Puttalam Online
education

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி

Agar Mohamedஇஸ்லாத்திற்கும் அறபு மொழியிற்கும் இடையிலான தொடர்பு நெருக்கமானது, மிக இறுக்கமானது. இதனாலேயே இஸ்லாம் அறிமுகமாகிய பூமிகளிலெல்லாம் அறபு மொழியும் அறிமுகமானதுளூ அது வேரூன்றிய பூமிகளில் அது காலூன்றியது. இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொண்ட பல சமூகங்கள் தமது சொந்த மொழியைப் புறம் தள்ளி அறபு மொழியைத் தமது தாய் மொழியாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பங்களை வரலாற்றில் காண்கிறோம். இதற்கு உதாரணமாக எகிப்து, ஷாட், சோமாலியா முதலான நாடுகளைக் குறிப்பிடலாம். இன்று முழு உலகத்திலும் அறபு மொழியின் மேம்பாட்டுக்காக பங்களிப்புச் செய்யும் எகிப்தியர் அறபிகளல்லர். இஸ்லாத்தைத் தழுவிய அவர்கள் அதனோடு சேர்த்து அறபு மொழியையும் தமதாக்கிக் கொண்டனர். மற்றும் பல சமூகங்களோ சொந்த மொழியைப் பாதுகாத்துக் கொண்ட நிலையில் அறபு மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தன.

நமது நாட்டுக்கு இஸ்லாம் அறிமுகமாகி ஆயிரம்; ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆரம்ப காலங்களில் அறபிகளின் தொடர்பும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு இருந்தது. கடந்த சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் அறபுக் கலாசாலைகளின் எண்ணிக்கை தற்போது இருநூற்று ஐம்பதைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. எண்ணூறுக்கும் மேற்பட்ட அரச முஸ்லிம் பாடசாலைகளிலும், மற்றும் பல ஆங்கில சர்வதேசப் பாடசாலைகளிலும் அறபு மொழி ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மட்டங்களிலும் கடந்த பல தசாப்த காலமாக அறபு மொழித் துறை இயங்கி வருகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட அஹதிய்யாக்களிலும், இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட குர்ஆன் மத்ரஸாக்களிலும் கூட அறபு மொழி போதிக்கப்படாமலில்லை. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையிலும் அறபு மொழிப் பாடம் ஒரு நிகழ்ச்சியாக காலத்துக்குக் காலம் ஒலிபரப்பப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், தமிழும், சிங்களமும், ஆங்கிலமும் செல்வாக்குச் செலுத்தும் எமது சமூகத்தில் அறபு மொழி உரிய வளர்ச்சியை காணத் தவறியுள்ளமை ஒரு கசப்பான உண்மையாகும்.

ஆங்கில சர்வதேசப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஆங்கில மொழியைக் கற்று அம்மொழியில் வாசிக்கிறார்கள்ளூ எழுதுகிறார்கள்ளூ சரலமாகப் பேசுகிறார்கள். சிங்கள மொழியில் கற்கும் மாணவர்களின் நிலையும் இதுதான். ஆனால், நமது நாட்டில் அறபு மொழி பல கட்டங்களிலும், மட்டங்களிலும் கற்பிக்கப்பட்ட போதிலும் அறபு மொழி பேசும் ஒரு சமூகம் உருவாவது ஒரு புறமிருக்க, அதனைப் பேசும் ஒரு சாராரையாவது காண்பது அரிதாக இருக்கிறது.

இந்நாட்டு முஸ்லிம்கள் சில வரலாற்றுத் தவறுகளை இழைத்துள்ளனர். அறபு மொழியை வளர்த்து அதனை எமது வீட்டு மொழியாக மாற்றத் தவறியமை ஒரு பெரும் தவறாகும் என்பதை நாம் இப்போதாவது உணர வேண்டும். குறைந்த பட்சம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இரண்டாம் மொழியின் நிலைக்காவது அறபு மொழி வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதனை நாம் சாதித்திருந்தால் குறைந்த பட்சம் இரு பெரும் நன்மைகளை அடைந்திருப்போம். இஸ்லாத்தின் மூலாதாரங்களை நேரடியாக அணுகி அஸ்ல் வடிவிலே அவற்றைப் புரிந்து உரிய தாக்கத்தை பெற்றிருப்போம். மேலும், சர்வதேசத்துடன் பொதுவாகவும், அறபுலகத்துடன் குறிப்பாகவும் நேரடி உறவுகளை வைத்துக் கொள்ளவும் அது துணை புரிந்திருக்கும். இதனால் எத்தகைய நன்மைகளை நாம் பெற்றிருப்போம் என்பதனை இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போதாவது நாம் விட்ட இத்தவறை உணர வேண்டும். அறபு மொழிக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து நம் சமூகத்தில் வாழும் உயிருள்ள ஒரு மொழியாக அதனை மாற்றுவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மக்தப் நிகழ்ச்சித் திட்டமும், முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அல்-குர்ஆன் மத்ரஸா செயற்றிட்டமும், அஹதிய்யா பாடத்திட்டமும் அறபு மொழி மேம்பாட்டையும் கவனத்திற் கொண்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். அறபு மொழியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களான குர்ஆன் மத்ரஸாக்கள், மக்தப்கள்,அஹதிய்யாக்கள், முஸ்லிம் அரச பாடசாலைகள், சர்வதேச முஸ்லிம் ஆங்கில பாடசாலைகள், அறபுக் கலாசாலைகள், பல்கலைக்கழக அறபு மொழிப் பிரிவுகள், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை ஆகிய அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஒன்றிணைந்து அறபு மொழி மேம்பாட்டுக்கான ஒரு ஒருமுகப்படுத்தப்பட்ட குறுங்காலத் திட்டத்தையும், ஒரு நீண்டகாலத் திட்டத்தையும் வரைந்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அவற்றை அமுல்படுத்த வேண்டும். இதனை எங்களால் சாத்தியப்படுத்த முடியுமெனில் அல்லாஹ்வின் பேரருளால் குறுகிய காலத்தில் அறபு மொழி இந்நாட்டு முஸ்லிம்களின் வீட்டு மொழியாகவும், பேச்சு மொழியாகவும் மாற வேண்டும் என்ற எமது நீண்ட நாள் கனவு நிச்சயம் நனவாகும்.!

(sheikhagar.org)

VAT

 


One thought on “இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி

  1. Haniff says:

    Excellent Idea Sir!

Leave a Reply to Haniff Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All