Puttalam Online
interviews

ஒரு வருட நிறைவில் முர்ஸி குறித்து தீர்ப்பு சொல்வது நியாயமற்றது

  • 11 July 2013
  • 947 views

Deenaதீனா ஸகரிய்யாவுடன் ஓரு நேர்காணல்

 தீனா ஸகரிய்யா, அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்திலும் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியிலும் முன்னணி பாத்திரம் வகிப்பவர், குறிப்பாக பெண்கள் விவகாரத்தில் அக்கறையுடன் செயற்படும் அவர், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். கட்சியின் வெளிவிவகாரக் குழுவின் ஸ்தாபக அங்கத்தவர்களுள் அவரும் ஒருவர்.

அல்அஹ்ராம் ஆங்கிலப் பதிப்பு அவருடன் மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு.

(குறிப்பு – தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டி என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்)

தமிழில் – சிராஜ் மஷ்ஹூர்

நீங்கள் எப்போது இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தில் இணைந்து கொண்டீர்கள்?

1993 இல் உத்தியோகப் பற்றற்ற முறையில் இயக்கத்தில் இணைந்தேன். நான்கு வருடங்களாக பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, இயக்கத்தை அவதானித்த பின்னர் 1997 இல், உத்தியோகபூர்வமான அங்கத்தவராக இணையும் தீர்மானத்தை எடுத்தேன்.

எப்போதிலிருந்து முர்ஸிக்கு ஆதரவளித்து வருகிறீர்கள்? அவருக்கு ஆதரவளிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்கும் குறிப்பான காரணம் என்ன?

ஆரம்பத்திலிருந்தே நான் முர்ஸியை ஆதரித்து வருகிறேன். பொதுவாக, நான் தனிநபர்களை விடவும் நிறுவனங்களுடன் (இயக்கத்துடன்) இணைந்தே பணியாற்றவே விரும்புகிறேன். இயக்கம் முர்ஸியை தெரிவு செய்தபோது அவருக்கு அதன் முழுமையான ஆதரவையும் வழங்கியது.

முர்ஸி ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவரா என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர், அவரை அவதானிப்பதற்கும் ஆராய்வதற்கும் நான் போதிய அவகாசம் எடுத்துக் கொண்டேன். அவருடை சுயவிபரக் கோவையையும் நடத்தையையும் பரிசோதித்தேன். அவருடைய கூட்டங்களில் பலமுறை பங்குபற்றினேன்.

ஆரம்பத்தில், ஹைரத் ஷாதிர் தான் மிகவும் பொருத்தமான வேட்பாளராகத் தோன்றினார். அதற்கு அவரது பிரபல்யமும் ஒரு காரணம். ஆனால், மூன்று மாதங்களுக்குள் முர்ஸிதான் மிகப் பொருத்தமானவர் என்ற கருத்து எனக்கு உறுதியானது. கலாநிதி முர்ஸியின் நெகிழ்வுத் தன்மையும் நன்னடத்தையும், அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்ற – அதிகார வர்க்க கெடுபிடி நிறைந்த- ஊழல் மலிந்த சூழலை எதிர்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானது என உணர்ந்தேன்.

ஜனாதிபதி மிகவும் பலமான ஒருவர். வெளியில் மக்கள் அவரை பலவீனமாக ஒருவராகக் கருதுவது தவறானது. அவர் மிகவும் இரக்கமானவர். அதேவேளை நுணுக்கமும் ஏனையோரை உற்சாகப்படுத்தும் பண்பும் கொண்டவர். அவரோடு இணைந்து பணியாற்றும் அனைவரையும் கவனமாக அவதானிப்பவர். என்னையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருந்தார். யாரிடமும் ஆலோசனை பெறுவதற்கு முன்னர், அவர் குறித்த முழுமையான தகவல்களை நன்கு அறிந்து கொள்வார். அதன் பின்னரே அந்த ஆலோசனைகளை அவர் பெறுவது வழக்கம்.

முர்ஸியின் நன்னடத்தையில் உங்களைக் கவர்ந்த விடயங்கள் என்ன?

அவருடைய இரக்க சுபாவமும் இறைவனுக்குப் பயந்த தன்மையும் அவரிடமுள்ள மிகச் சிறந்த பண்புகளாகும். இதுதான் என்னையும் பல எகிப்தியர்களையும் கவர்ந்தவை. அவர் எல்லோரது கருத்துக்களையும் கூர்ந்து அவதானித்து உள்வாங்கும் இயல்புடையவர். அவர்கள் அறிவில் குறைந்த விவசாய சமூகத்தினராக இருந்தாலும், வர்த்தக சமூகத்தினராக இருந்தாலும் யாருடைய கருத்தையும் அவர் அலட்சியப்படுத்துவதில்லை.

எவ்வளவு காலம் அவரோடு இணைந்து பணியாற்றினீர்கள்? உங்களது பிரச்சார அனுபவங்களை விபரிக்க முடியுமா?

இஹ்வான்களது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பத்திலிருந்தே நான் பங்குபற்றினேன். ஹைரத் ஷாதிர் தேர்தல் களத்திலிருந்து அகன்றபோது, முர்ஸியின் பிரச்சாரப் பணியில் நான் தொடர்ந்து பணியாற்றினேன். ஜனாதிபதியின் முன்னாள் வெளிவிவகார குழுத் தலைவரான கலாநிதி இஸாம் ஹத்தாத், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் குழுவில் இணைந்து செயற்படும் குழுவினரை கவனமாக தெரிவு செய்தார். அதில் நானும் ஒருவர்.

முர்ஸி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஜனாதிபதி அலுவலகததுடன் நீங்களும் தொடர்புபட்டிருந்தீர்களா?

முர்ஸி ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் எனக்கு சில பொறுப்புக்கள் தரப்பட்டன. ஹத்தாத் தலைமை வகித்த வெளிவிவகாரக் குழுவில் அதன் ஸ்தாபக அங்கத்தவர் என்ற வகையில் நானும் பணியாற்றினேன்.

முர்ஸி ஜனாதிபதியான பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவராக கலாநிதி ஹத்தாத் பொறுப்பேற்றார். இக்குழுவில் இருந்த சிலரையும் அவர் தேர்ந்தெடுத்தார். கலாநிதி அம்ர் தர்ராக் எனது நேரடிப் பொறுப்பாளராகவும் வெளிவிவகாரக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவர் தற்போது புதிய அமைச்சரவையில் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சராக உள்ளார்.

கலாநிதி ஹத்தாதின் குழுவில் உத்தியோகப்பற்றற்ற முறையில் நான் இன்னும் இயங்கி வருகிறேன். அக்குழு ஜனாதிபதிக்கு ஆலோசனையையும் ஆதரவையும் வழங்கி வருகின்றது. ஜனாதிபதியின் முக்கியமான நிகழ்வுகள் பலவற்றில் நான் உதவி வருகிறேன்.

எகிப்தில் ஸ்திரத் தன்மையைக் கொண்டு வருவதற்கான பல முன்னெடுப்புகளில் நானும் பங்கேற்றிருக்கிறேன். உதாரணத்திற்கு புதிய அரசியலமைப்பை வரைவதற்கான பிரச்சாரக் குழுவில் பணியாற்றினேன். அந்த அரசியலமைப்பு இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. பெண்கள், சிறுவர்களது உரிமை தொடர்பாக அரசியலமைப்பு சபை உறுப்பினரான கலாநிதி உமைமா காமில் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கருத்திட்டங்களிலும் நான் பங்குபற்றினேன்.

முர்ஸியின் ஒரு வருடம் பூர்த்தியடையும் இந்த சூழலில், உங்களது அபிப்பிராயங்களில் ஏதும் மாற்றம் உள்ளதா?

இல்லை. எனது அபிப்பிராயங்கள் மிகவும் உறுதியாகவே உள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னர், அவரை நான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்தவள் என்பதை மனதில் கொள்ளுங்கள். நான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை நன்கு தெரிந்திருந்தேன். ஆரம்பத்தில், ஜனாதிபதி முர்ஸி அவரது புதிய பொறுப்பை சுமையானதாகவும் பிரச்சினைக்குரிய தாகவும் கருதினார். ஆனால், இன்று அவர் மிகத் தெளிவான ஜனாதிபதியாகவும் நல்லதொரு மனிதராகவும் வளர்ந்திருக்கிறார்.

அவருடைய வெற்றிகள் என எவற்றை நீங்கள் கருதுகிறீர்கள்?

முதலாவதாக, எகிப்தை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, வெற்றிகரமான சிவிலியன் அரசாங்கமொன்றை அவர் நிறுவினார். இது மிகவும் கடினமான மேன்மையான ஒரு அடைவாகும். கடந்த 60 வருடங்களாக பதவியிலிருந்த இராணுவத்தை தனிமைப் படுத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு பணி. எந்தவொரு சிவில் யுத்தமோ இரத்தம் சிந்தும் நிலைமையோ இல்லாமல்தான் அவர் இதனை சாதித்திருக்கிறார்.

அடுத்து, அரசியல் அமைப்பொன்றை கொண்டு வந்தமை மிக முக்கியமான இன்னொரு வெற்றி என நான் கருதுகிறேன். 2012 டிசம்பரில் இடம்பெற்ற மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின்போது 16 மில்லியன் பேர் வாக்களித்தனர். அவர்களுள் 10 மில்லியன் பேர் அந்த யாப்பை ஆதரித்தனர்.

மூன்றாவதாக, சுதந்திரமும் ஜனநாயகமும் நிலவும் எகிப்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஜனாதிபதியின் பங்கு பாராட்டத்தக்கது. பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற அவருடைய உறுதி, கட்சிகளிடையே அதிகாரத்தை கையளிப்பதை விரைவில் உறுதிப்படுத்தும். அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதில் அவர் கவனத்தை குவித்திருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.

முன்னாள் ஜனாதிபதி அப்துன் நாஸரது தேர்தல் சட்டங்களோடு தொடர்பான கொள்கைகளை கலாநிதி முர்ஸி வெற்றிகரமாக நீக்கியுள்ளார். அரச நிறுவனங்களை அங்கீகரித்தல், தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளித்தல் என்பதில் அவர் கொண்டிருக்கும் உறுதி மிக முக்கியமான வெற்றியாகும். ஜனாதிபதி மாளிகையில் வித்தியாசமான வெவ்வேறு அரசியல் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவரது ஆற்றலும் விதந்து குறிப்பிடத்தக்கது.

அவரது எதிரிகள் உட்பட அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களையும் அழைக்கும் அவரது தயார் நிலை இன்னொரு சிறப்பம்சமாகும். அரசியலமைப்பை உருவாக்கும்போது, அவர் அனைத்துப் போக்கினரையும் உள்ளடக்க முயற்சி செய்தார். இன்று வரை எதிரணியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த வண்ணமே அவர் உள்ளார். கலாநிதி முர்ஸி அனைத்து எகிப்தியர்களுக்காகவும் பணியாற்றுகிறார். தனிநபர்களை மையப்படுத்திய தீர்மானம் எடுக்கும் முறையை அவர் ஆதரிக்கவில்லை. நிறுவனங்களை மையப்படுத்திய முறையையே ஆதரிக்கிறார்.

அவருடைய தோல்விகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

பாதுகாப்பு, போக்குவரத்து, சக்திவளம், உணவு, நகர சுத்திகரிப்பு ஆகிய எகிப்தின் உடனடிப் பிரச்சினைகளை மையப்படுத்திய பிரதான ஐந்து வாக்குறுதிகளை அவர் வழங்கினார். எனினும், அவற்றுள் எதையும் அவரால் நிறைவு செய்ய முடியவில்லை.

தன்னால், ஏன் முடியாமல் போனது என்பதை அவர் விளக்கியிருந்தாலும் கூட, மக்களை இவ் விடயத்தில் திருப்திப்படுத்த அவரால் முடியாமல் போய்விட்டது. ஆனால், மக்கள் ஜனாதிபதி விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். எகிப்து போன்ற ஸ்திரமற்ற, குழப்பம் நிறைந்த நாட்டில் இப்பாரிய பொறுப்பை அவரால் சரியாக செய்ய இயலவில்லை.

அவருக்கு பொருத்தமான முறையில் ஆலோசனை வழங்கத் தவறிய ஆலோசகர்களில் அவரால் தங்கியிருக்கவும் முடியவில்லை. கலாநிதி முர்ஸி மக்களது கோரிக்கைகளுக்கு பதிலளிக்க கடும் பிரயத்தனம் செய்தார். அவர் ஆட்சி செய்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தில் அவருக்குப் பெரும் பான்மை கிடையாது. அத்துடன், நியாயமற்ற முறையில் எல்லா விடயங்களிலும் அவர் குற்றம் சாட்டப்படுகிறார்.

முர்ஸியின் ‘நஹ்ழா (எழுச்சி) கருத்திட்டம்’ ஏன் கைவிடப்பட்டது? அவரது கொள்கை பரப்பாளர் என்ற வகையில் நீங்கள் இக் கருத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும்தானே? அதைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

நஹ்ழா கருத்திட்டம் மறைந்து விடவில்லை. அது நிறுத்தி வைக்கப்பட்டள்ளது. சுயஸ் கால்வாய் கருத்திட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. அதுபோன்று, தொழிற் சாலைகளை ஆரம்பித்தல் போன்ற அதனோடு தொடர்பான பல சிறிய முன்னெடுப்புகளும் ஆரம்பமாகியுள்ளன. எனினும், எகிப்தை எதிர் கொண்டிருக்கும் கடினமான சமூக – பொருளாதார நிலைமைகள், நியாயமற்ற ஊடகங்களின் எதிர் வினைகள் காரணமாக அந்த விடயங்கள் மக்களுக்கு தெரியாமல் செய்யப்பட்டுள்ளன.

எனது பார்வையில் இந்த நிலைமாறு காலகட்டம் இதற்குப் போதாது. நஹ்ழா கருத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்கும் எதிர்ப்புரட்சி சக்திகளை, கட்டுப்படுத்தவும் கலாநிதி முர்ஸிக்கு அதிக காலம் தேவை. இன்னொரு நான்கு வருட காலத்திற்கு அவர் மீண்டும் தெரிவு செய்யப்படுவது இதற்கு மிகவும் அவசியம். அரச நிறுவனங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அதிக அவகாசம் தேவை. ஜனாதிபதி முர்ஸி இப்போதும் பல்வேறு தடைகளுக்கு முகம் கொடுத்திருக்கிறார். இந்த குழப்பமான ஆரம்ப கட்டத்தில் அவர் குறித்து தீர்ப்பு சொல்வது நியாயமற்றது.

நஹ்ழா கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரச்சாரம் மிக விரைவில் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அவர் நான்கு வருட பதவிக்காலத்தை நிறைவு செய்வார் என நீங்கள் கருதுகிறீர்களா?

ஜனாதிபதி முர்ஸி நான்கு வருடம் பதவி வகிப்பார் என்பது மட்டுமல்ல, அடுத்த நான்கு வருடங்களுக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டு, மொத்தமாக எட்டு வருடங்கள் அவர் ஆட்சி செய்வார் என்றுதான் நான் கருதுகிறேன்.

Meelparvai

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All