Puttalam Online
star-person

“எனக்கு கார் ஓட்டவும் கடலில் மீன் பிடிக்கவுமே தெரியாது” அபூஹனீபா ஆலிம்

S.I.M. Akram

புத்தளத்தின் இன்னுமொரு ஆலிமை அறிமுகம் செய்கின்றோம்.

aboo haniffa (Copy)புத்தளம் பானா கடை சந்தியில் வசித்து வந்த அஹமது கபீர் மற்றும் றாஹிலா உம்மாவிற்கு மகனாக 1923.10.24  ம் திகதி பிறந்தவர் அபூஹனீபா ஆலிம் அவர்கள்.(சேகு ஜனைதீன்)

தாய் வழியாக யூ.சே குடும்பத்தையும் தந்தை வழியாக மண்டவத்து மரைக்கார் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தனது ஆரம்பக் கால கல்வியை புத்தளம் ஆண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை பெற்றுக்கொண்டார்கள். பின்னர் அக்கால புத்தளத்தின் மரபுப்படி தனது மகன் மார்க்கக் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பிய அவருடைய தந்தை கபீர் அவர்கள் புத்தளம் புதுப் பள்ளியில் இயங்கிவந்த மதுரஸாவில் தனது மகனை சேர்த்துவிட்டார்கள். இக்காலப்பில் புத்தளத்தின் பழம்பெரும் ஆலிம்களான அப்துர் றஹீம் ஆலிம், அப்துல் லத்தீப் ஆலிம், அப்துல் கபூர் ஆலிம் ஆகியோரின் வகுப்பிலேயே இவர்களும் தங்கள் மதுரஸா கல்வியை தொடர்ந்து கற்றுக்கொண்டார்கள்.

புத்தளத்தின் அக்கால மதுரஸாவில் ஒரு உஸ்தாதே கடமைபுரிந்து வந்ததனால் அவர் விடுமுறைக்குச் சென்றாலோ அல்லது விலகிச் சென்றாலோ இன்னொருவர் அதனை பொறுப்பேற்கும் வரை பல வருடங்கள் மதுரஸா மூடப்படும். இவ்வகையில் ஐந்து வருடங்களாகியும் மதுரஸா திறக்கப்படாததனால் அப்துர் றஹீம் ஆலிமும், அப்துல் கபூர் ஆலிமும் இந்தியாவிற்கும் அப்துல் லத்தீப் ஆலிம் காலி கோட்டை பஹ்ஜதுல் இபுறாஹிமிய்யா மதுரஸாவிற்கும் சென்றுவிட்டனர். எனினும் அபூஹனிபா அவர்கள் வறுமையின் காரணமாக மதுரஸா கல்வியை இடைநடுவில் நிறுத்திக்கொண்டார்கள்.

தனது தந்தை அக்காலத்தில் பிரபலமான நாடிப்பிடி பரியாரியாக இருந்ததனால் அவரோடு இணைந்து தொழிலை கற்றுக் கொண்டார்கள். இக்காலத்தில் இக்காலப்பிரிவிலேயே திருமணபந்தத்திலும் இணைந்துகொண்டார்கள்.

பின்னர் மஹ்மூத் ஆலிம் காஸிமிய்யா மதுரஸாவை பொறுப்பேற்றுக் கொண்ட போது காஸிமிய்யாவின் பொற்காலம்aboo haniffa id - 1 (Copy) ஆரம்பமாகியது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இவர்கள் தன் நிலைப்பற்றி மஹ்மூத் ஆலிமிடம் எடுத்துக் கூறினார்கள். எனினும் மதுரஸாவில் இணைந்து கல்வி கற்க கூடிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஏனெனில் இவர்கள் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கும் தந்தையாகி இருந்தார்கள்.

தான் எப்படியாவது ஆலிம் பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென உறுதியாக இருந்த அபூஹனீபா ஆலிம் அவர்கள் தனது மனைவியின் தந்தையான சேகு மீரான் லெப்பை ஆலிமிடம் மதுரஸா பட்டத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை முறையாக படித்தார்கள். பின்னர் காஸிமிய்யாவில் நடைபெற்ற ஆலிம் பட்டப் பரீட்சையில் சித்திபெற்ற அவர்கள் காஸிமிய்யா மதுரஸாவின் பட்டச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

க/முதலைப்பாளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் அரசாங்க மௌலவி ஆசிரியராக தனது முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் பொத்துவில் பாடசாலை, நுரைச்சோலை முஸ்லிம் வித்தியாலயம் போன்றவற்றில் கடமையாற்றிய பின் இறுதியாக தில்லையடி முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றினார்கள். அதன் பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்கள்.

அபூஹனிபா ஆலிம் அவர்கள் விஷேட திறமைப் படைத்தவர்கள். இவர்களுக்கு தெரியாத தொழில்களே இல்லை என்றே சொல்லலாம். அனைத்து வேலைகளையும் மிகவும் கலை நுட்பத்துடன் செய்வார்கள். வீடு கட்டுவதிலிருந்து சமையல் நுட்பங்கள் வரை மிகவும் ஆழ்ந்த அறிவு படைத்தவர்கள். இவர்கள் தனது பிள்ளைகளுக்கு தனது கைகளாயேயே வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளார்கள். அவ்வீட்டுக்குத் தேவையான தளபாடங்கள் போன்றவற்றையும் மிக நுனுக்கமான வேலைபாடுகளோடு செய்து முடித்துள்ளதைக் காணமுடியும். அபூஹனீபா ஆலிம் ஒரு முறை “எனக்கு கார் ஓட்டவும் கடலில் மீன் பிடிக்கவுமே தெரியாது. மற்றைய எல்லா வேலைகளும் தெரியும்” என குறிப்பிட்டதாக 80 வயதுடைய அவருடைய மனைவி சொல்லியதை செவியேற்க முடிந்தது.

மிகவும் அமைதியும் சாந்தமும் உடைய ஆலிமவர்கள் பிரபல்யத்தை எப்போதும் விரும்பியதில்லை. இவர்கள் தனது நண்பர்களாக தில்லையடி முஸ்லிம் வித்தியாலய முன்னால் அதிபர் ஏ.ஆர். அப்துல் பாரி மர்ஹும் ஏ.எம்.அனிபா (முன்னால் அஹதியா அதிபர்) ஆகியோரோடு மிகவும் நெருங்கி பழகியவர்கள்.

aboo haniffa id - 1i (Copy)அனிபா அதிபர் அவர்கள் மார்க்கத்தில் மிகவும் பற்றும் பேணுதலும் உடையவராக இருந்தார்கள். திருமணம் தனது வணக்க வழிபாடுகளை திசை திருப்பிவிடும் என்ற காரணத்தினால் திருமணம் முடிப்பதை தவிர்த்துக் கொண்டார்கள். எனினும் பிற்காலத்தில் தனது ஆத்ம நண்பருக்கு திருமணத்தை பேசி முடித்து வைப்பதில் அபூஹனிபா ஆலிம் வெற்றி கண்டார்கள்.

இவர்கள் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின் தனது தந்தையுடன் சேர்ந்து ஆரம்பத்தில் செய்த ஆயுர்வேத மருந்துக் கடையை கபீர் அப்பா மருந்துக் கடை என்ற பெயரில் புத்தளம் மன்னார் வீதியில் அமைத்து மருந்து விற்பனையையும் ஆயுர் வேத கைவைத்தியமும் செய்து வந்தார்கள். புத்தளத்தைச் சூழ உள்ள வெத மஹதயாமார்கள் இவர்களின் மருந்துக் கடையில் வந்து தங்களின் மருந்து தேவைகளை நிறைவேற்றுவதோடு மற்றுமல்லாமல் வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு செல்வதை அப்போது காண முடிந்தது. இவர்களின் கடையே அப்போதைய புத்தளம் அதனை சூழ உள்ள பிரதேசங்களுக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்களை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரே இடமாக இருந்தது.

VAT


3 thoughts on ““எனக்கு கார் ஓட்டவும் கடலில் மீன் பிடிக்கவுமே தெரியாது” அபூஹனீபா ஆலிம்

 1. Mohamed Thasleem says:

  இந்த ஆலிமின் விடா முயற்சியும் பல்துறை ஆற்றலும் உலக முஸ்லிம்களுக்கு ஓர் முன்மாதிரி,
  இவர் போன்று புத்தளத்தில் பலர் இருக்கலாம் அவர்களுடைய வரலாற்றையும் வெளிக்கொண்டுவருவது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.

 2. இவரை போன்ற பல கலை திறன்களை கொண்டவர்களை எம் இன்றைய இளைய தலை முறையினர்கு அறிமுகம் செய்வதும் இது போன்றவர்களிடமிருந்து நாம் பாடம் பயில்வதும் இன்றைய இளைய தலைமுரைனர்கு ஒரு கட்டாயமான ஒன்ராஹா இருக்கிறது .
  இவரையும் இவர் போன்றவர்களையும் எங்கள்கு அறிமுகம் செய்த புத்தளம் ஆன்லைன்கு பல கோடி நன்றிகள் உரித்தாகட்டும்.
  நன்றி ஜசாகல்லாஹு ஹைரன்.
  -ரிஹான் புத்தளம் –

 3. Wasim Akram MAB says:

  இவரின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு ஓர் முன்மாதிரி. இவரின் விடாமுயற்சி, அனைத்தையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் என்பனவற்றை சொல்லலாம்.

  இவர் பற்றிய வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு அறிய தந்தமைக்கு http://www.puttalamonline.com பாராட்டப்படவேண்டிய ஒன்று..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All