேர்காணலினூடாக மீலாதுஸ் ஸாஹிறா போட்டி நிகழ்ச்சி தொடர்பான பல்தரப்பட்ட தகவல்களை எமது இணையத்தளத்துக்கு தந்தமைக்காக விஷேடமாக உங்களுக்கும், பொதுவாக பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All