Puttalam Online
ladies

யாருக்கு மனநோய்?

  • 16 May 2013
  • 1,182 views

download (1)அன்று சனிக்கிழமை, சூரியன் உச்சியை எட்டிவிட்டிருந்த நேரம். முஸ்லிம் பிரதேசம் ஒன்றிலிருந்து ஊருக்குச் செல்வதற்காக பஸ் வண்டியைக் காத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற குரல்கேட்டு பின்னால் திரும்பினேன்.

நீண்ட தாடியோடு தொப்பியும் அணிந்திருந்த ஓர் 70 வயது மதிக்கத் தக்க வயோதிபர் அவர். பதில் கூறி விட்டு பஸ் வரும் வழியை பார்த்துக் கொண்டிருந்த என்னை சற்று அதட்டிய தொனியில் எங்கே போகிறீர்கள்-? எந்த ஊர்? போன்ற பல கேள்விகளை தமிழிலும் சிங்களத்திலும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டேயிருந்தார். அப்போதுதான் அவரை சரியாக உற்று நோக்கினேன்.

அவர் மிக அலங்கோலமாக ஆடை அணிந்திருந்தார். ஒரு கையில் நீண்ட குடைக் கம்பியும் மறுகையிலே சிறிய கத்தியொன்றும் இருந்தன. வெவ்வேறு விதமான பாதணிகளை அணிந்திருந்தார். அவரது முழுத் தோற்றமும் அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டியது. அவரது கேள்விகளுக்கு அமைதியாக பதிலளித்தவாறு நான் நின்று கொண்டிருந்தவேளை 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியோடு அவ் வந்த இளம் பெண் அந்த வயோதிபரைப் பார்த்து மிக ஏளனமாகச் சிரித்தாள். அழுது கொண்டிருந்த குழந்தையை அவ்வயோதிபரைக் காட்டி பயமூட்டி அழுகையை நிறுத்தச் செய்தாள்.

வீதியால் சென்று கொண்டிருந்த இன்னும் சிலரும் அவ்வயோதிபரை மிகவும் கேவலமாகவே நோக்கினர். அவரது வயதிற்குரிய எந்த மரியாதையும் இல்லாமல் அவரை திட்டிக் கொண்டே சென்றனர். அவ்யோதிபர் வீதியின் குறுக்கே நடக்க ஆரம்பித்தபோது அவ்வழியால் வாகனங்களில் பயணித்தவர்களும் ”பைத்தியக்காரா” ”கிழவா” என்றெல்லாம் அவரை திட்டித் தீர்த்தார்கள்.

அப்போது அவ்வீதியால் ஒரு முச்சக்கர வண்டி வேகமாக வந்து கொண்டிருந்தது. 20 வயது மதிக்கத்தக்க 4 இளைஞர்கள் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். வயோதிபர் வீதியின் நடுவே நின்றிருந்தும் வேகத்தை குறைக்காமல் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்த ஓர் இளைஞன் வெளியே தொங்கிக் கொண்டு வயோதிபரருகே ‘‘கூ கூ’’ எனக் கத்திக் கொண்டு தனது கையால் அவரது முதுகில் அடித்தான் பின்னர் எல்லோரும் ஹா… ஹா…… என சிரித்துக் கொண்டே சென்றார்கள்.

வயோதிபர் தட்டுத் தடுமாறியவராக மெது மெதுவாக நகர்ந்து சென்றார். இந்த நிகழ்வுகள் எனக்குள் மிகவும் கவலையைத் தோற்றுவித்தன. உண்மையிலயே யாருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என என்னை சிந்திக்கத் தூண்டியது. இது ஒரு சம்பவம் மட்டுமே. இது போன்ற பல சம்பவங்கள் தினந்தோறும் எமது சமூகத்தில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக வந்திருந்த சேர்ட் அணியாத மூளை வளர்ச்சி குன்றிய (Down Syndrome) ஒரு சிறுவன் பள்ளிவாயலை விட்டு அடித்து விரட்டப்பட்டமை, திருமண வீட்டில் தனது வயிற்றுப் பசியை தீர்த்துக்கொள்ள வந்த ஓர் ஏழைச் சிறுவன் வெறும் வயிற்றோடு திருப்பியனுப்பப்பட்டமை, வாய் பேசாத ஒரு சகோதரன் வீதியால் சென்று கொண்டிருந்தபோது சிறுவர்கள் சைகைப் பாசையால் அவனைக் கேலி செய்தமை போன்றவை மிக அண் மைக் காலத்தில் நான் கண்ட சில சம்ப வங்களாகும்.

ஏன் எமது சமூகம் இப்படி இருக்கிறது? நோயாளி ஒருவரை அல்லது மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை அல்லது அங்கக் குறைபாடு உடையவர்களையோ கேவலமாகப் பார்க்கும் கீழ்த்தரமான பண்பு ஏன் இன்னும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது?

மனநோய்களிலேயே Mood disorders, behavioural disorders, Personality disorders என பல வகையுண்டு. இந்நோய்கள் உள்ள அனைவரையும் பைத்தியம் என நாம் முத்திரை குத்திவிட முடியாது. Schizophrenia (ஸ்கிட்ஸோபிரீனியா) எனும் மிக அரிதான நோய் மட்டுமே (குணப்படுத்துவதற்கு மிகவும் கடினமானது) பைத்தியம் (Madness) என வரையறுக்கப்படுகின்றது. ஏனையவை மருத்துவத்தால் (அல்லாஹ்வின் உதவி யோடு) குணப்படுத்தக் கூடியவையாகும். Depression (டிப்ரஸ்ஸன்) எனப்படும் மன அழுத்தம் உலகில் 12.5% வீதமானோரில் (எட்டில் ஒரு பங்கினர்) காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதுவும் மன நோய்தான். ஆனால் இவர்களை நாம் பைத்தியம் என்று கூறி விட முடியாது.

download
உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் எமது சமூகத்தில் காணப்படும் சிறிய இலகுவில் குணப்படுத்திவிடக் கூடிய மன நோய் உள்ளவர்களையும், அங்க குறைபாடு உடையவர்களையும் எமது சமூகம்தான் முழுமையான பைத்தியமாக மாற்றி விடுகின்றது. மிகவும் கரிசனையோடு உள ஆறுதல் அளிக்கப்பட வேண்டியவர்கள் எமது சமூகத்தில் உள்ளவர்களாலேயே மிக மோசமான மன அழுத்தங்களுக்குள்ளாக்கப்படுவதனால் தான் அவர்கள் நிரந்தர மனநோயாளிகளாக பைத்தியங்களாக மாறி விடுகின்றனர். மிகச் சாதாரண அங்கக் குறைபாடுடையவர்களைக் கூட எம்மவர்கள் மிக மோசமான மன அழுத்தங்களுக்குள்ளாக்கியதனால் அவர்கள் பைத்தியமாக மாறிவிட்ட கசப்பான உண்மைகள் எமது சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன.

இவை குறித்து நாம் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மிகப் பெரும் அரசியல் தலைவர்களோடு நபி (ஸல்) அவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது பார்வையற்ற உம்மி மக்தூம் (ரழி) அவர்கள் அங்கே வந்தவேளை நபியவர்கள் முகத்தை திருப்பியதைக் கண்டித்து இறை வசனம் அருளப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. எனவே இச் சமூக நோயை வேரோடழிப்பதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

வீட்டில் பெண்கள் குழந்தைகளை சமாளிப்பதற்கோ அல்லது சோறூ ட்டுவதற்கோ முடவன் வருகி றான், ஊமையன் வருகிறான், ஒற்றைக் கண்ணனிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று கூறும் அங்கக் குறைபாடுடையவர்களை அவமதிக்கும் ஈனச்செயலை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். மாறாக அங்கக் குறைபாடு டையவர்களையும், நோயாளிகள், வயோதிபர்களை போன்று அன்போடு நோக்க வேண்டும் என்பதை பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பாடசாலைகளிலும் மத்ரஸாக்களிலும் இவ்விடயங்கள் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு பிள்ளைகளை விழிப்புணர்வூட்ட வேண்டும். குத்பா மேடைகளிலும் பிரசாரங்களிலும் இஸ்லாமிய பண்பாடு கற்றுத் தரப்படல் வேண்டும். இது விடயத்தில் ஆசிரியர்கள், மெளலவிமார் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.

பொது இடங்களில் அங்கக் குறைபாடுடையவர்களுக்கும் நோயாளிகள், மனநோயாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். அத்தோடு விசேட தேவையுடையோருக்கான பராமரிப்பு நிலையங்கள், விசேட வசதிகளுள்ள கல்விக் கூடங்கள் என்பன அமைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

இவற்றை புறக்கணித்துவிட்டு இச்சமூக நோய் எம்மை விட்டு நீங்குவதற்கு நாம் முயற்சிக்கவில்லையாயின், நாம் அனைவரும் இறைவனின் தண்டனை யிலிருந்து தப்பமாட்டோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்

Dr.M.S.M.Nusair

(நாம் படித்து பயன்பெற வேண்டியது)

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All