Puttalam Online
editorial

சமூகமாற்றம் நோக்கிய பயனத்தில் அகலமான எட்டுக்களை எடுத்து வைத்து…

  • 13 April 2013
  • 2,399 views

year 3அல்லாஹ்வின் பேரருளினால் புத்தளம் ஒன்லைன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து சமூகமாற்றம் நோக்கிய பயனத்தில் அகலமான எட்டுக்களை எடுத்து வைத்து நகருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

புத்தளம் ஒன்லைன் இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்து விட்டது என்று ஆனந்தப் பேருவகையோடு சில நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது எமக்கு ஆத்மதிருப்தியைத் தருகின்றது. என்றாலும் இச்சந்தர்ப்பத்தை மீள் மதிப்பீட்டுக்கான காலமாக கருதுவதே  புத்தளம் ஒன்லைன் இணைய சஞ்சிகையின் எதிர்கால ஆரோக்கியமான வளர்ச்சிக்கான உரமாக அமையும்.

சமூகமாற்றம் பற்றிய சிந்கனைத் தளத்தை சர்வதேசத்திற்கு நகர்த்தியதில் புத்தளம் ஒன்லைனின் வகிபாகம் போற்றத்தக்கதாகும். இதனை ஒரு விருட்சமாக வளர்த்தெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பை இணைய சஞ்சிகைக் குழு மட்டுமல்ல இணைய சஞ்சிகையின் வாசகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றுள்ள மீடியா  தனிமனிதர்கள் முதல் அரசாங்கம் வரையுள்ள அனைத்தையும் வடிவமைக்கின்றது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் இவ்விடத்தில் இராட்சத எட்டுக்களை எடுத்துவைத்திருக்கின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மீடியா  மாறியுள்ளது. ஊடகத்துறையோடு ஒரு சிறு உறவும் இல்லாதவன் வாழ்வில் தோழ்வியை சந்திப்பான். அவ்வாறே முழுக்க முழுக்க மீடியாவினால் வடிவமைக்கப்பட்டு மூளையை அடகு வைத்தவனும் அடையாளம் இழந்து வாழ்வான். இவ்விடத்தில் ஊடகவியல் விழுமியங்கள் குறித்த சிந்தனை முக்கியத்துவம் பெறுகின்றது.

அல்ஹம்துலில்லாஹ்..! புத்தளம் ஒன்லைன் சஞ்சிகைக் குழுவில் ஊடக விழுமியங்கள் குறித்த விழிப்புணர்வுமிக்க இளைஞர்களும் புத்திஜீவுகளும் இடம்பெற்றிருப்பது ஒரு அருட்பேறு என்றே நாம் கருதுகின்றோம். எமது இணையச் சஞ்சிகை சமநிலை சிந்தனையை அடித்தளமாகக் கொண்டது. அது முதலில் சத்தியத்தையும் பின்னர் மனிதனையும் மதிக்கின்ற பன்பொழுக்கத்தைக் கொண்டுள்ளது. புத்தளத்தில் எத்தளத்தில் இருந்து கருத்துக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அக்கருத்துக்களை தரம் வகுத்து உள்வாங்கும் திறன்கொண்டது எமது இணைய சஞ்சிகை.

பௌதிக வள அபிவிருத்தியை மட்டும்  சமூக மேன்பாடு எனக்கருதுவோரின் பார்வையில் புத்தளம் ஒன்லைன் இமாலயச் சாதனை ஒன்றை செய்யவில்லை என்ற கருத்தை ஒரு விவாதத்திற்கு நாம் ஏற்றுக்கொள்ளமுடியும். நெடிதுயர்ந்து நிற்கும் கட்டிடங்களை நிர்மாணித்துவிடுவது சிரமசாத்தியமானதல்ல. ஆனாலும் சமூகமாற்றத்திற்கான நேர்மனப்பாங்கு என்ற நேர்கோட்டில் வித்தியாசமான சிந்தனைகளை சந்திக்க வைப்பதுவும் ஒரு இமாலயச் சாதனையே.

இந்தப் பணியை புத்தளம் ஒன்லைன் காத்திரமாக செய்துள்ளது. எப்போதும் புத்தளம் எதிர்ப்பு அரசியலுக்கே இசைவாக்கம் அடைந்துவந்துள்ளது. அதற்கு இணக்க அரசியல் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இத்தகைய விகற்பமான சமூகச் சூழலில் எமது இணைய சஞ்சிகை சந்திக்கும் சிரமங்கள் ஒரு மலையேறியின் கஷ்டங்களைவிட கடுமையானது.

ஆகவே நாம் சுமந்துள்ள சுமைகளை எம்முடன் சேர்த்து இன்னும் பலரும் பகிர்ந்து தமது தோற்புயங்களில் சுமந்துக் கொண்டால் சமூக மாற்றத்திற்கான இன்னும் பல புதிய சிந்தனைகளையும் பணிகளையும் நாங்கள் சுமந்து கொள்வது இலகுவாக அமையும்.

குறிப்பாக சமூகத்தின் சரி அரைவாசிப் பகுதியினராகிய பெண்களிடமும் அன்மைக்காலத்தில் புத்தளத்தில் சமூக வலைத்தளங்களை அடியொட்டி தமது சமூகப் பணிகளை செய்ய முன்வந்துள்ள இளைஞர் குழுக்களிடமும் எமது இணைய சஞ்சிகைக்கான பன்முகப் பங்களிப்பை வழங்குமாறு பணிவாக வேண்டிக்கொள்கின்றோம்.

எமது பணிகளை அல்லாஹு த்தஆலா ஏற்று அங்கீகரிப்பானாக.

“பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்வோர் வெற்றியாளர்களல்ல. மாறாக ஒரே பணியை பல்வேறு வழிகளில் செய்வோரே வெற்றியாளர்கள்.”

இரண்டாம் வருட நிறைவு நிகழ்வு 

13.04.2013


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All