Puttalam Online
ladies

தொலைந்துபோன மகிழ்ச்சிகள் !

  • 18 April 2013
  • 655 views

(M.I.Aysha Begum Sheriff)

 தொலைந்துபோன மகிழ்ச்சிகள் !

messagesஇன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை.

தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை மெல்ல மெல்ல சுயமாக பல காரியங்களைச் செய்ய இயலாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவிட்டால் போதும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அனைவரும் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேறு. நேரில் பத்திரிகை வைத்துவிட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் போன் செய்து அழைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு நண்பரின் விஷேசத்திற்கு செல்ல வேண்டும் எனில் பத்திரிகை கையில் கிடைத்ததும் ஒருமுறை போன் செய்து எப்படி வரவேண்டும் என விசாரித்துவிட்டு, பிறகு விஷேச தினத்தில் “நான் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன் இங்கிருந்து எப்படி வருவது?”, “விவேகானந்தர் நான்காவது தெருவுக்கு வந்துட்டேன்.. ஏழாவது தெருவுக்கு எப்படி வருவது?” என நிகழ்ச்சி நடத்தும் நண்பரின் மொபைல் போனுக்கு ஓயாமல் அலைபேசும் நபர்களும் இருக்கிறார்கள். ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என நினைக்கும் அளவுக்கு எரிச்சலூட்டுகிறார்கள்.

முன்பெல்லாம் கடிதங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வேண்டும் என நண்பருக்கு ஒரு கடிதம் போட்டால் போதும். அந்த நேரத்தில், அந்த இடத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார்.

இன்றைய தேதியில் பிரசவ வார்டில் மனைவி இருக்கும் போது கூட, Awaiting for my sweet little baby என டுவிட்டரில் தகவல் பரிமாறி, பிரசவமான குழந்தையை உடனே புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றுகிறார்கள். குழந்தை பிறந்ததை விட, அந்த செய்தியை பதிவேற்றம் செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்களோ என்று தோன்றுமளவுக்கு தொழில்நுட்ப அடிமைகளாகிவிட்டனர்.

ஆனால் அன்று, குழந்தை பிறப்புக்காக அம்மா வீடு வந்த மனைவிக்கு குழந்தை பிறந்த தகவல் கடிதம் மூலம் மூன்று நாட்கள் கழித்து தான் தெரிய வரும். அதன்பிறகு விடுமுறை எடுத்துக் கொண்டு தனக்கு பிறந்த மகனை / மகளைப் பார்க்க ஊருக்கு சென்றவர்கள் ஏராளம். தனது மகன் எப்படி இருப்பான் என நினைத்துக் கொண்டே பயணித்து, மனம் நிறைய மகனை அள்ளி முத்தமிடும் தருணத்தின் மகத்துவத்தை அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும்.

ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டால் ஊருக்கு ஒருவர் தகவல் சொல்ல கிளம்பி போவார். அவர் போகும் ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தகவல் சொல்ல தேவையில்லை. அந்த ஊரில் ஒருவருக்கு தகவல் சொன்னால்கூட போதும். அவர்கள் மூலம் தகவல் பரவி அனைவரும் வந்து சேர்ந்துவிடுவர். ஆனால் இப்போது அப்படி இல்லை.. சில குடும்பங்களில் மாமா, அத்தை, அத்தை மகன், அத்தை மகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து தகவல் சொல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில் எனக்கு ஏன் சொல்லவில்லை நான் முக்கியமான ஆளில்லையா என்ற சண்டைகள் ஏராளமாக நடப்பதைக் காணமுடிகிறது.

ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு போட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் வந்த அன்று அதை பிரித்து படிப்பதற்குள் மனதிற்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. நேரத்திற்கு சாப்பிடு, கவனமாக பள்ளிக்கூடத்துக்கு போ, வெயிலில் அதிகம் அலையாதே, காலாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வா என ஒவ்வொரு வார்த்தையிலும் தாத்தாவின் பாசமும், அக்கறையும் இருக்கும். கடிதங்களின் ஓரத்து மடுப்புகளில் கூட தாத்தா, பாட்டியின் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும்.

கடிதப் போக்குவரத்தில் ‘இப்டிக்கு உங்கல் அன்புள்ள மகன்’, ‘இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி’ என தப்பு தப்பாய் எழுதியிருந்தாலும், அதில் வார்த்தைக்கு வார்த்தை அன்பு நிறைந்திருக்கும். அவை பொக்கிஷம் போல் அவ்வப்போது எடுத்து எடுத்து படிக்கப்படுவதும் உண்டு.

ஆயிரம் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அனுப்பினாலும், அவை ஒரே ஒரு கடிதம் சொல்லிய அன்பை முழுமையாகப் பரிமாறிவிட முடியுமா?

நீங்க என்ன சொல்றீங்க?

(from Annisa FB)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All