Puttalam Online
education

முஸ்லிம்களது சிங்கள மொழி வெளியீடுகளின் மொழித் தரத்தில் மாற்றம் வேண்டும்

Nilar0நிலார் என் காஸிம் 
உதவிப் பணிப்பாளர்,
விளம்பரம், ஊடகப் பிரிவு
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்

நிலார் என் காஸிம் அவர்கள் மாத்தறையைச் சேர்ந்தவர். சிறி ஜய வர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியில் சிறப்பு கலை மாணிப் பட்டத்தையும் களனிப் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முதுகலைமாணிப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ள இவர், சிங்கள மொழியில் சிறப்பு கலைமாணிப் பட்டம் பெற்ற முதல் முஸ்லிமாவார். கலை, இலக்கியம், வானொலி, தொலைக் காட்சி என பல துறைகளில் கால்பதித்த நிலார் அவர்கள் விவரண சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பத்தாண்டுகள் பணிபுரிந்தார்.

பாடல் எழுதுவதிலே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள இவர், இதுவரை 600 பாடல்களை எழுதியுள்ளதோடு, இன ஐக்கியத்திற்கான புத்தகங்களையும் எழுதியுள்ளதோடு, சிக்னீஸ் (தேசிய விருது), புங்கா (சர்வதேச விருது) போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு state literary panel இல் உறுப்பினராக இருந்ததோடு, தற்போது state Music panel இல் உறுப்பினராகவும் செயற்படுகிறார். இந்த இரண்டு குழுவிலும் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிமாகவும் இவர் இருக்கிறார்.

தற்போது இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரம் மற்றும் ஊடகப் பிரிவில் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றுகிறார். மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

 சந்திப்பு இன்ஸாப் ஸலாஹுத்தீன்

இன ஐக்கியத்திற்கான உங்களது எழுத்துக்களைப் பற்றி முதலில் அறிந்து கொள்ளலாமா?

இன ஐக்கியம் மற்றும் கலாசாரங்களுக்கிடையிலான நெருக்கம் சார்ந்தே எனது பெரும்பாலான எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. முஸ்லிம் கலாசாரப் பின்னணியில் இருந்து சிங்கள மொழியைப் படித்த அனுபவம் மற்றும் சிங்களம், தமிழ், முஸ்லிம் மூன்று சமூகத்துடனும் உள்ள தொடர்பை வைத்துக் கொண்டுதான் எழுத்துத் துறையில் நான் இயங்கி வந்திருக்கிறேன். அந்த வகையில் தமிழ் இலக்கியத்தை சிங்களத்திற்கு அறிமுகப்படுத்தும் வகையில் மகாகவி, நுஃமான், ஜெயபாலன் என பலரின் கவிதைகள் குறித்து நான் பத்திரிகையில் எழுதி வந்தேன். ‘சகோதர பியா பத்’ என்ற தலைப்பில் அது நூலாக வெளிவந்தது.

இலங்கையின் சிங்கள இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை முதலில் மொழிமாற்றம் செய்து ‘அர்த தர்வா’ எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். பித்தனின் பாதிக் குழந்தை எனும் கதைதான் அதன் தலைப்பாக மாறியது. மற்றது சங்க காலம் முதல் அண்மைய யுத்தம் வரையிலான தமிழ் இலக்கியம் குறித்து ‘அசல் வசியாகே சாகித்திய’ எனும் தலைப்பில் ஒரு நூல் எழுதினேன். அத்தோடு நான் இது வரையில் எழுதிய பாடல்கள் “பெஹெசர அருணக” “கிரி கோடு ஹிதட” என்று இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளது. ‘வ.ஐ.ச. ஜெயபாலன், இலங்கை தமிழ் கவிதையின் குறியீடு’ எனும் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளேன். எனது கலைமாணிப் பட்ட ஆய்வும் இதுதான். தமிழ் இலக்கியம் குறித்து ஒரு சிங்கள சிறப்பு கலைமாணிப் பட்டத்திற்கு செய்யப்பட்ட ஒரே ஒரு ஆய்வு இதுவாகத்தான் இருக்கும்.

முஸ்லிம் கலாசாரம் பற்றி ஞாயிறு திவயின பத்திரிகையில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று ஒரு பத்தி எழுதிவந்தேன். அது சிங்கள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையும் ஒரு புத்தகமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஆர்வம் எப்படி வந்தது, அதன் அடைவு எப்படி அமைந்தது?

எனது பெற்றோர் நான் சிங்கள மொழிமூலம் கற்க வேண்டும் என விரும்பி என்னை அத்துறையில் சேர்த்துவிட்டார்கள். எனது எல்லா அடைவுகளுக்கும் அதுதான் காரணம் என நினைக்கிறேன்.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலே 1000 இற்கும் மேற்பட்ட சிங்கள ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால், சிங்கள மொழி தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் என்னையே நாடுகின்றனர். இது எனது சோந்த சாதனையல்ல. இதனை எனது சமூகத்தின் சாதனையாகவே நான் கருதுகிறேன்.

சிங்கள, தமிழ் சமூகங்களுக்கிடையில் ஒரு உறவுப் பாலமாக செயற்படுவதற்கு என்னால் முடியுமாக இருந்தது. யுத்த நிறுத்த காலத்தில் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்குச் சென்ற ‘Peace with democracy’ குழுவில் வயதில் குறைந்தவனாகவும் ஒரே ஒரு முஸ்லிமாகவும் நான் சென்றேன். வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது தெடர்பாக நேரடியாக நான் கேள்வி எழுப்பினேன். அது எமது தவறு என்பதை அன்டன் பாலசிங்கம் ஏற்றுக் கொண்டார்.

இலக்கியம், பாடல் மற்றும் ஊடக செயற்பாடுகள் மூலம் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வுக்கு என்னாலான பங்களிப்புக்களைச் செய்திருக்கிறேன். அல்லாஹ் எனக்குத் தந்த விஷேட திறமைகளை சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் இருந்து வெளிவரும் தமிழ், சிங்கள வெளியீடுகள் பற்றிய உங்களது அவதானம் என்ன?

நாங்கள் பல்லின சமூகம் ஒன்றில் சிறுபான்மையினராக வாழ்கிறோம். எனவே, சிங்கள மக்களுடனான கலாசார உறவாடலில் நாம் சிங்கள மொழியைப் பயன்படுத்தி எவ்வாறான விடயங்களை செய்திருக்கின்றோம் என்ற கேள்வியை நான் இங்கு எழுப்பியாக வேண்டும். எமது சமூகத்தை அறிவூட்டும் வெளியீடுகள் வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அண்மையில் எமது சமூகம் மீது முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு தரமான முறையில் சிங்கள மொழியில் பதில் சொல்ல எம்மிடம் எந்த ஊடகமும் இல்லை. எனவே, சிங்கள மொழியிலான ஒரு ஊடகம் குறித்து முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். மொழியில் எம்மைத் தரப்படுத்திக் கொண்டு அவர்களால் மறுக்க முடியாத அளவிற்கு ஒரு மாற்றுக் குரலை உருவாக்க வேண்டிய தேவை இன்றைய நாட்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.

மற்றது முஸ்லிம் சமூகத்தில் இருந்து வெளிவரும் சிங்கள மொழியிலான வெளியீடுகள் இஸ்லாத்தை சிங்கள மொழியில் படிக்கும் முஸ்லிம்களுக்கு பயனுடையதாக இருக்கும். ஆனால், இஸ்லாத்தை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது அவர்களின் தரத்தில் இருந்து நாம் அவர்களுடன் பேச வேண்டும். பெரும்பாலான வெளியீடுகள் தேவையான விடயத்தை சிங்கள மொழியில் தெளிவுபடுத்துகின்றன. ஆனால், எதிர்பார்க்கும் தரத்துடன் இலக்கியம் கலந்த நடையில் அவை இல்லை என்பதை நான் கவலையோடு சொல்லித்தான் ஆகவேண்டும்.

அவற்றின் மொழித்தரம் ‘பரவாயில்லை’ என்ற அளவில் இருக்கிறது. மொழியை ஒரு ஊடகத்தில் பாவிக்கின்றபோது அது இலக்கியத் தன்மையுடன் கலந்ததோடு தரம் கூடியதாகவும் இருக்க வேண்டும். சிங்கள மொழியைக் கையாளும் ஒருவருக்கு அதன் இலக்கியங்களிலும் நல்ல பரிச்சயம் இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த மொழி செழுமைப்படும்.

எமது கருத்தில் சவால் விடும் அதேவேளை மொழியிலும் நாம் அவர்களுக்கு சவால் விட வேண்டும். அதனைச் செய்யக்கூடிய ஒரு சிலர் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்றனர். ஆனால், எமது சமூகம் அவர்களை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றது என்பதுதான் கேள்வி.

அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட எல்லா தர்ஜுமாக்களையும் நான் வாசிக்கவில்லை. ஆனால், பார்த்த அளவில் அதில் பாவிக்கப்படும் மொழி கடுமையாக இருக்கின்றது. வாசிப்பதை விட்டும் வாசகனை அது தடுத்துவிடுகிறது. பைபிளைப் பொறுத்த வரையில் (எல்லா மொழிபெயர்ப்பும் இல்லாவிட்டாலும்) பாதர் மேசலின் ஜயகொடி, பாதர் கொன்ஸல்வேஸ் போன்றவர்கள் இலக்கியத்தைக் கலந்து மொழி பெயர்த்திருக்கிறார்கள். அது நல்ல கவர்ச்சியா இருக்கிறது. அல்குர்ஆன் மொழியை மென்மைப்படுத்தி, செழுமைப்படுத்தி கவர்ச்சியாகக் கொடுக்க நாம் தவறிவிட்டோம். இவற்றை சாத்தியப்படுத்த சிங்கள மொழியை நன்கு தெரிந்து அதன் இலக்கியங்களிலும் ஆழ்ந்த பரிச்சயம் இருக்க வேண்டும்.

தற்போது இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்துள்ள பிரச்சினைகளை நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்?

இவற்றைச் செய்பவர்களையே நாம் நேரடியாகக் காண்கிறோம். இது ஆட்டுவிக்கப்பட்ட ஒரு பொம்மையின் நடவடிக்கை போன்றது. இதனை அசைக்கும் கரங்கள் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் இயக்கங்களாக இருக்கலாம். இப்பிரச்சினையை குறிப்பாக சிங்கள அச்சு ஊடகங்கள் சித்தரிக்கும் விதத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். அறிந்தோ அறியாமலோ குழப்ப நடவடிக்கைகளுக்கு அவை மேடை அமைத்துக் கொடுக்கின்றன. ஆனால், இவற்றுக்கான வலுவான எதிர்க் குரல்களைக் கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகளும் தவறிவிட்டனர். எனவே, அவர்களே பந்துவீசி அவர்களே அடிக்கும் நிலைதான் உருவாகியுள்ளது.

எனவே, இதற்குக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் எமக்காகப் பேசக்கூடிய பௌத்த கலைஞர்கள், கல்வியலாளர்கள், சிந்தனையாளர்களுடன் இணைந்து தற்போதைய பிரச்சினைகளுக்கு பொதுத் தளத்தில் இருந்து முகம் கொடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்கான மூலோபாயத் திட்டமிடல் ஒன்றின் அவசியத்தை இன்றைய சூழல் தீவிரப்படுத்தியுள்ளது. குறுகியகால, நீண்டகால திட்டமிடலுடன் சமூகம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எம்மை சரியான முறையில் அறிமுகப் படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.

ஆனால், சமூகம் அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு சில வழிமுறைகளையே பின்பற்றுகிறது. இதுவரையில் எமது சமூகம் பயணிக்காத துறைகளில் மூலோபாயத் திட்டங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். இசை, பாடல், சினிமா, நாடகம் போன்ற துறைகள் மூலம் ஏன் நாங்கள் பெரும்பான்மை சமூகத்துடன் கலாசாரப் பரிவர்த்தனையை நிகழ்த்த தவறினோம் என்பதை முஸ்லிம் சமூகம் சிந்திப்பதோடு தகுதி வாய்ந்தவர்களை அணுகி அதனைச் சாத்தியப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

http://www.meelparvai.net


One thought on “முஸ்லிம்களது சிங்கள மொழி வெளியீடுகளின் மொழித் தரத்தில் மாற்றம் வேண்டும்

  1. Wasim Akram MAB says:

    இப்போது உள்ள பிள்ளைகள் சிறுவயதிலிருந்து சிங்கள மொழியினை கற்கின்றனர்.
    ஆனாலும் தரம் 10லிருந்து சிங்கள பாடம் தெரிவுப் பாடமாக உள்வாங்கப்படுவதால் நாம் ரிசல்டை நோக்காக கொண்டு பொருட்படுத்துவதில்லை .

Leave a Reply to Wasim Akram MAB Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All