Puttalam Online
puttalam-news

பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன; திருத்தம் வேண்டும்

Usthaath Hajjul Aqbar

Usthaath Hajjul Aqbar

சுமார் 2 முழு நாட்களை செலவு செய்து A4  தாளில் 20 பக்கங்கள் எழுதி சமூகத்திற்கு அவசியம் சொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்த விடயங்களை மட்டும் பொறுக்கித் தயார் செய்ததே இந்த ஆக்கம். இதற்கு முன் எழுதிய ‘வியாழன் நோன்பா..?பெருநாளா..?’ என்ற ஆக்கம் சமூகத்தில் பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டாலும் அது நான் எழுதிய நோக்கத்தை நிறைவேற்றப் போதியதாக இல்லை என்பதே மீண்டும் இவ்வாக்கத்தை எழுதத் தூண்டியது.

எனது முதல் ஆக்கத்தில் மிகவும் அடக்கமாக இரண்டு தவறுகளை மாத்திரம் சுட்டிக்காட்டினேன். சமூகம் சிந்திக்க வேண்டும், படிப்பினை பெறவேண்டும். எமது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய காலத்தில் எமது உள்வீட்டு விஷயங்களையே தீர்த்துக்கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இந்நிலை தொடரக்கூடாது என்பதை சமூகம் சாடையால் விளங்கிக்கொள்ளட்டும் என்ற நோக்கிலேயே முதல் கட்டுரையை எழுதினேன். எனினும், தற்போது களத்தில் காணுகின்ற, கேட்கின்ற செய்திகள் ‘எழுதுவதைத் தெளிவாக எழுது! நாசூக்காக சொல்வதை விளங்கும் நிலையில் இன்றையவர்கள் இல்லை’ என்ற உண்மையை உணர்த்துவதாக இருந்தன. எனவே, வெளிப்படையாக சில விடயங்களை சொல்லும் நோக்கில் இதனை எழுதுகின்றேன்.

ஒரு பிரச்சினைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கங்களையும் எடுத்து ஆராய்கின்ற போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனினும் ஒரு சிலரால் பிரச்சினையின் ஒரு பக்கம் வலுக்கட்டாயமாக மூடிமறைக்கப்படுகின்றது. அதன்மூலம் நடைபெற்ற தவறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது சமூகத்தை பிழையான திசை நோக்கி அழைத்துச்செல்லும் ஒரு முயற்சியாகும்.

உமர் (ரழி) அவர்களிடம் கண்பிதுங்கி இரத்தம் வடிந்த நிலையில் ஒரு மனிதன் வந்தான். தனக்கு இந்த அநியாயத்தைச் செய்தவன் பற்றி முறையிட்டான். அப்போது உமர் (ரழி) அவர்கள், ‘உனது காயத்துக்கு மருந்திட்டுக்கொள், நடந்ததை விசாரிப்போம்’ என்றார்கள். இதனைக்கேட்ட அந்த மனிதன் கொதிப்படைந்தான். ‘விசாரணை செய்ய என்ன இருக்கிறது? என்னைப்பார்த்தால் நடந்தது விளங்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உமர் (ரழி) அவர்கள், ‘நீ அவனது இரு கண்களையும் பழுதுபடுத்தி விட்டு வந்திருக்கலாமல்லவா. விசாரணையின்றி எப்படி அதனைத் தெரிந்து கொள்வது?’ என்றார்கள்.

பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு தலைவர் ஒரு பக்கத்தை மூடிமறைக்காமல் எப்போதும் இரண்டு பக்கங்களையும் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால் பிறை விடயத்தில் இரண்டு பக்கங்கள் பார்க்கப்படவில்லை. ஒரு பக்கம் தான் பார்க்கப்பட்டது. பார்க்கப்பட்ட ஒரு பக்கம்: 18 வானியல் நிபுணர்களின் கணிப்பு.., இந்தக் கணிப்பின் படி பிறை வெற்றுக் கண்ணுக்கு தென்படாது.

மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அல்லது அலட்சியம் செய்யப்பட்ட பக்கம்: 25இற்கும் அதிகமானவர்கள் பிறையைப்பார்த்தார்கள் என்பதாகும். இவ்வாறு பிறையைப்பார்த்தவர்களுள் ஆலிம்களும் உள்ளடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு முரண்பட்ட விடயங்கள் தானே மொத்த சமூகத்தையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. சாதாரண குழப்பமா? ஓன்றில் நோன்பு நோற்பது ஹராம் அல்லது பெருநாள் எடுப்பது ஹராம். இந்த இரண்டு ஹராம்களுக்கு மத்தியில் சமூகத்தை சிக்கித் தவிக்க வைத்த பிரச்சினையொன்றையே நாம் எதிர்கொண்டோம்.

ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் ஏன் தேவைப்படுகின்றது?, நெருக்கடி மிக்க அல்லது குழப்பம் நிறைந்த இவ்வாறானதொரு சூழலில் ஷரீஆ நோக்கிலும் அறிவு ரீதியாகவும் பிரச்சினையைத் தீர்த்து சமூகத்தை அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்குத்தானே!

29 நோன்புகள் பூர்த்தியாகிவிட்டன. இனி முப்பதாகலாம் அல்லது பெருநாள் வரலாம். பிறை தென்பட்டிருக்கிறது. உலமாக்கள் உட்பட 25 பேரளவில் பிறை கண்டிருக்கிறார்கள். வானவியல் நிபுணர்கள் பிறை காண முடியாது என்று சொல்கிறார்கள். வானவியல் கூறுவது ஓரு கருதுகோள். முஸ்லிம்கள் பிறை கண்டது ஒரு சாட்சி.

சாட்சியை முற்படுத்துவதா கருதுகோளை முற்படுத்துவதா?

சாட்சி கிடைத்துவிட்டால் கருதுகோள் பலவீனமாகிவிடும். சமூகம் கருதுகோளை சரிகாண மாட்டாது. சாட்சியைத்தான் வலுவானதாகக் கருதும். வானவியல் நிபுணர்கள் பிறை கண்ணுக்குத் தெரிய மாட்டாது என்கிறார்கள். முஸ்லிம்கள் பிறை கண்ணுக்குத் தெரிந்தது என்கிறார்கள்.

விஞ்ஞானத்துக்கு மாற்றமாக உலகில் ஒன்றுமே நடப்பதில்லையா? அல்லாஹ்வின் வல்லமை (குத்ரத்) என்று எடுத்ததற்கெல்லாம் பேசுபவர்கள் இந்த நிகழ்வில் அல்லாஹ்வின் குத்ரத் செயற்பட்டிருக்கலாம் என்பதை உணர மறந்துவிட்டார்களா? அல்லது வானவியல் நிபுணர்கள் பிறை வெற்றுக்கண்ணுக்குத் தென்படாது என்று கூறிய ஜப்பான், மலேஷியா, கேரளா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் பலவற்றில் பெருநாள் கொண்டாடப்பட்டது ஹராமா? அங்கு சிலவேளை பிறை காணாமலேயே பெருநாள் கொண்டாடியிருக்கலாம். இங்கு கண்ட பிறையை நிராகரித்திருப்பது ஒரு பாவமில்லையா? பெருநாள் கொண்டாட வேண்டிய தினத்தில் எண்ணற்றவர்களை நோன்பு நோற்க வைத்து ஹராமைச் செய்வதற்கு முடிவெடுத்தவர்கள் ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்.

சப்தமிட்டுக் கேட்க வேண்டிய கேள்வி இது. பிரச்சினையின் இரண்டு பக்கங்களையும் பார்க்கத் தெரியாததால் வந்த விளைவு, சமூகத்தைத் தீராத குழப்பத்தில் ஆழ்த்திய தீர்மானம் இல்லை சமூகத்தைக் குழப்புவதற்கென்றே எடுத்த சாணக்கியமில்லாத தீர்மானம். சமூகம் ஒன்றாக இருப்பதை விரும்பாத தீய சக்திகளின் சதி இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும் என நினைக்கத் தூண்டும் வகையிலான ஒரு முடிவு இது.

இது பிறை தீர்மானிப்பதில் நடந்த முதல் தவறு. இரண்டாவது தவறு பிறை பார்த்தவர்களையும் பெருநாளை எதிர்பார்த்திருந்தவர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது மட்டுமல்ல, குறிப்பாக பிறை பார்த்தவர்களின் சாட்சியை நிராகரித்ததன் மூலம் சாட்சி அந்தஸ்து மறுக்கப்பட்ட ‘ஃபாஸிக்’ கள் போன்று அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஒரு முஸ்லிமின் சாட்சி எத்துனை கண்ணியமானது, அந்தஸ்து நிறைந்தது என்பதை இந்தத்தலைவர்கள் அறியவில்லை. ஆலிம்கள் உட்பட சுமார் 25 முஸ்லிம்களது சாட்சி முஸ்லிம்களின் விவகாரமொன்றில் மறுக்கப்படுவதானது என்னைப் பொறுத்தவரை ஒரு பயங்கரமான தீர்மானமாகும்.

இஸ்லாமிய நீதிமன்றம் இருந்தால் இந்தத் தீர்மானத்திற்கெதிராக வழக்குத் தொடரலாம். நட்டஈடும் கோரலாம். தீர்மானம் எடுத்தவர்கள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளிலிருந்து முற்றாக நீக்கப்படவும் கூடும்.

சாட்சி அந்தஸ்த்தை மறுக்குமாறு அல்லாஹ் ஒருசில ‘பாஸிக்’கள் விடயத்தில் சட்டம் வகுத்துள்ளான். அவர்கள் தான் கற்புள்ளவர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள், விபசாரம் செய்தார்கள் என்று அவதூறு கூறும் பாவிகள். பிறை கண்டவர்கள் அப்படிப்பட்டவர்களா? பிறை கண்டவர்கள் ஓரிருவராக இருந்தால் சாட்சி இரண்டு பெயருக்கிடையில் முரண்பாடாக இருந்தது என்றொரு காரணத்தைக் கூறலாம். சுமார் 25 பேர் கண்ட பிறையை எந்தக்காரணம் கூறி நிராகரிக்க முடியும். 25 பேரையும் இவர்கள் விசாரித்துத்தான் முடிவுக்கு வந்தார்களா? அல்லது அத்தனை பேரும் சாட்சி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட பாவிகளா? கிண்ணியாவின் பிறைக்குழுத் தலைவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள் தெளிவான முறையில் பெரிய பள்ளவாசலுக்கு அறிவித்தல் கொடுத்த பின்னரும் அறிவிப்பு ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற போலிக்காரணம் காட்டப்பட்டு பிறைச்செய்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

பிறை விவகாரம் முன் அனுபவமே இல்லாத ஒரு புதிய விவகாரம் போன்று சாணக்கியம் இல்லாமல் அணுகப்பட்டிருப்பதனையே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிறை நிராகரிக்கப்பட்ட பின் பல முஸ்லிம் ஊர்கள் குறிப்பாகக் கிண்ணியா பெருநாள் கொண்டாடும் தீர்மானத்துக்கு வந்தது. இந்தத்தீர்மானத்தை எடுக்க வைத்த காரணம் எது? கட்டுப்பாடின்மையா அல்லது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம், புறக்கணிக்கப்படுகிறோம், முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாக நாம் கருதப்படவில்லை என்ற ஆதங்கமா?

அஸாத் சாலி அவர்களது விவகாரத்திலும் பொது பல சேனா விவகாரத்திலும் பக்குவமாக, பவ்வியமாக, கட்டுப்பாடாக நடந்து கொண்ட சமூகம் தான் பிறை விவகாரத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. யார் இதற்கு வகைகூறவேண்டும். இந்தப் பிளவுக்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும். சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபடுகின்றோம் என்று பேசிவிட்டால் மாத்திரம் போதாது. ஒரு தாய்க்கோழி கறுப்பாயினும் வெள்ளையாயினும் தனது இறக்கையினுள் தனது குஞ்சுகள் அனைத்தையும் அரவணைப்பது போல தலைவர்கள் இந்த சமூகத்தை அன்போடு அரவணைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனது முன் அனுபவங்கள் படி சொல்கிறேன். அவ்வாறு கறுப்பு, வெள்ளை பார்க்காது அரவணைக்கும் பரந்த மனம், சகோதரத்துவம், அன்பு தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு அரவணைக்கத் தெரியாதவர்கள் சமூகத்தை ஒற்றுமைக் கயிற்றினால் பிணைத்து வழிநடாத்துவது சாத்தியமில்லை.

பிறை விவகாரத்தின் பின்னர் எனது காதில் பட்ட ஒரு செய்தி தான் கிழக்கு மாகாணத்துக்கென ஒரு தனியான பிறைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி. அவ்வாறு அமைக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

சுனாமியின் போது கிழக்கு மாகாணத்துக்கு உதவி செய்தோம் என்பதை இது போன்றதோர் சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்டுவது மேலும் அவர்களை மனம் நோகச் செய்திருக்கிறது. அந்த உதவிக்குக் கைம்மாறாக முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விவகாரமொன்றை விட்டுக்கொடுக்கக் கோருவது போலல்லவா இந்த சமயத்தில் அதனை நினைவுகூறுவது அமையும். இதனை அந்த மக்கள் என்ன மனநிலையுடன் பார்ப்பார்கள்? நாளை எங்களுக்கு உதவி செய்யும் நிலையை அவர்களால் அல்லாஹ் ஏற்படுத்தினால்…?!

மூன்றாவது தவறு: ரமழானில் முஸ்லிம் சமூகம் பெற்ற பயிற்சி நாவடக்கம், புலனடக்கம் அனைத்தும் ரமழான் முடிந்த கையோடு சின்னாபின்னமாகிவிட்டது. ஷைத்தான்கள் கட்டவிழ்த்து விடப்படுவது போல அடக்கிவைக்கப்பட்டிருந்த நாவுகளும், புலன்களும் அவிழ்த்துவிடப்பட்டன. பேஸ்புக்கும், இன்டர்நெட்டும்  இதற்குச் சான்றுகள். அதுமட்டுமல்ல வீதியில் கண்டவர்கள், கதைப்பவர்கள் அனைவரின் வாயிலும் இந்தக்கதை தவிர வேறு கதை இல்லை. கிரான்பாஸ் பிரச்சினை இடைநடுவே குறுக்கிட்டதால் பேச்சு கொஞ்சம் திசை திரும்பியதே தவிர இந்தப்பிரச்சினையின் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. இதற்குச் சான்றாக அண்மையில் ஓதப்பட்ட குத்பாக்களைப் பார்க்கிறோம்.  ஏசாதீர்கள், விமர்சிக்காதீர்கள், உலமாக்கள் கண்ணியமானவர்கள், நபிமார்களின் வாரிசுகள் என்றெல்லாம் உலமாக்களைப் புகழ்ந்து கூறும் குத்பாக்கள் திட்டமிடப்பட்டோ திட்டமிடப்படாமலோ நாடளாவிய ரீதியில் நடைபெறுவதைப் பார்க்கிறோம். சும்மா இருந்த வாய்களை திறந்துவிடாதிருந்தால் இத்தகைய குத்பாக்கள் ஓதவேண்டிய தேவை இருந்திருக்காதல்லவா. திறந்துவிட்டதன் பின் திகைப்பதில் என்ன புண்ணியம் இருக்கிறது. இப்போது மூடவைப்பதற்கு சிரமப்படுகிறார்கள். எந்தளவுக்கெனில் சில இடங்களில் ஓதப்பட்ட குத்பாக்கள் தலைவர்களை தவறுகளே செய்யாத ‘மஃஸும்’கள் போல் போற்றிப் புகழ்வதாக இருந்தன. இத்தகைய குத்பாக்கள் தலைவர்கள் மீது மேலும் வெறுப்பை அதிகரிக்கவே வழி செய்யும்.

கொழும்புப் பெரிய பள்ளிவாசலின் சுவர்களுக்கு மத்தியில் கதைத்து முடிக்க வேண்டிய பிறைக்கதையை சந்திவரை இழுத்து வந்து ஊரூராக நாரவைத்த பின் சந்திசிரிக்காமல் கதைகளை நிறுத்துவதென்பது சுலபமான காரியமா? இத்தகைய கதைகள் உருவாகாமல் பெரிய பள்ளிவாசலுடனேயே முடித்துக்கொள்ளத் தெரியாத தலைவர்களைத்தான் பிறை விவகாரம் சமூகத்திற்குக் காட்டிக் கொடுத்திருக்கின்றது.

மக்கள் பிறைக்கதையை எங்களுக்குத் தாருங்கள் நாங்கள் கதைக்கிறோம் என்று கேட்டு வாங்கவில்லை. அவர்களுக்கு அது அவசியமுமில்லை. எப்போது தலைவர்கள் சமூகத்தை சீண்டாமல் குழப்பாமல் வழிநடாத்தும் தீர்மானங்களை எடுத்தார்களோ அப்போது சமூகம் இந்தக் கதைகளை அளந்துகொண்டிருக்கவில்லை. இத்தகைய கதைகளை கதைப்பதற்கு கால்நீட்டி முதுகுசாய்த்து காத்திருக்கும் சமூகமல்ல இது. கதைக்க வைத்ததனால் தான் சமூகம் கதைக்கவும் விமர்சிக்கவும் துவங்கியது. இது பக்குவமாகக் கதைக்கும் சமூகமல்ல. தேவையில்லாத ஒரு கதைக்கு வழிசெய்துவிட்டால் சமூகம் கண், மண் தெரியாமல் பேச ஆரம்பித்துவிடுமென்பதை சமூகத்தின் தலைவர்கள் அறிந்து செயற்பட்டிருக்க வேண்டும். சமூகம் வாயைத்திறந்துவிடாமல் பாதுகாக்கும் பக்குவமான தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும்.

இவைதவிர வேறுபல தவறுகளும் இடம்பெற்றே இருக்கின்றன. பிறை தெரியாத நாளில் பிறை தீர்மானிக்கும் மாநாட்டைக் கூட்டி பிறைபார்க்குமாறு மக்களைக் கோரியமை. பிறை தீர்மானிக்கும் வரையறைகள் பற்றிய விளக்கங்களை சமூகத்துக்கு முன்கூட்டியே வழங்காமை. தவறுகளைத் தம்பக்கம் வைத்துக் கொண்டு சமூகத்தைத் தவ்பா செய்யுமாறு கூறியமை, கடுமையாக உணர்ச்சிவசப்பட்டமை.

ஏன் இவற்றையெல்லாம் நினைவு படுத்துகிறீர்கள்?, இவைகள் இப்போது பேச வேண்டிய விடயங்களா? நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க இருப்பதைப் பார்ப்போம். இதோ கிரான்பாஸில் இனவாதிகள் தாக்குதல் நடாத்துகிறார்கள். நாம் எங்களுக்குள் சர்ச்சை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டிய நேரமா இது என்று தற்போதைய சூழ்நிலையில் சிலர் கேட்கத்தான் செய்வார்கள்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை ஆபத்து அதிகமான பிரச்சினை வெளிப்பிரச்சினை அல்ல. உள்பிரச்சினை தான். உள்பிரச்சினைகளிலும் மிக ஆபத்தான பிரச்சினை சமூகத்தை சரியான திசையில் வழிநடாத்த முடியாத தீர்மானங்களை எடுக்கும் தலைவர்களது பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு கண்டுவிட்டால் ஏனைய பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்தைப்பொறுத்தவரை பாரதூரமானவைகள் அல்ல. சமூகத்தின் மீது உண்மையான கவலை, அன்பு கொண்டவர்கள் இந்த விடயத்தை ஒரு சிறிய பிர்ச்சினையாகக் கருதமாட்டார்கள். அவர்களுக்கு அதன் பாரதூரம் நன்கு புரியும். சமூகத்திற்கு எதை எப்போது சொல்லவேண்டும் என்று தெரியாமல் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கும் வருகின்ற ஆத்திரத்தில் இன்று ஒன்றை சொல்லிவிட்டு நாளை அதை நியாயப்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் சமூகம் குறிபார்த்துச் சுடும் பலகை போன்றதாகும். அம்பு குறிதவறி பிழையான இடத்தில் தைத்தாலும் சரி, சரியான இடத்தில் தைத்தாலும் சரி அவர்களுக்குப் பலகை பற்றிக் கவலை இல்லை. பிழையாகத்தைத்த அம்பை எடுத்து மீண்டும் குறிபார்த்து எறிந்து பலகுவதே அவர்களது வேலை.

சமூகத்தை இப்படி குறிபார்த்துச் சுடும் பலகையாக்க முடியாது. அதனை மார்க்கத்திலும் உலகத்திலும் சரியான வழிநடாத்தல்களுக்குட்படுத்துகின்ற சிறந்த தலைவர்கள் தான் இன்றைய அடிப்படைத் தேவையும் தீர்க்க வேண்டிய முதல் பிரச்சினையுமாகும். இந்தப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு எட்டப்பட வேண்டும்.

அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்புக்கு தலைமை வழங்க அறிவிலும் நிதானத்திலும் சமூக உறவிலும் பரந்த மனப்பான்மையிலும் அரவணைப்பிலும் சிறப்பாக முன்னின்று உழைப்பதற்கு தகுதியான ஒருவராக நான் கண்ணியமிக்க யூசுஃப் முஃப்தி அவர்களைக் காண்கின்றேன். அவர் அப்பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என முன்மொழிகின்றேன், இப்படி ஒரு மாற்றம் தேவை என்பதற்கு இன்னும் பல நியாயங்கள் இருக்கின்றன, அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. பிறை விவகாரத்துடன் தொடர்பான நியாயங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

நாங்கள் இயக்கங்களையும் மனிதர்களையும் மதிப்பவர்கள், எனினும் எமக்கு சிறந்த சமூகமும் சீரிய தலைமைத்துவமுமே முக்கியமாகும், அந்த வகையில் எழுதுகின்ற எழுத்தே இது. தனிப்பட்ட ரீதியில் ஒருவருடன் உள்ள வெறுப்பை வெளிப்படுத்துவற்காக எழுதப்பட்ட ஆக்கமல்ல இது.

அவ்வாறான ஷைத்தானிய உணர்வுகளை ஷைத்தான் தூண்டவே செய்வான், அதற்கு இடம் கொடாமல் உமர் (ரழி) அவர்களிடம் இருந்தது போன்ற ஓர் எண்ணத்தை வெளியிடவே இதனை எழுதியுள்ளேன். உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள் ‘அபூ ஹுதைபாவின் அடிமை ஸாலிம் உயிரோடிருந்தால் நான் அவரை அடுத்த கலீபாவாக நியமித்திருப்பேன்’.

இந்தக் கூற்றினால் உஸ்மான் (ரழி), அலீ (ரழி), தல்ஹா (ரழி), அப்துர் ரஹ்மான் (ரழி) போன்ற பெரும் நபித்தோழர்கள் இழிவுபடுத்தப்படவில்லை. மாறாக பொருத்தமானவர் பற்றிய ஓர் அறிவிப்பே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் எனது முன்மொழிவை சமூகத்தின் முன்னால் வைக்கின்றேன். இது ஜமாஅதே இஸ்லாமியின் கருத்தல்ல, ஜமாஅதே இஸ்லாமியின் மஜ்லிஸுஸ் ஷூறா கலந்தாலோசித்து எடுத்த முடிவுமல்ல. சமூகம், சமூக அமைப்புகள் இயக்கங்கள் மனிதர்கள் நிலைவரங்கள் நடப்புக்கள் பற்றிய எனது தனிப்பட்ட அவதானத்திலிருந்து நான் பெற்ற முடிவாகும். என்னைப் பொருத்த மட்டில் இது ஒரு முடிவு, சமூகத்துக்கு இது ஓர் ஆலோசனை, இயக்கங்களுக்கு இது ஒரு பணிவான வேண்டுகோள். இங்கு பெயர் குறிப்பிட்ட குறிப்பிடாத தனி மனிதர்களிடம் இந்தக் கருத்தை முன்வைப்பதற்காக மன்னிப்புக் கோருகின்றேன். எனினும் எனது சமூகம் பற்றிய மனநிலையில் இப்படி ஒரு கருத்தை தற்போதைய நிலையில் என்னால் எழுதாமல் முன்வைக்காமல் இருக்க முடியாது, இது எனது உள்ளத்தின் இயல்பானதொரு வெளிப்பாடாகும். என்னையும் உங்களையும் அறிவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
usthazhajjulakbar.org

 

WAD


One thought on “பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன; திருத்தம் வேண்டும்

 1. farraj says:

  Masha Allah…its realistic view.
  Hope every one can realize the facts and the way of this problem and solution,
  The Almighty Allah give a right and obvious ways while our leaders are striving towards the solutions and our community tongues…..

  Jazakumullah
  Farraj-puttalam

Leave a Reply to farraj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All