Puttalam Online
interviews

மெய்யியலை ஒரு விசாரணை முறையாக அறிந்து கொள்வதன் தேவை

  • 28 March 2013
  • 4,810 views

downloadகலாநிதி அனஸ் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல், உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர். எழுத்தாளராகவும், விமர்சகராகவும் தடம்பதித்துள்ள கலாநிதி அனஸ் அவர்கள் தனது துறையிலும், அதற்கு வெளியிலும் எழுதி வருகிறார். முஸ்லிம் சமூக அமைப்பில் புலமைத்துவ மேம்பாடு அவசியம் என்று கருதும் அனஸ் அவர்கள் அதனைத் தனது எழுத்துக்கள் அனல் பறக்கும் மேடைப் பேச்சுக்கள், வானொலி நிகழ்ச்சிகள் என்பவற்றினூடாக வழியுறுத்தி வருகின்றார்.

உலக நாகரீக வளர்ச்சியில் இஸ்லாமிய நாகரீகத்தினதும், சிந்தனையினதும் வளர்ச்சி பற்றிய ஆழமான அறிவுப் பின்னணி கொண்ட இவர் நிகழ்வுகளை அதன் உண்மையான வரலாற்றுப் பின்னணியுடன் பார்ப்பதில் அக்கறை கொண்டவர். உலக இஸ்லாமிய விவகாரங்கள் இலங்கை முஸ்லிம்களின் பண்பாடு வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் பெறுமானங்கள் பற்றிய ஆய்வுகளிலும் கலாநிதி எம்.எஸ். அனஸ் அவர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

மெய்யியல் துறை விரிவுரையாளர் என்ற வகையில் தத்துவவியல் (Philosophy : மெய்யியல்) என்பது என்ன?

இத்துறையின் முக்கியத்துவம் எத்தகையது?

தத்துவவியல் என்பது உலகில் காணப்படுகின்ற மிக மூத்த அறிவுத் துறைகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இத்துறை இதே பெயருடன் இருந்திருக்கிறது. பல அறிவுத் துறைகளுக்கு அடிப்படையான இத்துறை கிழக்கு மேற்கு பல்கலைக்கழகங்கள் பலவற்றில் முக்கியமான பாட நெறியாக பல நூற்றாண்டுகளாக போதிக்கப்பட்டு வருகிறது. கிரேக்கத்தில் சோக்கிரட்டீஸ் காலத்திலும் அதற்கு முற்பட்ட சோபிஸ்ட்டுகளின் கல்விப் போதனை முறைகளிலிருந்தும் இதன் தொடக்கத்தை அனுமானிக்கலாம். ஏறத்தாழ கி.மு 4ம் ,5ம் நூற்றாண்டுகளில் இது ஆரம்பித்ததாக கூற முடியும்.

கீழைத்தேய மரபுகளிலும் கீழைத்தேய பின்னணியில் இத்தகைய தொன்மையான கல்வித் தொடர்பு இப்பாட நெறிக்கு உண்டு.தொன்மைக் கல்வி முறையில் பல முக்கிய பாட நெறிகள் மெய்யியலின் பின்னணியில் இருந்தே வளர்ச்சி பெற்று பின்னர் தனித்துறைகளாக மாற்றம் அடைந்துள்ளன. ஒவ்வொரு பாடத் துறையினதும் முன்னோடிகள் அல்லது அதன் கோட்பாட்டு ரீதியான சிந்தனையாளர்கள் தத்துவியலாளர்களாகவே கருதப்படுவார்கள். கார்ல் மார்க்ஸ் (சமூகவியல்), ஜோன் டூஈ (கல்வியியல்),பேர்டரன்ட்; ரஸல் (கணிதவியல், அளவையியல்), ப்ராய்ட் (உளவியல்) ஐன்ஸ்ரைன் (விஞ்ஞானம்), ஏனர்ஸ்ட் மாஹ் (கணிதம், அளவையியல்) போன்றோரை இந்த வரிசையில் குறிப்பிடலாம். அவர்கள் தத்தமது துறைகளில் பெற்ற சிந்தனா ரீதியான கருத்து வளங்களினால் மெய்யியளாளர் தகுதிக்கு தம்மை உயர்த்திக் கொண்டவர்கள். இன்னும் சிலர் தமது துறைகளில் இருந்தவாறே மெய்யியல் கோட்பாடுகளில் ஆர்வம் செலுத்துவோராக இருந்துள்ளனர்.

இப்னு – கல்தூன் வரலாற்றியலின் தந்தையாகவும் சமூகவியலின் தந்தையாகவும் கருதப்படுகின்றார். கார்ல் மார்க்சுக்கு முன்னரே சமூக இயக்கத்தின் அடிப்படை விதிகளையும் அவற்றின் வரலாற்றுப் பரிமாணத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியவர். இப்னூ கல்தூனின் ‘முகத்திமா’ வெறும் வரலாறு மற்றும் சமூகவியல் நூலல்ல. அது வரலாற்று மெய்யியல் சமூக மெய்யியல் என்பவற்றையும் மெய்யியலையும் உள்ளடக்கிய படைப்பு.

மருத்துவம்,பொறியியல், பொருளியல், சமூகவியல் படிக்கும் மாணவனொருவன் கூட குறிப்பிட்ட உயர் கல்வி கற்கைகளின் போது அத்துறைசார் தத்துவவியலை அறிந்திருக்க வேண்டிய தேவை உள்ளது. உயிரியலின்; தத்துவத்தை அறியாத ஒரு மருத்துவ மாணவன் மருத்துவனாகலாம். ஆனால், அவன் மருத்துவ விஞ்ஞானியாக அல்லது மருத்துவ விஞ்ஞான சிந்தனையாளனாக மாறும் போது அவன் தத்துவவியலின் எல்லைகளை தொடுபவனாக மாறுகின்றான். தவிர, அவனால் விஞ்ஞானியாக முடியாது. அந்தளவு இத்துறை முக்கியத்துவம் பெறுகிறது.

தத்துவவியல் குறிப்பிட்ட ஒரு நாட்டில்தான் தோன்றியது என்று குறிப்பிட்ட நாட்டை அல்லது பிராந்தியத்தை மாத்திரம் அடையாளப்படுத்துவது கடினமானது. ஆபிரிக்கா, அரபு மொழி பேசும் நாடுகள், எகிப்து, எதியோப்பியா, இந்தியா போன்ற நாடுகளில்  இது தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டுள்ளதை பற்றிய ஆய்வுகள் நம்முன்னால் உள்ளன. எனினும் பிரச்சினை வேறொரு மெய்யியல் ரீதியிலான கேள்வியில் இருந்து எழுகின்றது. அது மெய்யியல் என்ற அந்தத் துறைக்கு நியாயம் செய்யக் கூடிய அல்லது அதை குறைவின்றி பிரதிபலிக்கக்கூடிய சிந்தனை முறை முதலில் எங்கு ஆரம்பமானது என்பதுதான் எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாகும். அதனால்தான் ஏனைய நாடுகளையும் நாகரீகங்களையும் விட கிரேக்கம் அல்லது கிரேக்க நாகரீகம் என்ற பதில் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இதன் பழைய பெருமை மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் அதே போல தற்காலத்திலும் அதன் பங்கும் தேவையும் மனித அறிவில் எவ்வளவு முக்கியமானது என்பதை உலகம் அவதானித்த வண்ணமே உள்ளது. இத்துறையின் முக்கியத்துவம் கருதியே நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தை தத்துவவியலுக்கான வாரமாக ஐ.நா சபை பிரகடனப்படுத்தியுள்ளது. உலகின் ஒவ்வொரு பிரஜைக்கும் பொதுமக்களுக்கும் மெய்யியல் அறிவும் அது முன்வைக்கும் அடிப்படையான சிந்தனை மற்றும் விசாரணை முறைகளும் வாழ்க்கைச் சிக்கலுக்கான தீர்வுகளும் போய்ச் சேர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

மெய்யியல் குறித்து சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் விமர்சனங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

மனிதனது கோட்பாடுகள், சிந்தனை, மொழி என்பவற்றில் காணப்படுகின்ற சிக்கல்கள், பிரச்சினைகள் என்பவற்றைத் தீர்த்து வைப்பதே மெய்யியலின் நோக்கமாகும். தமது கருத்தை பகுத்தறிவு ரீதியாக முன்வைப்பதற்கான ஆய்வு முறையியலே இதுவாகும். இது ஒரு கத்தியைப் போன்றது. அதனைப் பயன்படுத்துபவரின் நோக்கத்தைப் பொறுத்தே அதன் பிரயோசனம் அமையும். இஸ்லாமிய வரலாற்றில் பலர் தத்துவவியலை விமர்சித்திருப்பது உண்மையே. அக்கால அரசியல் மற்றும் சமய சூழ்நிலைகள் அவர்களை இவ்வாறு பேசத் தூண்டியிருக்கலாம்.

பொதுவாக எந்தவொரு துறையைப் பொறுத்த மட்டிலும் கருத்து வேறுபாடுகள் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. மெய்யியலை விட பெரிய எதிர்ப்புக்குள்ளானது குறிப்பாக சமயவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளானது விஞ்ஞானமாகும். நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளை ஈவிரக்கமின்றி சமய உலகம் அழித்தது. இது ஒரு பெரிய வரலாறு. ஒரு பெரிய ஆபத்தில் இருந்து விஞ்ஞானம் ஒருவாறு தன்னைப் பாதுகாத்து இன்று எதிர்ப்புக்களுக்கு இடமில்லாத அல்லது எதிரப்புக்களுக்கு அஞ்சாத துறையாக வளர்ந்திருப்பதோடு உலகின் மிகப் பெரும் பாராட்டுக்கு உரியவர்களாக விஞ்ஞானிகளே தெரிவு செய்யப்படுகிறார்கள்.

முஸ்லிம் அல்லாத சுகம் பெற்ற நோயாளிகள் வைத்தியரை கையெடுத்துக் கும்பிடுவது அந்த நபருக்குரிய வெகுமதி அல்ல. அது மருத்துவ விஞ்ஞானத்துக்குரிய மனிதனின் நன்றிக் கடனாகும். விஞ்ஞானம் அழிவிலிருந்து தப்பியதனால் அது உலகுக்கு தந்து கொண்டிருக்கும் வைத்திய வசதிகள், சுகாதார சேவைகள், வாழ்க்கையை இலகுபடுத்தும் உபகரணங்கள் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றங்கள் போன்ற சேவைகளை மனிதன் தொடர்ந்து புகழ்ந்த வண்ணம் உள்ளான். ஆயினும் அதன் மீதான விமர்சனங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை.

உதாரணமாக இமாம் கஸ்ஸாலி தத்துவவியல் பற்றி அதிகமாக பேசியவர் அதில் அவருக்கு போதுமான அறிவும் இருந்தது. கிரேக்க தத்துவங்களை இரண்டு வருடங்களுக்குள்ளாகவே தான் படித்து முடித்து விட்டதாக ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறி இருந்தார். அரிஸ்டோட்டிலிய அளவையியலிலும் அவருக்கு தேர்ச்சி இருந்தது. எனினும் தத்துவவியலினால் அவர் அதிகம் பயன் பெற்றிருந்த போதும் தத்துவவியலை முஸ்லிம் உலகம் கற்றுப் பயன்பெற வேண்டும் என்ற கருத்தை அவர் ஆதரிக்கவில்லை.

மெய்யியலுக்கு எதிராகப் பல தர்க்க நியாயங்களை அவர் தீவிரமாக எழுதினார். ஆனால், அவரது நூல்களை வாசிக்கும் ஒருவர் அவர் சிறந்த தத்துவவியலாளராவார் என்பதை இலகுவில் புரிந்து கொள்வார். தத்துவவியலை எதிர்ப்பதற்குத் தனது தத்துவவியல் ஞானத்தையும் தத்துவவியலின் மற்றொரு கிழையான அரிஸ்டோட்டிலிய அளவையியல் ஞானத்தையும் பயன்படுத்தியே அதை அவர் செய்து முடித்தார்.

‘தூஹ்பத்துஸ் பல்சிபா’ என்ற அவரது நூல் தத்துவவியல் நிராகரிப்பாகும். அதில் பல நியாயங்களை அவர் கூறுகின்றார். ஆனால் ‘இஹ்யாவு உலுமுத்தீன்’ இல் சமா என்ற அத்தியாயத்தில் இஸ்லாத்தில் இசை ஆகுமானது என்பதை ஆதரித்து வாதிடும் போது அவர் தத்துவ மொழியிலேயே பேசினார். அதனால்தான் என்னவோ அது அதிகம் பேருக்கு விளங்காமல் போய்விட்டது. முக்கிய விடயம் என்னவெனில் அது தத்துவ மற்றும் தர்க்க ஞானங்களை இசையியலுடனும் (musicology) ஆகும் ஆகாது என்ற சமய மரபு ரீதியான சர்ச்சைகளின் மோதல்களில் இருந்து பெறப்படும் தகுதியான நியாயங்களைக் கொண்டும் அது செயற்படுத்தப்பட வேண்டிய ஒரு விசாரணையாகவும் பகுப்பாய்வாகவும் இருந்தது. அதை செய்வதற்கு இமாம் கஸ்ஸாலிக்கு பக்க பலமாக இருந்தது மெய்யியல் மட்டுமல்ல அவர் காலத்தில் முஸ்லிம் மெய்யியளாளர்கள் இசை மெய்யியலைப் (philosophy of music) பற்றி எழுதியிருந்த விடயங்களுமாகும். சரியாக சொல்வதானால் கஸ்ஸாலியின் சமா எனும் நூல் இஸ்லாமிய இசை மெய்யியல் என்று கூற தகுதியுடைய படைப்பாகும்.

தத்துவவியல் பற்றிய இமாம் கஸ்ஸாலியின் பார்வை பூரணமானதல்ல. ஒரு முஸ்லிம் ஆய்வறிவாளன் தத்துவவியலை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது விஞ்ஞானம் உட்பட உலகப் பொது சிந்தனைகளுக்கு மெய்யியல் எவ்வாறனதொரு அடிப்படை ஞானமாகவும் விசாரணை கருவியாகவும் விளங்குகின்றது என்பதை ஷெய்க் ஜமாலுத்தீன் அல் ஆப்கானியினுடைய சிந்தனையில் இருந்து ஒருவர் தெளிவு பெற முடியும். தத்துவவியலை ஓர் ஆய்வு முறையியலாகவும் ஒரு விசாரணையாகவும் விஞ்ஞான அறிவுக்கான முன்னோடி வழிகாட்டியாகவும் சிந்தனைத் தெளிவுக்கு உதவும் பயனுள்ள கருவியாகவும் பார்க்காது அதனைப் பயன்படுத்தி வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்ததில் பல குறைபாடுகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு முஸ்லிம் உலகம் பலியாகியது.

எவ்வாறாயினும் இஸ்லாமிய உலகு அறிவியல் துறையில் முன்னணியில் இருந்ததாகக் கூறப்படும் காலங்கள் முஸ்லிம் அறிவுலகம் தத்துவவியல் துறையிலும் வளர்ச்சி பெற்றிருந்த காலங்களே என்பதை மறுக்க முடியாது. இவ்விடயங்கள் பற்றி பேசுவோரில் அநேகர் இந்த உண்மைகளை நன்குனர்ந்துள்ளனரா என்பது ஐயத்திற்கிடமானது. தத்துவவியல் இல்லை என்றால் அங்கு விஞ்ஞான அறிவுக்கு வாய்ப்புக்கள் கிடையாது என்ற ஆப்கானியின் கூற்றை மட்டும் விளங்க முடிந்தால் அது பயனுள்ள முயற்சியாகும்.

பொதுவாக முஸ்லிம் உலகில் தத்துவவியல் கல்வி எந்த நிலையைப் பெற்றுள்ளது?

இஸ்லாம் தோன்றுவதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்துறை கிரேக்கத்தில் தோன்றி வளர்ச்சியடைய ஆரம்பித்திருந்தது. இஸ்லாத்திற்கு முந்தைய வரலாற்றில் அரபுலகில் இத்துறையின் செல்வாக்கு இருந்திருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் காணப்படவில்லை. எனவே, இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பிறகு இஸ்லாமிய பேரரசுகளின் விரிவாக்கத்தோடு ஏனைய நாகரீகங்களுடன் ஏற்பட்ட அறிமுகம் புதிய கல்வியிலும் குறிப்பாக தத்துவவியலிலும் முஸ்லிம்களின் ஆய்வறிவு மனப்பான்மை ஒரு பெரிய திருப்பு முனையை பெறுகின்றது.

ஐரோப்பா இருளில் இருந்தபோது கல்வி என்னும் ஒளியை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது என்று அடிக்கடி கூறப்படும் உரையின் வரலாறு இவ்வாறுதான் அமைந்துள்ளது. தனது நாகரீகக் கட்டமைப்புக்குள் ஏனைய உயர்ந்த நாகரீகக் கூறுகளை உள்வாங்குவதற்கு இஸ்லாத்தில் இருந்த முன்னேற்றச் சக்தியின் தவிர்க்க முடியாத செயல்பாடாக இது அமைந்தது எனக் கூற முடியும். இந்த ஆற்றல் குர்ஆனிலிருந்தும்; கல்வி தொடர்பான ஞானங்களை பெறுவது தொடர்பான நபி அவர்களின் கோட்பாடுகளின் தூண்டுதலில் இருந்தும் அன்றைய முஸ்லிம் அறிஞர்கள் பெற்றிருந்ததாக நம்பலாம். நபிகளின் வபாத்தைத் தொடர்ந்த வெறும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய உலகில் இத்துறை பாரிய வளர்ச்சி கண்டமையை உலக அறிஞர்கள் ஆச்சர்யத்துக்குரிய நிகழ்வாகவே பார்க்கிறார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை மெய்யியலுடன் நெருக்கமானதொரு கல்வியமைப்பு முஸ்லிம் உலகில் இருந்திருக்கிறது. கிரேக்க மொழியில் இருந்து அரபு மொழிக்குப் பெயர்க்கப்பட்ட நூல்களை முஸ்லிம்கள் கீழைத்தேயத்திற்கும், மேலைத் தேயத்திற்கும் ஏந்திச் சென்றனர். இதன் காரணமாக கிரேக்க மொழியைப் போன்றே அரபு மொழியிலும் எண்ணற்ற மெய்யியல் மற்றும் விஞ்ஞான துறை நூல்கள் எழுதப்பட்டன. புதிய கருத்துக்களையும் கண்டு பிடிப்புக்களையும் முஸ்லிம் சிந்தனையாளர்கள் உலகுக்கு வழங்கினர்.

8ம் நூற்றாண்டில் இருந்து 14ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட அரபு பாரசீக முஸ்லிம் அறிஞர்களின் மெய்யியல் விஞ்ஞான நூல்கள் இன்னும் நூற்றுக் கணக்கில் தேடி எடுக்கப்படாத நிலையில் பண்டைய இஸ்லாமிய கல்வி நிலையங்களாக விளங்கிய இடங்களில் போதிய பாதுகாப்பற்ற நிலையிலும் பழுதடையும் நிலையிலும் இருந்த வருகின்றன. அவற்றில் இருந்து மிகக் குறைவான நூல்களே தேடிப்பெறப்பட்டு உலகை வந்தடைந்துள்ளன. மனித அறிவு வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் வழங்கிய எல்லையற்ற பங்களிப்பு துருப்பிடித்த நிலையில் இருண்ட அறைகளில் முடங்கிக் கிடப்பதை ஐ.நா கல்வி நிறுவனங்கள் கவலையுடன் தெரிவித்துள்ளன.

பக்தாத், பஸ்ரா, கூபா, டமஸ்கஸ், அலெக்ஸ்ஸாண்ட்ரியா, ஐரோப்பாவில் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பண்டைய முஸ்லிம் கல்விக் கூடங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட இவ்வாறான பல நூல்களை ஐ.நா கடந்த காலங்களில் அரபு, ஆங்கில மொழிகளில் பதிப்பித்துள்ளது. எனினும், தொடர்ந்து இவ்வாறான மூலப் பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து பரிசோதித்து புத்தகங்களாக பதிப்பிப்பதற்கு தேவையான நிதி வளம் இல்லை என்று காரணம் கூறி ஐ.நா இப்பணிகளை இடை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் உலகில் ஒரு மாற்றம் தேவை என்ற கருத்து எல்லாத் தரப்பினர் மத்தியிலும் காணப்படும் நிலையில், மெய்யியல் ரீதியான சிந்தனைகளின் இடைவெளி முஸ்லிம் உலகின் தேக்க நிலைக்கு காரணம் என்று குறிப்பிட முடியுமா?

பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளாகும் போது முஸ்லிம் உலகின் திறந்த நிலையிலான சிந்தனை தேடும் போக்கில் ஏற்பட்ட தேக்க நிலை முஸ்லிம் உலகம் மெய்யியல் துறையைப் புறக்கணித்ததில் இருந்தே ஆரம்பமாகின்றது. இது விஞ்ஞானத்தையும் முற்றாக மறுத்த ஒரு போக்கு என்ற வரலாற்று உண்மையை பலர் நோக்கத் தவறியுள்ளனர். கிறிஸ்தவ உலகத்தில் இருந்த அறிவுக்கு எதிரான நிராகரிப்பு அதாவது விஞ்ஞானத்திற்கும் மெய்யியலுக்கும் எதிரான நிராகரிப்பிற்கு சமமான போக்கு முஸ்லிம் உலகிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது என்பது ஒரு வகையில் ஆச்சரியமானதுதான்.

முஸ்லிம் சமூகத்தில் மாற்றமொன்று அவசியம் என்ற அம்சத்தை எல்லாத் தரப்பினரும் இன்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நினைக்கின்றேன். எனினும், தெளிவில்லாத கண்ணோட்டங்களும், கருத்துக்களை நன்கு உணராத வெவ்வேறான பார்வைகளும் சமூகத்தில் இன்று நிலவுகின்றன. சர்ச்சைக்குரிய விடயங்கள் இருப்பதையும் அப்படியிருக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அவசியமானது. தவறான முன் எண்ணங்களில் (prejudices) இருந்து விடுதலை பெறுவது அதை விட அவசியமானது. அதாவது அறிவு ரீதியான மாற்றம் என்பது சமூக சீர்திருத்தத்திற்கான முன்னோடி நிபந்தனையாகும். மாற்றம் என்பது ஒரு தத்துவமாகும். அதை முன்னேற்றம் என்ற பொருளில் விளங்குவது இன்னொரு படிநிலைக்கு நமது அறிவை தயார் செய்வதாகும். இதுதான் மாற்றம் என்ற கருத்தில் இளைஞர்களிடம் நாம் பேச வேண்டிய பிரதான விடயப் பொருளாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லாவி இஸ்லாமிய உலகின் மாற்றம் பற்றிய சிந்தனைகளை இஸ்லாமிய அணுகுமுறையோடு முன்வைத்தார். சம காலத்தில் எகிப்து, மத்திய கிழக்கு, இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் அவரை ஒத்த சிந்தனை கொண்ட சீர்திருத்தவாதிகள் தோற்றம் பெற்றனர். முஹம்மத் அப்தூஹ், ஜமாலுத்தீன் ஆப்கானி போன்றோரை இந்த வகையான சீர்திருத்த சிந்தனைகளை முன்வைத்தவர்களாகக் குறிப்பிடலாம்.

மார்க்க அடிப்படையில் நின்று புதிய உலகுக்கான சமூகக் கட்டமைப்பு, அறிவு, சிந்தனா ரீதியான அடிப்படைகளை முன்வைக்க இவர்கள் முயற்சித்தனர். நவீன யுகத்தின் அறைகூவல்களைக் கருத்திற்கொண்டு, சமூக மேம்பாட்டை எவ்விதம் உருவாக்குவது, நவீனத்துவத்தின் பின்னணியில் சமய, சமூக, அரசியல் மாற்றங்களை எவ்வாறு விளங்கிக் கொள்வது, பரந்தளவில் உலகளாவிய மாற்றம் ஒன்றை எவ்வாறு உருவாக்குவது போன்ற அம்சங்களில் இவர்கள் தமது பார்வையைச் செலுத்தினர்.

நவீன யுகத்தின் சுழலுக்கு ஏற்ற விதத்தில் இஸ்லாத்திற்கு மீள்வரைவிலக்கணம் வழங்கப்பட வேண்டும் என ஷாஹ் வலியுல்லாஹ் வலியுறுத்தினார். இச்சிந்தனையாளர்களின் கருத்துக்களை சமூகம் உள்வாங்கியிருந்தால், கல்வி, அறிவு, விஞ்ஞானம், மெய்யியல், தொழிநுட்ப ரீதியாலான பாரியளவிலான மாற்றமொன்று முஸ்லிம் உலகில் ஏற்படுவதற்கான பெரிய வாய்ப்பிருந்தது. சமூக சீர்திருத்தம் பற்றி சிந்திப்போரிடம் இன்றும் கூட இச்சிந்தனையாளர்களின் தாக்கம் இருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக மகாகவி அல்லாமா இக்பாலிடம் ஷெய்ஹ்வலியுல்லாஹ் திஹ்லாவி மற்றும் ஜமாலுத்தீன் ஆப்கானி இருவரினதும் செல்வாக்கு எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதை அவரது பாடல்களில் இருந்தும் எழுத்துக்களில் இருந்தும் உணர முடியும்.

ஷெய்ஹ் வலியுல்லாஹ் போன்றவர்கள் ஆரம்பித்து வைத்த இச்சிந்தனா ரீதியான எழுச்சியின் ஒரு விளைவாக இன்று இடம்பெற்று வரும் அரபு வசந்தத்தைக் கருத இடம் இருக்கிறதா?

அரபு வசந்தத்திற்கு அல்லது அரபு மக்கள் எழுச்சிக்கு ஒரு நீண்ட வரலாற்று பின்னணி இருப்பதாகவே தோன்றகின்றது. அது சடுதியான உருவாக்கம் அல்ல. டியூனீஸியாவில் அந்த இளைஞன் தனக்குத் தானே மூட்டிக்கொண்ட தீ ஒரு தனிநபரின் தற்கொலை முயற்சியோ விபத்தோ அல்ல. சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளின் சீர்திருத்தம் கானாத பின்தங்கிய பழம் மரபுகளின், பாழடைந்த அரசியல் சம்பிரதாயங்களின் தாக்கம் அந்த தீயில் வெளிப்பட்டது. அது சடுதியானது. ஆனால் இந்தப் புரட்சி அல்லது மாற்றம் தேவை என்று ஏறத்தாழ 200 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் உலகில் குரல் எழுப்பிய அறிஞர்கள் உள்ளனர். இந்திய உப கண்டத்தில் ஷெஹ் வலியுல்லாஹ்விடம் இருந்த இக்குரல் ஒலித்தது. 19ம் நூற்றாண்டில் ஈரானிலும் எகிப்திலும், துருக்கியிலும் ஜமாலுத்தீன் ஆப்கானி இப்புரட்சியை தூண்டியவர்களில் முதன்மையான நபராக விளங்கினார். சமுதாய மாற்றம், சமய சீர்திருத்தம், முடியாட்சிக்கு எதிரான ஜனநாயக இலட்சியம் என்ற தொனிப்பொருள்கள் இச்சிந்தனையாளர்களிடம் இருந்துதான் இஸ்லாமிய நவீன ஆய்வறிவுத் துறையில் உள்வாங்கப்பட்டது. இன்றைய அரபு வசந்தத்திலும் தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்தும் டியூனீசியாவின் வீதிகளில் இருந்தும் இளைஞர்கள் எழுப்பிய உரிமைக் குரலில் இவை மீண்டும் எதிரொலித்தன. நாமே ஏற்படுத்திக் கொண்ட தடைகளைத் தவிர அந்தக் குரல்கள் எமக்குச் சொல்வதற்கு ஆயிரம் விடயங்களை உள்ளடக்கி இருந்தன.

அதாவது காலம் மாறுகின்றது. புதிய யுகத்தை நோக்கி மனித இனம் நகருகின்றது. பொதுவாக மாற்றம் என்ற கருத்து முஸ்லிம் உலகைப் பொறுத்த வரை கவனத்துக்குரியதொன்றாக பொதுவாக இருந்ததில்லை. ஆனால்ää அந்தக் காலங்களில் மீலாத் விழாக்களில் நபியவர்களின் புரட்சியைப் பற்றித்தான் அதிகம் பேசினோம். அதாவது இஸ்லாம் உலகை எவ்வாறு மாற்றியது என்பதுதான். மாற்றம் என்ற கருத்து அந்த வகையில் இஸ்லாத்திற்கு புதியது அல்ல ஆனால் அது மறைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் ஷெய் வலியுள்ளாஹ் உட்பட நவீன யுகத்திற்கான மாற்றத்தை இஸ்லாமிய பண்பாட்டில் இருந்து ஆதரித்த அறிஞர்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உடனடியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் ஏற்பட வேண்டிய மாற்றங்களை எடுத்துக் கூறியே வந்துள்ளனர். அவை புறக்கணிக்கப்பட்டால் எற்படக்கூடிய பாதகமான நிலமைகளைப் பற்றியும் அவர்கள் எச்சரிக்கத் தவறவில்லை. ஆனால் அவற்றை பாரபட்சமற்ற முறையில் சீர் தூக்கிப் பார்ப்பதற்கு அடுத்த தலைமுறை முன்வரவில்லை. சிந்தனா ரீதியில் ஒரு பரந்த மனப்பான்மைக்கு இடமளிக்கும் ஆய்வறிவுக் கலாசாரம் முஸ்லிம்களிடத்தில் வெற்றி பெறவில்லை அல்லது தோற்கடிக்கப்பட்டது.

சரியாகச் சொல்வதானால் இன்றைய ஐரோப்பாவின் மிகப் பெரிய சக்தியுள்ள எந்த நாட்டிற்கும் குறைவில்லாத சக்தியுள்ள நாடாக துருக்கி இருந்திருக்க வேண்டும் அல்லது எகிப்து அந்த இடத்தை கைப்பற்றி இருக்க வேண்டும். இந்த வீழ்ச்சிக்கு பல காரணங்கள் கூற முடியும். சுருக்கம் கருதி ஒரு அடிப்படையான காரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். அது கல்விக்கும் விஞ்ஞானத்திற்கும் நவீன சிந்தனைக்கும் எதிரான பழமை வாதத்தின் வேர்களில் படிந்திருந்த மாற்றத்திற்கு எதிரான போக்கு என்று கூற முடியும். டியூனீசியாவில் தனக்குத்தானே தீ மூட்டி இறந்த இளைஞனின் மரணத்தின் தத்துவார்த்த பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டால் பெறக்கூடிய முடிவு இதுவாகவே இருக்கும். அந்த இளைஞனின் மரணத்திற்கு அரபு வசந்தம் நீதி வழங்குமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். ரிஸானாவுக்கு நீதி வழங்கப்பட்டதா என்ற கேள்வியில் இதற்கான விடையைத் தேட முடியும்.

அரபு நாடுகள் முழுக்க இன்று இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் அவலங்களின் பூமியாக மாறியுள்ளன. அரபு வசந்தம் கூறும் கதை தெளிவானது. 200 வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிய சமூக அரசியல் கட்டமைப்புக்களிலும் சமய மறு சீரமைப்பிலும் அவதானிப்பற்ற நுண்ணாய்வற்ற பின்னணியில் இருந்து எழுந்த தவறுகள் வழங்கும் தண்டனைகளாக இதனைக் கருத முடியும். இது ஒரு துக்க கரமான நிலை. அரபு வசந்தம் அதனுடைய உண்மையான மக்கள் நலம் சார்ந்த, நவீன யுகம் சார்ந்த நிலமைகளை இன்னும் மூடி மறைக்கும் விதத்தில் அதன் போக்கை கொண்டு செல்லுமானால் மேலும் பல அரபு வசந்தக்களுக்கு அல்லது இரத்த ஆறுகள் பெருக்கெடுப்பதற்கு வழி வகுத்த பாவத்தை இன்றைய தலைமுறையினர் சுமப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஷெய்ஹ் வலியுல்லஹ் போன்றோர் ஏற்படுத்திய இந்த நவீனத்துவ அலையின் தாக்கம் இலங்கையில் எவ்வாறு உணரப்பட்டது?

அப்துஹ ஆப்கானி போன்றோரின் சிந்தனைத் தாக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் உணரப்பட்டுள்ளதாக கூற முடியும். மத்திய மாகாணத்தின் சீர்திருத்த வாதியான சித்தி லெப்பை அவர்கள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். ஆப்கானி அவர்களது கருத்துக்களின் தாக்கத்திற்குள்ளாகி இருந்த அறிஞர் சித்திலெப்பை ஆப்கானியின் தீவிர ஆதரவாளராகவும் அவரது கருத்துக்களை செயல் படுத்துவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருந்தார். தனது ‘ஹஸன் பே சரித்திரம்’ என்ற நாவலில் ஆப்கானியையும் அவரது சிந்தனைகளையும் ஒரு பாத்திரத்தின் ஊடாக அறிமுகப்படுத்தும் அளவுக்கு, அவரது கருத்துக்களில் சித்திலெப்பைக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது.

இந்தச் சிந்தனைகளின் பின்னணியில்தான் சித்திலெப்பை தனது கருத்துக்களைத் தனது பத்திரிகையான ‘முஸ்லிம் நேசன்’ ஊடாக முன்வைத்தார். ஆண், பெண் இருபாலாருக்குமான நவீன கல்வி பற்றிப் பேசியதோடு, அதற்காக பல்வேறு முயற்சிகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். அதாவது மாறும் உலகமும் நவீன தேவைகளும் எவ்வாறு முஸ்லிம்களால் எதிர் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு அறிஞர் சித்திலெப்பை ஒரு பெரிய முன்னுதாரணமாக விளங்கினார். அவரது சிந்தனைத் தாக்கத்தை தெற்காசிய            சூழலில் இருந்து நோக்கும் போது இப்பிராந்தியத்தில் வாழ்ந்த பெரிய சீர்திருத்தவாதிகளில் ஒருவராகவும் முக்கியமாக முஸ்லிம் கல்விச் சீர்திருத்தத்தின் பெரும் முன்னோடியாகவும் கொள்வதே மிகப் பொருத்தமாகும்.

இலங்கையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரபு மத்ரஸாக்கள் இருந்தாலும் ஆழமான இஸ்லாமிய அறிவுள்ள அறிஞர்கள் உருவாகவில்லை என்ற குறைபாடு பற்றி சிலர் முன்வைக்கின்றனர். இது பற்றிய உங்கள் பார்வை என்ன?

இலங்கையில் மத்ரசாக் கல்வி 1884ல் அல்லது அதற்கு அன்மித்த ஆண்டுகளில் ஆரம்பித்ததாக அறிய முடிகின்றது. ஏறத்தாழ 120 ஆண்டுகள் அத்துறையில் இலங்கை முஸ்லிம்கள் தமது அறிவை வளர்த்து வருகின்றனர். பாரம்பரிய முறையில் பார்க்கும்போது தமிழ்நாடு, கேரள தொடர்புள்ள மத்ரஸாக்கள், மர்தரஸா ஒஸ்தாதுகள் மூலமாக இந்த அறிவு இலங்கையில் பரவியதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கான உலாமாக்களை உருவாக்குவதில் இந்த கல்வி மரபு முக்கிய பணி ஆற்றியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் நீங்கள் எழுப்புகின்ற வினாவிற்கான விடையைத் தேடும்போது சில சிறந்த அறிவாளிகளான உலமாக்களை இலங்கை பெற்றிருக்கின்றது. ஆனால் ஒரு பொது நோக்கில் 120 வருட கால வரலாற்றில் என்று நோக்கும்போது இலங்கை மத்ரசாக் கல்வியில் ஆழமான கல்விச் சீர்திருத்தம் அல்லது பாடத்திட்ட ஒழுங்கமைப்பு மாற்றமும் போதனைகளில் நவீனத்துவமும் தேவைப்படுகின்னறது.

உலமாக்களின் மத்ரஸா அறிவு மார்க்க அடிப்படை விதிகளையும் மரபுகளையும் மட்டுமன்றி பொது உலகோடு உள்ள பிரச்சினைகளையும் கல்வி முறைகளையும் ஒரு நவீனத்துவ நோக்கில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டமும் போதனாசிரியர்களின் திட்டவட்டமான கல்வித் தகமை பற்றிய இறுக்கமான வரையறைகளும் மிகவும் அவசியமாகும். பரீட்சை முறைகளில் மேலும் சீர்திருத்தம் தேவைப்படுகின்றது. அறிவு விருத்திக்கும் விடயங்களை ஆராய்ந்து கற்பதற்குமான வாய்ப்புக்கள் மாணவர்களுக்கு மேலும் அதிகளவில் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருங்கிணைக்கப்பட்ட மத்ரஸாக் கல்விக்கான விரிவான பாடத்திட்ட முறை ஒன்றும் இல்லாத நிலையில் மத்ரஸாக்களிலிருந்து சிறந்த பெறுபேறுகளை பெறுவது கடினமாகும்.

ஆழமான இஸ்லாமிய அறிவுள்ள உலமா என்பவர் யார்? என்ற பிரச்சினையும் இங்கு எழாமலில்லை. எவ்வாறாயினும் ஷெய்ஹ் வலியுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டது போன்று மார்க்க விஷயங்களோடு உலக விவகாரங்களையும் ஆழமாகக் கற்றவரே மார்க்க அறிஞராவார். அந்த வகையில் இத்துறையில் மேலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All