Puttalam Online
america

யூத தேசம் (இஸ்ரேல்) பலஸ்தீனத்தில்

  • 28 April 2013
  • 11,084 views

Sharoofi

– பிரான்சிலிருந்து ரசூல்ஷா ஷரூபி –

அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்

பக்கம் –  7

1939 இல் போலந்து முற்றுகையோடு ஆரம்பமான இரண்டாம் உலக யுத்தம் 1945, செப்டம்பரில் ஜப்பான் சரணடைந்ததோடு ஒரு முடிவுக்கு வந்தது.

Nurembergபோர் முடிந்த சூட்டோடு விறு விறுப்பாக ஆரம்பமானது போர் குற்ற விசாரணைகள். பல்லாயிரம் வீரர்கள் முன்னிலையில், ஹிட்லர் ஆண்டு தோறும் இராணுவப் பேரணி நடத்தி அழகு பார்த்த அதே ‘நியுரெம்பெர்க்’ (Nuremberg) நகரத்தில் சர்வதேச இராணுவ நீதி மன்றம் அமைக்கப்பட்து. ஹிட்லரின் சகாக்களில் மடிந்தவர்கள் போக எஞ்சியவர்களை இரண்டு வருடங்கள் உட்கார வைத்து விசாரித்ததில் இரண்டாம் உலக யுத்தத்தின் இருட்டு சந்துகள் பல வெளிச்சத்துக்கு வந்தன. ஹிட்லர் எத்தனை சத்தமாக யுத்தம் செய்தாரோ அதற்கு நேர் எதிராக, சத்தமே இல்லாமல் பல லட்சம் யூதர்களை பரலோகம் அனுப்பி வைத்திருந்தார். “Final Solution of the jewish question” யூதர்களின் பிரச்சனைக்கான இறுதித் தீர்வு என்ற தலைப்பில் ஒரு file போட்டு தனி ஒரு டிபார்ட்மேன்டையே ஹிட்லர் நடத்தியிருந்தார். தீர்வு என்று இறுதியில் அவர்கள் வழங்கியிருந்த தீர்ப்பு, ஐந்து மாபெரும் மரண முகாம்கள் (Chelmno, Belzec, Sobibor, Treblinka, Aushwitz). இந்தக் கதைகள் யாவும் விசாரணைகளின் முடிவில் வெளிச்சத்துக்கு வந்தன.

படு கொலை செய்யப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையைக் கேட்டு உலகமே ஆடிப்போனது. கிட்டத்தட்ட யூதர்கள் மட்டும் 60 லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதாக பதிவுகளில் உள்ளன. வரலாறு நெடுகிலும் அடித்து விரட்டப்பட்ட யூதர்கள், சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் ஒதுங்கிக் கொள்வதற்கு ஒரு தேசம் தேவை என்ற கருத்து உலகில் வலுப் பெற ஆரம்பித்தது.

 இதைக் கேட்டு அதிர்ந்தே போனார்கள் பாலஸ்தீனத்து அரேபியர்கள். காரணம், உருவாகப் போகும் யூத தேசம் (இஸ்ரேல்) பலஸ்தீனத்தில் ஏற்கனவே அவர்கள் கண் முன்னே உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. யூத தேசிய இயக்கம் என்ற சியோனிச அமைப்பு இரகசியமாக உருவாக்கிய நில வங்கிகள், பல தசாப்தங்களுக்கு முன்பாகவே அங்கே ஊடுருவியிருந்தன. விலை போகாத, விவசாயத்துக்குக் கூட உபயோகப்படாத நிலப்பரப்புக்களை பாலஸ்தீன அரபு முஸ்லிம்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி வளைத்துப் போட்டிருந்தன யூத நிலவங்கிகள். அதில் யூத குடியேற்றங்கள் அமைத்து, உலகின் பல பாகங்களில் இருந்தும் யூதர்களை அழைத்து குடியமர்த்தி வைத்துவிட்டு, தலைமுறை தலைமுறையாக அவர்கள் சுமந்து வந்த கனவு (அதாவது யூதர்களுக்கென்று ஒரு தனி தேசம்) கைகூடும் தருணத்துக்காக காத்திருந்தார்கள் அவர்கள். சத்தியமாக உலகில் யாருமே அதுவரை நினைத்துக் கூடப் பார்த்திருக்காத ஒரு புது உத்தி இது Brothers.

அமெரிக்காவுக்கோ மத்திய கிழக்கில் வீசிக் கொண்டிருந்த பெட்ரோல் வாசம் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. உள்ளே கால் வைப்பதற்கான ஒரு வாசல் படியாக ‘இஸ்ரேல்’ என்ற ஒரு தேசம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று கணக்குப் போட ஆரம்பித்தது அமெரிக்கா. இதற்கு வலு சேர்க்கும் வகையில் காகம் இருக்க பணம் பழம் விழுந்த கதையாக இந்த யூத இனப் படுகொலை என்று கூறப்படும் “Holocaust” பூதமாகக் கிளம்ப, கொள்கையளவில் பாலஸ்தீன் கொள்ளையடிக்கப் பட்டு இஸ்ரேல் உதயமாகிக் கொண்டிருந்தது. (அது வரைக்கும் அரபு முஸ்லிம்கள் எங்கே பார்த்துக் கொண்டிருந்தார்கள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள்? யூதர்கள் ஏன் இஸ்ரேல் என்ற தேசத்தை பலஸ்தீனில் உருவாக்கினார்கள்? போன்ற வினாக்களுக்கான விடையை இன்னும் ஒரு சில வாரங்களில் கொஞ்சம் Detail ஆகப் பார்க்கலாம்)

 Ok, மீண்டும் நீதி மன்றம், விசாரணைப் பக்கம் திரும்பலாம்.

 ‘நியுரெம்பெர்க்’ போல டோக்யோவிலும் ஒரு நீதிமன்றம் அமைத்து யுத்தத்தின் சூத்திரதாரியான ‘ஹிடெக்கி டோஜோ’ இன்னும் பல ஜப்பானிய கொமாண்டர்களுக்கும் தப்பாமல் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

 இவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட மிக முக்கிய குற்றச்சாட்டு, மனித குலத்துக்கு எதிராக பல குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதே (பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் வகையில் திட்டமிட்டு போர் நடத்தியது, போர் மரபுகளை மீறியது, அமைதிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியது).

சரிதான், இவர்களை நிற்க வைத்து சுட்டாலும் யாரும் கேள்வி கேட்க வரப் போவதில்லை. ஏனென்றால் இவர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள், அல்லது சர்வாதிகரிகளின் வலது கையாக செயற்பட்டவர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், இங்கே முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய கேள்வி ஒன்றும் இருந்தது. அது, இவர்கள் ஆடிய இரத்த வெறியாட்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆடிய பேயாட்டங்களுக்கு யார் தீர்ப்பு சொல்வது? என்பதே.

 பிரிட்டிஷ் விமானப் படை ஜேர்மன் நகரங்களின் மேல் நடத்திய கண் மண் தெரியாத விமானத் தாக்குதல்கள், அமெரிக்க விமானங்கள் டோக்யோ நகரத்தின் மேல் கொட்டிய லட்சக்கணக்கான குண்டுகள்… இவையெல்லாம் துல்லியமாக இலக்குகளை மட்டுமா குறிபார்த்து வீசப்பட்டன? என்ற கேள்வி இங்கு நியாயமாக எழும்பியிருக்க வேண்டும். சரி, யுத்தத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று விட்டால் கூட அமெரிக்கா அடித்த அணு குண்டுகள், அதில் காலியான ஒரு லட்சத்து நாற்பதாயிரம் உயிர்கள் (அதுவும் சில நிமிடங்களில், இது) பற்றியுமா யாருமே வாய் திறக்காமல் இருப்பார்கள்! இதெல்லாம் இந்த விசாரணைகள் ஒரு தலை பட்சமாகவே நடந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் என்பது பலர் கருத்து.

அதிகார பலமும், ஆயுத வளமும் இருக்கும் வரை அமெரிக்கா எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்க வரமாட்டார்கள் என்பதை இந்த அணு குண்டு சமாச்சாரத்துக்கு பின்பு உணர்ந்து கொண்டார்கள் அமெரிக்கத் தலைவர்கள். அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட் உயர்த்தப்பட்டது. நவீன ஆயுதங்களின் கண்டு பிடிப்புகளும் முடுக்கி விடப்பட்டன. ஜனநாயகம், டிமோக்ரசி, மனித உரிமைகள் என்ற வார்த்தைகள் எல்லாம் அமெரிக்காவுக்கு உள்ளே சுருங்கிக் கொண்டன. அமெரிக்காவுக்கு வெளியே அடி தடி, மிரட்டல் என்ற புது ஸ்டைலில் பயணிக்க ஆரம்பித்தது அமெரிக்கா.

Source:

A People’s History of the United States- Howard Zinn (2004).

Erandam Ulaga Por (Second World War)- Subramaniam Chandran(2006, India).

Links:

http://law2.umkc.edu/faculty/projects/ftrials/nuremberg/nuremberg.htm

http://www.ushmm.org/wlc/en/article.php?ModuleId=10005143

http://history1900s.about.com/od/holocaust/a/holocaustfacts.htm

http://www.worldfuturefund.org/wffmaster/Reading/war.crimes/World.war.2/Bombing.htm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All