Puttalam Online
interviews

இலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை

  • 5 March 2013
  • 1,213 views

Mou.Ibrahimஇலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட இஸ்லாமிய அறிஞரும் ஆயிஷா ஸித்தீகா கலாபீடம், தன்வீர் அகடமி ஆகியவற்றின் பணிப்பாளருமான மௌலவி ஏ.எல்.எம்.இப்றாகீம் நவமணிக்கு வழங்கிய செவ்வி.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக இருந்து கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக சமூகத்துக்கும் பாரிய பணிகளை ஆற்றி வருகிறார் மௌலவி ஏ.எல்.எம்.இப்றாகீம். மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் உயர் கல்வி பயின்று அதன்பின் ஜமாஅதே இஸ்லாமியில் தம்மை இணைத்துக் கொண்டார். பல்பேறு படித்தரங்களைக் கடந்து அமீர் வரை உயர்ந்து சென்றார்.ஆசிரியராக, பல்கலைக்கழக விரிவுரையாளராக,வளவாளராகவும் பணியாற்றியுள்ளார். திருக்குர்ஆன் விளக்கவுரையை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து 2012 ஓகஸ்டில் அதனை வெளியிட்டும் வைத்தார்.

நேர்காணல்: ஸிராஜ் எம்.சாஜஹான்

———————————————————————————————————————————————————————-

கேள்வி: தற்போதைய இனவாதச் செயற்பாடுகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில்: உண்மையிலேயே கவலைப்படக்கூடிய ஒரு சூழ்நிலை தான். ஒரு சில குழுக்கள் ஹலால் பிரச்சினையை மையமாகக்கொண்டு ஆரம்பித்த முஸ்லிம் எதிர்ப்புப் போராட்டம் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளதால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. பெரும்பாலான பௌத்த மக்கள் மிகவும் நல்லவர்கள். முஸ்லிம்களைப் பற்றி அவர்கள் நல்லெண்ணம் வைத்திருக்கிறார்கள். குறுகிய நோக்கோடு செயற்படும் இக் குழுக்களின் செயற்பாடுகளால் பௌத்தர்கள் எமது சமூகத்தை சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

இஸ்லாத்தைப் பற்றியும், இந்நாட்டு முஸ்லிம்களைப் பற்றியும் நல்லெண்ணம் கொண்டதன் விளைவாகவும் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை இக் குழுக்கள் முன்னெடுத்திருக்கலாம். உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாகவும் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புணர்வுகள் தோற்றம் பெற்றிருக்கலாம். தற்போதைய இனவாத செயற்பாடுகள் குறித்து பௌத்த, கிறிஸ்தவ, இந்து சமயத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர்கள் அத்தனை பேரும் இது விடயமாக தமது கவலையைத் தெரிவித்தனர்.

கேள்வி: முஸ்லிகள் நாட்டுக்கு வழங்கிய பங்களிப்பு பற்றி..?

பதில்: இந்த நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றத்துக்காக முஸ்லிம்கள் பாரிய பங்களிப்புக்களை வழங்கியிருக்கிறார்கள். இதனை சகல சமூகத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்நாட்டு சுதந்திரத்துக்காக முப்பது வருட கால யுத்தத்தின் போது இந்நாட்டு முஸ்லிம்கள் தாய்நாட்டுக்காக ஆற்றியுள்ள பங்களிப்பு மகத்தானது. இதனை எவரும் மறுக்க முடியாது. பல்வேறு பிரச்சினைகள், ஆபத்துக்கள் இந்த நாட்டை வந்தடைந்த போது அதற்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்தார்கள். ஆதரவாகக் கேள்வியெழுப்பினார்கள். போராடினார்கள். இந்த நாட்டுக்கு விசுவாசமாக நடந்தார்கள். இந்த நாட்டைப் பிரித்து முஸ்லிம்கள் கேட்கவில்லை. அதற்காகப் போராடவும் இல்லை. மாற்றமாக இந்நாட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமாகவே என்றும் செயற்படுவார்கள்.

கேள்வி: பிரச்சினைகள் தோன்றுவதற்கான காரணங்கள் எவை?

பதில்: எமது சமூகத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டம் தான் இதற்கான பிரதான காரணமாகும். திறந்த பொருளாதாரம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின் இஸ்லாத்தைப் பற்றிய புதிய தகவல்கள் பல எமக்குக் கிடைக்கப் பெற்றன. அரபு நாடுகள், முஸ்லிம் நாடுகளுடனான தொடர்புகள் அதிகரித்தமையால் ஷரீஆ அடிப்படையிலான பல்வேறு முக்கிய தகவல்கள் எமது நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைக்கப்பெற்றன.

ஹலால், பர்தா உட்பட பலவற்றை குறிப்பிடலாம். ஏற்கனவே இந்த விடயங்கள் இஸ்லாத்தில் உள்ள விடயங்கள் தான். எனினும் அரபு நாடுகளுடனான தொடர்பின் மூலம் இது வலுப் பெற்றது. எமது முஸ்லிம் மக்கள் ஹலால் தொடர்பின் மூலம் இது வலுப்பெற்றது. எமது முஸ்லிம் மக்கள் ஹலால் முறையைக் கைக்கொண்டதுடன், ஷரீஆ அடிப்படையிலான ஆடைகளை அணியவும், முற்பட்டார்கள். இஸ்லாமிய வங்கிகள், வங்கிக் கணக்குகள் என பல்வேறு தரப்பட்ட இஸ்லாமிய ஷரீஆ விடயங்கள் இந்த நாட்டு முஸ்லிம்களிடையே புழக்கத்துக்கு வந்தன. பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களின் புதுச் செயற்பாடுகள் குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள். எம்மைச் சார்ந்த சிலரும் பெரும்பான்மையினரிடம் தவறான தகவல்களையும் வழங்கினர்.

கடந்த காலங்களில் இல்லாத புதுப் பழக்கங்களை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். முன்பிருந்த முஸ்லிம்கள் இவ்வாறு செயற்படவில்லை. இதனால் இவர்கள் இந்த நாட்டில் ஏதோ புதிய முறையொன்றினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சர்வதேச முஸ்லிம் தீவிரவாதிகளோடு உள்ள தொடர்புகளினாலேயே இவ்வாறு முஸ்லிம்கள் செயற்படுகின்றனர். இதனால்தான் பழைய முஸ்லிம்கள் நல்லவர்கள். புதிய முஸ்லிம்கள் நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்ற வீண் சந்தேகங்களை எழுப்புகிறனர். இஸ்லாத்தைப் பற்றி சரியான தெளிவின்மையே இதற்கான பிரதான காரணமாகும்.

என்னைப் பொறுத்த வரையில் எந்தவிதமான பிழையான தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளும் முஸ்லிம் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவில்லை. இந்த நாட்டின் இருப்புக்கு, முன்னேற்றத்துக்கு, அபிவிருத்திக்குத் தடையான எந்த விடயங்களும் இங்கு கொண்டு வரப்படவில்லை. இலங்கையின் இறைமைக்கு, இருப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புதியவர்களோ, பழையவர்களோ ஈடுபடவும் இல்லை. ஏனைய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அனுபவிக்கும் உரிமைகளை எமது இளைஞர்களும் பெற்று வருகின்றார்கள். எனினும் இந்த விடயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாலும், வீணான தப்பெண்ணங்களாலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளனர்.

கேள்வி: சனத்தொகை அதிகரிப்பு பற்றி..?

பதில்: முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்திருப்பதாக ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். புள்ளி விபரங்களோடு ஒப்பிடுகையில் ஏனைய சமூகங்களின் சனத்தொகையும் அதிகரித்துச் செல்கிறது. புள்ளி விபரங்களை நோக்குகையில் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் சனத்தொகை அதிகரித்து விடலாம். தென்கிழக்காசியாவின் பல நாடுகள் முஸ்லிம் நாடுகளாக மாறியது போல் இலங்கையும் இஸ்லாம் மயமாகி விடுமென அவர்கள் அச்சப்படுகிறார்கள். இந்த அச்சத்தின் வெளிப்பாடும், வேறு பல காரணிகளும் சனத்தொகை அதிகரிப்புப் பற்றிய அவர்களது அச்சத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

கேள்வி: ஷரீஆ சட்டத்தை விமர்சிக்கிறார்களே?

பதில்: ஷரீஆ சட்டங்கள் இலங்கைக்கு புதியவையல்ல. ஏற்கனவே இந்த நாட்டில் ஷரீஆ சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுத்தான் வருகின்றன. 1930 களிலிருந்து இந்த ஷரீஆ சட்டங்கள் இங்கு அமுலிலிருந்து வருகின்றன. முஸ்லிம்களின் நாட்டுப் பற்று, சேவைகள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு பதவிக்கு வந்த அரசுகள் இந்த சலுகைகளை எமக்கு வழங்கி வந்தன. உதாரணமாக விவாகத்துறை தொடர்பான சட்டங்கள் 1880களில் எமக்கு வழங்கப்பட்டன. இது அப்போதிருந்த காலத்தில் அரசு மூலம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன. காதி நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன. முஸ்லிம் பாடசாலைகள் என தனியாக இயங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டன.

இவைகள் அவ்வப்போதிருந்த காலப்பகுதியின் அரசுகளால் முறையான முறையில் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டன. இவற்றினை நாம் முறைகேடான முறையில் பெற்றுக் கொள்ளவில்லை. இதற்காக நாங்கள் யாருக்கும் இலஞ்சம் கொடுக்கவும் இல்லை. பிற சக்திகள் வந்து இதனைத் தூண்டவும் இல்லை. உலக மயமாக்கல் என்பது சமீபத்தில் தான் நடந்தேறியது. ஆனால் அதற்கு முன்பு இவையனைத்தும் நடந்து முடிந்து விட்டன. இன்னும் கூட இந்த நாட்டுப் பிரஜைகள் என மட்டுமன்றி விஷேட உரிமைகள் பலவற்றையும் அவ்வப்போது பதவிக்கு வந்த அரசுகள் எமக்கு வழங்கின.

எமது மக்களின் அமைதியான போக்கும், விசுவாசமும், நாட்டுப் பற்றும் அரசுத் தலைவர்களைக் கவர்ந்ததன் காரணமாக இவ் விஷேட சலுகைகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன. இதனைப் பற்றி யாரும் பொறாமைப்படுவதற்கோ, சந்தேகப்படுவதற்கோ எந்த நியாயங்களும் இல்லை.

கேள்வி: அவ்வாறென்றால் ஏன் சந்தேகப்படுகிறார்கள்?

பதில்: ஏனைய சமயங்களை விட பல்வேறு விடயங்களில் நாம் வித்தியாசமான போக்குகளைக் கடைப்பிடிக்கின்றோம். உதாரணமாக ஆடை விடயத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பல விடயங்களும் காணப்படுகின்றன. சட் டப்படி எமக்கு வழங்கப்பட்ட உரிமைகளைத் தான் நாங்கள் கைக்கொண்டு வருகிறோம். ஏனைய மக்களுக்கு இடைஞ்சலாக தொல்லையாக நாங்கள் செயற்பட்டது கிடையாது. ஏனைய இன மக்களுக்கு இடைஞ்சலாக நடப்பதை இஸ்லாம் கூட அனுமதிக்கவில்லை.

கேள்வி : இதனை எதிர்கொள்ளும் சிறந்த தலைமைத்துவம் எம்மிடமுள்ளதா?

பதில்: சமயங்களுக்கிடையில் மோதல்கள் பிரச்சினைகள் தோன்றுவது இயற்கைதான். சிறந்த தலைமைத்துவங்கள் மூலம் இதற்குத் தீர்வு காண முடியும். எனினும் துரதிஷ்டவசமாக இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தரக் கூடிய சிறந்த தலைமைத்துவம் இல்லையென்றே கூறவேண்டும். இவ்வாறான மத ரீதியான பிரச்சினைகளின் போது சமூகங்களிடையே ஒருமைப்பாட்டினைத் தோற்றுவிக்கும் வகையில் பரந்து பட்ட விரிவான தலைமைத்துவமொன்று எம்மிடையே காணப்படவில்லை. இவ்வாறான மிகச் சிறந்த தலைமைத்துவமொன்று இருந்தால் தற்போதைய பிரச்சினைகளுக்கு மிக இலகுவில் தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கும்.

கேள்வி: முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுகிறார்களே?

பதில்: ஆம், தற்போதைய பிரச்சினைகள் நிறைந்த கால கட்டத்தில் ஒரு விடயத்துக்கு பலரும் விடையளிக்கச் செய்கிறார்கள். ஒரு விஷயத்தைப் பொறுத்த வரை பல்வேறு விடயங்கள் இருக்கலாம். ஆனால், முரண்பட்ட விடயங்கள், விடைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமில்லை. சமூகப் பிரச்சினைகளின் போது பலரும் விடையளிக்கச் செல்வது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்யலாம். இந்த விடயங்களைக் கையாள்வதற்கு சிறந்த கூட்டுத் தலைமைத்துவமொன்று தேவைப்படுகிறது.

கேள்வி: கூட்டுத் தலைமைத்துவம் அவசியமா?

பதில்: ஆம், முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள் தோன்றும் அதனைச் சிறந்த முறையில் கையாள்வதற்கு மிகச் சிறந்த தலைமைத்துவமொண்று நிச்சயமாகத் தேவை. சமூகத்திலுள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்தோரைக் கொண்ட ஒரு கூட்டுத் தலைமைத்துவம் தற்போதைய தேவையாகும். மார்க்க அறிஞர்கள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், ஊடகவியலாளர்கள், வளவாளர்கள், புத்திஜீவிகள் எனப் பல்வேறு துறைகளையும் சார்ந்தோரை உள்ளடக்கியதாக இக் கூட்டுத் தலைமைத்துவம் அமையப் பெறல் வேண்டும். இக் கூட்டுத் தலைமைத்துவத்தின் மூலம் முக்கிய பிரச்சினைகளின் போது ஆலோசனைகளைப் பெற்று தீர்வுகளை காணக் கூடியதாக இருக்கும்.

கேள்வி: சமூகத்தின் செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும்?

பதில்: எமது சமூகத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களை விட ஒரு சில துறைகளில் நாம் முன்னேறியிருக்கின்றோம். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் ஒரு சில துறைகளில் நாம் வீழ்ச்சி கண்டிருக்கிறோம். முன்பு நாம் ஐக்கியமாக, சமாதானமாக ஊர்களில் வாழ்ந்து வந்தோம். இப்போது பல்வேறுபட்ட பிரச்சினைகளால் ஐக்கியம், சமாதானம் சீர்குலைந்திருக்கிறது. இது ஒரு வீழ்ச்சி. கல்வித் துறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கும் பொருளாதாரத் துறைகளிலும் அவ்வாறுதான். அறிவுத்துறை, ஊடகத்துறையிலும் எமது செயற்பாடுகள் முன்னேற்றத்தை எட்டியுள்ளன. சிறுபான்மை சமூகமாக நாம் இருந்த போதிலும் ஒவ்வொரு துறைகளிலும் பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வளவாளர்களை நாம் உருவாக்கியிருக்கிறோம்.

பல்கலைக்கழகப் பிரவேசத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களைப் போன்றே சற்று பின்னடைவு கண்டிருந்த போதிலும் தற்போது ஒப்பீட்டளவில் சற்று முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். தற்போது எமது சமூகம் அறிவுத் துறையில் சற்று முன்னேறியிருக்கின்ற போதிலும் மிகச் சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டால் இதனை விடவும் சிறந்த பெறுபேறுகளைப் பெறக் கூடியதாயிருக்கும். இந்த நிலையில் எமது முன்னேற்றப் பாதைக்கான சகல வசதிகளையும் திட்டமிட்டுச் செயலாற்றக்கூடிய சிறந்த கூட்டுத் தலைமைத்துவம் மிக அவசியமும், அவகாசமாகவும் உள்ளதை நோக்க முடியும்.

கேள்வி: சாதாரண பொது மக்களின் நிலை என்ன?

பதில்: கடந்த இரண்டு, மூன்று மாத காலமாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எமது சாதாரண மக்கள் இதில் தெளிவு பெறவில்லையென்பதை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. ஒரு சிலர் தவறான கற்பனையில் உள்ளார்கள். இன்னும் சிலர் இது பற்றிய உணர்வே அற்றவர்களாக இருக்கிறார்கள். தவறான விளக்கமென்பது ஆபத்தானது. உணர்வில்லையென்பதும் அவ்வளவு நல்ல விடயமல்ல. இந்த மக்களுக்கு தற்போதைய பிரச்சினைகள் குறித்து தெளிவான விளக்கங்கள் வழங்கப்படல் வேண்டும். ஊடகங்கள், குத்பாக்கள் மேலும் பல்வேறு முறைகள் மூலம் இத் தெளிவுகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம்.

எமது சமூகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பிற சமூகத்தினருடன் பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர். இவர்கள் சந்தேகங்களுடன் வாழமுடியாது. ஒற்றுமை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். பிரச்சினைகளின் பாரதூரத்தை எமது மக்களுக்கு வழங்கி ஏனைய இன மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ற விளக்கங்களும், அறிவுரைகளும் ஊட்டப்படல் வேண்டும். ஊடகவியலாளர்கள், வளவாளர்கள், புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள் இந்த விடயத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும்.

கேள்வி: பிரச்சினைகளைத் தோற்றுபவர்களின் செயல்பாடுகள் பற்றி?

பதில்: எமது சமூகத்தின் ஒரு சிலர் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறார்கள். ஊரிலுள்ள குழுக்களிடையே ஏனைய இன மக்களிடையே விரிசல்களை உருவாக்குவதில் சிலர் கரிசனை காட்டுகிறார்கள். இது ஆரோக்கியமான விடயமல்ல. தனிப்பட்ட சிலருக்கு, ஒரு குழுவினருக்கு பொருத்தமாக அல்லது சாதகமாக இருக்கலாம். இரண்டு சமூகங்களிடையே, இரண்டு குழுக்களிடையே பிரச்சினைகள் தோற்றுவதை சிலர் விரும்புகிறார்கள். இது பயங்கரமானது. முஸ்லிம்களைப் பற்றி இன்னுமொரு குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. நாட்டு சட்டங்களை மதிப்பதில்லை என்பதே அதுவாகும்.

கிராமங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாரிடம் சென்று அது பற்றி முறைப்பாடு செய்து தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற மன நிலை எம்மில் குறைவாகவே உள்ளது. முக்கியமான விடயங்களின் போது அவர்கள் சட்டங்களை மதித்துச் செயற்படுகிறார்களில்லை. ஆர்ப்பாட்டங்களின் போது பெரும் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கின்றார்கள் என ஊடகங்களில் பெரிதுபடுத்துகிறார்கள். ஏனைய சமூகங்களிடையேயும் இவ்வாறான பழக்கங்கள் உண்டு.

எனினும் முஸ்லிம்கள் செய்யும் போது அதனை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் முஸ்லிமொருவர் தவறு செய்யும் போது முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இது தவறானது.

கேள்வி: முஸ்லிம்கள் கிராமங்களில் பல்வேறு கூறுகளாகப் பிரிந்திருக்கிறார்களே?

பதில்: இந்த வேறுபாட்டினை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. முஸ்லிம்கள் பிரிந்து செயற்படுவதை அங்கீகரிக்க முடியாது. மனித நேயம், ஒற்றுமை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டுமென்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எமது மார்க்கத்தைப் பற்றிய சரியான தெளிவின்மையும், அடுத்த மக்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலையுமே இதற்கான காரணமாகும். ஏனைய மக்களுக்குரிய கடமைகளை ஒரு முஸ்லிம் நிறைவேற்றியாக வேண்டும். இதிலிருந்து தவறிவிட முடியாது.

“நல்ல விடயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள்’ என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது. ஏனைய மக்களுடன் நாம் ஒன்றுபட்டு, ஒத்துழைத்துச் செயற்படவில்லையெனில் குர்ஆனின் கருத்துக்கு மாற்றம் செய்தவர்களாக ஆகிவிடுவோம். அந்த மக்களோடு சேர்ந்து வாழக்கூடாது என்று சொல்லுமளவுக்கு பயங்கரமான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லையென்பதும் நிதர்சனமானது.

குர்ஆனில் இறைவன் சொல்கிறான். “உங்களுடன் போராடாது. உங்களை உங்களது ஊர்களிலிருந்து வெளியேற்றாது இருக்கக்கூடிய முஸ்லிம்மல்லாதவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதில் எந்தத் தவறுமில்லை. நாங்கள் ஏனைய மக்களை ஒதுக்கி வாழ்வதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். பெரும்பாலான ஊர்களில் இவ்வாறான நிலை இல்லை. ஒரு சில ஊர்களில் இருக்கலாம். எமது சமய, கலாச்சார, பண்பாட்டு விடயங்களுக்குப் பாதகம் இல்லாத வகையில் அவர்களோடு இணங்கி நடப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் சமூகங்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்திருக்கலாம். தற்போதைய காலத்தில் எவரையும் பிரிந்து வாழ முடியாது. ஒவ்வொருவருடைய தேவை மற்றவரில் தங்கியிருக்கிறது. எனவே தேவையென்பதற்காக மட்டுமல்லாது இஸ்லாம் வலியுறுத்தியுள்ள விடயமென்பதால் மற்ற மனிதர்களோடு ஒத்துழைத்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்.

கேள்வி: பெரும்பான்மையினருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

பதில்: இஸ்லாம் ஏனைய இன மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அவர்களது உணர்வுகளை மதித்துச் செயற்படவேண்டும். அவர்களது விடயங்களில் தேவையற்ற தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது யூதர்கள் கிறிஸ்தவர்களோடு ஒற்றுமையோடும், நல்லிணக்கத்தோடும் செயற்படுமாறு வலியுறுத்தினார்கள். பெரும்பான்மையின யூதர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இப்போதும் பெரும்பான்மையினருடன் பிரச்சினை தோன்றியிருக்கிறது. இந்த நிலையில் நாம் அவர்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணி பிரச்சினைக்குரிய விடயங்கள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

கேள்வி: முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதில் சர்ச்சையுள்ளதே?

பதில்: பெரும்பான்மை அமைப்புக்கள் பல முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் செய்திகளில் காண முடிந்தது. “இஸ்லாத்தைப் பொறுத்தவரை தொழுகையின் போதும், ஹஜ்ஜின் போதும் பெண்கள் முகத்தையும் கையின் மணிக்கட்டுக்குக் கீழுள்ள பகுதியையும் தவிர உடம்பின் ஏனைய பகுதிகள் மறைக்கப்பட வேண்டுமென்பது சட்டமாகும்.

சர்வதேச இஸ்லாமிய இமாம்களும், அறிஞர்களும் இதனை அங்கீகரிக்கும் வகையில் தீர்ப்பு (பத்வா) வழங்கியிருக்கின்றார்கள். எனினும் ஒரு சில பெண்கள் முழு உடம்பையும் மறைத்து ஆடை அணிய வேண்டுமென கருத்து வெளியிடுகிறார்கள். அந்நிய நாடென்ற வகையில் பெண்கள் கல்வி, தொழில் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காக வெளியேபோக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் முற்றாக உடலை மறைத்து பெண்கள் வெளியே செல்வதால் பிரச்சினைகள் தோன்றுவதற்கும், ஏனையோருக்கு இடைஞ்சல் ஏற்படுவதற்கும் காரணமாக அமையலாம்.

இதனைக் கருத்திற் கொண்டும் வேறு பல காரணங்களை மையமாக வைத்தும் பெரும்பாலான சர்வதேச இமாம்களும் உள்ளூர், வெளிநாட்டு மார்க்க அறிஞர்களும் முகத்தை முழுமையாக மூடாதவாறு முகத்தையும் மணிக்கட்டுக்களையும் திறந்து ஏனைய பகுதிகளை மறைத்து ஆடை அணியுமாறு வலியுறுத்துகின்றனர்.

இலங்கையில் மாத்திரமன்றி உலகின் அனைத்து நாடுகளிலும் அதிகமான முஸ்லிம் பெண்கள் முகத்தையும் மணிக்கட்டுக்களையும் திறந்தே ஆடை அணிகின்றனர். எமது நாட்டைப் பொறுத்த வரை இந்த முறை ஏற்றது என்பது அதிகமான மார்க்க அறிஞர்களது கருத்தாகவும் அமைந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All