Puttalam Online
star-person

புத்தளத்தின் பெறுமதிக்கமிக்க பொக்கிஷம் – முபாறக் ஆசிரியர்

images

(S.I.M. Akram)

புத்தளத்தின் பெறுமதிக்கமிக்க பொக்கிஷம் – முபாறக் ஆசிரியர்

 

SAM_5944எமது புத்தளம் மண்ணில் எத்தனையோ பெறுமதிக்கமிக்க மனிதர்கள் வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். தற்போது வாழ்ந்துக்கொண்டும் இருக்கின்றார்கள். இவர்களை புத்தளத்தின்  இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்துவது பல வழிகளிலும் நன்மை பயக்கும். அத்தகையோரில் ஒருவர்தான் ஆசிரியர் சஹீத் முஹம்மத் முபாரக் அவர்கள்.

SAM_5950புத்தளம் நோர்த் வீதியில் அமைந்துள்ள பழம்பெரும் வீடான ஜெஸ்மின் கொட்டேஜ் (காஸிம் டொக்டர் வீடு) என பெயர் பெற்ற வீட்டில் 1938 ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ம் திகதி   சஹீத் என்பவருக்கு மகனாக பிறந்தார்கள்.

தந்தை வழியாக வ.பி குடும்பத்தையும் தாய் வழியாக மு.நா.க. குடும்பத்தையும் சேர்ந்த இவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சென்ட் ஏன்ஸ் ஆரம்பப் பாடசாலையில் 1944 – 1945 வரை ஒரு வருட காலம் அருட் சகோதரி பேனாட்டிடம் கற்றுக் கொண்டார்கள். இவர்களுடைய முதல் ஆசிரியரும் இவரே. இவர்கள் தனது ஆரம்ப கல்வியை ஆங்கில மொழி மூலமாகவே பெற்றுக்கொண்டார்கள்.

பின்னர் 1945 ம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகாமையில்  நோர்த் வீதியில் அமைந்திருந்த ஆண்கள் பாடசாலையில் கல்வியை தொடந்தார்கள். சாஹிராவின் முதல் அதிபரான கல்தேரயிடம் கற்ற பெறுமையும் இவர்களுக்கு உண்டு.  

1945 – 1956 ம் ஆண்டு வரை புத்தளம் ஸாஹிராவில் கற்ற அவர்கள் SSC பரீட்சையிலும் திறமையாக சித்தியடைந்தார்கள். பின்னர் உயர் கல்வியை தொடர்வதற்காக கொழும்பு ஸாஹிராவில் இணைந்துகொண்டார்கள். இக்காலப்பிரிவில்  தனது மாமனார் அல்ஹாஜ் எச்.எஸ். இஸ்மாயில் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்ததனால் முபாரக் ஆசிரியர் அவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்கு பெரும் வாய்ப்பாகவும் இருந்தது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லமான மும்தாஜ் மகாலை தனது  கொழும்பு இருப்பிடமாக ஆக்கிக்கொண்டதோடு அங்கிருந்தே உயர் கல்வியைத் தொடர்ந்தார்கள்.

1956 – 1959 டிசம்பர் மாதம் HSC பரீட்சையில் சித்தியடைந்ததுடன் 1960 ஜனவரி 04 ம் திகதி புத்தளம் ஆண்கள் பாடசாலையில் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார்கள். இங்கு ஓரிரு வருடங்கள் சேவையாற்றியதுடன் பின்னர் புத்தளம் பெண்கள் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். 1963 ம் ஆண்டு புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

இக்காலப்பிரிவில் (1963) இப்பாடசாலைக்கு விஜயம் செய்த கலாநிதி பதீயுத்தீன் மஹ்மூத் அவர்களை கௌரவப்படுத்தி  புளிச்சாக்குளம் பாடசாலைக்கு  பதீயுத்தீன் முஸ்லிம் வித்தியாலயம் என மாற்றுவதற்கு பாடசாலை நிர்வாகம் அவர்களிடம் ஆலோசனை கேட்ட போது அவ்வாறு பெயர் சூட்ட வேண்டாம் என மறுத்துவிட்ட அவர்கள் உமர் பாரூக் என பெயர் சூட்டிச்  சென்றதாக முபாரக் ஆசிரியர் அவர்கள் தனது ஆரம்பக் கால நினைவுகளை ஞாபகப்படுத்தினார்கள்.

1963 ம் ஆண்டு புளிச்சாக்குளம் பாடசாலைக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதானது இவர்களை பல வழிகளிலும் பாதிப்படையச் செய்தது. அக்காலப்பிரிவில் புத்தளத்திலிருந்து புளிச்சாக்குளம் செல்வதென்பது மிகவும் சிரமமான ஒரு பயணமாகவே இருந்தது. எனினும் பயணக் கஷ்டங்களை அவர்களால் தாங்கிக் கொண்டாலும் பொருளாதார சுமையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தினமும் மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அவர்களுக்கு மாத முடிவில் அவர்கள் பெற்ற மாத ஊதியமான 164/=  (ரூபாவையும்) பெற்றோல் நிலையத்துக்கு செலுத்திவிட்டு வெறும் கையோடு வீடு செல்வார்கள். இவ்வாறு தொடர்வது மனிதன் என்ற வகையில் சாத்தியப்படாத ஒன்றாகக் காணப்பட்டது. எனவே 1965 ம் ஆண்டு ஆசிரியர் சேவையிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டார்கள்.

இவர்கள் ஆசிரியர் சேவையிலிருந்து விலகிக் கொண்டதானது புத்தளம் சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் இழப்பாகவே காணப்பட்டது. இதனை அப்போதைய புத்தளம் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

முபாரக் ஆசிரியர் பல் துறை வித்தகர் ஆங்கிலம், தமிழ், இஸ்லாம், வரலாறு, புவியில் போன்ற துறைகளில் நன்கு பாண்டித்தியம் பெற்றவர்கள். குறிப்பாக ஆங்கிலத்தில் தாய்மொழி போன்று நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். எனினும் அல்லாஹ்வின் நாட்டம் வேறு விதமாக இருந்தது.

ஆசிரியர் சேவையை விட்டு விலகினாலும் சமூகத்திற்கு சேவை செய்வதிலிருந்து துளியளவும் பின் நின்றதில்லை. 1965 – 1970 ம் ஆண்டு வரைக்கும் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருந்ததன் காரணமாக அரச அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் தம் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத பொது மக்களுக்கு அவர்களின் தேவைகளை எவ்வித இலாபமுமின்றி  நிறைவேற்றிக் கொடுக்கும் சிறந்த சமூக சேவகராகவும் திகழ்ந்தார்கள்.

ஆசிரியர் சேவையை விட்டு விலகினாலும் தனது வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காக விவசாயத்தில் ஈடுபட்டார்கள். அத்துடன் நின்றுவிடாமல் பஸீலத் ஹாட்வெயார் (அஸ்பாக் ஹாட்வெயார் அமைந்துள்ள இடம்) எனும் வியாபார விளம்பர பலகையைக் கொண்ட கடையையும் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள்.
1971 ம் ஆண்டு கொழும்பிலுள்ள ஏற்றுமதி நிறுவனத்துடன் இணைந்து ஏலம், கறுவா, தேயிலை போன்ற பொருட்களை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து ஏற்றுமதி துறையிலும் கால்பதித்துள்ளார்கள்.

1972 ம் ஆண்டு ஆரம்ப காலப் பிரிவில் கொந்தராத்து தொழிலிலும் ஈடுபட்டதோடு வீதி அமைத்தல், காணிகளை துப்புரவு செய்து விவசாயத்திற்கு உகந்த நிலமாக மாற்றியமைத்தல் போன்ற பல்வகை தொழில்களிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இவர்களின் திறமையைக் அறிந்து கொண்ட முன்னால் நிதி திட்டமிடல் அமைச்சரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஹ_ம் எம்.எச்.எம். நெய்னா மரிக்கார் அவர்கள் அரசியல் பணிகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார்கள்.

1972 ம் ஆண்டு மர்ஹ_ம் எம்.எச்.எம். நெய்னா மரிக்கார் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். இதனை சவாலாக ஏற்றுக்கொண்ட முபாரக் ஆசிரியர் அவர்கள்  கட்சியை புனரமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இது காலம் வரைக்கும் ஒரு கிளையை மாத்திரம் கொண்டிருந்த கட்சிக்கு மாவட்டத்தில் 75 கிளைகளை நிறுவி அடுத்து வந்த தேர்தலில் நெய்னா மரிக்கார் அவர்களின் பாரிய வெற்றிக்கு காரணகர்த்தாவாகவும் திகழ்ந்தார்கள்.

சந்தோஷத்தில் திளைத்துப்போன நெய்னா மரிக்கார் அவர்கள் தனது பிரத்தியோக செயலாளராகவும் பிரதான உதவியாளராகவும் நியமித்துக்கொண்டார்கள். இது முபாரக் ஆசிரியரின் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசாகவும் அமைந்தது.

முபாரக் ஆசிரியரின் திறமை கடின உழைப்பு தூரநோக்கு போன்ற இன்னோரன்ன திறமைகள் உள்நாட்டில் மற்றுமன்றி வெளிநாடுகளுக்கும் வியாபிக்கத்தொடங்கியது. இதன் ஓரம்சமாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி அமைப்பு (UNDP) புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு திட்டமிடல் பொறுப்பதிகாரியாக நியமித்தது. இதன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கிராம அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு புத்தளம் மாவட்டத்தின் அப்போதைய உடனடி தேவைகள் 80 வீதம் நிறைவேற்றப்பட முபாரக் ஆசிரியர் மூல கர்த்தாவாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1.    மின்சார முறைமை நவீன மயப்படுப்படல்

இத்திட்டத்தின் மூலம் மின்சாரம் முறைமை விரிவுபடுத்தப்பட்டது. இதனால்; “லைட் மோல்” மூலம் மட்டுப்படுத்தப்பட்ட மின்சாரம் வழங்கும் முறை மாற்றியமைக்கப்பட்டு நவீன முறையில் மின்சாரம் பெறும் முறைமை அமுல்படுத்தப்பட்டது. இதனால் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கப்பெற்றதோடு தொழிற்துறைகள் சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதோடு பலர் வேலை வாய்ப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்றனர்.  இத்திட்டத்தினால் பின்வரும் பிரதேசங்கள் மின்சாரத்தைப் பெற்றதோடு அபிவிருத்தியும் கண்டன.

1.    புத்தளம்
2.    கற்பிட்டி
3.    உடப்பு
4.    மதுரங்குளி
5.    கரைத்தீவு
6.    இலவன்குளம்
7.    ஆனமடு

2.    உள்ளக பாதைகள் அமைத்தல்

கிராம அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு கிராமங்களில் பல பாதைகள் அமைக்கப்பட்டன.
1.    வண்ணாத்தவில்லு உள்ளக பாதைகள் அமைக்கப்படல்
2.    மீன்பிடி கிராமங்களில் கடல் வரை பாதை அமைத்தல்
3.    கிராமத்திலிருந்து விவசாய தோட்டங்கள் வரை பாதை அமைத்தல்

3.    கல்வி அபிவிருத்திகள்

1.    ஸாஹிரா பாடசாலையின் மாணவர் விடுதி
2.    பாத்திமா மகளிர் கல்லூரியின் மாணவர் விடுதி
3.    சென்ட் அன்றூஸ் மாணவர் விடுதி

4. டச்சு கால்வாய் புனரமைப்பு முன்மொழிவு. பின் வந்த அரசாங்கத்தினால் இத்திட்டம் நீர்கொழும்புடன் மட்டுப்படுத்தப்பட்டது.

5.    தொலைபேசி விரிவாக்கல் திட்டம்

ஆரம்பக் காலங்களில் புத்தளத்திலிருந்து கொழும்பு போன்ற இடங்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுப்பதற்கு சிலாபத்தில் உள்ள தொலைபேசி நிலையத்துடன் தொடர்பு கொண்டு கொழும்புக்கான அழைப்பை பெற இணைப்பை வழங்குமாறு விண்ணப்பம் செய்தே அழைப்பை பெற முடியும். முபாரக் ஆசிரியரின் இத்திட்டத்தினால் புத்தளத்திலிருந்து நேரடியாக தொலைபேசி அழைப்பு பெறும் வசதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

6.    விவசாய திட்டங்கள்

1.    பாவட்டமடு திட்டம்
2.    தெதுறு ஓயா திட்டம்
3.    வட்டக்கண்டல் அணைக்கட்டு

மேற்படி திட்டங்கள் மிகவும் திட்டமிட்டு முறையாக செயல்படுத்தபட்டதனால் அதன் பலன்களை இன்றும் மக்கள் அனுபவிக்கின்றனர். மேற்படி திட்டங்களுக்கு 390 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டது. இந்நிதி மூலம் புத்தளம் மாவட்டத்தின் 5 தொகுதிகளும் நன்மையடைந்தன.

முபாரக் ஆசிரியர் 1978 ம் ஆண்டு இலங்கை நோர்வே கூட்டு அபிவிருத்தி ஸ்தாபனத்தோடு இணைந்து பிரதேச மக்களுக்கு பின்வரும் சேவைகளை செய்தார்கள்.

1.    மீன்பிடி வள்ளங்கள் இயந்திர படகுகள் கட்டும் தொழிற்சாலைகள் அமைத்தல்
2.    ஐஸ் தொழிற்சாலைகள் அமைத்தல்
3.    அட்டை பிடித்து ஏற்றுமதி செய்தல்

இதனால் புத்தளம் பிரதேசத்தில் பலர் தொழில் செய்வதற்கான  வளங்களைப் பெற்றதோடு சமூக அபிவிருத்தியும் ஏற்பட்டது.

7. தும்புச் சோறு ஏற்றுமதிக்கான முன்மொழிவு

Mubarak sir (4)

புத்தளம் பிரதேசம்  தெங்கு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற இடமாகMubarak sir (5) இருப்பதனால் தேங்காயிலிருந்து பெறப்படும் தும்புச் சோறு 90 வருட காலமாக தோட்டங்கள் எண்ணெய் தொழிற் சாலைகளில் பெறுமதியற்று குவிந்து காணப்பட்டது. இதனை பொருளாதார முறையில் ஏற்றுமதி செய்வதாக இருந்தால் கொள்கலன்களில் அடைக்கப்பட வேண்டும். எனினும் தும்புச் சோறு கூடிய இடத்தை பிடிப்பதோடு ஈரம் உள்ளதாகவும் இருந்ததனால் அதனை வெளிநாடுகளுக்கு அனுப்புவது முடியாத காரியமாக இருந்தது. ஏனெனில் அனுப்பப்படும் தும்புச் சோற்றைவிட ஏற்றுமதி செலவு கூடியதாக இருந்தது.

தும்புச் சோற்றிலிருந்து நீர் தன்மையை அகற்றி அதனை கட்டியாக்கி ஏற்றுமதிMubarak sir (3) செய்யும் இயந்திரம் ஒன்றின் மாதிரியை உருவாக்க அமெரிக்க டச்சு கூட்டுக் கம்பனிகளுடன் இணைந்து பல ஆய்வுகளை செய்து பல நாடுகளுக்கும் இத்திட்டத்தை அனுப்பி வைத்தார்கள். இத்திட்டத்தை செயற்பாட்டு ரீதியாக செய்து காட்டுவதற்காக அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார்கள். அங்கு சென்று தனது இயந்திரத்தை செய்து காட்டி அதில் வெற்றியும் கண்டார்கள். அமெரிக்க பொறியியலாளர்கள் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டதோடு இவர்களை வெகுவாக பராட்டினார்கள்.

உலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது தும்புச் சோறு இயந்திரமாகும்.

 

Mubarak sir (1) Mubarak sir (2)

8. புத்தளம் முள்ளிபுரம் மக்களுக்கு குழாய் நீரை பெற்றுக் கொடுப்பதற்காக IHO எனும் அரச சார்பற்ற அமைப்பிடம் தனது திட்டத்தை முன்வைத்து 2007 ம் ஆண்டு 310 வீடுகளுக்கு இலவச குழாய் நீர் இணைப்பை பெற்றுக்கொடுத்தார்கள். அதன் அடுத்த கட்டம் இவ்வருடம் (2013) மே மாதம் 400 வீடுகளுக்கு இலவச குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக 1 கோடி ரூபாய்களுக்கு மேற்பட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.  

வசதிகளற்ற புத்தளம் மக்களின் 1700 வீடுகளுக்கு இலவச குழாய் நீர் இணைப்புகளை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்பதே முபாரக் ஆசிரியரின் இலக்காகும்.

இயக்கங்கள்,சங்கங்கள், நிறுவனங்கள் சாதிக்கமுடியாத பல பணிகளை 50 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் தனிமனிதனாக நின்று சாதித்துக் காட்டியுள்ளார்கள். தனது வாழ்நாளில் 76 வயதை கடந்த போதும் சளைக்காது சமூக தொண்டாற்றிவரும் முபாரக் ஆசிரியரின் பணிகள் மென்மேலும் தொடர நாம் அனைவரும் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பது சமூக கடமையாகும்.

 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே          الحمد لله

 

 


5 thoughts on “புத்தளத்தின் பெறுமதிக்கமிக்க பொக்கிஷம் – முபாறக் ஆசிரியர்

 1. rm.rison says:

  M – அல்லா,

 2. […] பாதுகாப்பு செயற்பாட்டாளருமான  எஸ்.எம். முபாறக் தனது இயலாமையினால் ஓய்வு பெற அதனை […]

 3. Wasim Akram MAB says:

  நமது ஊரின் இவ்வாறன பெறுமதி வாய்ந்த பொக்கிஷங்கள் இன்றைய தலைமுறையினருக்கு விளங்க படுத்திய , வரலாற்றை தெரியப்படுத்திய புத்தளம் ஆன்லைன்க்கு நன்றிகள்.

  எமது ஊரின் மாமேதைகள் , துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தன்னடக்கமாக, எளிமையாகவே இன்றும் காணப்படுகின்றனர்.

 4. Ishthiyaque Ahmed says:

  It’s my privilege to spare my experience here with Mubarak master. While I was working in FORUT nearly 9 years ago, I had an opportunity to work with him. (very small part) he was playing an active role in protesting the coal power plant project which is in Nuraichcholai. He was very curious to search for some facts which is to be added to his reports and papers, I got the opportunity to help him in typing his writings, and search for the facts in the internet etc…also he was officially connected for preparing annual plans for FORUT-Puttalam. During this time also, I had worked with him closely people ironically say that, I can only understand Mubarak sir’s hand writing, as a matter or fact that was true, as I read his hand writing for a long time, I get used of his hand writing and I easily underatood his hand writings 🙂
  Now when I am recalling these memories, I am very much pleased I had worked with such a great personality and I was able to serve him a little…

 5. முபாரக் மாஸ்டருடன் இணைந்து அரசியலில் ஈடுபட்ட நிகழ்வுகள் மறக்க முடியாதவை. ஐக்கிய தேசியக் கட்ச says:

  முபாரக் மாஸ்டருடன் இணைந்து அரசியலில் ஈடுபட்ட நிகழ்வுகள் மறக்க முடியாதவை. ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தேர்தல் தொகுதியின் மத்திய செயற்குழுவின் தலைவராக முபாரக் ஆசிரியர் செயற்பட்டபோது நான் அதன் செயலாளராக இருந்து அவருடன் அரசியலில் ஈடுபட்ட காலங்கள் மறக்க முடியாதவை.எம்மோடு கூடவே இருந்த பலர் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.ஈடுபாடோடு உழைக்கும் தன்மையை கொண்டவர் முபாரக் சேர் . நீண்டகாலம் அவர் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All