Puttalam Online
puttalam-news

பிறை விடயத்தில் குளறுபடிகள் ஏற்படக் காரணம் என்ன?

                                                                               பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

 அல்ஹம்துலில்லாஹ்! அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.
                          இஸ்லாமிய கலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்

உலகில் மனித வாழ்விற்கு ஒரு நாட்காட்டி அவசியம். மனித குலத்திற்கான தெளிவான, மாறுபடாத ஒரு நாட்காட்டியை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான். இதனை ‘மவாகீது லின்னாஸ்’ என அல்குர் ஆன் குறிப்பிடுகின்றது. குர் ஆனிலும் சுன்னாவிலும் மயக்கமின்றியும் தெளிவாகவும் உறுதியாகவும் கூறப்பட்டுள்ள ஒரு விடயத்தை தங்களுக்கு முன்வைக்கின்றோம் . இதில் சந்தேகமோ குழப்பமோ கொள்ளத் தேவையில்லை.  இன்று வரை நாம் பின்பற்றிவரும் வழிமுறையை சற்று அப்பால் வைத்துவிட்டு குர்ஆன், சுன்னா அடியொட்டி இங்கு தரப்பட்டுள்ளவற்றை சிந்தித்து உணருமாறு அன்பாய் வேண்டுகிறோம் .

குறிப்பாக உலமா பெருமக்களும் புத்தி ஜீவிகளும் தங்கள் கவனத்தை இதில் குறித்து தெளிவு  பெற வேண்டு மென்பது எமது எதிர்பார்ப்பும் வேண்டுகோளுமாகும்.  வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் சத்தியத்தையும் நேர்வழியையும் காட்டித் தந்தருள்வானாக!.

இன்றுள்ள நிலை:

இன்று எமது நாட்டில் மக்களுக்கு  நோன்பு ஆரம்பம் , நோன்புப் பெருநாள் தினம் , துல்ஹிஜ்ஜா மாதத்தின் அரபா தினம் , ஹஜ்ஜுப் பெருநாள் ஆகியவற்றைத் தீர்மானித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பதை முக்கூட்டமைப்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (அ.இ.ஜ.உ) , கொழும்பு பெரிய பள்ளி , முஸ்லிம் சமய-கலாச்சார திணைக்களம் ஆகியன கூட்டாகப் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதுவன்றி வேறு சில குழுக்கள் தங்களைச் சார்ந்தோருக்கு வேறு தினங்களையும் அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக பல வருடங்களாக 2 அல்லது 3 வேறுபட்ட தினங்களில் மேற்குறித்த மார்க்கக் கிரியைகள் இடம் பெற்று வருவது கண்கூடு. முன்பு இது சர்ச்சையாகப் பேசப்பட்டாலும் தற்போது முழு சமூகமும் ஜீரணித்துக் கொண்ட ஒன்றாக ஆகிவிட்டிருக்கின்றது. இஸ்லாத்தின் பரிசுத்தத் தன்மை , ரசூல் (ஸல்) அவர்கள் போதித்த ஒருமைப்பாடு பற்றி விளங்கியுள்ள முஸ்லிம்களில் அநேகர்  இவ்விடயத்தை மெள்ளவும் முடியாது விழுங்கவும் முடியாது உளக் குமுறலுடன் வாழ்ந்து வருகின்றனர் .

நாட்டில் வாழும் சகோதர சமூகத்தினர்  , இஸ்லாத்தை மலினப்படுத்திப்  பார்க்கவும் பேசவும் இது வழிகோலியுள்ளது விசனிக்கத் தக்கதாகும்.

மேற்குறித்த நிகழ்வுகள் தொடர்பாக அ.இ.ஜ.உ. இதுவரை ஒரு மார்க்கத் தீர்ப்பை (ஃபத்வா) வழங்காதிருப்பதும்  பல சந்தேகங்களுக்கு இடம்பாடாகியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை என்பதை அ.இ.ஜ.உலமா அங்கீகரிக்கின்றதா? தாங்கள் பின்பற்றி வரும் மாத ஆரம்பத்தை தீர்மானிக்கும் வழிமுறை அல்குர் ஆன் , அஸ்ஸுன்னா ,ஸீராவின் ஒளியில் மிகச் சரியானது என வாதிடுகின்றதா? இதனைத் தெளிவுபடுத்துவது இவ்வமைப்பின் தலையாய பொறுப்பாகும். நாட்டின் கரையோரப் பகுதிகளில் இயங்கும் மஃரிபில் பிறை பார்க்கும் குழுக்கள் மூலம் கிடைக்கும் ஆதாராபூர்வமான தகவல்களின் அடிப்படையில் மேற்கூறிய முக்கூட்டமைப்பு நாட்டில் பிறையைப் பிரகடனப்படுத்தி வருகின்றது.

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ நான் உங்களை தெளிவான பாதையில் விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகல் போன்று பிரகாசமானது…” என்று.  அப்படியானால் மார்க்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்தும் தெளிவாகவே உள்ளன. எனவே அ.இ.ஜ.உ.வும் ஏனைய குழுக்களும் தங்கள், தங்கள் சுயவிருப்பு , வெறுப்புக்களுக்கு ஏற்ப தாங்கள் கொண்டுள்ள பிறை தொடர்பான நடைமுறைகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும். குர் ஆன் , சுன்னாவின் அடிப்படையில் ஆய்வு  செய்தல் காலத்தின் தேவையாகியுள்ளது.

அல்குர் ஆன் ,அஸ்ஸுன்னா ஒளியில்…

1. “ (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர்  கூறும்: அவை மனிதர்களுக்கு காலக் கணக்குகளையும் ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும். ”  (2:189)

2. “ இன்னும் , சந்திரனை (உலர்ந்து வளைந்த)  பழைய பேரீச்சை மட்டையைப் போல் மீண்டு வரும் வரையில் அதற்கு நாம் பல கட்ட (தங்குமிட) ங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.  (36:39)

3. “அவனே சூரியனை மின்னும் ஒளிமிகுந்ததாகவும் சந்திரனை (அழகிய வெளிச்சந் தரக்கூடிய) பிரகாசமாகவும் ஆக்கினான். இன்னும் வருடங்களின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (சந்திரனாகிய) அதற்கு தங்குமிடங்களையும் அவன் ஏற்படுத்தினான். மெய்யாக (தக்க காரணம்) அன்றி இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக் கூடிய சமூகத்தாருக்கு (தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை (இவ்வாறு) விவரிகின்றான். (10:05)

வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானவை (9:36) . அதே போன்று மாதங்களின் நாட்களின் எண்ணிக்கை 29 அல்லது 30 என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவை மாற்ற முடியாத அடிப்படைகளாகும். மனித குலத்திற்கான கலண்டரை அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்திவிட்டான். பிறையின் பல்வேறு வடிவங்களை – அஹில்லாக்களைப் பற்றி – குர் ஆன் கூறுகின்றது. அதனை நாம் வானில் பார்த்தே வருகின்றோம். ஹிலால் – பிறை – என்ற ஒருமைச் சொல் குர்ஆனில் இல்லை. எனினும் அஹில்லா என்பதை விளக்குவதாக ‘உர் ஜூனில் கதீம்’ என்ற பிறையின் இறுதி வடிவத்தை குர் ஆன் கூறுகின்றது. மேற்கூறியவற்றிலிருந்து பிறைக்கு 28 அல்லது 29 வடிவங்கள் உண்டு என்பது தெளிவாகின்றது. நீங்கள் அதனை (பிறையை) கண்டு நோன்பு வையுங்கள் , இன்னும் அதனை (பிறையை)க் கண்டு நோன்பை திறவுங்கள். அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் அதனை (நாளை) க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறியூள்ளார்கள். அல்லாஹ் பிறைக்கு பல வடிவங்களை ஏற்படுத்தியுள்ளான். அந்தக் காட்சியை அவதானித்து நோன்பை நோற்றுக்கொள்ளுங்கள் , நோன்பை விட்டுவிடுங்கள் என்ற கருத்தையே இது தருகின்றது.  மாறாக பிறை பார்த்து நோன்பை பிடியுங்கள் என்ற கருத்தை எடுத்தால் : எந்தப் பிறை என்ற கேள்வியும் எந்த நாள் பார்க்கவேண்டும்? எப்போது பார்க்க வேண்டும்? என்ற வினாக்களும் எழுகின்றன. சஹாபாக்கள் இந்த ஹதீஸை சரியாக விளங்கியிருந்ததன் காரணமாகத்தான் இப்படியான கேள்விகளை ரசூலுல்லாஹ்விடம் கேட்கவில்லை. பிறையின் வடிவங்களை தினமும் அவதானிப்பதன் மூலம் கணக்கிட்டு தங்கள் இபாதத்துக்களை செய்து வந்தார்கள்.

 

மேற்கூறிய பிறையின் இறுதி வடிவத்தை (உர் ஜூனில் கதீம்) 28ம் அல்லது 29ம் நாளில் ஃபஜ்ரின் பின்னர் சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு அடிவானில் காணமுடியும். இதற்கு அடுத்த நாள் அமாவாசை நாளாகும். அன்று பிறை தெரியாது. சங்கமம் ( சூரியன்,சந்திரன், பூமி ஆகியன நேர்கோட்டில் வருதல்) ஏற்படுவதால் மறைக்கப்படுகின்றது. அதனையும் கணக்கிட்டுக் கொள்ளும்படி ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனையே ஹதீஸ்கள் உம்ம (غُمَّ) , உபிய ( غُِبيَ) என்ற சொற்கள் குறிக்கின்றன. வெறுமனே மேகத்திற்கு மறைவதை மட்டுமல்ல. பூர்த்தியாக்குங்கள் அல்லது கணக்கிடுங்கள் அல்லது எண்ணிக்கொள்ளுங்கள் என்பதற்கு முறையே பஅதிம்மூ (فأتِموا) , பஅக்மிலூ (فأكملوا) , பஉத்தூ (فعُدّوا) பக்திரூ (فاقدروا) போன்ற வாத்தைகளை நபி (ஸல்) பயன்படுத்தியூள்ளார்கள். அவர்களின் கட்டளை கண்ணால் பிறையைப் பார்ப்பதை வலியுறுத்தவில்லை; கணக்கிடுவதையே வலியூறுத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
உமர் (றழி) அவர்கள் தமது கிலாபத் விரிவாக்கத்தின் போது தகவல்களை ,நிகழ்வுகளை , கணக்குகளைக் குறித்து வைப்பதற்கு ஒரு கலண்டர்  தேவைப்பட்டது. ரஸூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்ட திலிருந்தே அக்கலண்டரை தயாரிப்பதாக முடிவாகியது. உமர் (றழி) அவர்களும் சஹாபாக்களும் ஏறத்தாழ 17 ஆண்டுகள் பின்னோக்கி மிகக் கவனமாக ஒவ்வொரு மாதத்தையும் கணக்கிட்டு ரஸூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்ட ஆண்டின் (கி.பி.622) முஹர்ரம் முதல் நாளை மிகச் சரியாகக் கணக்கிட்டனர். அவ்வாறு கணக்கிடப்பட்ட அந்த நாள் ஹிஜ்ரி கலண்டரில் முஹர்ரம் மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை (01-01-0001 ஹிஜ்ரி ஆண்டு துவக்கம்) என முடிவு  செய்யப்பட்டது. அந்த வியாழனுக்கு முந்திய புதன்கிழமை சூரிய கிரகணம் ஏற்பட்டிருந்தது. ஒரு சூரிய கிரகணத்திற்கு அடுத்த நாள் முதற் பிறையாகும். சுப்ஹானல்லாஹ்!. எவ்வளவு  சரியாக கணக்கிட்டுள்ளனர் .  இன்றும் சந்திர மாதத்தை கணக்கிட முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. மேற்குறித்த சூரா யூனுஸின் 5ம் வசனமும் பனூஇஸ்ரவேல் 12 வது வசனமும் கணக்கிட முடியும் என சொல்கின்றன . எனவே இதனடிப்படையில்தான் இந்தியாவின் ஹிஜ்ரி கமிட்டி ஆய்வு  செய்து கலண்டரை வெளியிட்டு வருகின்றது. துருக்கியரின் ஆட்சி காலத்தில் ஏற்கெனவே உமர் (றழி) அவர்களால் தீர்மானிக்கப்பட்ட (01.01.01) வியாழக்கிழமையை இஸ்லாத்தின் எதிரிகள் யூத வழிமுறையின்படி வெள்ளிக்கிழமையாக மாற்றி ஹிஜ்ரி கலண்டரில் குழப்பம் ஏற்படுத்தினர் என்பதே வரலாற்று உண்மை.

சிந்திக்க விரும்புவோருக்கு சில துணுக்குகள்:

1.                     நாளின் ஆரம்பம் இரவு  நடுநிசி 12 மணி என பொதுவாக அனைத்துத் தரப்பு மக்களும் நம்புகின்றனர் . இது ஐரோப்பியர் /கிறிஸ்தவம் ஏற்படுத்திய  வழிமுறை. மஃரிபில் நாள் ஆரம்பிக்கிறது என முஸ்லிம்களில் அநேகர்  நம்புகின்றனர் . இது மஃரிபில் பிறை பார்த்துப் பழகிய தோஷத்தால் ஏற்பட்ட பதிவாகும். ஒரு செயலை ஒரு சமுதாயம் தொடர்ந்து செய்து வருவதால் அது இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ் அல்லது அவனது தூதர்  வழங்கிய ஆதாரமாகிவிடாது. மார்க்கம் என்ற பெயரில் எந்த செயல் செய்தாலும் அதற்குத் திருக்குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரம் இருக்க வேண்டும். ஒரு நாள் என்பது ஃபஜ்ரில் ஆரம்பித்து ஃபஜ்ரில் முடிவடைகிறது என்பதற்கு ஏராளமான குர் ஆன் , ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளன.

உ-ம்:    1. இரவு பகலை முந்த முடியாது (36:40)
2. பகல் தான் முதல்.அதைத்தொடா;ந்து செல்லும் இரவு … (89: 1-5)
3. நடுத் தொழுகை அஸர்  (புகாரி 4533)
4. நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் ஃபஜ்ரில் இருந்து ஃபஜ்ர் வரை இருந்தார்கள்.  (புகாரி 2033)

யூதர்களுக்கு நாள் மஃரிபில் ஆரம்பிக்கிறது. அவர்களின் வழிமுறையை நாம் ஏற்கலாமா? மஃரிபில் நாள் ஆரம்பிப்பதாகக் கூறும் ஒரு குர் ஆன் வசனமோ, ஒரு சஹீஹான ஹதீஸோ கிடையாது.

2.        பிறை பார்த்துத் தான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றிருந்தால் நாங்கள் முன் கூட்டியே கலண்டரை தயாரிக்க முடியாது. அல்லாஹ் மனித குலத்திற்கே அளித்துள்ள பிறைக் கலண்டர்  அவ்வளவு  பலவீனமானது என்று நம்பலாமா? நஊதுபில்லாஹ்! நாங்கள் எதிர்காலத்தில் செய்ய இருப்பவற்றை முன்கூட்டியே எந்தக் கலண்டரை வைத்துத் தீர்மானிப்பது? அல்லாஹ் பல வருடங்களின் கணக்கை தீர்மானிக்க முடியும் என்று கூறியுள்ளானே!. இதனை சாத்தியப்படுத்துவது எப்போது? படைப்பினங்களை, இயற்கை நிகழ்வுகளை ஆய்வு  செய்யும்படி அல்குர் ஆன் அறைகூவல் விடுக்கின்றது. வான இயற்பியலை (Astrophysics) கொண்டு ஆய்வு  செய்து இறைவன் கூறியுள்ள பிழையற்ற கலண்டரைக் கூட கணக்கிட்டு இதுவரைக்கும் உலகுக்கு வழங்காமல் எதைத் தான் நாம் சாதிக்கப் போகின்றோம்? நாங்கள் இன்னும் உம்மி சமுதாயமா? வானஇயற்பியல் கல்வியை கற்பது முஸ்லிம்களில் சிலருக்காவது கடமையில்லையா? அப்படி யாராவது கற்று ஆய்வு  செய்து ஒரு முடிவை வெளியிட்டால் அதை ஏற்க முடியாது என்று சொல்வதற்கு குர் ஆன் , ஹதீஸில் ஆதாரம் உண்டா? தங்கள் போக்கை மாற்றமுடியாது என அடம் பிடிப்பவர்கள் சற்று சிந்திப்பார்களா?

       “சூரியனுக்கும் சந்திரனுக்கும் கணக்கு இருக்கிறது” என அல்லாஹ் 55:5  என்ற வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். எனவே சந்திரனைக் கணக்கிடுவதில் என்றும் எந்தக் குழப்பமும் இருக்காது. நாம் தான் இதைப் புரிந்து கொள்ளாமல் குழப்பத்தில் இருக்கின்றோம். மாதத்தை சரியாக ஆரம்பிப்பதுதான் இபாதத்தே தவிர பிறையை கண்ணால் காண்பது இபாதத் அல்ல. சந்திரனின் படித்தரங்களை கண்ணால் கண்டு மாதத்தை ஆரம்பிப்பதில் இன்று பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. ஆனால் கணக்கில் முரண்பாடோ குழப்பமோ ஒரு போதும் இருக்காது. ஏனெனில் இது அல்லாஹ் விதித்த கணக்காகும். இதை இன்றைய விஞ்ஞான உலகம் மட்டுமல்ல இஸ்லாமிய அறிஞர்களின் வட்டமும் ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக எகிப்தில் வாழ்ந்த ஹதீஸ் கலை , பிக்ஹ் கலை வல்லுனரான அஹ்மத் முஹம்மத் ஸாகிர்  என்ற இஸ்லாமிய அறிஞரும் ஏனைய இஸ்லாமிய அறிஞர்களில் சிலரும் கணக்கிடுவதையே சரி கண்டுள்ளனர் . உறுதி செய்யப்பட்ட விஞ்ஞான முடிவுகளுக்கெதிராக இஸ்லாம் ஒருபோதும் இருக்காது என இன்று நாம் உறுதியிட்டுக் கூறிவருகின்றோம். ஆனால் சந்திரக் கலண்டரில் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்படும் வானஇயற்பியல் கணக்கை எடுக்கக் கூடாது என நாம் வாதிடுகிறோம். இது அறிவுடைமையா? அறியாமையா?

3.                  பிறை கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது. மஃரிபில் பார்க்கும் பிறை மறையும் பிறை. உ-ம்: திங்கட்கிழமை மறையும் பிறை, திங்கட்கிழமைப்  பிறை. ஹதீஸ்களின் படி, எந்த நாள் பிறை தென்படுகிறதோ அது அந்த நாளுக்குரிய பிறையாகும். அப்படியாயின் மறையும் பிறை தென்பட்டால் ஒரு நாளின் பகல் பொழுது கழிந்து விட்டது. நாம் மறையும் பிறையைப் பார்த்து அடுத்த நாள் நோன்பையோ பெருநாளையோ அனுஷ்டிப்பது சரியாகுமா? ரமழான் முதல் நாள் ஃபஜ்ரில் இருந்து நோன்பு நோற்பதும் ஷவ்வால் முதல் நாள் காலையில் பெருநாள் கொண்டாடுவதும் தான் இபாதத் ஆகும். இன்று பிறை கண்டு மறுநாள் செய்யும் இபாதத் , உரிய இபாதத்தாகுமா? பிறை பார்க்கச் சொல்வோர், இதற்கு விளக்கம் தருவார்களா? பழக்க தோஷமாகிவிட்ட அல்லது வழிகாட்டப்பட்ட இத்தகைய பிழையான வழிமுறைகளை அறிவுக் கண் கொண்டு ஆய்வு நோக்கோடு நாம் பார்க்கக் கூடாதா?

                   அ.இ.ஜ.உலமா , அவர்கள் தீர்மானித்த மாதத்தின் இறுதி நாளில் அடுத்த மாதத்திற்கான பிறை பார்க்கச் சொல்கிறது. நாட்டின் கரையோரப்  பிரதேசங்களில் உள்ள பிறை பார்க்கும் குழுக்கள் முதல் பிறையைத் தேடுகின்றனர் . எப்படியோ 2ம் நாள் பிறையை அது மறையும் போது கண்டுகொள்கின்றனர் . இதன்படி ரமழானாயிருந்தால் 3ம் நாள் ஃபஜ்ரில் முதல் நாள் நோன்பு பிரகடனப்படுத்தப்படுகிறது. ஷவ்வாலாக இருந்தால் 3ம் நாள் பெருநாள் பிரகடனப்படுத்தப்படுகிறது. இந்நடைமுறை காரணமாக எங்களில் பலர் யதார்த்தமாக வானை நோக்கிப் பார்த்து 1ம் நாள் பிறை இவ்வளவு  பெரிதாகவுள்ளதே! இது 2ம் நாள் அல்லது 3ம் நாள் பிறை என அங்கலாய்க்கின்றோம். அறிந்துகொள்ளுங்கள் , அதுதான் உண்மை! உரிய நாள் கடந்து விட்டமைக்கான ஆதாரமும் அதுவே.

4.              நாங்கள் தொழுகை நேரங்களை எவ்வாறு அறிகின்றோம்? நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை (வஸீலா) இன்று பின்பற்றப்படுவதில்லை. கடிகாரத்தைப் பார்த்து தெரிந்துகொள்கின்றோம். வழிமுறை மாறினாலும் சர்ச்சைப்படாமல் ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் புறக்கணித்துவிட்டு வேறு முறையைக் கையாளுவது குற்றமில்லையா? இரவு  பகலை கணக்கிட அல்லாஹ்வால் தான் முடியும். பூமியின் சுழற்சியை மனிதர்கள் துல்லியமாகக் கணக்கிட முடியாது…” என்று தான் அல்லாஹ் கூறுகின்றான். (73:20)

               என்ன ஆச்சரியம் தெரியுமா? நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளலாம் என அல்லாஹ் கூறிய சந்திரக் கணக்கைப் புறந்தள்ளிவிட்டு உங்களால் துல்லியமாகக் கணக்கிட முடியாது என்று அல்லாஹ் கூறியு ள்ள இரவு , பகல் மாற்றத்தைக் கணக்கிட்டுக் கொண்டு இதுதான் சரியென்று எப்படிக் கூற முடியும்? சந்திர மாதக் கணக்கு மிகத் துல்லியமாக இன்று கணக்கிடப்படுகிறது. ஆனால் நாங்கள்தான் வரட்டு வாதங்களை முன்வைத்து ஆளுக்கொரு பக்கம் கயிறிழுத்து மார்க்கத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். புத்தி ஜீவிகளே! சிந்திப்பீர்களா? ஒரு தேதிக்கு மூன்று நாட்களை கொண்டுவருகின்றோம். “ மெய்யான தக்க சான்றுகளின்றி இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை” என்று மேற்கூறிய வசனம் (10:05) உணர்த்துவது என்ன?

5.          வான இயற்பியலை அடிப்படையாகக் கொண்ட சந்திர கணக்கில் சந்திரனின் ஒவ்வொரு நொடிப் பொழுது அசைவும் பதியப்படுகிறது. தெளிவாக சொல்லப்படுகிறது.  இதுவரை சொன்ன கணக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இப்போது நாம் சற்று சிந்திப்போம் இந்த வழிமுறையை யாருக்காக, எதற்காக கைவிடவேண்டும். தெளிவான ஒன்றை விட்டுவிட்டு தெளிவற்ற ஒன்றை நாம் ஏன் பின்பற்ற வேண்டும். இன்று நாம் சூரிய , சந்திர கிரகணங்களை முன்கூட்டியே மிகச் சரியாக கூறக்கூடிய காலப் பிரிவில் வாழ்கின்றோம். கிரகண நிகழ்வுகள் அல்லாஹ்வின் ஆற்றலை மிக நுட்பமாக அறிவிக்கின்றன. இப்பிரபஞ்ச சுழற்சியில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெளிவு . அப்படியாயின் பிறை விடயத்தில் குழறுபடிகள் எப்படி சாத்தியம்? பிறை தொடர்பான ஞானமின்மையும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என வாதிடும் பிடிவாதக் குணமுமே தவிர வேறொன்றில்லை.

பிறை பார் க்கச் சொல்பவர்களிடமும் பார்க்கும் குழுக்களிடமும் மெல்லியதான சில வினாக்கள்:

1.               நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் முதற் பிறையைப் பார் த்தார்களா? அல்லது

                 ரமழான்,  ஷவ்வால், துல்ஹிஜ்ஜா மாதங்களின் பிறைகளை மட்டும் பார்த்தார்களா?

2.               நபி (ஸல்) அவர்கள் தாம் முதற் பிறை பார்த்ததாக எப்போதாவது அறிவித்துள்ளார்களா?

3.              பிறை பார்ப்பவர்கள் அவற்றை பார்ப்பதற்கு வைத்திருக்கும் அளவு கோல் என்ன?

4.             எதை அடிப்படையாக வைத்து மாதத்தின் நாட்களை முடிவு  செய்கிறார்கள்?

5.            முதல் பிறையைப் பார்த்து தகவல் தருவதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு குழுவை

              நியமித்தார்களா?        அல்லது ஒரு தனிநபரையாவது நியமித்தார்களா?

6.              யாரேனும் பார்த்தால் அதை எங்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள்

                  எப்போதாவது கூறினார்களா?

7.               நீங்கள் பிறை பார்த்தால் அதை பிறருக்கு அறிவியுங்கள் என எப்போதாவது கூறினார்களா?

8.             ரமழான் நோன்பை , பெருநாள் தினத்தை மூன்று வெவ்வேறு தினங்களில் மக்கள்

                 அனுஷ்டிப்பதை     முக்கியப் பிரச்சினையாகக் கருதாமல் இதில் அலட்சியம் காட்டுபவர்கள்

                  ஜும்ஆத் தொழுகையையும்      வெள்ளிக் கிழமை தவிர்ந்த வெவ்வேறான நாட்களில்

                 தொழலாம் என்று தீர்ப்பளிப்பார்களா? இரண்டும்  உரிய தினத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய

                  இபாதத் அல்லவா?

                                                                                                    நன்றி ,  வஸ்ஸலாம்.

                                                                                                                   வெளியீடு:

Viruthodai Islamic Research Foundation (VIRF)

No. 270 D/1, Viruthodai, Madurankuli, Puttalam, Sri Lanka.

Tel. & Fax: 0322268190  Mobile: 0772824691, 0727602999, 0722268062, 0712892353, 0773171726, 0779772938

 

ghh;f;f:www.mooncalendar.in, www.hijricalendar.com

http://www.youtube.com/user/MoonHijriCalendar


One thought on “பிறை விடயத்தில் குளறுபடிகள் ஏற்படக் காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All